|   | 
        பூச்சிக்கொல்லிகளால்  தேனீக்களுக்கு உண்டாகும் பாதிப்பு:  
        பயிர் பாதுகாப்பில்  ரசாயன மருநு்துகளைப் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது. இதனால்  தேனீக்கள் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றன. தேனீ வளர்ப்போர் நஞ்சுகளிடமிருந்து தேனீக்களை  ஏன் பாதுகாக்க வேண்டும்? எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? என்பதை அவசியம் அறிந்து வைத்து  இருக்க வேண்டும். 
        பாதிக்கப்படும்  விதம்: 
        
          - நஞ்சினால்       பாதிக்கப்பட்ட தேனீக்கள் இறக்க நேரிடுகின்றன
 
          - தேன்       மற்றும் மகரந்தத்துடன் நஞ்சு கலக்கின்றது
 
          - அயல்       மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்படுவதால் பயிர் மகசூல் குறைக்கின்றது
 
          - களைக்       கட்டுப்பாட்டிற்குக் களைக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் தேனீக்களால்       களைச் செடிகளிலிருந்து மதுரம் மற்றும் மகரந்தம் சேகரிக்க இயலாது போகின்றது
 
          - பொதுவாகப்       பூசணக் கொல்லிகள் மற்றும் களைக் கொல்லிகளை விட பூச்சிக் கொல்லிகள் தேனீக்களை       அதிகம் பாதிக்கப்படுகின்றன
 
          - குறிப்பாகப்       பூக்கும் தருணத்தில் பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளிக்கும் பொழுது, வயல்       வெளித் தேனீக்கள் மருந்துகளின் நேரடித் தாக்குதலுக்கு இலக்காகி வயலிலோ, வரும்       வழியிலோ அல்லது கூட்டிற்கு வந்த பின்னரோ இறக்கின்றனர்
 
          - தேனீக்களின்       உடல் ரோமங்களில் தூள் வடிவ மருந்துகள் எளிதாக ஒட்டிக் கொள்கின்றன. தேனீக்கள்       இந்த நஞ்சுத் துகள்களையும் மகரந்தத் தூளுடன் சேர்த்து அடை அறைகளில் சேமித்து வைக்கின்றன.       இத்தகைய நஞ்சு கலந்த மகரந்தத் தூளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தேனீ ரொட்டியை,       உணவாகப் பெறும் வளரும் புழுக்கள் நஞ்சினால் பாதிக்கப்பட்டு இறக்கின்றன
 
          - சில       நேரங்களில் எறும்புகள் தேனீப் பெட்டியின் மேல் ஏறாமல் இருப்பதற்காகத் தாங்கியின்       கால்களைச் சுற்றித் தூவப்படும் தூள் மருந்துகளாலும் தேனீக்கள் பாதிக்கப்படுகின்றன
 
         
        நஞ்சுகள்  செயலாற்றும் விதம்: 
        
          - உடலின்       மேற்புற ஓட்டின் மூலமாகவோ பாதங்கள் வழியாகவோ, உடலின் பக்கவாட்டில் உள்ள பத்து       ஜோடி சுவாசத் துளைகள் மூலமாகவோ உடலினுள் புகுந்து தேனீக்களைப் பாதிக்கின்றன.       இதனால் தேனீக்கள் இறக்க நேரிடலாம்
 
          - நஞ்சின்       தன்மைக்கு ஏற்றபடி இறப்பு உடனடியாகவோ அல்லது சற்று காலந் தாழ்த்தியோ நிகழலாம்
 
          - நஞ்சுகள்       தேனீக்களின் உணவு மற்றும் நரம்பு மண்டலங்களைச் செயல் இழக்கச் செய்கின்றன
 
          - கால்கள்,       இறக்கைகள் ஆகியவற்றின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன
 
          - தேனீக்கள்       உணவு மற்றும் நீர் தேடும் திறனை இழக்கின்றன
 
          - உணவு       செரிப்பதும் தடைப்படும்
 
          - எனவே       உணவு மற்றும் நீர் இன்றித் தேனீக்கள் பட்டினி கிடந்து வலிமை குறைந்து இறக்கின்றன
 
          - தேனீப்       பண்ணையைச் சுற்றிலும் அடிக்கடி பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட தேனீக்கூட்டங்கள்       நஞ்சின் தாக்குதலிலிருந்து முற்றிலும் விடுபட்டு வளர வாய்ப்பே இல்லாமல் அழியும்
 
