தவேப வேளாண் இணைய தளம் :: விதை

விதையின் அடிப்படை

விதை 

விதை என்பது விதை உறையால் சூழப்பட்ட ஒரு மிகச்சிறிய  கருவுற்ற செடியாகும். பொதுவாக இதனுள் சில சேமிப்பு உணவுப் பொருள் காணப்படும். சில வகைத் தாவரங்களில் விதைகள் கொட்டை/பருப்பு என்று அழைக்கப்படுகிறது. இது கருவுருதலுக்குப் பின் மூடிய மற்றும் திறந்த வகைத் தாவரங்களில் காணப்படக் கூடிய ஒரு வகை முதிர்ந்த சூல்களின் விளைபொருட்கள் ஆகும். அது தாய்செடிகளிலன் ஒரு வித வளர்ச்சி ஆகும். விதை உற்பத்தியானது பூத்தல் மற்றும் மகரந்தச் சேர்க்கையில் தொடங்குகிறது. கருமுட்டையிலிருந்து கரு வளர்தல் ஆரம்பித்து சூலக அறையிலிருந்து விதைஉறை உருவாதல்  வரையில் விதை உற்பத்தி முடிவடைகிறது.

seed structure


மேலே

விதையின் முக்கியப் பகுதிகள்

 1. கரு
 2. கருவளர்ச்சிக்குத் தேவையான சத்துப் பொருட்களை அளித்தல்
 3. விதை உறை

seed part

கரு என்பது ஒரு இளஞ் செடி. இது முறையான சூழ்நிலைகளில் புதிய முழு செடியாக வளர்ச்சி அடைகிறது. ஒரு வித்திலைத் தாவரங்களில் ஒரு விதை இலையும், இருவித்திலைத் தாவரங்களில் இரு விதை இலையும் மற்றும் திறந்த விதை தாவரங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விதை இலையும் காணப்படுகிறது. முளைவேர் என்பது விதைக்கருவின் வேர் ஆகும். முளைக்குருத்து என்பது கருத்தண்டு ஆகும். விதை இலை இணைந்துள்ள புள்ளிக்கு மேல் உள்ள தண்டு வித்திலை மேல்தண்டாகும். விதையிலை இணைப்பிற்கு கீழ் உள்ள தண்டு வித்திலை கீழ்த்தண்டாகும்.

விதையின் உள்ளே கருமுட்டையிலிருந்து செடி வளர்வதற்கான சத்துப் பொருள்களின் சேமிப்பு உள்ளது. சேமிப்பு  சத்துப்பொருள்களின் தன்மை தாவரங்களின் வகைக்கேற்ப மாறுபடுகிறது.  பூக்கும் தாவரங்களில் விதை சேமிப்பு கரு சூழ்தசையிலிருந்து தொடங்குகிறது. கரு சூழ்தசை பெற்றோர் செடிகளில் இரட்டைக் கருவுறுதல் மூலம் உருவாகிறது. மும்மைய கருசூழ்தசைகளில் எண்ணெய் அல்லது மாவுப் பொருள்கள் மற்றும் புரதப் பொருள்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
திறந்த விதைத் தாவரங்கள் பொதுவாக கூம்புடைய தாவரங்களில் சேமிப்பு உணவு தசை என்பது பெண் கேமிட்டோ ஃபைடின் ஒரு மைய சந்ததியின் ஒரு பகுதி ஆகும். சில இனங்களில் முளைக்கருவானது சூழ்தசை அல்லது பெண் கேமிட்டோபைட்டில்  காணப்படுகிறது. விதை முளைக்கும் போது செடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை கருசூழ்தசையிலிருந்து உட்கொள்ளப்படுகிறது. மற்றவைகளில் கருசூழ்தசை (endosperm) விதைக்கருவினால் (embryo)
உட்கொள்ளபட்டு பின் விதை வளர்ச்சியின் போது வளர்ச்சி அடைகிறது. முளைக்கருவில் உள்ள வித்திலையானது சத்துப்பொருள்களால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த வகை இனங்களில் விதை முற்றும் தருணத்தில் கருசூழ்தசை உண்டாவது இல்லை. இந்த வகை இனங்களை சூல்தசையில்லா விதை என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு: பீன்ஸ், பட்டாணி, சூரியகாந்தி மற்றும் முள்ளங்கி விதை முற்றும் போது விதையில் கரு சுழ்தசை காணப்பட்டால் அதற்கு சூல்தசையுள்ள விதை என்று பெயர்.
எடுத்துக்காட்டு : புல்வகைகள் ஆமணக்கு.
விதை உறையானது சூலகத்தைச் சுற்றியுள்ள சூல் உறையிலிருந்து உருவாகிறது. சில வகை விதைகளில் விதை உறை மெல்லியதாகவும், (நிலக்கடலை) சில வகைகளில் கடினமானதாகவும் (தேங்காய்) காணப்படுகிறது. விதை உறையானது கருச்சிதைவு மற்றும் கரு உலர்தலிலிருந்து பாதுகாக்கிறது.

