இதர மர வகைகள் :: சுங்குனியானா சவுக்கு

சுங்குனியானா சவுக்கு (Casuarina junghuniana)

பொதுவிபரம் :

கேசுரின சுங்குனியானா சவுக்கு மரம் இந்தோனஷனேசியாவை தாயகமாக கொண்டது.  அந்நாட்டின்  மலை சரிவுகளிலும், எரிமலை சரிவுகளிலும் இயற்கையாக காணப்படுகிறது. 1952 ம் ஆண்டில் தமிழக வனத்துறையில் மரக்காணம் வன ஆராய்்சசி மையத்தில், தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட கலப்பின மரம் தமிழ்நாட்டில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கலப்பின மரம் மலட்டுத்தன்மை உள்ள ஆண் மரமாகும். ஆதலால் விதைகள் உற்பத்தி செய்யும் திறன்னறது. இதனால் விண்பதியம் மூலமும், பக்கவாட்டு இணுக்குகளின் அடிப்பகுதி வேர் ஊக்கி நொதி கலவையில் வெட்டுப்பகுதியினை நனைத்து துளிர்க்கச் செய்தும், நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இம்முறையில் அதிக அளவு நாற்றக்கள் உற்பத்தி செய்வதில் சிரமம் உள்ளதால் இந்தோனேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட, விதைகள் உற்பத்தி செய்யக்கூடிய சுங்குனியான சவுக்கு வகைகளான கப்பான் குப்பாங் (kapan kupang) திமூர் (Timur) கேம்பிளாங் (camplong) போட்ஷா  (Buatsoe) மற்றம் டிகா - கென்யா (Thika – Kenya) ஆகிய வகைகளை கொண்டு 1997ம் ஆண்டில் கொடுமுடி வன ஆராய்ச்சி மையத்தில் நடவு செய்யப்பட்டு பரிசோதனை முயற்சி செய்யப்பட்டதில், கப்பான் குப்பாங் மற்றும் திமூர் வகைகள் வறட்சியை தாக்கு பிடித்ததுடன் விதைகளும் உற்பத்தி செய்தன. எனவே 2003ம் ஆண்டில் இவ்விருவகைகளின் விதைகள் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, தமிழ்நாட்டின் அனைத்து வன ஆராய்ச்சி நிலையங்களிலும் ஆராய்ச்சி மற்றும் விதைத் தோட்டங்கள் எழுப்பப்பட்டன.
இம்மரம் கேசுரின இக்விசிடிபோலியா என்ற சாதாரண சவுக்கை விட வேகமாக வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. இம்மரம் சுமார் 15 முதல் 25 மீட்டர் உயரம் வரையிலும் குறுக்கு விட்டம் 30 முதல் 50 செ.மீ வரையிலும் வளரக்கூடியது.

சாகுபடி குறிப்புகள் :

இம்மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் உயரம், 700-1500 மில்லிமீட்டர் மழையளவு வரையான பல்வேறு தட்பவெட்ப நிலைகளில் வளரக்கூடியது. மணல் பாங்கான நிலங்களிலிருந்து களிமண் வரையான பல்வேறு மண் வகைகளிலும் நன்கு வளரும். அமிலத்தன்மை உள்ள களிமண் வகையிலிருநு்து காரத்தன்மையான சுண்ணாம்பு கலந்த மண்ணிலும் வளரும்.

உசி இலைகள்
கூம்பு விதைகள்

நாற்றங்கால் அமைத்தல் :

மணல் மற்றும் செம்மண் 9:1 என்ற விகிதத்தில் கலந்து சுமார் 30 செ.மீ உயரமான தாய்பாத்தி அமைக்க வேண்டும். அதிக அளவு மணல், விதைகள் அழுகுவதையும் பூஞ்சாண பாதிப்பையும் தடுக்க உதவும். விதைகளை சம அளவு மணலுடன் நன்கு கலந்து விதைப்பதால் விதைகளை சீராக பரவலாக விதைக்கலாம். பின்னர் விதைகள் காற்றில் அடித்து செல்லாவண்ணம் சிறிதளவு மணலை விதைகள் மூடும் அளவிற்கு தூவுதல் வேண்டும். வைக்கோல் அல்லது தழைகளை கொண்டு தாய்ப்பாத்தியை மூடி பூவாளியால் தினம் இருமுறை நீர் ஊற்றி வர வேண்டும். விதைகள் சுமார் 10 தினங்களில் மளைத்துவிடும். சுமார் ஒரு இலட்சம் நாற்றுக்கள் ஒரு கிலோ விதையிலிருந்து கிடைக்கலாம். முளைப்பு சதவீதம் 50% முளைத்த நாற்றுக்கள் சுமார் 3-5 செ.மீ உயரம் அடைந்தவுடன் உரமண் கலவை நிரப்பப்பட்ட 10x20 செ.மீ அளவுள்ள பைகளுக்கு மாற்ற வேண்டும். பைகளில் பிராங்கியா பாக்டீரியா சேர்ப்பது வீரிய வளர்ச்சிக்கு உதவும். பைகளுக்கு மாற்றப்பட்ட நாற்றுக்கள் சுமார் 3 மாதங்களில் 25 முதல் 30 செ.மீ. உயரம் வளர்ந்து நடவிற்கு தயாராகிறது. கலப்பின ஆண் மலட்டுத் தன்மை கொண்ட மரங்களிலிருந்து இளம் துளிர்ப்பு துனுக்குகள் வேர் ஊக்கி நொதிகளினை தடவி துளிர்க்க செய்த நாற்றுக்கள் உற்பத்தி செய்யலாம்.