         
        நஞ்சுத்  தாக்குதலுக்கான அறிகுறிகள்: 
        
          - தேனீப்       பெட்டியைச் சுற்றிலும், அடிப்பலகையிலும் இறந்த மற்றும் இறக்கும் தேனீக்கள் கூட்டம்       கூட்டமாகக் காணப்படும்
 
          - தேனீக்கள்       தங்கள் கூட்டைத் தேடிக் கண்டுபிடிக்கும் திறனை இழக்கும்
 
          - பணித்       தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்
 
          - தேனீக்       கூட்டங்களின் வலிமை குன்றும்
 
          - சில       நேரங்களில் கூட்டங்கள் முற்றிலுமாக அழியும்
 
          - அடைகளில்       வளரும் புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகவும், தேனீக்களின் எண்ணிக்கை குறைவாகவும்       இருக்கும். இதனால் தேனீக்களால் கூட்டின் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க இயலாது.       ஆகவே வளரும் புழுக்கள் இறக்க நேரிடும்
 
          - புழுக்கள்       எவ்வித நோய்த் தாக்குதலுக்கான அறிகுறிகள் இல்லாது இறக்கும்
 
          - தேன்       சேமிப்பு மற்றும் புழு வளர்ப்பு குறையும்
 
          -  தேனீக்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றாது
 
          - காவல்       தேனீக்கள் குழப்பிய நிலையில் சரிவரப் பணி புரியாது
 
          - தேனீக்கள்       அதிகமாகக் கொட்டும் 
 
          - தேனீக்கள்       பரபரப்புடன் பல வழிகளில் தங்களின் உடலைத் தூய்மை செய்து கொள்ளும்
 
          - பூச்சிக்கொல்லி       மருந்துகளின் தன்மைகளுக்கு ஏற்ப வேறு சில அறிகுறிகளும் காணப்படும்
 
          - இறந்த       தேனீக்களின் நாக்கு வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும்
 
          - அங்கக       பாஸ்பரஸ் மருந்துகளால் தாக்கப்பட்ட தேனீக்கள் விழுங்கிய மதுரம் மற்றும் மகரந்தத்தைக்       கக்கி விடும்
 
          - வயிற்றுப்       போக்கு இருக்கும்
 
          - தேனீக்கள்       பின்னங்கால்களைத் தரையில் இழுத்துக் கொண்டே ஊர்ந்து செல்லும்
 
          - இறக்கைகள்       இணைந்த நிலையில் வயிற்றை விட்டு விலகி இருக்கும்
 
          - தேனீக்களின்       செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும்
 
          - தேனீக்கள்       மல்லாந்து படுத்த நிலையில் சுழலும்
 
          - வலிப்பு       நோயுற்றது போலத் தேனீக்கள் தங்களின் கால்களை வெட்டி இழுத்துக் கொள்ளும்
 
          - போதிய       கவனிப்பும் உணவும் தரப்படாத நிலையில் ஒழுங்கற்ற முறையில் முட்டைகள் இடப்படும்.       சில நேரங்களில் ராணித் தேனீ இறக்க நேரிடலாம்
 
          - மருந்துத்       தாக்குதலுக்குத் தப்பி முற்றிலும் அழியாத கூட்டங்களில் பணித் தேனீக்கள் அமையின்       மேற்பரப்பில் புதிய ராணித் தேனீயை உருவாக்கும்
 
         
        காக்கும்  வழிமுறைகள்: 
        
          - அதிகமாகப்       பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படும் இடங்களில் தேனீப் பண்ணை அமைக்கக் கூடாது
 
          - பயிர்களைக்       காக்கப் பூச்சிக்கொல்லிகளை மட்டுமே பயன்படுத்தாமல் பிற முறைகளையும் ஒருஞ்கிணைத்துப்       பயன்படுத்த வேண்டும்
 
          - தேவையின்       அடிப்படையில் தேவைப்படும் இடங்களில் மட்டும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த       வேண்டும்
 
          - எண்டோசல்பான்       மற்றும் பாஸலோன் போன்ற பூச்சிக்கொல்லிகள் தேனீக்களுக்கு அதிகத் தீங்கு விளைவிப்பதில்லை.       எனவே இத்தகைய தெரிந்து செயலாற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும்
 
          - வளரும்       பயிரில் பூக்கும் முன்னர் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பூச்சிகளின்       பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்
 
