தேனீக்களின் எதிரிகள்: 
              மெழுகு அந்திப் பூச்சி: 
          தேனீக்களின்  மிக முக்கியமான எதிரிப் பூச்சி மெழுகு அந்திப் பூச்சியாகும். இப்பூச்சியின் தாக்குதல்  இந்தியத் தேனீ இனங்களில் சமவெளிப் பகுதிகளில் கோடை காலங்களிலும் மழை காலங்களிலும்  அதிகம் காணப்படுகின்றது. மலைப் பகுதிகளில் இதன் தாக்குதல் குறைவு. இதன் தாக்குதல் வலுக்  குன்றிய கூட்டங்களிலும் பழைய அடைகளிலும் கூடுதலாகக் காணப்படும். புழு அடைகள் அதிகம்  தாக்கப்படுகின்றன. சில நேரங்களில் சேமிக்கப்பட்டுள்ள அடைகளிலும் இதன் தாக்குதல் காணப்படும்.  உணவு வரத்து குறைவுபடும் பொழுது இதன் தாக்குதல் தலை தூக்கும். ராணியில்லாத கூட்டம்  செயல்திறன் குறைவான அல்லது வயதான ராணி தலைமை தாங்கும் கூட்டம், நோயுற்று ஓடிய கூட்டம்,  பூச்சிக் கொல்லியினால் பாதிக்கப்பட்ட கூட்டம் ஆகியவற்றில் இப்புழுவினால் பெருத்த சேதம்  ஏற்படுகின்றது. 
  அறிகுறிகள்: 
          
            - தேனீக்கள்       இல்லாத அல்லது முற்றிலும் சூழப்படாத அடைகளில் தாக்குதல் துவங்கும்
 
            - தாக்குதலின்       துவக்கத்தில் ஒரு சில அடை அறைகள் வெள்ளை நிறப்பட்டு நூலால் மூடப்பட்டு இருக்கும்       (படம் 36)
 
            - அடைப்பரப்பின்       மேல் மெல்லிய பட்டு நூலினால் ஆன நூலாம் படை போன்ற வலைப் பின்னல் குறுக்கிலும்       நெடுக்கிலும் காணப்படும்
 
            - அடைப்பரப்பில்       புழுவின் கருப்பு நிறக் கழிவுத் துகள்கள் காணப்படும்
 
            - தாக்கப்பட்ட       அடைகளில் ராணித் தேனீ முட்டையிடாது
 
            - தாக்கப்பட்ட       அடைகள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு இருக்கும்
 
            - தேனீக்கள்       சூழப்படாத அடைகள் புழுவின் தாக்குதலால் முற்றிலுமாக அழியும்
 
            - சில       சமயங்களில் கூட்டுபு்புழு உள்ள அடை அறைகளின் மெழுகு மூடிகள் நீக்கப்பட்டு இருக்கும்.       அத்தகைய கூட்டுப் புழுக்களை எடுத்துப் பார்த்தால் அவற்றின் வயிற்றில் மெழுகுப்       புழுவின் கருப்பு நிறக் கழிவுத் துகல்கள் காணப்படும்
 
            - சில       நேரங்களில் திறந்த புழு அறைகளில் முழு வளர்ச்சியடையாத தேனீக்கள் பட்டுப் பின்னலுக்குள்       சிக்குண்டு வெளிவர இயலாது இறந்து இருக்கும்
 
            - முற்றிலும்       நாசம் செய்யப்பட்ட அடையில் பட்டுப் பின்னலும் புழுக் கழிவும் மட்டுமே எஞ்சி இருக்கும்       (படம் 37)
 
            - சிதைக்கப்பட்ட       அடைகளிலிருந்து ஒரு விதக் கெட்ட நாற்றம் வெளிப்படும்
 
            - அடைச்       சட்டங்களிளோ பெட்டியின் உட்சுவரிலோ அல்லது உள் மூடியினுள்ளோ கூட்டம் கூட்டமாகக்       கூட்டுப் புழுக்கள் பட்டுக் கூட்டினுள் இருக்கும்
 
            - தேனீக்கள்       காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சுறுசுறுப்பின்றி இருக்கும்
 
