கிசான் அழைப்பு மையம் :: கொள்கைகள்

இந்தியாவில் வேளாண் துறையில் மேம்படுத்த வேண்டிய சவால்கள் எண்ணிடலங்கா. பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவளித்திட நமது வேளாண்மை முன்பை விட மிக அதிகமாக வளர்ச்சி பெறவேண்டும். மூன்றில் இரண்டு பங்கு வேலை வாய்ப்பு வேளாண்மையையே நம்பியுள்ளது. இத்துறையின் பங்கு நம் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28% மேலும் 15% சதவீதத்திற்கு மேல் ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மாறிவிடும் காலத்திற்கேற்ப விளைவிக்கும் பயிர்களும் மாறிவருகின்றன. இதனால் ஏற்றுமதியும் அதிகரிக்கிறது. நமது நாட்டில் 37% நீர்ப்பாசன நிலங்களில் இருந்து  55% உற்பத்தியும், 63% மானாவாரி நிலத்திலிருந்து 45% உற்பத்தியும் கிடைக்கிறது. இம்மானாவாரி நிலங்களில் உற்பத்தி குறைவாகக் கிடைப்பதோடு சில சமயங்களில் விளைச்சலே இருப்பதில்லை. இதற்கு புதிய தொழில் நுட்பங்கள் இம்மானாவாரி நிலங்களை அனுகாததும் ஒரு காரணம்.

எனவே இந்நிலங்களில் பயன்படுத்துமாறு புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மானாவாரி நிலங்களின் உற்பத்தியை உயர்த்த வேண்டும். கிடைக்கக் கூடிய வளங்களைக் கொண்டு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தியையும் உயர்த்தும் வகையில் பல தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து வழங்க வேண்டும். அதை சரியான முறையில் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
ஆராய்ச்சியாளர்களிடமிருந்து விவசாயிகளுக்கு கண்டுபிடிப்புகளைக் கொண்டு செல்ல ஒரு பொது விரிவாக்க முறை தேவையாக இருந்தது. மேலும் விவசாயிகளின் பிரச்சனைகளைக் கண்டறிந்து அதற்குத் தீர்வு சொல்லவும் ஒரு தகவல் தொடர்பு அவசியமானதாக இருந்தது.

அதற்காக மாநில வேளாண் பல்கலைக் கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள், தனியார் உதவி மையங்கள் அனைத்தும் பல்வேறு வழிகளில் விவசாயிகளுக்கு சேவைகளை வழங்கி வந்தன. புதிய உத்திகளைக் கையாண்டு சேவை வழங்கும் நோக்கில் இந்திய அரசின் வேளாண் துறை மற்றும் கூட்டுறவு வேளாண் அமைச்சகம் விவசாயிகளுக்கான ‘குறைதீர்க்கும் தொலைபேசி சேவை மையத்தைத்’ தோற்றுவித்தது. இதில் பல மொழிகளில் விவசாயிகளின் குறைகள் கேட்டறிந்து உடனுக்குடன் பதில் அளிக்கப்படுகிறது. 

தகவல்:
http://www.manage.gov.in/kisan/DAC_dir.html

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024/span>