சிறப்பு விதை  நேர்த்தி 
      விதைப்புக்கு  முன் விதை மேலாண்மை 
      
        
          - நிலக்கடலையில் உயிருள்ள விதைகளை எளிய  முறையில் பிரித்தெடுத்தல்
 
           
         
      தேவையான பொருட்கள் 
      விதைகளை ஊறவைக்க தேவையான பாத்திரம்,  ஈரமான சாக்குப்பை, கால்சியம் குளோரைடு என்ற உப்புக்கரைசல். 
      செய்முறை 
      
        
          - நிலக்கடலை பருப்பில் நன்கு முற்றாத உடைந்த  சுருங்கிய மற்றும் நோய் தாக்கிய சிறிய விதைகளை முதலில் பரித்தெடுக்க வேண்டும்.
 
          - ஒரு கிலோ விதைக்கு 1/2 லிட்டர் என்ற  அளவில் 0.5 சத கால்சியம் குளோரைடு உப்புக் கரைசலில் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
 
          - ஒரு ஏக்கர் விதைக்கு (50-55 கிலோ விதைப்  பருப்பு) தேவையான 0.5 சத கரைசல் தயார் செய்ய 125 கிராம் கால்சியம் குளோரைடு என்ற இராசயன  உப்பை 25 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்.
 
          - பிறகு ஊறவைத்த விதைகளை இரண்டு ஈர சாக்குகளுக்கிடையே  மெல்லியதாக பரப்பி 16 மணி நேரம் இருட்டில் மூட்டம் வைக்க வேண்டும்.
 
          - இந்த சமயத்தில் உயிருள்ள விதைகளிலிருந்து  சுமார் 5 மி.மீ அளவு முளைக்குருத்து வெளிவந்து விடும்.
 
          - முளைக்குருத்து வெளிவந்த விதைகளை தனியே  பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும்.
 
          - இவ்வாறு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை  முளைவிட்ட விதைகளை 3 முறை பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். கடைசியில் முளைவராத  விதைகள் இறந்த விதைகளாகும்.
 
          - இவ்வாறு தேர்வு செய்த விதைகளை கார்பன்டாசிம்  என்ற பூஞ்சாணக் கொல்லி கொண்டும் பின்னர் ரைசோபியம் கொண்டும் விதை நேர்த்தி செய்து  உடனே விதைக்க வேண்டும்.
 
           
         
      பயன்கள் 
      
        
          - முளைவிடாத இறந்த விதைகளை வீட்டு உபயோகத்திற்கு  பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக எண்ணெய் எடுக்க பயன்படுத்தலாம்.
 
          - மேலும் வயலில் போதுமான அளவு செடிகளை,  விதைகளை விரயம் செய்யாமல் பெற முடியும்.
 
          - விதைகளை கால்சியம் குளோரைடு கரைசலில்  ஊர வைப்பதால் கால்சியம் குறைபாடால் வரக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
 
          - இதனால் ஏறக்குறைய 10-1 முதல் 15 சதம்  கூடுதலாக விளைச்சலைப் பெறமுடியும்.
 
           
         
      2.  உப்புநீர் கரைசல் மூலம் நெல்லின் விதைத்தரம் உயர்த்துதல்  
      செய்முறை 
      
        
          - முதலில் 15 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு  பிளாஸ்டிக் வாளியில் 10 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
          - இதில் ஒரு நல்ல கோழி முட்டையை போடவும்  முட்டை நல்ல எடையுடன் இருப்பதால் தண்ணீரில் மூழ்கிவிடுகிறது.
 
          - பின்பு உப்பை சிறிது சிறிதாகப் போட்டு  கரைக்க வேண்டும் (10 லிட்டர் தண்ணீருக்கு 2 கிலோ உப்பு)
 
          - உப்பு கரைந்த நீரின் அடர்த்தி அதிகமாவதால்  முட்டை மேலே மிதந்து வருவதைக் காணலாம். முட்டையின் மேற்பகுதி 25 பைசா அளவு தண்ணீரின்  மேல்தெரியும் போது தண்ணீரின் அடர்த்தி விதைத்தரம் பிரிப்பதற்கு ஏற்றதாய் அமைகிறது.
 