            - பெட்டியின்       ஏதாவது ஒரு மூலையில் பணித் தேனீக்கள் கூட்டமாகக் காணப்படும்
 
            - இறுதியில்       தேனீக் கூட்டங்கள் பெட்டியை விட்டு ஓடிவிடும்
 
           
          வாழ்க்கை  ரகசியம்: 
            ஆண் அந்திப் பூச்சிகள்  அளவில் சிறியவை அவற்றின் மேல் இறக்கைகளின் வெளி ஓரங்கள் சற்று உள்நோக்கி வளைந்து இருக்கும்.  பெண் அந்திப் பூச்சிகள் அளவில் பெரியவை. அவற்றின் மேல் இறக்கைகளின் வெளி ஓரங்கள் உள்  நோக்கி வளைந்து இருக்காது. பறக்காத ஓரங்களில் இறக்கைகள் அந்திப் பூச்சியின் உடலைக்  கூரை போல் மூடி இருக்கும் (படம் 38) 
        பெண் அந்திப் பூச்சிகள்  பகல் நேரத்தில் பெட்டியினுள் மறவைான இடங்களில் பதுங்கி இருக்கும். அந்திப் பூச்சிகள்  அந்திப் பொழுதிலும், இரவு நேரங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி இறக்கைகளை அடித்துக்  கொண்டு முட்டையிடும். முட்டைகளைச் சிறு குவியல்களாக மறைவாகக் காண இயலாத இடங்களிலும்  தேனீக்களால் எடுத்து எறிய இயலாத இடங்களிலும் இடும். குறிப்பாகப் பெட்டிப் பகுதிகளுக்கு  இடையிலும் பலகை இடுக்குகளிலும், வெடிப்புகளிலும், சட்டங்களின் மூலைகளிலும் முட்டைகளை  இடும் (படம் 39). இதனால் ரோந்துப் பணி செய்யும் தேனீக்களால் இம்முட்டைகளை நீக்க இயலாது. 
        புதிதாகப் பொரிந்து  வந்த புழுக்கள் ஒரு மி.மீ நீளம் இருக்கும். புழுக்களின் முதல் உணவு மதுரம், தேன் மற்றும்  மகரந்தம் ஆகும். இளம் புழுக்கள் அடிப்பலகையில் விழும் மெழுகு மற்றும் மகரந்தத் தூளை  உண்டு வாழும். பழைய அடை அறைகளில் இருக்கும் புழு மற்றும் விரும்பி உண்ணும். தோல்கள்  மற்றும் எஞ்சிய கழிவுகளைப் புழுக்கள் விரும்பி உண்ணும். தேன் மற்றும் மகரந்தம் கிடைக்காத  பொழுது மெழுகுப் புழுக்கள் தேனீக்களின் வளர்ச்சி நிலைகளையும் உண்ணும். பின்னர் தேனீக்கள்  குறைவாக உள்ள அடைகளின் ஓரப் பகுதியைத் தாக்க ஆரம்பிக்கும் புழுக்கள் குறிப்பாக அடை  அறைகளின் நடுசு் சுவரைத் துளைத்துச் சென்று அடையின் மையப் பகுதியை நூலால் ஆன கூட்டை  அமைத்துக் கொள்வதால் தேனீக்களின் தாக்குதலிலிருந்தும் கொட்டிலிருந்தும் தப்பித்துக்  கொள்கின்றன. ஒரு மாதத்தில் முழு வளர்ச்சி அடைந்த புழுக்கள் உருளை வடிவில் பருமனாகவும்  25 மி.மீ நீளமுடனும் இருக்கும். இவை சட்டங்களைச் சிறிது சுரண்டிப் பின்னர் சுரண்டப்பட்ட  இடங்களில் கூட்டம் கூட்டமாகப் பட்டுக் கூடுகளை, உறுதியாக அனைத்து கூட்டுப்புழுவாக மாறும்  (படம் 40). இது போன்ற பட்டுக் கூடுகளின் தொகுதிகள் தேனீப் பெட்டியின் உட்சுவர்களிலோ  உள் மூடியிலோ சட்டங்களிலோ அல்லது அடிப் பலகையிலோ காணப்படும். கூட்டுப் புழுக்கள்  ஒரு வாரத்தில் முழு வளர்ச்சியடைந்த அந்திப் பூச்சிகளாக மாறும். 
           
