|   | 
        ஒவ்வொரு  தேனீக் குடும்பத்திலும் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள் மற்றும் ஆயரக்கணக்கான  பணித் தேனீக்கள் வாழ்கின்றன. 
            
          ராணித்  தேனீ:
          
            - ராணித் தேனீ ஒரு பூரண வளர்ச்சியுற்ற  பெண் தேனீ. இதனால் மட்டுமே ஆண் தேனீக்களுடன் புணர்ந்து இனவிருத்தி செய்ய இயலும். இத்தேனீ  பணித் தேனீயை விட உருவில் பெரியது
 
            - மகரந்தம் சேகரிக்கும் அமைப்புகள் கால்களில்  இல்லாததால் ராணித் தேனீயால் உணவு சேகரிக்க இயலாது. அதே போல் மெழுகுச் சுரப்பிகள் இல்லாததால்  ராணித் தேனீயால் கூடு கட்டவும் இயலாது
 
            - நீண்டும் கூம்பியும் உள்ள வயிற்றின்  நுனியினுள் இருக்கும் கொடுக்கை முட்டையிடவும், பிற ராணித் தேனீக்களையும் அவற்றின்  வளர்ச்சிப் பருவங்களையும் கொட்டிக் கொல்லவும் பயன்படுத்துகின்றது
 
            - நன்கு வளர்ச்சி அடைந்த இரு சினைப் பைகள்  முட்டைகளை உருவாக்கவும் விந்துப்பை புணர்ச்சியின் பொழுது ஆண் தேனீக்களிடமிருந்து பெறும்  விந்தைச் சேமிக்கவும் உதவுகின்றன
 
            - தாடைச் சுரப்பிகள் இருவித அமிலங்களால்  ஆன ராணிப் பொருள் எனப்படும். ஒரு விதக் கவர்ச்சிப் பொருளைச் சுரக்கின்றன. வாய் வழி  உணவுப் பரிமாற்றம் மூலம் இப்பொருளை எல்லாப் பணித் தேனீக்களும் பெறுகின்றன
 
            - கூட்டினுள் பணித் தேனீக்களை ராணித் தேனீயின்பால்  ஈர்த்து அதனைச் சுற்றி ஒரு பரிவாரம் அமைய இச்சுரப்பானது உதவுகின்றது. மேலும் இப்பொருள்  புதிய ராணித் தேனீ உருவாவதையும் பணித் தேனீக்களின் சினைப் பைகளின் வளர்ச்சியையும் தடை  செய்கின்றது. ராணிப் பொருள் பணித் தேனீக்கள் அடை கட்டுதல், புழு வளர்த்தல், உணவு சேகரித்தல்  போன்ற பணிகளைச் செவ்வனே செய்ய ஊக்குவிக்கின்றது
 
            - புணர்ந்த நான்கு நாட்களுக்குப் பின்  ராணித் தேனீ முட்டையிடத் தொடங்கும். ஆண் தேனீக்களை உருவாக்கக் கருவுற்ற முட்டைகளையும்  இடும்
 
            - ராணித் தேனீயின் வாழ்க்கைக் காலம் இரண்டு  முதல் மூன்று ஆண்டுகள் ஆகும்
 
           
          பணிகள்: 
          
            - ராணித் தேனீயானது தேனீக் கூட்டத்தின்  அன்னையாகும்
 
            - ஒரு முட்டையிடும் இயந்திரம் போல அயராது  முட்டைகள் இட்டு ராணித் தேனீக்களையும் பணித் தேனீக்களையும், ஆண் தேனீக்களையும் ஈன்று  தருகின்றது
 
            - ராணித் தேனீயால் முட்டையிலிருந்து வரும்  புழுக்களுக்கு உணவு தரவோ, அவற்றைப் பேணி வளர்க்கவோ இயலாது
 
            - ராணித் தேனீ புதிதாகக் கட்டப்பட்ட அடை  அறைகளில் விரும்பி முட்டையிடும். கருத்த அடை அறைகளில் ராணித் தேனீ முட்டையிடுவதில்லை
 
            - துப்பரவு செய்யப்பட்ட புழு வளர்ப்பு  அறைகளின் அடியில் ராணித் தேனீ தனித்து முட்டைகளை இடுகின்றது
 