நாற்றங்கால் பாடுக்கை
சவுக்கு மரம் தோட்டம்

நடவு

சாதாரண சவுக்கு போன்று 1மீ x 1மீ அல்லது 2மீ x 2மீ. இடைவெளியில் தேவைப்படும் கழிகளின் பருமனுக்கு ஏற்ப நாற்றுக்களை உழவு செய்த நிலத்தில் 0.30 x0.30 x0.30 மீ. அளவுள்ள குழிகளில் நட வேண்டும். தொழுஉரம் மற்றும் மண்புழு உரம் இடுவது வளர்ச்சியை மேலும் கூட்ட உதவும். நடவு செய்யப்பட்ட, முதல் 2-3 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 3 மீட்டர் உயரம் வரை வளரும். தாய்லாந்து நாட்டு கலப்பின வகை சுமார் ஐந்து ஆண்டுகளில் 20 மீட்டர் உயரமும், 25 செ.மீ குறுக்கு விட்டமும் கொண்ட மரமாகிறது. நடவு செய்யப்பட்ட முதல் ஆண்டு மட்டும் கிளை எடுப்பது அவசியமாகிறது. அதன் பின் மரத்திலிருந்து விழும் சிறு கிளை துண்டுகள் போர்வை போல அமைந்து களைகளின் வளர்ச்சியை முழுக்க கட்டுப்படுத்துகிறது. வறட்சி காலங்களில் நீர் பாய்ச்சுவது செடிகளின் இழப்பை முழுக்க தவிர்க்க பயன்படும்.

மகசூல்

இம்மரத்தை 3 முதல் 5 ஆண்டுகளில் தேவைக்கேற்ப வெட்டலாம். கழிகள் மற்றும் விறகிற்கு 3 ஆண்டுகளிலும் சிறு பர்னிச்சர்கள் சிறு கருவிகள் மற்றும் நீண்ட கழிகளுக்குத் தேவையான மரத்திற்கு 5 ஆண்டுகளிலும் வெட்ட வேண்டும். நான்கு ஆண்டுகளில் ஒரு ஏக்கரில் 40 டன்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கழிகளாக விற்றால் ஒரு மரத்திற்கு ரூ.25 கரை கிடைக்கின்றது. இவ்வாறாக ஒரு ஏக்கருக்கு ரூ.25,000/- வரை  கிடைக்க வாய்ப்புள்ளது. ஜிங்குனியான கலப்பின சவுக்கில் மரம் வெட்டப்பட்ட பின் வெட்டு முகப்பிலிருந்து மறு துளிர் வளரக்கூடிய குணமிருப்பதால் முதலீடு இல்லாமல் மீண்டும் அறுவடை செய்து வருமானம் பெற வாய்ப்புள்ளது.

பயன்கள் :
வளர்ந்த மரத்திலிருந்து சிறுசிறு பர்னிச்சர்கள், விவசாய கருவிகள் செய்யலாம். மரம் வெடிக்கும் தன்மை கொண்டது. கட்டுமான பணிகளில் தாங்கு கழிகளாகவும், சிறு வீடுகளின் கூரை மற்றும் கம்பங்களுக்கு பயன்படுகிறது. மரம் கனமீட்டருக்கு சுமார் 900-1000 கிலோ வரை எடையுள்ளதால், சிறந்த விறகாகவும், கரி தயாரிப்பிலும் பயன்படுகிறது. இதன் கரி 34500 kj/kg அளவு வெப்பம் தரவல்லதால், அனைத்து விறகு மர இனங்களை விட சிறந்ததாக கருதப்படகிறது. காகிதம் தயாரிப்பு தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக பயன்படுத்தலாம். இம்மரத்தை தோட்டங்களின் எல்லையில் காற்று தடுப்பானாகவும் வளர்க்கலாம். இம்மரத்தின் வேர்களில் காணப்படும் பிராங்கியா (Frankia) எனப்படும் பாக்டீரியா காற்றிலுள்ள நைட்ரஜனை நைட்ரேட் உப்புகளாக மாற்றி நிலத்தில் சேமிப்பதால் மண்வளம் மேம்படுகிறது.

தொடர்புக்கு
முதல்வர்,  
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்,
கோயமுத்தூர் -  641301.
தொலைபேசி: 04254 - 222398, 04254 – 220460
அலைபேசி: 9443505843, 9489056727
மின்னஞ்சல்: deanformtp@tnau.ac.in

Updated on :April, 2015

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015