        வெற்றி  கொள்ளும் வழி முறைகள்: 
          தேனீ வளர்ப்போர் முற்றிலுமாக  மெழுகு அந்திப் பூச்சியை வெற்றி கொள்ள இயலாது. ஆனால் அதே சமயத்தில் தேனீக்கள் பாடுபட்டுக்  கட்டிய அடைகளை மெழுகு அந்திப் பூச்சியின் தாக்குதலிலிருந்து அவசியம் கீழ்க்கண்ட முறைகளைப்  பின்பற்றிக் காக்கலாம் 
        
          - கூட்டங்களை       வலுவான நிலையில் வைத்து இருப்பது அவசியம். வலுவான கூட்டங்கள் மெழுகு அந்திப் பூச்சியின்       புழுக்களைப் பெருக விடாது தடுத்துக் கட்டுக்குள் வைக்கின்றன
 
          - தேனீக்களால்       சூழப்படாத அதிகப்படியான காலி அடைகளை எடுத்துவிட்டுத் தடுப்பு பலகையைக் கொண்டு       தேனீக்களைக் குறுகிய பகுதியில் கட்டுப்படுத்த வேண்டும்
 
          - தேனீப்       பெட்டிகளைச் சந்துகள், இடுக்குகள், இல்லாமல் உரிய அளவு தேனீ இடைவெளி கொடுத்து       முறையாக வடிவமைக்க வேண்டும்
 
          - தேனீப்       பெட்டியில் உள்ள சிறுசிறு பிளவுகளை மக்கு கொண்டு அமைத்து விட வேண்டும்
 
          - அடிப்பலகையை       வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அடிப்பலகை மற்றும் பெட்டியின் பிற       பகுதிகளில் காணப்படும் முட்டைக் குவியல் இளம் புழுக்கள் ஆகியவற்றை தேடி அழிக்க       வேண்டும்
 
          - உதிரி       அடைகளை அவ்வப்பொழுது நீக்கி விட வேண்டும்
 
          - தாக்கப்பட்ட       அடைகளைத் தேனீக்களை நீக்கியபின்னர் சிறிது நேரம் இளம் வெய்யிலில் வைப்பதால் வெளியேறும்       புழுக்களை நசுக்கிக் கொன்று விடலாம். அதிக நேரம் அடைகளை வெய்யிலில் வைத்தால்       அடைகள் உருகி விடும்
 
          - புழு       தாக்கிய அடைகளை ஒரு வலுவான கூட்டததிற்குள் கொடுத்தால் தேனீக்கள் அந்திப்பூச்சியின்       புழுக்களை நீக்கி அடைகளைச் சுத்தம் செய்து விடும்
 
          - புழுக்களால்       அதிகம் சேதப்படுத்தப்பட்ட அடைகளைத் தூக்கி வெளியில் எறிவது தடையற்ற புழுப் பெருக்கத்திற்கு       வழி வகுக்கும். எனவே இத்தகைய பயனற்ற அடைகளை உருக்கி மெழுகு காய்ச்சி விட வேண்டும்       அல்லது குழி தோண்டிப் புதைத்து விட வேண்டும்
 
          - காலித்       தேன் அடைகளை ஒரு பெரிய பாலித்தீன் பைக்குள் காற்றுப் புகாதவாறு சேமித்து வைக்கலாம்
 
          - காலித்       தேன் அடைகளைப் போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள எலித்தொந்தரவு இல்லாத       இடத்தில் தேன் அறைகளில் திறந்த நிலையில் தொங்க விட்டு சேமிக்கலாம்
 
         
        2. எறும்புகள்: 
          கோடை காலங்களிலும்  மழைக் காலங்களிலும் எறும்புகளின் தாக்குதல் சமவெளிப் பகுதியில் கூடுதலாகத் தென்படும்.  இவை தேனீக்களைப் போல சமூதாய வாழ்க்கை நடத்துகின்றன. தேனீக்களுக்கு அதிகம் தொல்லை  கொடுக்கும் எறும்பு இனங்கள் கட்டெறும்பு, சிகப்பு எறும்பு மற்றும் சுளுக்கை எனப்படும்  கொட்டும் எறும்புகளாகும்.  
         கட்டெறும்புகள்: கட்டெறும்புகள்  உருவில் பெரியவை. கருப்பு நிறத்தில் இருக்கும். இவற்றின் தாடைகள் வலுவானவை இவை நிலத்தின்  அடியில் சிறு புற்றுகளில் வாழும். 
          சிகப்பு எறும்புகள்:  சிகப்பு எறும்புகள் மரக் கிளைகளில் இலைகளை ஒன்று சேர்த்துக் கூடு கட்டி வாழும், இவ்விருவகை  எறும்புகளும் வலுக்குன்றிய கூட்டங்களிலிருந்து முட்டை, புழு, கூட்டுப்புழு, தேனீக்கள்  (படம் 41) மகரந்தம் மற்றும் தேனை எடுத்துச் செல்கின்றன. எறும்புகளின் தொல்லை அதிகரிக்கும்  பொழுது தேனீக்கள் கூட்டை விட்டு ஓடி விடுகின்றன. மேலும் புதிதாகப் பிடித்து வைத்த  கூட்டங்களை எறும்புகளிடமிருந்து காக்கத் தவறினாலும் அவை ஓடி விடும். 
             
