- 
                        மீன் வளர்ப்பினை நண்ணீர், உவர்நீர் மற்றும்  கடல்நீர் ஆகிய 3 வகை நீரிலும் மேற்கொள்ளலாம். நமது நாட்டில் உவர் மற்றும் கடல்நீரைப்  பயன்படுத்தி இறால், நண்டுகள், கடற்பாசிகள், நுண்பாசிகள் போன்றவைகளை வளர்க்க இயலும். 
- 
            
              கெண்டை மீன்கள் பல்வேறு நோய்களுக்கு  எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளவை. மேலும் இவை தாவரப் பொருட்கள், கழிவுகள் மற்றும் சிறிய  விலங்கினங்களை உண்டு வாழக்கூடியவை. எனவே இவற்றை குறைந்த செலவில் அதிகளவு உற்பத்தி செய்யலாம். 
- 
            
              மீன் பண்ணை அமைக்க களி மண், வண்டல் மற்றும்  மணல் கலந்த மண் வகைகள் ஏற்றவை. பாறைகள், அதிக மேடு பள்ளங்கள் இன்றி சிறிதளவு சாய்தளத்தோடு  இருத்தல் வேண்டும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 9 வரை இருக்க வேண்டும். 
- 
            
              மீன் வளர்ப்புக் குளங்களை குறைந்தது  1/4 ஏக்கர் (1000 ச.மீ) பரப்பில் அமைக்கலாம். மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு செவ்வக  வடிவ குளங்களே சிறந்தது. 
- 
            
              மீன் குளங்களில் சுண்ணாம்பு இடுதல் நீருக்கு  போதுமான கார மற்றும் அமிலத்தன்மையை அளிக்கவும், நச்சுயிரிகளை அழிக்கவும் உதவும். அதோடு   நீரின்  கலங்கல் தன்மையையும், பாசிப்படர்வுகளையும் குறைத்து நீரில் ஒளி ஊடுருவும் ஆழத்தை அதிகரித்தல்  போன்ற பலன்களையும் தரும். 
- 
            
              மீன் பண்ணைகளில் களை அல்லது பகை மீன்களை  அழிப்பதற்கு குளத்தில் பலமுறை இழுவலை கொண்டு இழுத்துத் தேவையற்ற மீன்களை அழிக்கலாம்  அல்லது பிளீச்சிங் பவுடர், இலுப்பைப் புண்ணாக்கு போன்ற சில குறிப்பிட்ட மீன் (பூச்சிக்)  கொல்லிகளைப் பயன்படுத்தலாம். 
- 
            
              நன்னீர் மீன் குளங்களில் நீரின் ஆழம்  1 மீ (4 - 5 அடி)க்கு அதிகமாக இருத்தல் வேண்டும். மீன்களின் வளர்ச்சி அதிகரிக்கும்போதும்,  வெப்பநிலை அதிகரிக்கும் போதும் நீரின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும். 
- 
            
              நன்னீர் மீன் வளர்ப்பில் நீரின் பச்சை  நிறம் குறைந்து, ஒளி ஊடுருவும் ஆழம் அதிகரிப்பது, நீரில் இயற்கை உணவுகளின் அளவு குறைவதைக்  காட்டும் அறிகுறி. இந்நிலையில் குளங்களுக்கு உரமிடுதல் அவசியம். ஒளி ஊடுருவும் ஆழம்  20 - 30 செ.மீ ஆக இருப்பது நல்லது. 
- 
            
              மீன் வளர்ப்புக் குளங்களில் கோடை காலங்களிலும்,  தொடர்ச்சியாக மேகமூட்டம் இருக்கும்போதும். பிராணவாயு பற்றாக்குறை ஏற்படலாம். மழைக்காலங்களில்  குளத்து நீரில் அமிலத்தன்மை ஏற்படலாம். இத்தகைய தருணங்களில் குளங்களுக்கு அதிக அளவில்  அங்கக உரம் இடக்கூடாது. 
- 
            
              மீன்  குளங்களில் அல்லி, தாமரை போன்ற படரும் நீர்த்தாவரங்கள் அதிகமாக இருந்தால் சூரிய வெளிச்சம்  கிடைக்காமல் இயற்கை உணவு உற்பத்தி குறையும் . எனவே அவற்றின் தண்டுகளை வெட்டி, இலைகளை  கிழித்து விட்டால் புல் கெண்டை மற்றும் ரோகு இன மீன்களுக்கு உணவாக பயன்படும்.