          - மேற்கண்டவாறு தயாரித்த உப்புக் கரைசலில்  முதலில் 10 கிலோ விதையை சிறிது சிறிதாகப் போட வேண்டும்.
 
          - எடை குறைந்த நெல் விதைகள் மிதக்கும்.  அதே சமயம், எடை அதிகமான, தரம் மிகுந்த விதைகள் கரைசலில் மூழ்கும்.
 
          - மிதக்கும் விதைகளை முற்றிலும் நீக்கிவிட  வேண்டும். மூழ்கிய விதைகளையே விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
 
          - மூழ்கிய விதைகளை வெளியே எடுத்து இரண்டு  அல்லது மூன்று முறை நீரில் கழுவி விதைகளின் மேல் படர்ந்த உப்பை நீக்கி விடவும்.
 
          - விதைகளை கழுவிய பிறகு நிழலில் உலர வைக்க  வேண்டும். பிறகு விதைப்புக்குப் பயன்படுத்தலாம்.
 
           
         
      பயன்கள் 
      
        
          - முற்றாத விதைகள் மற்றும் பொக்கு விதைகளை  இம்முறைப்படி பிரித்தெடுக்கலாம்.
 
          - வயலில் போதுமான அளவு செடிகளைப் பெற  முடியும்.
 
          - இதன்மூலம் அதிக விளைச்சலைப் பெற முடிகிறது.
 
          - பூஞ்சாண் தாக்கிய விதைகளை விதைப்புக்கு  பயன்படுத்துவதிலிருந்து தடுக்கிறது.
 
           
         
       உளுந்தில்:  ஒருமித்த விதை நேர்த்தி (Designer Seed) 
      செய்முறை 
      கடினப்படுத்தப்பட்ட உளுந்து விதையுடன்  முதலில் பாலிகோட் என்ற பாலிமரை (3கி+5மிலி.நீர்/கிலோ) சேர்க்க வேண்டும். அதன் மேல்  இமிடோகுளோப்ரிட் (5கிராம்/கிலோ) சேர்க்க வேண்டும். அதன் பிறகு டிரைக்கோடெர்மா விரிடி  (4கி/கிலோ) மருந்துக் கலவையைச் சேர்த்து கடைசியாக விதைகளுடன் ரைசோபியம் (20கி/கிலோ)  மற்றும் அசோபாஸ் (120கி/கிலோ) நுண்ணுயிர் கலவையைச் சேர்க்க வேண்டும். 
      நன்மைகள் 
      
        
          - முளைப்புத்திறன் அதிகரிக்கின்றது.
 
          - வீரியத்தன்மை அதிகரிக்கின்றது.
 
          - செடிகளை இளம்பருவத்தில் தாக்கக்கூடிய  சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, வெள்ளை ஈ மற்றும் தத்துப்பூச்சிகளின் தாக்குதல்  மிகவும் குறைவு. இதனால் பயிர்பாதுகாப்பு செலவு குறைக்கப்படுகிறது.
 
          - பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை  ஏற்படுத்துகின்றது.
 
           
         
      4.பயறு வகை  பயிர்களில் ரைசோபிய விதைநேர்த்தி 
      வேளாண்  குடிமக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ரைசோபியம் என்ற நுண்ணுயிர் காற்றில் இருக்கும்.  தழைச்சத்தை சேகரித்து நிலத்தை வளப்படுத்தி பயிர்களுக்கு நன்மை வகிக்கின்றது. இந்த ரைசோபியம்  நுண்ணுயிர் பெரும்பாலும் பயறுவகைச் செடிகளுடைய வேர்முடிச்சுகளில் தான் அதிகம் காணப்படுகிறது. 
         