        தடுப்பு  முறைகள்: 
        
          -  எறும்புப் புற்றுகளைத் தேடிக் கண்டுபிடித்து       அதனுள் பூச்சி மருந்துக் கரைசலை ஊற்றி அழிக்க வேண்டும்
 
          - எறும்புப்       புற்றுகள் அதிகம் இல்லாத இடங்களில் தேனீப் பெட்டிகளை வைத்தல் வேண்டும்
 
          - தேனீப்       பெட்டிகள் வைத்துள்ள தாங்கியபின் கால்கள் ஒவ்வொன்றையும் ஒரு கிண்ணத்தில் வைத்து       நீர் அல்லது பயன்படுத்தப்பட்ட இன்ஜின் எண்ணெயை ஊற்றி வைப்பதால் எறும்புகள் ஏற       விடாமல் தடுக்கலாம்
 
          - தாங்கியின்       கால்களின் மேல் கிரீஸ் அல்லது கழிவு எண்ணெய் தடவி வைத்தல் வேண்டும்
 
          - சர்க்கரைப்பாகு       கொடுக்கும் சமயங்களில் பாகு கீழே சிந்துவதை தவிர்ப்பதன் மூலம் எறும்புகள் ஈர்க்கப்படுவதைக்       குறைக்கலாம்
 
         
     3. குளவிகள்:
        குளவிகளின்  உடலில் ரோமங்கள் இருக்காது. இரு விதமான குளவிகள் தேனீக்களைத் தாக்குகின்றன. 
             
        தேனீ  பிடிக்கும் குளவி: 
          பொதுவாக உருவில் சற்று  பெரிய தேனீ பிடிக்கும் குளவி மலைரக இந்தியத் தேனீக்களைத் தாக்குகின்றது. மற்றொரு தேனீ  பிடிக்கும் குளவி இனம் உருவில் சற்று சிறியது. இவற்றின் உடல் கருப்பு நிறத்தில் மஞ்சள்  நிறக் கோடுகளுடன் இருக்கும். இதனை ஈப்புலி என்றும் அழைப்பர். ஒவ்வொரு குளவியும் சுறுசுறுப்பாகச்  செயல்பட்டு நாள் ஒன்றுக்கு 20 தேனீக்களைப் பிடித்துச் செல்கின்றது. குளவிகளின் தாக்குதலுக்கு  இலக்கான கூட்டங்கள் தங்களின் நேரத்தைத் தற்காப்பிற்காக அதிகம் செலவிடுவதால் அவைகளின்  செயல் திறன் மிகவும் குறைகின்றது. தேனீக்களை இக்குளவி தன் கொடுக்கால் கொட்டி செயல்  இழக்கச் செய்கின்றது. நிலத்தின் அடியில் இடப்பட்ட துளைகளில் ஒவ்வொரு துளைகளிலும்  4 அல்லது 5 தேனீக்களை சேர்த்து வைத்து ஒரு முட்டையிடுகின்றது. முட்டையிலிருந்து வெளிவரும்  குளவியின் புழுக்கள் தேனீக்களை உணவாக உட்கொண்டு வளர்ந்து கூட்டுப் புழுக்களாக மாறிய  பின்னர் குளவியாக உருமாற்றம் அடைகின்றன. 
             
