உயிரி எரிபொருள் :: வேம்பு

தாவரவியல் பெயர்: அசாடிராக்டா இன்டிகா

குடும்பம்: மீளலேசியே

பரவல்: 

வேம்பு பல பயன்கள் கொண்ட வறண்ட காடுகளில் வளரக்கூடிய திறன்கொண்ட மரமாகும்.

சுற்றுச்கூழல்: 

வேம்பு பல தரப்பட்ட தட்பவெப்பம், மண் மற்றும் இடஅமைப்பு சூழலையும் தாங்கி வளரும் மரமாகும்.

தட்பவெப்ப நிலை:

ஆண்டு சராசரி அதிக வெப்பநிலை 32.5 டிகிரி செ - 42.5 டிகிரி செ மற்றும் குறைந்த வெப்ப நிலை 4 டிகிரி - 21 டிகிரி செல்சியஸிற்கு குறைந்த வெப்பநிலை உகந்ததல்ல.

மழையளவு: 

ஆண்டு சராசரி மழையளவு 450 - 1200 மி.மீ

மண்வகை:

பலதரப்பட்ட மண்வகைகளில் இது காணப்பட்டாலும், மணற்பாங்கான களிமண் மற்றும் கருப்பு மண் வகைகளில் நன்கு வளரக்கூடியது. மேலும் மற்ற இனங்களை விட சரளை, களி, மற்றும் ஆழமற்ற மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடியது. அமிலத்தன்மை 6.2 மற்றும் அதற்கு மேல் பொருத்தமானது. தண்ணீர் தேங்கி நிற்கும் குறைந்த வடிகால் வசதி உள்ள நிலங்கள் உகந்ததல்ல.

வளர்ச்சி நிலை:

வேம்பு பசுமை மாறா மரவகையாகும். ஆனால் வறண்ட இடங்களில் சீதோஸ்ண நிலைக்கு தகுந்தவாறு இலை உதிரும். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் பூக்கும். ஜீன் முதல் ஆகஸ்ட் வரை காய்கள் முதிர்ச்சி அடையும்.

மரத்தின் வளர்ச்சி தன்மைகள்:

ஒளி - ஒளி தேவைப்பட்டாலும் வருடத்தின் ஆரம்பத்தில் அதிக நிழலை தாங்கி வளரும்.

பனி - பனியால் பாதிப்பு ஏற்படக்கூடியதாகும் விதை மற்றும் காற்று காலத்தில் அதிக குளிர்ச்சியை தாங்கி வளராது.

வறட்சி - நன்கு பரவி வளரும் வேர்ப்பகுதி வேம்பினை வறட்சி தாங்கும் சக்தியை தந்துள்ளது.

நெருப்பு - நெருப்பு பற்றிக் கொள்ளும் வகையாகும்.

மறுதாம்பு - சிறந்த மறுதாம்பு பயிராகும்

வேர்க்கன்றுகள் - இது வேர்க்கன்றுகளை உற்பத்தி செய்யும்

அடியோடு வெட்டுதல் – அடியோடு வெட்டுவதை தாங்கி வளரும்.

மர வளர்ச்சி:

இயற்கையாக வளர்தல்:

இயற்கையாக விழுந்த விதைகள் தானாக முளைப்பதும், பறவைகளின் எச்சங்கள் மூலம் முளைப்பதும் வேம்பின் குணமாகும். முள்காடுகளிலும், வரப்பு ஓரங்கள், தொலைபேசி கம்பி வலைகள் ஓரமும் நன்கு வளரும். கால்நடைகளின் மேய்ச்சலிலிருந்து ஆரம்ப காலத்தில் தடை செய்ய வேண்டும். மறுதாம்பு பயிராகவும், வேர்க்கன்றுகள் மூலமும் இயற்கையாக வளரும்.

செயற்கையான முறைகள்:

ஜீன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் விதைகளை சேகரிக்கலாம். புதிய விதைகளையே விதைப்பதற்கு உபயோகிக்க வேண்டும். விதைகளை சேகரித்த பின்னர் சதைப்பகுதியை நீக்கிவிட்டு, நிழலில் உலர்த்தி, அக்ரசன் (அ) செரசன் போன்ற பூஞ்சாணக் கொல்லியில் நேர்த்தி செய்து பின்னர் விதைக்க வேண்டும். விதைகள் மூலம் நேரிடையாகவும், நாற்றங்கால் நாற்றுகள் மூலமும் செயற்கை முறை உற்பத்தி மேற்கொள்ளலாம்.