        பயறு  வகை பயிரிடாத நிலத்திலும் ரைசோபிய நுண்ணுயிர்கள் குறைவான அளவில் இருக்கும். தொடர்ந்து  பயறு வகைகள் பயிரிட்டு வரும் நிலங்களில் இதன் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். ஆனால்  மண்ணில் இடப்படும் பூச்சி மற்றும் பூஞ்சாண மருந்துகள் நிலத்தில் நச்சுத் தன்மையை உண்டாக்கி  நிலத்தில் ரைசோபியத்தினுடைய எண்ணிக்கையை கணிசமாக குறைக்கிறது. ஆகவே பயறு வகைகளை விதைக்கும்  போது சோதனைக் கூடத்தில் பெருக்கப்பட்ட ரைசோபியத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்து  விதைத்த ரைசோபியத்தினுடைய எண்ணிக்கையை நிலத்தில் அதிகமாக்கி அதிக தழைச்சத்தை காற்றில்  இருந்து கிரகித்த நிலத்தின் வளத்தை மேம்படுத்துவதுடன் நல்ல விளைச்சலையும் பெறலாம். 
      தேவையான பொருட்கள் 
      
        
          - ரைசோபிய நுண்ணுயிர் உரம்
 
          - பயறு  வகை விதைகள் 
 
          - விதை  நேர்த்தி செய்யத் தேவையான பாத்திரம்
 
          - குளிர்ந்த  10 சத மைதா கஞ்சி (அல்லது) அரிசி கஞ்சி
 
          - அந்தந்த  பயிறு வகைகளுக்குரிய நுண்ணுயிர் ராசிகளை எடுத்துக் கொள்ளவும்.
 
           
         
      செய்முறை  
      
        
          - ஒரு  ஏக்கருக்கு தேவையான தேவையான 10 கிலோ சான்று விதைகளை ஒரு பிளாஸ்டிக் தட்டில் எடுத்துக்  கொள்ள வேண்டும்.
 
          - விதை  நேர்த்திக்கு ஒரு ஏக்கருக்கு  ஒரு பாக்கெட்  அல்லது 200 கிராம் ரைசோபிய உயிர் உரம் தேவைப்படும்.
 
          - 10  சதவீத மைதா கஞ்சியை தயார் செய்து கொள்ள வேண்டும்.
 
          - 10  கிலோ விதைக்கு 1 லிட்டர் கஞ்சி கொட்டு அனைத்து விதைகளும் ஒட்டும் தன்மை உடையதாக இருக்குமாறு  நன்கு கலக்க வேண்டும்.
 
          - தேவையான  உயிர் உரங்களை (ரைசோபியம், அசோஸ்பைரில்லம், அசடோபேக்டர்) சமமாக விதைகளின் மேல் தூவி  பிறகு தொடர்ந்து கலக்க வேண்டும்.
 
          - மைதா  கலந்த விதைகளை உயிர் உரத்துடன் கலக்கும்போது மைதாவின் ஒட்டும் தன்மையினால், ஒரேமாதிரியான  விதை மூலாம் கிடைக்கிறது.
 
          - விதைகளை  நிழலில் உலர்த்தி உடனடியாக விதைப்புக்கு பயன்படுத்தலாம்.
 
           
         
      பரிந்துரை:  
         
        ஒரு கிலோ விதைகளுடன் 10 சதவீத மைதா  கஞ்சி அல்லது 200லிருந்து 300 மில்லி கஞ்சியுடன் 1 கிலோ விதைக்கு 200 லிருந்து  300 கிராம் உயிர் உரத்தை கலப்பதனால் வயலில் பச்சைப்பயிறு, உளுந்து, பருத்தி, தக்காளி  மற்றும் கத்தரி ஆகியவற்றின் முளைப்புத்திறன் அதிகரிக்கிறது. 
      நன்மைகள் 
      
        
          - உயிர்  உரம் கொண்டு விதை நேர்த்தி செய்வதால் மண்ணின் வளத்தை அதிகப்படுத்தலாம்.
 
          - விதைகளை  விதைக் கருவிகள் கொண்டு விதைக்க ஏதுவாகிறது.
 
          - ஒத்த  விதை அளவு மற்றும் அமைப்புடைய விதைகளைப் பெறமுடியும்.
 
          - விதையைக்  கையாளும் முளை எளிதாகின்றது.
 
          - விதை  கருவி கொண்டு விதைகளைப் பிரிக்கும்போது விதைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் எளிதாக பிரிக்க  உதவுகின்றது.
 
          - சிறிய  மற்றும் வேறுபட்ட உருவ அமைப்புடைய விதைகளை உயிர் உரம் கொண்டுவிதை மூலாம் பூசும் போது  அதனைக் கையாளும் முறை எளிதாகின்றது.
 
