விவசாயம் மற்றும் அதன் சார்ந்த  துறைகளில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கின்றது. பயிர்  உற்பத்தி மற்றும் கால்நடை உற்பத்தியில் தொடங்கி குடிசை தொழில் வரைக்கும் பெண்களின்  பங்கு இன்றியமையாதது. வீடு மற்றும் குடும்ப பராமரிப்பு தொடங்கி தண்ணீர், எரிபொருள்  மற்றும் தீவனத்தைக் கொண்டு செல்வது முதல் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.  இவ்வளவு பணியாற்றியபோதும் பெண்களின் பங்கிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.  பெண்களின் நிலை, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் குறிகாட்டிகளில் மிகவும்  குறைந்தே காணப்படுகின்றது. 
              பெண்கள், தண்ணீர் எடுத்தல், சலவை  செய்தல், சமைத்தல் மற்றும் அன்றாட விவசாயம் செய்தல் ஆகியவற்றில் அதிக நேரத்தை  செலவளிக்கின்றனர். இந்த பணிகள், உடலுக்கு மட்டும் கடினமானது மட்டுமல்லாமல்  பெண்களின் படிப்பிற்கு பெரியத் தடையாக அமைகின்றது. ஆண்களை ஒப்பிடும் பொழுது,  தொழிலாளர் சந்தையில் பெண்கள் சம நிலையில் நுழைய முடிவதில்லை. சமூக மற்றும்  கலாச்சார அடிப்படையில் பெண்களின் வேலை குறுகியுள்ளது. குழந்தைப் பராமரிப்பு,  போக்குவரத்து மற்றும் தங்குவதற்கான வசதிகள் போதிய அளவு இல்லை. பெண்கள்  இல்லத்தரசிகளாக மட்டும்தான் இருக்க முடியும் என்கின்ற முன்னமே தீர்மாநிக்கப்பட்டக்  கருத்து, பெண்களின் உழைப்பை தாழ்வாக கருதப்பட வைக்கின்றது.