            - நன்கு பணியாற்றும் ஒரு ராணித் தேனீ அனைத்து  அடை அறைகளிலும் இடைவெளி இல்லாமல் சீராக நாளொன்றுக்கு சராசரியாக 500 முதல் 2000 முட்டைகள்  வரை இடும்
 
            - முட்டையிடப் போதிய அறை வசதியில்லாத  பொழுது சில நேரங்களில் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை ஓர் அறையில் இடும்
 
            - உடல் ஊனமுற்ற ராணித் தேனீயால் சரிவர  முட்டையிட இயலாது
 
            - புணர்ச்சியில் தோல்வியுற்ற மற்றும்  வயது முதிர்ந்த ராணித் தேனீக்கள் கருவுறாத முட்டைகளை மட்டுமே இடும். அத்தகைய முட்டைகளிலிருந்து  ஆண் தேனீக்கள் மட்டுமே உருவாக இயலும்
 
           
          ராணித்  தேனீ - வாழ்க்கைக் குறிப்புகள் 
              வளர்ச்சிப்  பருவங்கள் (நாட்களில்) 
            
              
                | 
                  முட்டை  | 
                3 | 
               
              
                | புழு | 
                5 | 
               
              
                | கூட்டுப்புழு | 
                7-8 | 
               
              
                | வளர்ச்சிக் காலம் | 
                15-16 | 
               
             
          வாழ்நாள்  (ஆண்டுகளில்) 
            
              
                | 
                  ஆயுட் காலம்  | 
                2-3 | 
               
              
                | சிறப்பான பணிக் காலம் | 
                1.5 | 
               
             
பணித்  தேனீ:
          பணித்  தேனீ பூரண வளர்ச்சியடையாத பெண் தேனீ ஆகும் 
          
            - பணித் தேனீக்கள் ராணித் தேனீயை விட அளவில்  சிறியவை 
 
            - உடல் முழுவதும் கிளையுடன் கூடிய ரோமங்கள்  இருக்கும்
 
            - வயிற்று நுனியின் மேற்பகுதியில் ஒரு  வாசனை சுரப்பி உள்ளது. இச்சுரப்பி ஒவ்வொரு கூட்டிற்குமான தனித் தன்மை பொருந்திய வாசனையைத்  தருகின்றது. இந்த வாசனையைக் கொண்டு பணித் தேனீக்கள் தங்களின் கூடுகளை அறிந்து கொள்கின்றன
 
            - கொடுக்கு வயிற்றின் நுனிப் பகுதியினுள்  உள்ளது. தேனீ கொட்டும் பொழுது வெளிப்படும் விஷம் அமிலச் சுரப்பியில் சுரக்கின்றது.  விஷத்துடன் வெளிப்படுத்தப்படும் ‘ஐசோபென்டைல் அஸ்டேட்’  என்ற எச்சரிக்கை வேதிப்பொருள் பிற தேனீக்களைக் கொட்டிய இடத்திற்கு ஈர்த்து கொட்டத்  தூண்டுகின்றது. கொட்டிய தேனீ செலுத்தப்பட்ட கொடுக்கை எடுக்க இயலாமல் இறுதியில் அதிக  நீர் இழப்பு காரணமாக இறக்கின்றது
 
           
          பணிகள்: 
            முதல் மூன்று வாரங்கள் கூட்டினுள் இருந்து கொண்டு  உட்புறப் பணிகளையும் அதன் பின்னர், வாழ்நாள் முடியும் வரை வயல் வெளித் தேனீயாகி வெளிப்புறப்  பணிகளையும் சுறுசுறுப்புடன் செய்கின்றது. இத்தேனீக்களின் பணி அவற்றின் வயதிற்கேற்ப  மாறுபடுகின்றது. 
  பணித்  தேனீ ஆற்றும் பணிகள் 
          
            
              | 
                  வயது (நாட்கள்)  | 
              பணிகள் | 
             
            
              | 1-3 | 
              அடை அறைகளைத் தூய்மை செய்தல், கூட்டின்    வெப்ப நிலையைப் பராமரித்தல் | 
             