          - மிகச்சிறிய  விதைகளைக் கூட இதன் மூலம் துல்லியமான முறையில் விதைத்து உரிய பயிரின் அளவை பெறமுடியும்.
 
          - விதை  மூலாம் பூசுவதால் விதையின் எடை அதிகமாவதோடு தூவுதல் விதைப்பு ஏதுவாக அமைகின்றது.
 
          - சிறிய  விதைகளைக் கையாளும் முறை எளிதாவதுடன் விதை அளவும் குறைக்கப்படுகின்றது.
 
           
         
      பருத்தி  விதையில் அமில முறையில் பஞ்சு நீக்கம் செய்தல் 
               
        அமில பஞ்சு நீக்கம் என்பது விதை உறையின்  மேல் எஞ்சியுள்ள பஞ்சை நீக்குவதாகும். இது பருத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு  முறையாகும். 
      செய்முறை 
         
        ஒரு உலர்ந்த பிளாஸ்டிக் வாளியில் ஒரு  கிலோ பஞ்சு விதையை எடுத்து அதில் 100 மி.லி. வணிக தர கந்தக அமிலத்தை ஊற்றும் போதே  விதைகளை ஒரு குச்சி கொண்டு 2 அல்லது 3 நிமிடங்களுக்கு விடாமல் ஒரே சீராக கலக்க வேண்டும்.  இவ்வாறு கலக்கும் போது விதைகளின் மேலுள்ள பஞ்சு நீக்கி விதைகள் காப்பிக்கொட்டை நிறத்திற்கு  வரும். 
      பின்னர் விதைகளை தண்ணீர் விட்டு 5 அல்லது  6 முறை அமிலம் நீக்கும்படி நன்கு கழுவ வேண்டும். கடைசி முறை கழுவும போது நீரை நன்கு  கலக்கி சிறிது நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். பின்பு, நீரின் மேலாக மிதக்கும்  பொக்கு விதைகள் மிகச்சிறிய மற்றும் சரியாக முற்றாத விதைகள், உடைந்த விதைகள், பூச்சி  மற்றும் பூஞ்சாணத் தாக்குதலுக்குள்ளான விதைகள் முதலானவற்றை அரித்து எடுத்து விடவும்.  பின்பு அடியில் தங்கியுள்ள தரமான, நன்கு முற்றிய விதைகளை மட்டும் பிரித்தெடுத்து நிழலில்  உலர்த்தி பின்பு வெய்யிலில் பழைய ஈரப்பதத்திற்கு வரும் வரை உலர்த்த வேண்டும். 
      விதை  நேர்த்தி செய்யும்போது கவனிக்க வேண்டியைவை  
      
        
          - விதைகளை அமிலம் கொண்டு விதை நேர்த்தி  செய்யும் போது மிக கவனமாக செய்ய வேண்டும்.
 
          - முக்கியமாக அமிலத்தை கையைக் கொண்டு  கலக்கக்கூடாது. கலக்குவதற்கு குச்சியை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
 
          - இதற்கு பிளாஸ்டிக் வாளியை மட்டும்தான்  பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் அல்லாத மற்ற பாத்திரங்களை  பயன்படுத்தக் கூடாது.
 
          - 2அல்லது மூன்று நிமிடங்களுக்கு மேல்  அமில நேர்த்தி செய்யக் கூடாது. அப்படி அதிக நேரம் செய்வதால் விதைகளின் முளைப்புத்திறன்  பாதிக்கப்படும்.
 
           
         
      நன்மைகள் 
      
        
          - விதைமூலம் பரவக்கூடிய நோய்க்கிருமிகள்  அகற்றப்படுகின்றன.
 
          - விதை உறையின் மேல் உள்ள காய்ப்புழுக்களின்  முட்டைகள், புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன.
 
          - உடைந்த, முதிராத மற்றும் வற்றி வதங்கிய  விதைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
 
          - முளைப்புத்திறன் அதிகரித்து காணப்படும்.
 
          - கையாளுதல் மற்றும் விதைப்பது எளிது.
 
          - பயிர் எண்ணிக்கையை பராமரிக்க உதவுகின்றது.
 