உறையில் காணப்படும் ஒரு சிறிய இணைப்பிற்குப் பெயர் ஏரில் என்று அழைக்கப்படுகிறது. சில வகை விதைகளில் விதை உறையில் காணப்படும் தழும்பிற்கு ஹைலம் என்று பெயர்.


மேலே

விதை மற்றும் தானியங்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள்

விதை உற்பத்தி தானிய உற்பத்தி
கண்டிப்பாக முளைக்கும் திறனுடையதாக இருத்தல் வேண்டும். முளைக்கும் திறன் தேவையில்லை.
அதிகபட்ச மரபு மற்றும இயற்கைத் தூய்மை இருத்தல் வேண்டும் தேவையில்லை
குறைந்தபட்ச விதைச் சான்றளிப்புத் தரங்கள் திருப்தி அளிப்தாக இருக்க வேண்டும். தேவைப்படுவதில்லை
விதை சேமிப்பு பூச்சி மற்றும் பூஞ்சாணைக் கட்டுப்படுத்த உயிர்க் கொல்லி (அ) பூஞ்சாணக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்திருத்தல் வேண்டும். தானியங்களை உணவாக உட்கொள்ளும் பட்சத்தில் விதை நேர்த்தி செய்தல் கூடாது.
விதை சேமிப்பின் போது சுவாச விகிதம் மற்றும் பிற வினையியல் மற்றும் உயிரியல் செயல்பாடுகள் குறைவாக இருத்தல் வேண்டும். வரைமுறைகள் தேவையில்லை.
விதை சான்றளிப்பு அட்டை அல்லது உண்மை நிலை அட்டை கண்டிப்பாக இருத்தல்  வேண்டும். தானியங்கள் உற்பத்திக்கு இது தேவையில்லை.
விதையை தானியமாக மாற்ற இயலாது. எடுதப்பட்ட ஒப்புதல் கடிதம் இருந்தால்தான் தானியமாக மாற்ற முடியும். தானியத்தை தகுந்த சூழ்நிலைகளில் தகுந்த சூழ்நிலைகளில் ஒப்புதல் மூலம் விதையாக மாற்ற முடியும்.
அனைத்து விதைத்தர விதிகளையும் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். தேவையில்லை.

விதை மற்றும் தானிய உற்பத்திக்கிடையே உள்ள வேறுபாடுகள்

விதை உற்பத்தி தானிய உற்பத்தி
வருங்கால தேவையை ஊகித்து மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிட்ட உற்பத்தியாகும். திட்டமிடல் அவசியமில்லை.
உற்பத்தியை ஆதாரமான ஒருவரே மேற்கொள்ள முடியும். அவசியமில்லை.
குறிப்பிட்ட நிலம் போன்றவை தேவை. அவசியமில்லை.
விதைச் சான்றிதழ் மையம் மற்றும் விதைத் தரம் போன்றவற்றின் மேற்பார்வையில் அமையும். அவசியமில்லை.
வினையியல் முதிர்ச்சியின் போது அறுவடை செய்யப்படும். அறுவடை முதிர்ச்சியடைந்தால் போதும்.
அறுவடை பின் சார் தொழில்நுட்பங்களை சிறப்பான முறையில் கையாள வேண்டும். அவசியமில்லை.

மேலே

விதையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பியல்புகள் 

வேளாண் உற்பத்தியின் முக்கிய மூலதனம் மற்றும் இடுபொருள் விதையே ஆகும். மற்ற இடுபொருட்களின் பயன்பாடும் இதனைச் சார்ந்தே உள்ளது. நல்ல வீரியமான விதையானது அனைத்து வழிவகைகளையும உபயோகப்படுத்தி கொண்டு ஒரு உற்பத்தியாளருக்கு சிறப்பான வெளியீட்டைக் கொடுக்கும். விவசாயிகளுக்கு நேற்றைய அறுவடையாகவும், இன்றைய நம்பிக்கையாகவும், செல்வ வளம் தரும் பொருளாகவும் விதை அமைகிறது. சிறப்பான மண் வளத்தில் விதைக்கப்பட்ட சிறப்பான விதை மேலும் சிறந்த அறுவடைக்கு வழிவகுக்கும். மேலும் இது இரு தலைமுறைகளின் இணைப்பாகச் செயல்படுகிறது.

விதை என்பது புதிய தொழில்நுட்பங்களை சுமந்து செல்வது 

புதிய இரகங்களின் கண்டுபிடிப்பும் அவற்றின் தரம் வாய்ந்த விதைகளும், மற்ற இடுபொருட்களும் சேர்ந்து பயிர்களின் மகசூலை பன்மடங்காக உயர்த்தியுள்ளன. இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் உணவு உற்பத்தி உயர்ந்துள்ளது. பயிர்த் தொழில்நுட்ப வளர்ச்சியின் சிறப்பான மரபணுக்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்வது விதையே ஆகும்.