        கடந்தை  அல்லது மஞ்சள் பட்டைக் குளவி: 
          உருவில் பெரிய பல்வேறு  இனங்களைச் சேர்ந்த இக்குளவிகள் கூடி வாழும் இயல்பு உடையவை. இவை காகித்தாலான கூடுகளை  மரக்கிளைகளிலோ (படம் 42), சுவர் மீதோ, நிலப் பிளவுகளிலோ அல்லது மரப் பொந்துகளிலோ  கட்டுகின்றன. கடந்தையின் வயிற்றுப் பகுதி கரிய நிறத்தில், மஞ்சள் நிறப்பட்டையுடன் காணப்படும்.  இவை தற்காப்பிற்காகக் கொட்டும் குணம் படைத்தவை. இவை வலுக் குறைந்த கூட்டமுள்ள பெட்டியினுள்  நுழைந்து சென்றோ அல்லது பெட்டியின் நுழைவாயில் அருகே அமர்ந்து கொண்டோ, அல்லது பெட்டியைச்  சுற்றிப் பறந்து கொண்டோ கூட்டிற்கு உணவு தேடிக் கொண்டு வரும் தேனீக்களைப் பிடிக்கின்றன.  இவ்வாறு பிடித்த தேனழுக்களின் தலை, கால்கள், இறக்கைகள் மற்றும் வயிற்றுப் பகுதியைக்  கடித்து நீக்கி விட்டு, சதைப் பிடிப்புடன் கூடிய மார்புப் பகுதியை மட்டும் கூட்டிற்கு  கொண்டு வந்து வளரும் புழுக்களுக்கு உணவாகத் தருகின்றன. வலுக்குன்றிய கூட்டங்கள் அதிகமாகக்  குளவியின் தாக்குதலுக்கு இலக்காகின்றன. வலிமை மிக்க ஒரு இந்தியத் தேனீ கூட்டத்தினுள்  ஒரு குளவி நுழைய முற்பட்டால் அச்சமயம் காவல் பணியில் ஈடுபட்டுள்ள பணித் தேனீக்கள் எதிரியின்  வரவைக் கூட்டினுள் இருக்கும் பிற பணித் தேனீக்களுக்கு அறிவித்து அவைகளையும் உதவிக்கு  அழைக்கின்றன. இதனால் அக்குளவியை 200 முதல் 300 பணித் தேனீக்கள் அரைமணி நேரத்திற்கு  பந்து போலச் சுற்றிச் சூழ்ந்து கொள்கின்றன. இதனால் ஏற்படுத்தப்படும் அதிக சூட்டினால்  குளவி கொல்லப்படுகின்றன. 
             
        கட்டுப்படுத்தும்  முறைகள்: 
        
          - குளவிக்       கூடுகளைத் தேடிக் கண்டு பிடித்து மாலை நேரங்களில் தீப்பந்தம் கொண்டோ அல்லது       பூச்சி மருந்து தெளித்தோ அழிக்கலாம்
 
          - நுழைவு       வழியை ஒரு தேனீ மட்டும் வந்து செல்லும் அளவிற்குக் குறைக்க வேண்டும்
 
          - நுழைவு       வழிக்கு அருகே அமர்ந்து குளவிகள் தேனீக்களைப் பிடிக்க இயலாவண்ணம் அடிப்பலகையை       மாற்றி அமைக்க வேண்டும்
 