           
         
      5.  பச்சைப்பயிறில் தாவரம் பொருட்களைக் கொண்டு விதை மூலாம் பூசுதல் 
      செய்முறை 
      
        
          - விதைகளை ஒரு பிளாஸ்டிக் தட்டில் எடுத்துக்  கொள்ள வேண்டும்.
 
          - 10 சதவீத மைதா கஞ்சியை சிறிதளவு விதைகளின்  மேல் ஊற்ற வேண்டும்.
 
          - தட்டை மெதுவாக அசைக்கும் போது மைதா  பசையான விதைகளின் மேல் ஒரே சீராக பரவுகிறது.
 
          - நிரப்புப் பொருளான அரப்புத் தூளை விதைகளின்  மேல் ஒரே சீராக தூவ வேண்டும்.
 
          - விதைகளை நன்கு கலக்க வேண்டும்.
 
          - ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கும் விதைகளை  நீக்க வேண்டும்.
 
          - எஞ்சிய திரட்டிப் பொருளான அரப்புத்தூளை  சல்லடை கொண்டு சளித்து அகற்ற வேண்டும்.
 
          - விதைகளை நிழலில் போதிய ஈரத்தன்மைக்கு  வரும்வரை உலர்த்த வேண்டும்.
 
           
         
      நன்மைகள் 
      
        
          - சிறிய மற்றும் ஒழுங்கற்ற வடிவமுள்ள விதைகளைக்  கையாளும் முறை எளிதாகின்றது.
 
          - விதையின் அளவு மற்றும் எடை அதிகமாவதால்  துல்லி விதைப்பு பெறமுடிகின்றது.
 
          - வினையியல் சார்ந்த விதைத் தரத்தை உயர்த்துகின்றது.
 
           
         
      6.  விதை பிரைமிங் செய்தல் 
      செய்முறை 
      
        
          - ஹைட்ரோ பிரைமிங் (விதை பருமனைப் போல்  இரு மடங்கு நீரை உபயோகித்தல்)
 
          - ஹாலோ பிரைமிங் (சோடியம் குளோரைடு  உப்புக் கரைசலை பயன்படுத்துதல்)
 
          - சவ்வூடு பரவல் பிரைமிங் (பாலி எத்திலீன்  கிளைக்கால் சவ்வூடு பரவல் கரைசலை பயன்படுத்துதல்)
 
          - மணல் ரீதியான பிரைமிங் (ஈரத்தன்மையுடைய  மணலை உபயோகித்தல்)
 
           
         
      மேற்காணும் மூன்று முறைகளில், விதைகளை அந்தந்த  கரைசலில் தேவையான அடர்த்தியில்  
      ஒரு குறிப்பிட்ட கால அளவு ஊற வைத்த பிறகு  விதைகள் உலர்த்தி பழைய ஈரப்பதத்திற்கு கொண்டு வர வேண்டும். நான்காவது முறையில் விதைகளை  தேவைப்படும் நீர்த்தேக்க திறனில் உள்ள ஈர மணலில் கலக்க வேண்டும். பிறகு இதனை ஒரு துளையிட்ட  பிளாஸ்டிக் பைகளில் அடைத்து அதனை ஒரு தட்டில் மேல்கூறிய கூறிய நீர்த்தேக்க திறனுடைய  மணலில் ஆழத்தில் - வைக்க வேண்டும். 
        வெவ்வேறு நீர்த்தேக்க திறனை உருவாக்குதல். 
      வெவ்வேறு  நீர்த்தேக்க திறனை உருவாக்குதல் 
      30 சதவீத நீர்த்தேக்கத் திறன் - ஒரு  கிலோ உலர் மணலுக்கு 90 மி.லி தண்ணீர்  
        40 சதவீத நீர்த்தேக்கத் திறன் - ஒரு  கிலோ உலர் மணலுக்கு 120 மி.லி தண்ணீர் 
        60 சதவீத நீர்த்தேக்கத் திறன் - ஒரு  கிலோ உலர் மணலுக்கு 180 மி.லி தண்ணீர் 
        80 சதவீத நீர்த்தேக்கத் திறன் - ஒரு  கிலோ உலர் மணலுக்கு 240 மி.லி தண்ணீர்  
        100 சதவீத நீர்த்தேக்கத் திறன் - ஒரு  கிலோ உலர் மணலுக்கு 300 மி.லி  
      