உணவுத் தேவையின் அடிப்படை உபகரணம் 

குட்டையான மற்றும் அதிக விளைச்சல்  தரும் இரகங்கள் மற்றும் வீரிய இரகங்களிலன் அறிமுகத்தால் பல்வேறு பயிர்களின் விளைச்சல் திறன் மற்றும் வளர்ச்சி மேலோங்கியுள்ளது. 

உற்பத்திக் குறைவான பகுதிகளில் பயிர் வளர்ச்சிக்கு மேலோங்கியுள்ளது.

உற்பத்திக் குறைவான பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட இரகங்களின் மூலம் அதிக பயிர் விளைச்சல் பெறமுடியும்.

இயற்கை சீற்றங்களின் போது விரைந்த வேளாண் புனர்வாழ்வு

வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சிக் காலங்களின் போது ஏற்படும் பஞ்சம் மற்றும் பட்டினி போன்றவற்றை எதிர்கொள்ள தேசிய விதைச் சேமிப்பு கிடங்குகள் நிறுவுதல் முன்னுரிமை பெறவேண்டும்.

 • இது போன்ற அவசர நிலைகளில் தானிய உற்பத்தியை பெருக்குவதற்கு வீரிய விதைகள் உதவும்.
 • சீற்றங்களுக்குட்பட்ட இடங்களில் மறு விதைத்தலுக்காக தேவைப்படும் விதைகள் உபயோகம் செய்யலாம்.

விதைத் தொழில்நுட்பத்தின் குறிக்கோள்

 • துரிதமான பெருக்கம்
 • காலத்திற்குள் விநியோகம்
 • சிறந்த தரம் வாய்ந்த விதைகள் உற்பத்தி
 • நியாய விலை

சுருக்கமாகக் கூறினால் விதைத் தொழில்நுட்பம் என்பது காலவரையறைக்கு நல்ல தரம் வாய்ந்த விதைகளை நியாயமான விலைக்கு உற்பத்தி செய்வதே ஆகும்.

நல்ல தரமான விதைகளின்  சிறப்பியல்புகள் விதைகள் இனத்தூய்மையுடன் இருக்கவேண்டும்.

இனத்தூய்மை

வல்லுநர் / கரு விதை - 100 சதவிகிதம்
ஆதார விதை - 99.5 சதவிகிதம்
சான்று விதை - 99.0 சதவிகிதம்

சான்றிதழ் பெறத் தேவையான புறத்தூய்மை பெற்றருக்கவேண்டும் 

 புறத்தூய்மை

அனைத்துப் பயிர்கள் - 95 சதவிகிதம்
காரட் - 95 சதவிகிதம்
தூயவிதையின் சதவீதம் அதிக அளவில் இருக்கவேண்டும்.
வெண்டை      99.0 சதவிகிதம்
மற்றவை     - 98.0 சதவிகிதம்
எள், சோயா, சணல்   - 97.0 சதவிகிதம்
நிலக்கடலை   96.0 சதவிகிதம்

மேலே

பிற இரக விதைகள் இருக்கக்கூடாது (ஒரு கிலோவில் பிற இரக விதைகள் எண்ணிக்கை)
(பிரிக்க முடியாதவை)

பயிர் பிற இரக விதைகள்
வால் கோதுமை கோதுமை, ஓட்ஸ், பயிறு
ஓட்ஸ் கோதுமை, பயிறு, வால் கோதுமை
கோதுமை ஓட்ஸ், பயிறு, வால் கோதுமை

விதை நிலங்களுக்கு அருகாமையில் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட விதைகள் காணப்படும். இவற்றை கருவிகளால் பிரித்தல் முடியாது. பயிர் விதைகளில் புறக் கலப்பாக இவ்வகை விதைகள் இருக்கும். இரண்டு பயிர்களும், ஒரே நேரத்தில் முதிர்ச்சி பெற்று அறுவடை செய்யும் பொழுது இவ்வகை கலப்பு ஏற்படும்.
விதைகள் தடை செய்யப்பட்ட களை விதைகளிலிருந்து கலக்காமல் இருக்கவேண்டும். இவ்வகை களை விதைகள் கீழ்க்கண்ட வழிகளில் கெடுதல் விளைவிக்கும்.

 • இருவிதைகளில் தோற்றமும் ஒன்று போல் இருப்பதால் கருவி மூலம் பிரித்தல் கடினமாகும்.
 • அவற்றின் வளர்ச்சி விதைப் பயிர்களின் வளர்ச்சியுடன் போட்டியிட்டு கேடு விளைவிக்கும்.
 • அவற்றின் செடிகளோ அல்லது பாகங்களோ மனிதர்கள் அல்லது கால்கடைகளுக்கு நச்சாக அமையும்.
 • நோய் மற்றும் பூச்சிகளுக்கு மாற்று உணவுப் பயிராக செயல்படும்.
பயிர் தடைசெய்யப்பட்ட களைப் பயிர்கள்
க்ளோவர் சிக்கரி (சிக்கரியம் இண்டிபஸ்)
பூசணி வகைகள் காட்டுப் பூசணி இரகங்கள்
வெந்தயம் மெலிலோலஸ் சிற்றினம்
லெட்ரூஸ் காட்டு லெட்டூஸ்
வெண்டை காட்டு வெண்டை
கடுகு ஆற்கிமோன் மெக்ஸிகனா
கோதுமை கன்வால்வுலஸ் அர்வென்ஸிஸ்
நெல் காட்டு நெல்