          - தேனீப்       பெட்டி அருகே பறந்து வரும் குளவிகளை அடித்துக் கொள்ளலாம்
 
          - குளவிப்       பொறியினுள் நச்சுணவு வைத்துக் குளவிகளைப் பிடிக்கலாம்
 
         
       4. ‘வரோவா’ செவ்வுண்ணி:
        உண்ணிகள்  உருவில் சிறியவை. இவற்றின் உடல் உருண்டையாகக் குண்டூசியின் தலை அளவு இருக்கும். வளர்ந்த  செல்வுண்ணிகள் தேனீக்களின் வயிற்றுப் பகுதியின் மேல் இருந்து கொண்டு ரத்தத்தை உறிஞ்சிக்  குடிக்கின்றன. இளம் பருவத்தில் இவ்வுண்ணிகள், வளர்ச்சியடைந்த புழு மற்றும் கூட்டுப்புழுக்களைத்  தாக்கி அவற்றின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. இவை இந்தியத் தேனீக்களின் ஆண் தேனீக்களின்  புழுக்களை மட்டுமே தாக்குகின்றன. இதனால் கூட்டுப் புழுக்கள் இறக்க நேரிடும் அல்லது  தேனீக்கள் வளர்ச்சி குன்றி உருவில் சிறுத்து சிதைவுற்ற இறக்கைகளுடன் பிறக்கும். அடிப்பலகையில்  இறந்த உண்ணிகளைக் காணலாம். இவ்வகை செவ்வுண்ணிகளைப் புழு வளர்ப்பு அறைச் சட்டங்களின்  மேல் நன்கு பொடி செய்யப்பட்ட கந்தகத் தூளை தூவுவதால் கட்டுபு்படுத்தலாம். 
       5. பல்லி:
        பல்லிகள்  மேல் மூடியினுள் பதுங்கி இருக்கும். சில நேரங்களில் நுழைவு வழிக்கு அருகில் வந்த தேனீக்களைப்  பிடித்து உண்ணும் பல்லிகளைக் காணும் நேரங்களில் அடித்துக் கொல்ல வேண்டும். 
     6.ஓணான்:
        ஓணான்  நுழைவாயிலிற்கு அருகே மறைந்து இருந்து கொண்டு அருகே வரும் தேனீக்களைப் பிடித்து உண்கின்றன.  இவைகளையும் காணும் பொழுதெல்லாம் அடித்துக் கொன்று விட வேண்டும். 
        7. பறவைகள்:
        தேனீக்கள்  இரு வகைப் பறவைகளால் சில இடங்களில் சில சமயங்களில் மிகவும் பாதிக்கப்படுகின்றன. கோடை  மற்றும் பருவ மழை காலங்களில் இவை மிகுதியாகக் காணப்படுகின்றன. தாக்கப்பட்ட கூட்டங்கள்  வலுக்குன்றி ஓடி விடுகின்றன. 
        தேனீ  உண்ணும் பச்சைக் குருவி: 
          இது பச்சை தந்திக்  கம்பக் குருவி என்றும் அழைக்கப்படுகின்றது. பறந்து வரும் குருவிகள் அமர்ந்து கொள்ள  வசதி உள்ள தேனீப் பண்ணைகளில் இவற்றின் தாக்குதல் கூடுதலாகக் காணப்படும. இவை தந்திக்  கம்பிகள் மீது வரிசையாக சிறு சிறு கூட்டமாக அமர்ந்து இருக்கும். பறந்து செல்லும் தேனீக்களை  இவை பிடித்து விழுங்குகின்றன. சில நேரங்களில் புணர்ச்சிப் பறப்பிற்காக வெளியில் வரும்  ராணித் தேனீக்களைக் கூட இவை பிடித்து விழுங்கி விடுகின்றன. 
            கருங்குருவி: 
          இப்பறவை கரிய நிறத்தில்  சற்று நீண்ட இறக்கைகளுடன் இருக்கும். இவை மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுப் பறந்து  செல்லும் தேனீக்களைப் பிடித்து உண்கின்றன. இவை மிகத் திறமையாகப் பறக்கவல்லவை. பறவைகளை  ஓசையெழுப்பித் துரத்தலாம். பறவைத் தொந்தரவு அதிகமாக இருக்கும் காலங்களில் ராணித் தேனீ  வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 
      8. கரடி:
        கரடிகள்  மலைப் பகுதிகளில் தேனீப் பெட்டியைச் சேதப்படுத்தி தேன் அடைகளையும் புழு அடைகளையும்  உண்டு அழித்துவிடுகின்றன. இதனால் தேனீக்கூட்டங்கள் அழிய நேரிடும். மின்வேலி அமைப்பதன்  மூலமும் தேனீப் பெட்டிகளை மொட்டை மாடியில் வைப்பதன் மூலமும் கரடியினால் ஏற்படும் சேதத்தைத்  தவிர்க்கலாம்.         தேனீக்களின்  நோய்கள்: 
          வைரஸ்  நோய்: 
அந்நியத் தேனீக்களை  ஒரு வித நச்சுயிரி (வைரஸ்) நோய் (படம் 43) பெரிதும் பாதிக்கின்றது. இயற்கையாக உள்ள  தேனீக் கூட்டங்களிலும் மலை ரக இந்தியத் தேனீக்களிலும் இந்த நோய் தாக்குதல் சற்று குறைவாகக்  காணப்படுகின்றது. இந்த நோய் முதன் முதலில் 1976 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் காணப்பட்டது.  எனவே இந்த நோய் அந்நாட்டுப் பெயரில் ‘தாய்’ சாக்குப் புழு வைரஸ் நோய் என அழைக்கப்படுகின்றது.  இந்த நோய் 1991-92 ஆம் ஆண்டுகளில் தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, மற்றும் தமிழ்நாட்டிற்குப்  பரவியது. தமிழ்நாட்டில் அச்சமயத்தில் மட்டும் இந்நோயால் இரண்டு இலட்சம் தேனீக் கூட்டங்கள்  அழிந்தன. இதனால் தேன் உற்பத்தி பாதியாகக் குறைந்தது. தற்சமயம் இந்த நோய் ஆங்காங்கே  காணப்பட்டாலும் நோயின் தீவிரம் பெரிதும் குறைந்துள்ளது. நோயுற்ற கூட்டங்களில் தேன்  சேகரிக்கும் திறன் குறைவுபட்டாலும் அவை ஓடுவதில்லை. 
அறிகுறிகள்: 
        