        
          
            பயிர்  | 
            பிரைமிங்    தொழில் நுட்பங்கள்  | 
             
          
            தக்காளி  | 
            ஹைட்ரோ பிரைமிங் (48 மணி நேரம்)  | 
             
          
            கத்தரி   | 
            மணல் ரீதி 80 சதம் (3 நாட்கள்)  | 
             
          
            மிளகாய்  | 
            மணல் ரீதி 80 சதம் (3 நாட்கள்)  | 
             
          
            வெங்காயம்  | 
            மணல் ரீதி 80 சதம் (3 நாட்கள்)  | 
             
          
            கேரட்  | 
            ஹைட்ரோ பிரைமிங் (36 மணி நேரம்)  | 
             
          
            பீட்åட்  | 
            ஹைட்ரோ பிரைமிங் (12 மணி நேரம்)  | 
             
          
            வெண்டை   | 
            மண்முறை 60 சதம் (3 மணி நேரம்)  | 
             
          
            முள்ளங்கி   | 
            ஹைட்ரோ பிரைமிங் (12 மணி நேரம்)  | 
             
          
            கடுகு  | 
            ஹைட்ரோ பிரைமிங் (12 மணி நேரம்)  | 
             
           
         
      நன்மைகள்: 
      
        
          - முளைப்புத் திறனை அதிகரிக்கின்றது.
 
          - விதை முளைப்பு வேகத்தை அதிகரிக்கின்றது.
 
          - நீர் மற்றும் வெப்பத்தினால் வரும் தாக்குதலை  எதிர்கொள்ளும் திறனை உருவாக்குகின்றது.
 
          - விதை சேமிப்பு காலத்தை அதிகரிக்கின்றது.
 
          - சிறிய விதைகளுக்க இது மிகவும் சிறந்த  தொழில் நுட்பமாகும்.
 
          - விளைச்சலை அதிகரிக்கின்றது.
 
           
         
      7.பாலிமர்  கொண்டு விதை மூலாம் பூசுதல் 
         
        பாலிமர் பூச்சு என்பது விதைப்பதற்கு  முன்பாக செய்யப்படும் ஒரு வகை விதை நேர்த்தி முறையாகும். இவ்வகை பாலிமர், பாலிகோட்  என்ற பெயரில் சிவப்பு, பச்சை, கருப்பு, ஊதா, மஞ்சள், கருஞ்சிவப்பு மற்றும் வெள்ளை போன்ற  பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. பொதுவாக விதை உறை நிறத்திற்கு ஏற்றவாறு வண்ணங்களை  தேர்வு செய்தல் வேண்டும். 
         
        இப்பாலிமரை ஒரு கிலோ விதைக்கு 3 கிராம்  என்ற அளவில் 5 மி.லி தண்ணீரில் கரைத்து விதைகளுக்கு சாயம் பூசுவதால் விதையில் புறத்தோற்ற  அமைப்பு மேம்படுத்துவதுடன், விதையின் முளைப்புத்திறன் மற்றும் வீரியம் 5 முதல் 10 சதம்  வரை அதிகரிக்கும். 
      பாலிமர் பூச்சியின் திறனை மேம்படுத்த,  பாலிமருடன் கார்பென்டாசிம் என்ற பூஞ்சாணக் கொல்லி மருந்தையும், இமிடகுளோபிட் என்ற  பூச்சிக் கொல்லி மருந்தையும் கலந்து விதை நேர்த்தி செய்வதால், விதைகள் சேமிப்பில்,  அதிக காலம் பூச்சி மற்றும் பூஞ்சாணத் தாக்குதலின்றி, அதிக  முளைப்புத்திறன் மற்றும் வீரியத்துடன் பாதுகாக்கப்படுகிறது.  இவ்வகை விதை நேர்த்தியினை எல்லா வகையான வேளாண் மற்றும் தோட்டப் பயிர் விதைகளுக்கும்  எளிதாகக் கையாளலாம். 
      
