முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

25 சென்ட் நிலத்தில் 60 நாளில் 8 டன் வெள்ளரி

கா.சுப்பிரமணியன்
மதுரை மாவட்டம்
Mobile No: 93624 44441

தமிழகம் பொன்னு விளையும் பூமி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தழைச்சத்து முதல் இரும்புச்சத்து வரை அனைத்தும் தமிழ் மண்ணில் பொதிந்து கிடக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையால் பொன்னான விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருவது வேதனைக்குரியது. எனினும் மண்ணையும், மண் வளத்தையும் பாதுகாக்கும் விழிப்புணர்வு இளைய தலைமுறையினருக்கு ஏற்பட்டு வருவது ஆறுதல். சுற்றிலும் வீடுகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த மதுரை வீரபாஞ்சான் பகுதியில் 25 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் அழகான பங்களா கட்டலாம் அல்லது குடோன் நடத்த வாடகைக்கு விடலாம். வேறென்ன செய்ய முடியும்?என கேட்கலாம். சிறிய அந்த இடத்தில் "பசுமை குடில்' அமைத்து 60 நாட்களுக்கு ஒருமுறை 8 டன் வெள்ளரியை அள்ளுகிறார் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி லோகேஷ்,27, என்றால் நம்ப முடிகிறதா?

இஸ்ரேல் தொழில் நுட்ப உதவியுடன் வெள்ளரிக்காய் உற்பத்தி செய்கிறார். தோட்டக்கலைத்துறை 50 சதவீதம் மானியம் வழங்கியது. இஸ்ரேல் வெள்ளரி விதை ஒன்றின் விலை ரூ.7. தனது 25 சென்ட் நிலத்தில் 1000 சதுர மீட்டர் அளவில் "பசுமை குடில்' அமைத்தார். இதற்குள் 28 டிகிரி வெப்பம் நிலவ வேண்டும். தட்பவெப்ப நிலை வெப்பமானி மூலம் அறியப் படுகிறது. வெப்பம் கூடினால் தானியங்கி மூலம் தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்துகின்றனர். பசுமை குடிலில் 4,500 விதைப்பைகளில் தலா ஒரு விதை மூலம் வெள்ளரி செடி வளர்க்கப் படுகிறது. விதை பையில் மண்ணிற்கு பதில் தென்னை நார் மட்டுமே இருக்கும். பசுமை குடிலுக்குள் பூச்சிகள் நுழைய இயலாது. சொட்டுநீர் பாசனம் மூலம் அனைத்து விதைப்பைகளுக்கும் சமச்சீராக தண்ணீர் பாய்ச்சப்படும். தேவைக்கு ஏற்ப "இயற்கை சத்து டானிக்' தெளிக்கப் படுகிறது. விதை விதைத்து 46வது நாளில் இருந்து தொடர்ந்து 60 நாட்களுக்கு பலன் கிடைக்கிறது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 250 கிலோ வெள்ளரி கிடைக்கிறது. ஏஜென்டுகள் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து அரபு நாடுகளுக்கு கிலோ ரூ.250 விலையில் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்ஜினியரிங் விவசாயி லோகேஷ் கூறியதாவது: "ஏ.எஸ். பார்ம்' என்ற பெயரில் "ஹைடெக் ஹார்ட்டிகல்சுரல்' மூலம் வெள்ளரி உற்பத்தி செய்கிறேன். மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜெயசிங்ஞானதுரை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தேன்மொழி ஆகியோரின் வழிகாட்டுதல் தொடர்கிறது. இரண்டரை ஏக்கர் நிலத்தில் விளையும் வெள்ளரியை வெறும் 25 சென்ட் நிலத்தில் விதைத்து லாபம் ஈட்டி வருகிறேன். பிஞ்சு இருக்காது; பழமும் வராது. வெள்ளரி ஒன்று தலா 110 கிராம் எடையில் இருக்கும். செடி ஒன்றுக்கு 60 நாட்களுக்கு 300 மில்லி தண்ணீர் மட்டும் போதும். காயின் தண்ணீர் சத்து குறித்து தினமும் ரசாயன முறையில் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப சத்துக்கள் செலுத்தப்படுகிறது. இதனால் சுவை, மணம், சத்து மாறாது. கடந்த முறை 7 டன் வெள்ளரி எடுத்தேன். இந்த முறை 8 டன் கிடைத்தது. பசுமை குடிலை இத்தாலி, இஸ்ரேல் விஞ்ஞானிகள் பார்வையிட்டுள்ளனர். அடுத்ததாக வெற்றிலை, இஞ்சி, மல்லியை உற்பத்தி செய்யவுள்ளேன். விதையை இங்கேயே உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

Updated on March, 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015