            
              | 4-6 | 
              வளர்ந்த புழுக்களுக்கு மகரந்த உணவு    ஊட்டுதல் | 
             
            
              | 6-12 | 
              இளம் புழுக்களுக்கும், ராணித் தேனீக்கும்    தேனீப்பால் கொடுத்தல் | 
             
            
              | 13-18 | 
              தேனைப் பக்குவப்படுத்துதல், மகரந்தத்    தூளை அடை அறைகளில் சேமித்தல், மெழுகு சுரத்தல், அடை கட்டுதல், அடை அறைகளுக்கு மூடி    இடுதல் | 
             
            
              | 18-21 | 
              கூட்டினுள் காற்றோட்டம் ஏற்படுத்துதல்,    கூட்டைக் காவல் காத்தல் | 
             
            
              | 22-42 | 
              வெளிப்புறப் பணிகள்: மதுரம், மகரந்தம்,    தண்ணீர் ஆகியவற்றைக் கூட்டிற்குக் கொண்டு வருதல் | 
             
           
         ஆண்  தேனீ
          ஆண்  தேனீ பணித் தேனீயை விட அளவில் பெரியது. ஆனால் ராணித் தேனீயை விட அளவில் சிறியது. 
              புற  உறுப்புகள்: 
          
            - இரு பெரிய கூட்டுக் கண்கள் தலையின் மேல்  பகுதியில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இருக்கும். இவை எப்புறத்திலிருந்தும் எதிர்ப்படும்  பொருட்களைக் காண வல்லது
 
            - தலையில் உள்ள இரு உணர் கொம்புகள் சற்று  நீளமாகவும், பல்லாயிரக்கணக்கான நுண்ணிய நுகரும் உறுப்புகளுடனும் இருக்கும்
 
            - கூரிய பார்வையும், நுகரும் ஆற்றலும்  புணர்ச்சிப் பறப்பின் பொழுது ராணித் தேனீயைக் கண்டறிய உதவுகின்றன
 
            - ஆண் தேனீக்களுக்கு அதிக உணவு தேவைப்படுகின்றது.  ஆண் தேனீக்கள் பணித் தேனீக்களினால் உணவு ஊட்டப்படுவதையே விரும்புகின்றன
 
           
          வளரும்  விதம்: 
          
            - கருவுறாத முட்டைகளிலிருந்து ஆண் தேனீக்கள்  உருவாகின்றன
 
            - புணர்ச்சியுறாத மற்றும் வயது முதிர்ந்த  ராணித் தேனீக்கள் இடும் எல்லா முட்டைகளும் கருவுறாது இருப்பதால், அவைகள் அனைத்திலிருந்தும்  ஆண் தேனீக்கள் தோன்றுகின்றன
 
            - சில நேரங்களில், ராணித் தேனீக்கள் இல்லாத  கூட்டங்களில் சில பணித் தேனீக்கள் ராணித் தேனீயைப் போல முட்டையிடும். இவற்றிலிருந்தும்  உருவில் சிறிய ஆண் தேனீக்கள் உருவாகும்
 
            - முட்டையிலிருந்து புழுக்கள் மூன்று நாட்களில்  வெளிப்படுகின்றன. இவை ஒரு வார காலத்தில் கூட்டுப் புழுவாக மாறுகின்றன. இப்புழுக்களுக்கு  முதல் மூன்று நாள் தேனீப் பாலும் கடைசி நான்கு நாட்கள் தேனீ ரொட்டியும் உணவாக வழங்கப்படுகின்றது.  புழுக்கள் முழு வளர்ச்சி அடைந்த பின்னர் வளர்ப்பு அறை குவிந்த மெழுகு மூடியால் மூடப்படும்.  கூட்டுப் புழுக்களின் வளர்ச்சி வேகம் குறைவு. இவை முழு வளர்ச்சி பெற்ற ஆண் தேனீக்களாக  மாற இரு வாரங்களாகும்
 
            - ஆண் தேனீக்கள் வெளிவந்த 12 நாட்களுக்குப்  பிறகு இவை ராணித் தேனீயுடன் புணர்ச்சிக்குத் தயாராகின்றன
 
           
          
        .  | 
          |