        
          
            வ.எண்  | 
            பயிர்கள்  | 
            வர்ணம்  | 
            ஒரு    கிலோ விதைக்கு தேவையான பாலிமர் (பாலிகோட் அளவு)  | 
             
          
            1.  | 
            மக்காச்சோளம்  | 
            வெண்மை கலந்த இளஞ்சிவப்பு   | 
            பாலிகோட் பாலிமர் 3 கிராம்  | 
             
          
            2.  | 
            சூரியகாந்தி   | 
            கருப்பு   | 
            பாலிகோட் பாலிமர் 4 கிராம்  | 
             
          
            3.  | 
            வெண்டை   | 
            பச்சை   | 
            பாலிகோட் பாலிமர் 5 கிராம்  | 
             
           
         
        
      இத்துடன் 2 கிராம் கார்பன்டாசிம் மற்றும்  2 மிலி. இமிடோகுளோபிரிட் கொண்டு விதை நேர்த்தி செய்யவும். 
        பாலிமர் விதைப் பூச்சியினை கீழ்கண்ட முறையில்  ஒன்றன்பின் ஒன்றாக சேர்க் வேண்டும். 
                                                பாலிமர் (3கி+5மி.லி. நீர்/கிலோ) 
                                            கார்பன்டாசிம்  (2 கி/கிலோ) 
                                            இமிடோகுளோபிரிட்  (2மி.லி/கிலோ) 
        (அல்லது) 
        டைமீதோயேட்  (3 மி.லி/கிலோ) 
      நன்மைகள் 
      
        
          - விதை முளைப்பு துரிதப்படுத்தப்படுகிறது.
 
          - நாற்றுகளின் முளைப்பும் வீரியமும் அதிகமாகிறது.
 
          - சேமிப்பின் போது பூச்சு மற்றும் பூஞ்சாணங்களிலிருந்து  விதைகளை பாதுகாக்கிறது.
 
          - சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு ஏற்றது.
 
          - விதை நேர்த்தி மருந்துகள் வீணாவதை குறைக்கின்றது.
 
           
         
      8.வறட்சியை  தாங்க விதையை கடினப்படுத்துதல் 
      செய்முறை 
      
        
          - விதைகளை தேவையான நீர் அல்லது இரசாயனக்  கரைசலில் ஒரு குறிப்பிட்ட கால அளவு ஊற வைக்க வேண்டும்.
 
          - பிறகு விதைகளை எடுத்து நிழலில் ஊறவைத்து  பழைய ஈரப்பததிற்கு திரும்ப கொண்டு வர வேண்டும்.
 
          - ஒவ்வொரு பயிருக்கும் விதைக் கடினப்படுத்துதலின்  தொழில்நுட்பம் வேறுபடுகின்றது.
 
          -  
 
           
        
          
            பயிர்  | 
            இரசாயனப்    பொருள் மற்றும் அளவு   | 
            செய்முறை  | 
             
          
            கம்பு  | 
            2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு  | 
            20 கிராம் உப்பை 1 லிட்டர்    நீரில் கரைக்க வேண்டும். ஒரு கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 10 மணி நேரம்    ஊறவைத்து பிறகு பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப பெற வேண்டும்.  | 
             
          
            சோளம்   | 
            2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு  | 
            20 கிராம் உப்பை 1 லிட்டர்    நீரில் கரைக்க வேண்டும்.  பிறகு 1 கிலோ விதையை    650 மி.லி உப்புக் கரைசலில் 16 மணி நேரம் ஊறவைத்து முடிவில் பழைய ஈரப்பதத்திற்கே    விதைகளை கொணர வேண்டும்.  | 
             
          
            பருத்தி  | 
            2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு  | 
            20 கிராம் உப்பை 1 லிட்டர்    நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 10 மணி    நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப கொணர    வேண்டும்.  | 
             
          
            சூரியகாந்தி  | 
            2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு  | 
            20 கிராம் உப்பை 1 லிட்டர்    நீரில் கரைக்க வேண்டும். ஒரு கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 10 மணி நேரம்    ஊறவைத்து பிறகு பழைய ஈரப்பதத்திற்கே திரும்ப பெற வேண்டும்.  | 
             
           
        தகவலுக்கு 
பேராசிரிய மற்றும் தலைவர் 
விதை மையம் 
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 
கோயமுத்தூர்-641003. 
தொலைபேசி எண்:0422-661232. 
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in 
                   |