விதைகள் குறிப்பிட்ட கிருமி தாக்குதல் இல்லாமல் இருக்கவேண்டும். விதைச் சான்றிதழ் பெறத் தேவையானன தரக்கட்டுப்பாட்டில் குறிப்பிட்டள்ள விதை நோய் தாக்குதல் இல்லாமல் இருக்கவேண்டும்.

விதைகள் குறிப்பிட்ட கிருமி தாக்குதல் இல்லாமல் இருக்கவேண்டும். விதைச் சான்றிதழ் பெறத் தேவையானன தரக்கட்டுப்பாட்டில் குறிப்பிட்டள்ள விதை நோய் தாக்குதல் இல்லாமல் இருக்கவேண்டும்.

 • விதை நோய் தாக்குதல் ஏற்படக் காரணமான நோய் கிருமி அந்த நிலத்திலோ (அ) குறிப்பிட்ட பயிர் விலகு தூரத்திலோ இருந்தால் தாக்குதல் ஏற்படும். உணவு மற்றும் வேளாண் கூட்டமைப்பு (FAO) கிழ்காணும் நோய்களின் தாக்குதலை தடை செய்துள்ளது.
பயிர் குறிப்பிட்ட நோய் நோய் பரப்பும் கிருமி
கோதுமை உதிரி கரிப்பூட்டை நோய் உஸ்டிலாகோ ட்ரிடிஸி
கடுகு அல்டர்நேரியா கருகல் ஸ்பாலிலோதிகா சொர்கி
மக்காச்சோளம் மணிக்கரிப்பூட்டை நோய் அல்டர்நேரியா
கம்பு    மணிக்கரிப்பூட்டை பச்சைக் காது டாலிபோஸ்போரியம் பெனிசில்லாரியே
பச்சைக் காது ஸ்கிலீரோஸ்போரா கிராமினிகோலா
தேனொழுகல் நோய் க்ளாவிசெப்ஸ் மைக்ரோசெபலா
கத்தரி சிற்றிலை டாடூரா வைரஸ்
மிளகாய் ஆந்த்ரகநோய் இலைக்கருகல் க்ளியோஸ்போரியம் பைப்ரேட்டம்
பூசணி தேமல் குக்குமிஸ் வைரஸ்
எள் இலைப்புள்ளி அல்டர்நேரியா
தட்டைப்பயிர் அந்தரக்நோஸ் கொலிட்டோ ட்ரைக்கம்
வெண்டை மஞ்சள் நரம்புத் தேமல் ஹைபிஸ்கஸ் வைரஸ்
உருளை  பழுப்பழுகல் ஸ்யூடோமோனாஸ் சொலனேசியா
வேர் முடிச்சு நூற்புழு மிளாய்டோகைன் இன்காக்னிடா
தக்காளி  முன் கருகல் அல்டர்னேரியா சொலனி
இலைப்புள்ளி சான்தோமோனாஸ் வெஸிகடோரயா
 • விதையின் வடிவம், அளவு, நிறம் மற்றும் உள்ள இயல்புகள் அந்த இரகத்தின் வரையறைக்குட்பட்டு இருக்கவேண்டும்.
 • புறத்தோற்றம் நல்ல வளர்ச்சியுடனும், எடையுடனும் இருக்கவேண்டும்.
 • வினையியல் முதிர்ச்சி, வீரியம் மற்றும் வளர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
 • சேமித்து வைக்கத் தேவையான ஈரப்பதம் கொண்டிருக்கவேண்டும்.
  • நீண்ட கால சேமிப்பு        -      8 சதவிகிதம் மற்றும் அதற்கு குறைவு
  • குறைந்த கால சேமிப்பு       -      10-13 சதவிகிதம்
 • சந்தையில் அதிக வியாபார மதிப்பு பெற்றிருக்கவேண்டும்.

மேலே

விதை உருவாதல் 

விதையென்பது கருவடைந்த முதிர்ந்த சூல் ஆகும். இதனில் முளைக்கரு, சேமிப்பு உணவுப் பொருள் மற்றம் பாதுகாப்பு உறைகள் ஆகியவை இருக்கும். விதை வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி போன்றவை கீழ்க்கண்ட நிகழ்வுகள் மூலம் நடைபெறும்.