          - பயிர்கள்       பூக்கும் தருணத்தில் பயிர் பாதுகாப்பிற்கு கூடியவரை ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தக்       கூடாது
 
          - அவ்வாறு       மருந்து தெளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தேனீக்களின் செயல்பாடு குறைந்திருக்கும்       மாலை அல்லது அந்தி நேரங்களில் மட்டுமே மருந்து தெளிக்க வேண்டும்
 
          - தூள்       மற்றும் சிறு குறுணை வடிவ பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கவனமின்றி திறந்த வெளியில்       கைப்பதோ, மிஞ்சிய மருந்துகளை வெளியில் எறிவதோ கூடாது. ஏனெனில் மகரந்தம் கிடைக்காத       காலங்களில் தேனீக்கள் அவற்றையும் மகரந்தம் எனத் தவறாக எண்ணிச் சேகரிப்பதால் இறக்க       நேரிடும்
 
          - உழவர்கள்       பூச்சி மருந்து தெளிக்கும் முன்னர் அருகில் உள்ள தேனீ வளர்ப்போருக்குத் தெரிவிக்க       வேண்டும். மருந்து தெளிக்கும் நாளிலும், தெளிக்கப்பட்ட மருந்தின் நச்சுத் தன்மை       குறையும் காலம் வரையிலும் தேனீப் பெட்டிகளை இடமாற்றம் செய்து வைக்க வேண்டும்.       அவ்வாறு இயலாத பட்சத்தில் தேனீக்களை வெளி வரவிடாமல் தேனீபு் பெட்டியின் நுழைவு       வழியை அடைத்து வைக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது கீழ்கண்ட குறிப்புகளை       மனதில் கொள்ள வேண்டும்
 
          - எல்லாத்       தேனீக்களுக்கும் போதுமான இடவசதி இருத்தல் வேண்டும்
 
          - பெட்டியினுள்       போதிய காற்றோட்ட வசதி இருக்க வேண்டும்
 
          - பெட்டியை       நிழலில் வைக்க வேண்டும்
 
          - கூடுமான       வரை குறைந்த நேரம் மட்டுமே தேனீக்களை அடைத்து வைக்க வேண்டும்
 
          - போதிய       உணவு இருப்பு இல்லையென்றால் சர்க்கரைப்பாகு மற்றும் மகரந்த மாற்று உணவு தர வேண்டும்
 
          - தேனீக்களை       அதிக நேரம் அடைத்து வைத்தால் பெட்டியினுள் ஏற்படும் காற்றோட்ட குறைவினால் சூடு       அதிகமாகிறது. தேனீக்கள் இறக்கலாம். இதனைத் தவிர்க்க ஈரச் சாக்குகளைக் கொண்டு       பெட்டியை மூடலாம்
 
          - பெட்டியின்       மேல் பகுதியில் கம்பிவலை பொருத்திய உள்மூடி வைப்பதாலும் புழு வளர்ப்பு அறைக்கும்,       தேன் சேமிப்பு அறைக்கும் இடையே சிறிய மரச் சர்க்கரையை வைத்தும் காற்றோட்ட வசதியைக்       கூட்டலாம்
 
         
        தாக்கப்பட்ட  கூட்டங்களைப் பராமரித்தல்: 
        
          - ராணித்       தேனீ பாதிக்கப்பட்டு இருந்தால் புதிய ராணித் தேனீயைக் கொடுக்கலாம்
 
          - வலுக்       குன்றிய கூட்டங்களை ஒன்று சேர்க்கலாம்
 
          - நச்சுத்       தன்மை பெற்ற மகரந்த அடைகளைச் சில மணி நேரம் நீரில் ஊற வைத்துப் பின்னர் மகரந்தத்தை       நீக்கி விடலாம்
 
          - கூட்ட       வளர்ச்சியை ஊக்குவிக்கச் சர்க்கரைப் பாகு கொடுக்கலாம்
 
         
        ஒருங்கிணைந்த பூச்சி  நிர்வாகத்தில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு தேவையின் அடிப்படையில் மட்டுமே பிற கட்டுப்பாட்டு  முறைகளுடன் பயன்படுத்தப்படுவதால் பூச்சிக்கொல்லிகளால் தேனீக்களுக்கு ஏற்படும் பாதிப்பு  கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் இயற்கை வேளாண்மையில் ரசாயன மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை  என்பதாலும் தேனீக்கள் பாதிப்பு அடைவது இல்லை.  | 
          |