நேரிடை விதைப்பு: 

எரி பொருள் மரத்திற்கு மலைத்தோட்டம் அமைக்கும் பொழுதும் தரிசு நில மேம்பாட்டின் பொழுதும் நேரிடை விதைப்பு மூலம் மரங்களை உற்பத்தி செய்யலாம். இதனை செய்யும் பொழுது

  1. விதைகளை ஊன்றுதல்
  2. தூவுதல்
  3. வரிசையில் விதைத்தல்
  4. பாத்திகள் (அ) மேடுகளில் விதைத்தல்
  5. குழிகளில் விதைத்தல் போன்ற முறைகள் பின்பற்றப்படும்.

நாற்றங்கால் நுட்பங்கள்:

வேம்பு விதைகளை நேரிடையாக 20 x 10 செ.மீ (அ) 20 x 15 செ.மீ அளவு கொண்ட பாலித்தீன் பைகளில், மண், மணல், மற்றும் தொழுவுரம் (1:1:1 (அ) 2:1:1) என்ற விகிதத்தில் நிரப்பி விதைக்கலாம். அதிக களிமண் கொண்ட மண் வகைகளையும் தேர்வு செய்தல் கூடாது. புதிய விதைகளை தேர்ந்தெடுத்து தரம் பிரித்து, பெரிய விதைகளை ஒரு பாலிதீன் பையில் 2 விதைகள் என்ற அளவு விதைக்க வேண்டும். முளைத்த பின்னர், செழித்து வளர்ந்துள்ள நாற்றினை வைத்து கொண்டு மற்றதை அகற்ற வேண்டும். இரண்டு விதைகளும் முளைக்காத பைகளில் அதிகமுள்ள நாற்றுகளை நடலாம். இதனால் ஒரே சீரான நாற்றுகள் கிடைக்கும். அதிக நாற்றுகளை பிடுங்கும் பொழுது தவிர்த்து மற்ற நேரங்களில் வேம்பு விதைகளுக்கு நிழல் தேவைப்படாது. மாதம் ஒரு முறை களை எடுப்பதால் செழிப்பான நாற்றுகள் கிடைக்கும். பனி உறையும் இடங்களில் பந்தல்கள் அமைத்து பனியிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். நீர்பாய்ச்சுதல் முளைக்கும் வரையில் பாத்திகள் நாளுக்கு இரு முறையும், முளைத்த பின்னர் ஒரு முறையும், மூன்று மாதங்களுக்கு பின்னர் நாற்றுகள் வாடும் பொழுதும் பாய்ச்ச வேண்டும். முளைப்புத்திறன் குறைந்த விதைகள் பாத்திகளில் 1-2 செ.மீ ஆழத்திற்கும் 15 செ.மீ இடைவெளியிலும் விதைக்கலாம். முளைத்த பின்னர் 30-40 நாட்களில் நாற்றுகளை பிடுங்கி பாலிதீன் பைகளில் நடவேண்டும். இவற்றை நாற்றங்காலில் வைத்து தண்டுகள் உற்பத்திற்கும் வளர்க்கலாம் (தண்டுகள் 5 செ.மீ, 22 செ.மீ வேர், 1-2 செ.மீ மையப்பகுதியின் அளவு). 

நடவு செய்தல்:

வறண்ட இடங்களில் 45 செ.மீ3  குழிகளும், ஈரமான இடங்களில் 30 செ.மீ3 குழிகளும் தயார் செய்ய வேண்டும். 6-12 மாதங்கள் வயதுடைய நாற்றுகளை இக்குழிகளில் மழைக்காலத்தில் நட வேண்டும். குழிகளில் அதனுடைய மணலுடன் சேர்த்து, 5 கிலோ தொழுவுரம் மற்றும் 25-50 கிராம் டிஏபி நடவு செய்யும் பொழுது இடவேண்டும். இதனால் நாற்றுகள் நன்கு செழித்து வளரும். லின்டேன் தூள் மருந்தினை குழிகளில் இடுவதால் வறட்சி காலத்தில் பூச்சிகள் மற்றும் கரையான் தாக்குதல் தடுக்கப்படும். பொதுவாக வேம்பிற்கு கொடுக்கும் இடைவெளி 5 x 5 மீ (அ) 10 x 10 மீ ஆகும். வேளாண் வனவியல் திட்டங்களுக்கு மேலும் பரந்த இடைவெளி கொடுக்க வேண்டும்.