 • மகரந்தச் சேர்க்கை
 • கருவுறுதல்
 • கருவுற்ற சூல் வளர்ச்சி
 • உயிரணு பகுப்பு
 • உணவுப் பொருளை சேமித்து குவித்தல்

மகரந்தச்சேர்க்கை

பூ உருவாதல் மற்றும் மலருதல் 

பூ என்பது சூலகம் (Pistil), பூந்துகாம்பு (Stamen), புல்லி (Sepal), மற்றும் பூவிதழ் (Pistil), ஆகியவற்றை உள்ளடக்கிய பயிரின் இனப்பெருக்க உறுப்பாகும். பூவின் ஆண்பாகம் (Androceium), மகரந்தம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பெண் பாகத்தில் கருப்பை (Ovary), சூல்தண்டு (Style) மற்றும் சூல்முடி (Stigma) ஆகியவை இருக்கும்.

முழுமையடைந்த பூ என்பது ஆண் மற்றும் பெண் பாகங்களை ஒரு சேரக் கொண்டிருப்பதாகும். ஆண் மற்றும் பெண் பாகங்கள், நல்ல செயல்பாடுடன் கூடியிருப்பதை இரு பால் பூ என்றழைக்கலாம். சில சமயங்களில் இரு பாகங்களின் முதிர்ச்சி காலம் வேறுபட்டிருக்கும். இது போன்ற இருகாலப் பக்குவம் (Dichogamy) உள்ள பூக்கள் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு வழி வகுக்கும். இதனுள் ஆண் பாகம் முதலில் முதிர்ச்சி அடைந்தால் மகரந்த முன் முதிர்வு (Protandry) எனவும், பெண் பாகம் முதலில் முதிர்ச்சி அடைந்தால் சூலக முன் முதிர்வு (Protogymy) எனவும் அழைக்கப்படுகிறது.

முழுமையடையாத பூக்கள் ஒரு பால் பூக்களாகும். இவற்றுள் ஆண் பூ மற்றும் பெண் பூ தனித்து இருக்கும்.  இரு பூக்களும் தனியாக ஆயினும் ஒரு செடியில் பூத்தால் ஒரிலித்த செடி என்றும், வெவ்வேறு செடியில் பூத்தால் ஒரு பாலியச் செடி என்றும் அழைக்கப்படுகிறது.

கருத்தரித்த பூக்களில் இருந்து விதைகள் உருவாவதற்கு மகரந்தச் சேர்க்கை (மகரந்த பையிலிருந்து மகரந்தம் சூல்முடிக்கு மாறிச் செல்லுதல்) முன்னோடியாகும். கருவுறுதல் முழுமையாக நடைபெறுவதற்கு வீரியமான மகரந்தங்களும் அதனைப் பெற தயாரான நிலையில் சூல் முடியும் அவசியமாகும். முதிர்ச்சி பெற்ற மகரந்தப் பையானது வெடித்து மகரந்தங்களை (ஒரு மய நுண்சிதல் விதைகள்) விடுவிக்கும். அவை அதே பூக்களின் சூல்முடியை சென்றடைந்தால் தன்மகரந்தச்சேர்க்கை எனவும், வேறு பூவின் சூல்முடியை சென்றடைந்தால் அயல் மகரந்தச் சேர்க்கை (அ) அயல் கருச் சேர்க்கை எனவும் அழைக்கப்படும்.
இரு பால் பூக்களில் மகரந்தப் பை வெடித்தலும் அதனைப் பெற தயார் நிலையுள்ள சூழ்முடியும் ஒரே நேரத்தில் நிகழும் போது தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். பூக்கும் தாவர வகைகளும், வீரிய மலர்கள் (மகரந்தச் சேர்க்கைக்கு முன் விரியாத மலர்கள்) மற்றும் மூடு மலர்கள் (எப்பொழுதுமே விரியாத மலர்கள்) ஆகியவை தன் மகரந்தச் சேர்க்கைக்கு வழிவகுக்கும் பூவியல் குணங்களாகும்.

ஒரு பால் பூக்கள் கொண்டுள்ள பயிர்களில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். இரு பால் பூக்கள் கொண்டுள்ள செடிகளில் தன் மகரந்தச்சேர்க்கைக்கு சில தடைகள் உண்டு. அவை தன்மலட்டுத்தன்மை, இரு காலப் பக்குவம் (ஆண் மற்றும் பெண் பூக்களின் முதிர்ச்சி வெவ்வேறு காலங்களில் நிகழும்), பாலுறுப்புத் தடை (ஆண் மற்றும் பெண் பூக்களின் உருவ அமைப்பு தன் மகரந்தச் சேர்க்கைக்கு ஒத்துழையாமல் இருக்கும்) மற்றும் இருமட்ட சூல்தண்டு (பூவின் சூழ்தண்டு மற்றும் சூழ் முடியின் நீளம் வெவ்வேறு அளவில் இருப்பதால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும்) போன்றவை ஆகும்.

கோதுமை, நெல், வால் கோதுமை, தட்டைப்பயிர், பச்சைப்பயிறு

தன் மகரந்தச் சேர்க்கைப் பயிர்கள்

சோளம், தீவனப் பயிர்கள், கம்பு, காய்கறிகள் (காரட், காலிபிளவர், வெங்காயம்)

அயல்  மகரந்தச் சேர்க்கைப் பயிர்கள்

10-40 சதவிகிதம் வரை அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பயிர்கள் என்ற வகையும் உள்ளது. உதாரணம் பருத்தி மற்றும் துவரை ஆகியப் பயிர்கள் அடிக்கடி மகரந்தச் சேர்க்கைப் பயிர்கள் ஆகும்.