          - அடைகளில்       புழுக்களின் வளர்ச்சி ஒரே சீராக இருக்காது
 
          - மெழுகு       மூடிகள் சற்று உட்குழிந்து ஓரிரு துளைகளுடன் இருக்கும் (படம் 44)
 
          - நோயுற்ற       புழுக்கள் அடை அறைகளில் கொக்கி போல் வளைந்து இருக்காமல் நிமிர்ந்த நிலையில்       இருக்கும் (படம் 45)
 
          - பொதுவாக       நோயுற்று இறந்த புழுக்கள் ஒரு பையினுள் திரவத்தால் சூப்பட்டு இருக்கும். ஆனால்       இத்தகைய அறிகுறி எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லை
 
          - இறந்த       புழுக்களின் உடலிலிருந்து பொதுவாக எவ்விதக் கெட்ட நாற்றமும் வெளிப்படுவதில்லை
 
          - இறந்த       புழுக்களின் தலைப்பகுதி கருப்பாக இருக்கும் (படம் 46)
 
          - நோய்       தீவரமாகும் பொழுது இறந்த புழுக்கள் அடிப்பலகையில் கிடைக்கும்
 
          - இறந்த       புழுக்களின் உடல் உருகத் தொடங்கும் (படம் 46)
 
          - இறந்த       புழுக்களின் உடம்பு பின்னர் வற்றிப் புழுக்கள் முற்றிலுமாக காய்ந்து செதிள்களாக       மாறும்
 
          - இச்செதில்கள்       அகலமாகவும், தட்டையாகவும், அறையின் அடியிலோ அல்லது உள் ஓரங்களிலோ ஒட்டிக் கொண்டு       இருக்கும் (படம் 45)
 
          - இச்செதில்களை       எளிதாக நீக்கி விட இயலும்
 
          - புழுக்களின்       இறப்பால் தேனீக்களின் பெருக்கம் குறையும்
 
          - கூட்டத்தின்       வலு படிப்படியாக குறையும்
 
          - பணித்       தேனீக்களின் எண்ணிக்கை குறையும். இதனால் அடைப்பகுதிகளை தேனீகு்களால் முற்றிலுமாக       மூட இயலாது. இதனால் அடைகள் காயத் தொடங்கும்
 
          - ராணித்       தேனீ சரிவர முட்டையிடாது அல்லது முற்றிலுமாக முட்டையிடுவதை நிறுத்திவிடும்
 
          - பணித்       தேனீக்கள் சுறுசுறுப்பின்றி உள் இருப்பு வேலை நிறுத்தம் மேற்கொள்ளும் இதனால்       உணவு சேகரிக்கும் பணி குறைவாகவே நடக்கும்
 
          - ஓடும்       நிலையில் உள்ள கூட்டத்திற்கு புழு அடை கொடுப்பதால் ஓடும் தாபம் மாறுவதில்லை.       மாறாகக் கொடுக்கப்பட்ட அடையில் உள்ள புழுக்களும் நோய் தாக்குதலுக்கு இலக்காகும்
 
          - நோய்       தாக்குதல் தீவிரமடையும் பொழுது கூட்டங்கள் போதிய உணவு இருப்பு கூட்டில் உள்ள       பொழுதும் கூட்டை விட்டு ஓடி விடுகின்றன. இவ்வாறு ஓடிய கூட்டங்களின் அடைகள் மெழுகுஅந்திப்       பூச்சியினால் சேதப்படுத்துகின்றன
 
          - நோயுற்ற       கூட்டத்தில் சில சுபாவ மாற்றங்கள் ஏற்படும். சில கூட்டங்களில் தேனீக்கள் கூடுதலாகக்       கொட்டும். அடை ஆய்வு செய்யும் போது அடையில் தேனீக்கள் தங்கள் பணியைச் சரிவரச்       செய்யாமல் அங்குமிங்கும் ஓடும் தேனீக்கள் அடையில் புழு வளர்ப்பு நடைபெறும் மையப்       பகுதிகளில் தேன் சேமிப்பை மேற்கொள்ளும். தேனீக்கள் மகரந்த சேகரிப்பில் ஆர்வம்       காட்டாது சர்க்கரைப் பாகு கொடுத்தாலும் தேனீக்கள் உணவு திரட்டும் பணியில் முனைப்புடன்       ஈடுபடாது
 