பராமரித்தல் மற்றும் பிறகவனங்கள்:

ஆரம்ப காலத்தில் குறைந்த பராமரிப்பு போதும் என்றாலும், வறண்ட இடங்களில் நீர் பாய்ச்சுதல் மற்றும் களையெடுத்தல் முதல் இரண்டு வருடங்களில் மிகவும் அவசியமாகும்.

நீர் நிர்வாகம்:

மரங்களுக்கு நேரிடையாக 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சுவது வறண்ட காலத்தை தாங்கி வளரும் தன்மையை கொடுக்கும். உவர் மண்ணில் கோடை காலத்திலும், வறண்ட காலத்திலும் நீர் பாய்ச்சுதல் அவசியமாகும். மரத்தினை சுற்றி கல மற்றும் பிற பொருள்கள் கொண்டு நிலப்போர்வை அமைப்பது ஈரத்தன்மையை பாதுகாக்கும்.

பராமரிப்பு பணிகள்:

இளைய நாற்றுகள் நன்கு செழித்து வளர களைகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். களை எடுப்பது மரத்திற்கு தேவையான ஈரப்பதம் மற்றும் சத்துகளை மண்ணில் பாதுகாக்க உதவும். தூர் கருவிகள் கொண்டு மரங்களுக்கு இடையில் உழுவது களைகளை கட்டுப்படுத்துவதுடன் ஈரப்பதத்தையும் பாதுகாக்கும். களை எடுப்பது மண்ணை தளர்த்தி காற்றோட்டம் மற்றும் வேர் வளர்ச்சியை துரிதப்படுத்தும். இயற்கையாக ஒருவாக்கப்பட்ட தோட்டங்களில் ஒரு வருடத்திற்கு பிறகு மரங்களின் அடர்த்தியை குறைப்பது அவற்றின் வளர்ச்சிக்கு உதவும். 2-3 வருடங்களுக்கு பிறகு மரங்களுக்கு இடையே 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். செயற்கையாக உருவாக்கப்பட்ட தோட்டங்களில் 5 வருடங்களுக்கு பிறகு வளர்ச்சி குன்றிய மரங்களை களைத்துவிட்டு, நன்கு வளர்ந்த மரங்களை 10 x 10 மீ இடைவெளியில் வளருமாறு தேர்வு செய்ய வேண்டும்.

மகசூல்:

ஐந்தாம் வருடம் முதல் காய்க்க ஆரம்பிக்கும். ஆனால் பொருளாதார மகசூல் 10 முதல் 12 வருடங்களில் தான் கிடைக்கும். குறைந்தது 3000 முதல் 4500 விதைகள் 1 கிலோவில் இருக்கும். நடுத்தர வயதான மரங்கள் 30-55 கிலோ விதைகளை மகசூலாக அளிக்கும். 35-40 வருடத்திற்கு பிறகு மரக்கட்டைகளுக்கு, 8 வருடத்திற்கு பிறகு விறகிற்கும் மரம் வெட்டும் வயதாகும். ஒரு ஹெக்டேருக்கு 108 - 137 மீ3 மரக்கட்டைகள் அளிக்கும்.

பயன்பாடு:

வேம்பு பல வகை பயன்கள் அளிக்க வல்லது. கட்டுமானத்திற்கும், மரச்சாமான்கள், வண்டி, கோடாரி, படகு மற்றும் பல பொருட்கள் செய்ய பயன்படுகிறது. விதைகள் 20-30 சதவிகிதம் எண்ணெய் தரக்கூடியது. இவை மருந்துபொருட்கள் தயாரிக்க பயன்படுகின்றது. வேம்பு இலைகளில் 12-18 சதவிகிதம் புரதச் சத்து நிரம்பியுள்ளதால் ஆடுகள் மற்றும் ஒட்டகத்திற்கு சிறந்த தீவனமாகும். வேப்பெண்ணையில் உள்ள அசாடிராக்டின் என்ற பொருள் பூச்சி விரட்டியாக பயன்படுகின்றது. வேம்பு மர பட்டைகள் 12-14 சதவிகிதம் டானின் தர வல்லது. வேப்பம் பிண்ணாக்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படுகிறது.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013