கருவுறுதல் 

சூலானது பெண் சூல்திசுவறையிலும், மகரந்தங்கள் ஆண் திசுவரையிலும் வளர்ச்சியடையும். கருவுறுதல் என்பது பெண் திசுவரையிலேயே நடைபெறும். இதற்கு மகரந்தங்கள் ஆண்திசு வரையில் இருந்து பெண்திசுவரையைச் சென்று சேர்வதற்கு உயிரற்ற காரணிகளான காற்று, நீர் மற்றும் உயிர் காரணிகளான வெளவால் போன்றவை துணை புரிகின்றன.

கருவுறா விதை 

கருவுறாமல் விதை உருவாகுதல் தான் கருவுறா விதை என்றழைக்கப்படுகிறது. இனச்சேர்க்கை நடைபெறாமலே இங்கு விதைகள் உருவாகும். பல்வேறு நிலைகளில் இந்த நிகழ்வு நடைபெறும். ஆயினும் கருவுறா விதையின் மரபணு பெண் பூவிலிருந்து மட்டுமே கிடைத்திருக்கும். மகரந்தச்சேர்க்கையோ, மகரந்தக் குழாய் வளர்ச்சியோ இங்கு நடைபெறாது.

கருவுறாக் கனி 

கருவுறாமல் கனிகள் உருவாதல் மற்றோர் வகையாகும்.


மேலே

விதை உருவாகுதல் 

விதையானது உருவாவதற்கு கீழ்க்கண்ட நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நிகழும்.

 • பெரும் சிதல் விதைகள் உருவாகுதல்
 • முட்டை உருவாகுதல்
 • நுண் சிதல் விதைகள் உருவாகுதல்
 • மகரந்தங்கள் உருவாகுதல்
 • கருவுறுதல்

ஆண் மற்றும் பெண் திசுவறையின் சந்ததி வளர்ச்சி 

பெண் சந்ததி வளர்ச்சி 

கருப்பை சுவர்களின் ஆக்கத்திசுவிலிருந்து (Meristem) பூக்கும் தாவரங்களின் விதை உருவாகக் காரணமான அடிப்படை குருத்து உண்டாகிறது. சூல்மூலகத்தினுள், பூசணப் பெண் சிதல் திசு சில சிறப்பியல்புகளுடன் அருகாமையில் உள்ள மற்ற திசுக்களிலிருந்து வித்தியாசப்பட்டு உருவாகிறது. அது பெரிய உயிரணுக்களாவும், பெரிய உட்கரு மற்றும் அடர்த்தியான அறைக்குழம்பு ஆகியவற்றை கொண்ட கரு உற்பத்தி மூல உயிரணு (பெரும் சிதல் விதைகள்) என்று அழைக்கப்படுகிறது. இந்த மூல உயிரணுவானது, குன்றல் பிரிவின் மூலம் நான்கு கரு மூல உயிரணுக்களாக, ஒரு மய அணுகோல்களுடன் பிரியும். இந்த நான்கில், மூன்று உயிரணுக்கள் சிதைந்து, ஒன்று மட்டும் பிழைத்து கருப்பையாக வளர்ச்சி பெரும். இதுவே பெரும் சிதல் விதைகள் உருவாகுதல் என்றழைக்கப்படுகிறது. கரு மூல உயிரணுவின் உட்கரு மேலும் மூன்று தொடர்ச்சியான பிரிவுகள் மூலம் எட்டு உட்கருக்களாக பிரிகிறது. இவற்றுள் கருப்பையின் சூலடி முனையில் மூன்று சூலக எதிர்முனை உயிரணுக்கள் மற்றும் இரு நடுநிலை துருவ உட்கருக்களும், சூழ்துளை முனையில் ஒரு பெண் முட்டை உயிரணு மற்றும் இரு துணை உயிரணுக்களும் உருவாகும். இந்த நிகழ்வே ‘முட்டை உருவாகுதல்’ என்றழைக்கப்படுகிறது.

ஆண் சந்ததி வளர்ச்சி 

மகரந்தப் பையினுள் உள்ள நுண்சிதல் விதையானதுஇ மூல உயிரணுக் குன்றல் பிரிவின் மூலம் நான்கு ஒரு மய நுண்சிதல் விதை மூல உயிரணுக்களாக பிரிகிறது. இவற்றிலிருந்து தான் மகரந்தம் உருவாகும். மகரந்தம் இரு உயிரணுக்களை கொண்டது. ஒன்று குடில் உயிரணு மற்றொன்று தோற்றுவிக்கவல்ல ஆக்க உயிரணு. இந்த உயிரணுவானது பிரிந்து இரு விந்தணு உட்கரு உண்டாகும்.