         
        நோய்  சுழற்சி: 
                  இந்த நோய் குறிப்பாக  வளர்ந்த பணித் தேனீக்களின் புழுக்களையே தாக்குகின்றது. இதனால் வளர்ந்த புழுக்களில்  இறுதித் தோல் உரிப்பு நடைபெறுவதில்லை. இத்தோல் புழுவைச் சுற்றிலும் ஒரு பை போல அமைகின்றது.  இப்பையினுள் தோலுரிக்கும் பொழுது சுரக்கப்படும் தோலுரிப்புத் திரவம் நிறைந்து இருக்கும்.  இத்திரவம் நிறைந்த பையினுள் புழு இருக்கும். இப்புழுவால் கூட்டுப் புழுவாக உருமாற இயலாது.  இத்தகைய புழுக்கள் இறந்துவிடும். இறந்த புழுக்களைப் பணித் தேனீக்கள் வெளியேற்றும் பின்னர்  அடை அறைகளைத் தாதித் தேனீக்கள் தூய்மைப்படுத்தும். அப்பொழுது வைரஸ் கிருமிகள் தாதித்  தேனீக்களின் உடலினுள் செல்கின்றன. இக்கிருமிகள் அரசக்கூழ் சுரப்பியில் பெருக்கமடைகின்றன.  பின்னர் இத்தகைய தாதித் தேனீக்கள் உணவு ஊட்டும் பணியை மேற்கொள்ளும் பொழுது நோயுற்ற  புழுக்களிலும் இந்த நோய் பரவுகின்றது. இந்நோய் ஒரு கூட்டத்திலிருந்து பிற கூட்டங்களுக்கு  கூடு பரவுகின்றது. இந்நோய் ஒரு கூட்டத்திலிருந்து பிற கூட்டங்களுக்கு கூடு மாறிச்  செல்லும் தேனீக்களாலும் கூட்டம் பிரிவதாலும் அடை பரிமாற்றம் செய்வதாலும் நோயுற்ற கூட்டங்களைத்  தேன் சேகரிப்பதற்காகப் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வதாலும் தேன் திருட்டாலும் பரவுகின்றது.  மேலும் இந்நோய் தேன், தேன் எடுக்கும் கருவி, தேன் அறை பரிமாற்றம், மெழுகு மூடி சீவும்  கத்தி மூலமாகவும் நோயுற்று ஓடிய தேனீப் பெட்டியில் மீண்டும் கூட்டங்களைப் பிடித்து  வைப்பதாலும் பரவுகின்றது. 
   
        கட்டுப்படுத்தும்  முறைகள்: 
        
          - நோயுற்ற       கூட்டங்களைத் தீயிட்டு அழித்து விட வேண்டும்
 
          - நோய்       தாக்கிய கூட்டங்களை பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லக் கூடாது
 
          - அடை       பரிமாற்றம் செய்தல் கூடாது
 
          - தேனீப்       பெட்டிகளையும் சட்டங்களையும் கொதிக்கும் நீரிலிட்டுத் தூய்மை செய்து பின்னர்       வெய்யிலில் காய வைக்க வேண்டும்
 
          - நோயுற்ற       கூட்டத்தின் ராணியைச் சில நாட்கள் ராணிக் கூண்டில் அடைத்து வைப்பதன் மூலமும் ஓரளவு       நோய் விரைந்து பரவுவதைத் தடுக்க இயலும்
 
          - நோய்       காணப்படும் இடங்களில் ஒரு சில கூட்டங்களில் மட்டும் இந்நோய் தாக்குதல் காணப்படுவதில்லை.       சில கூட்டங்களில் துப்புறவுத் திறன் நோயுற்ற புழுக்களை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து       விரைவாக அவற்றை நீக்க உதவுகின்றது. இத்தகைய கூட்டங்கள் நோயை எதிர்க்கும் அல்லது       தாங்கும் வல்லமை உடையவை. எனவே இத்தகைய கூட்டங்களைப் பெருக்கி வளர்க்கலாம்
 
          - நோயுற்ற       இயற்கைக் கூட்டங்களைப் பிடிக்கக் கூடாது
 
          - முன்னெச்சரிக்கை       நடவடிக்கையாக நோய் தோன்றும் முன்னரே தேனீக் கூட்டங்களுக்கு சர்க்கரைப் பாகுடன்       விரலி மஞ்சள் தூள் (5-10 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் சர்க்கரை, 100 மில்லி       தண்ணீர்) கலந்து கொடுப்பதால் ஓரளவிற்கு நோய் வராது தடுக்கலாம்
 
          |