மகரந்தச் சேர்க்கை 

சூல்முடியில் வந்திறங்கும் மகரந்தமானது முளைத்து, பின் மகரந்தக் குழாய் சூல் தன்டின் உள்ளே வளர்ந்து செல்லும். சூல்தண்டைக் கடந்து, சூழ்துளை வழியாக கருப்பையின் உள்ளே நுழையும். கருவுறுதல் நிகழ்ச்சி இரு ஆண் உட்கருக்களின் செயலால் உண்டாகும். ஒன்று பெண் முட்டையுடன் சேர்ந்து இரு மய துருவ உட்கருவாகவும் மற்றொன்று நடைபெறும் இதனுள் மும்மய உட்கருவானது ஆதர கரு சூழ்தசையாக செயல்படும். இந்த நிகழ்வு இரட்டை கருவுறுதல் அல்லது முக்கலப்பு என்றழைக்கப்படுகிறது.

விதை வளர்ச்சி

 • கருவுற்ற பின், சூலானது முதிர்ந்து விதையாக வளர்ச்சி பெற பல்வேறு நிலைகளைக் கடந்து செல்லும். நுண்ணிய கருப்பையிலிருந்து விதையானது ஒரே வடிவம், அளவு மற்றும் அமைப்புக்களுடன் உருவாகும். ஒரே சீரான அமைப்பு பெற்றிருந்தாலும், அந்த உயிரணுவின் உட்கருவில் (அணுக்கோல்) பதிந்துள்ள மரபியல் குறியீட்டின் படி விதை வளர்ச்சி பெறும்.
 • சூல்  உறையானது விதையின் உறையாக வளர்ச்சி பெறும்.
 • சூல் மூலக்கன்றானது அழிந்து விடும். சில இனங்களில் மட்டும் அது ஒரு மெல்லிய அடுக்காக, மேல்புற ஊட்டத் தசை என்றழைப்படும். இது விதையுறையின் உள்ளே படிந்து முளைக்கருவிற்கு உணவு ஊட்டம் அளிக்கிறது.
 • கருசூல்தசை முளைக்கருவின் முக்கிய ஊட்டமளிக்கும் துணைத் தசையாகும். விதையின் வளர்ச்சி மற்றும் முளைப்பிற்கு இது முக்கியமாகும். சூழ்தசையானது முளைக்கருவைக் காட்டிலும் வேகமாக வளரும்.
 • ஒரு விதையிலையுடைய தாவரங்களில், கரு சூழ்தசையானது முதிர்ச்சியின் பொது அதிகமான புற வளர்ச்சி பெற்று விதையின் பெரும் பாகமாக அமையும்.
 • இரு விதையிலையுடைய தாவரங்களில், சூல்தசையானது வளரும் முளைக்கருவால் உபயோகப்படுத்தப்பட்டு விடும் (அ) வளர்ச்சி பெறாமல் இருக்கும் (அ) முதிர்ந்த விதையின் ஒரு நுண்ணிய பாகமாக செயல்படும்.

முளைக்கரு

கரு முட்டையானது சில உயிரணு பகுப்புகள் மூலம் முதல் முளைக்கருவாக உருவாகும். ஒரு விதையிலை மற்றும் இரு விதையிலை தாவரங்களின் முதிர்ந்த கரு முட்டையானது வித்தியாசமாக இருந்தாலும் அவற்றின் முளைக்கரு உண்டாகும் முறை ஒரு மித்தமாக இருக்கும். முதல் முளைக்கரு மிதவை திசுக்களானது சங்கிலித் தொடர் போன்ற உயிரணுக்களாக மாறி முளைக்கருவினை சூலின் நடுவே தள்ளும். உணவுப் பொருள் பெருவதற்கே சூலின் உள்ளே முளைக்கரு சென்றடையும்.


மேலே

முளைக்கரு வளர்ச்சி 

இரு விதையிலைத் தாவரங்களில் கரு முட்டையில் ஏற்படும் முதல் பகுப்பு குறுக்காக ஒரு சிறிய நுனி உயிரணுவாகவும் ஒரு பெரிய அடித்தள உயிரணுவாகவும் பிரிகின்றது. மேலும் நேர்க்கோட்டில் பகுப்பு ஏற்பட்டு நுனி ‘ ஏ’ உயிரணு இரு பக்கவாட்டில் சேர்ந்த உயிரணுக்களாகவும், ‘பி’ உயிரணு அடித்தள உயிரணு குறுக்கில் ஏற்படும் பகுப்பு ஒன்றன் மேல் ஒன்றாகவும் அடைகின்றன. இவை தான் ‘T’ வடிவமுள்ள 4 முதல் முளைக்கருக்கள். ‘சி’ உயிரணுவானது பக்கவாட்டில் பிரிந்து ‘n’ மற்றும் ‘n’ எனப்பிரியும். இவை மேலும் பிரிந்து 3 அல்லது 4 உயிரணுக்கள் ஒரு நேர் வரிசையில் அமைந்து மிதவை திசுக்களாகின்றன. ‘m’ உயிரணு நேர் பகுப்பு ஏற்பட்டு 4-6 உயிணுக்களாக ஒரு குழுவில் அமைகிறது. சாய்வாக பக்கவாட்டில் பகுப்புகள் ஏற்பட்டு இந்தக் குழு உள்புற உயிரணுக்கள் மற்றும் வெளிப்புற உயிரணுக்களாகப் பிரியும். உள்புற அணுக்கள் வேர் நுனியாகவும் வெளிப்புற அணுக்கள் வேர் உறையாகவும் அமையும். ‘எ’ உயிரணுவில் இருந்து பிரிந்தவை மேலும் அணுக்களாக இரு வரிசையில் பக்கவாட்டில் பகுப்பு ஏற்பட்டு அமைகின்றன. 8 அணுக்களும் நேர் பகுப்பு ஏற்பட்டு, அதில் முதல் வரிசையில் உள்ளவை ஒரு உருண்டை வடிவ முளைக்கருவாக உருவெடுக்கும். இந்த முளைக்கருவின் வெளிப்புற அணுக்கள் பிரிந்து  வெளிப்புற அடுக்கில் அமைந்து தோல் சுக்கு திசுவாக உருவாகும். அடுத்த வரிசையில் உள்ளவை விதையிலை நுனித் தண்டு மற்றும் துளையின் தண்டு - முளை வேர் என உருவாகும்.

இது போன்ற முளைக்கரு வளர்ச்சியில் சில மாற்றங்கள் பயிர்களில் ஏற்படும். நுனி உயிரணு மற்றும் அடித்தள உயிரணுக்களின் பகுப்பில் உள்ள வேறுபாடுகளால் முளைக்கரு வளர்ச்சியில் பல்வேறு வகைகள் உள்ளன.
ஒரு விதையிலைத் தாவரங்களில் ‘பி’ உயிரணு பகுப்பு ஏற்படாமல் மிதவைத் திசுக்களின் உறிஞ்சுறுப்புகளாக உருவாகின்றன. ‘எ’ உயிரணு பக்கவாட்டில் பகுப்பு ஏற்பட்டு இரு உயிரணுக்களாக பிரியும். இதைத் தொடர்ந்து பலப் பிரிவின் மூலம் ஒரு விதையிலையாக உருவாகும். புல்வகைத் தாவரங்களின் முளைக்கரு வளர்ச்சி ஒரு விதையிலைத் தாவரங்களைக் காட்டிலும், வேறுபட்டு இருக்கும். முதலாவதாக பக்கவாட்டில் ஏற்படும் பகுப்பினால் மேல் கீழாக ஒரே மாதிரியான உணிரணுக்கள் உருவாகும். இந்த ஒரு விதையிலையிலிருந்து மேலும் ஒரு உறியும் தன்மையுடைய முளைக்கரு கவசம், வேர்த்தண்டு மற்றும் வேர் உறை உருவாகும்.

கரு சூழ்தசை வளர்ச்சி 

3 வைகயான கருசூழ்தசை வளர்ச்சி உள்ளன. எ உட்கரு வகை சூழ்தசையின் உட்கரு பல் பகுப்புகள் ஏற்பட்டு பின் தசைச்சுவர் உருவாகும். உதாரணம் கோதுமை, ஆப்பிள், சீமைப் பூசணி பி உயிரணுவகை – உட்கரு தனித் திருக்கும் நிலை இல்லாமல் மற்றும் சி உட்கரு முதலில் பகுப்பு முதலில் உட்கரு பகுப்பும் அதனைத் தொடர்ந்து உயிரணுக்கள் அமைதல் உதாரணம் : ஒரு விதையிலைத் தாவரங்கள்.
கருசூழ்தசையானது இரு விதையிலைத் தாவரங்களில் ஒரு நிலைப் பெற்ற சேமிப்பு திசுவாகும். சூழ்தசை இல்லாத ஒரு விதையிலைத் தாவர விதைகளில், சூழ்தசையானது வளரும் முளைக்கருவினால் உபயோகப்படுத்தப்படும். சேமித்த உணவும் பொருள்கள் மீண்டும் விதையிலைகளில் உருவாக்கப்பட்டு விதை முளைப்பிற்கு உபயோகம் ஆகும். தானிய வகைகளில் முளைக்கரு முதிர்ச்சி பெரும் போது சூழ்தசையின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு மாவு போன்ற அமைப்ப பெற்று முளைக்கரு கவசத்தின் இடையே ஒரு சுருக்கு போல் அமையும்.

விதை ஊற வளர்ச்சி 

சூல் உறையானது மீண்டும் ஒழுங்குபடுத்தப்பட்டு உயிரணு மாற்றங்கள் ஏற்பட்டு முதிர்ச்சியடைந்து விதை உறையாக உருவாகும். இரு சூல் உறைக் கொண்ட விதைகளில், விதை உறையானது இரு சூல் உறையிலிருந்தோ (அ) வெளிப்புற சூல் உறையிலிருந்து மட்டுமோ உருவாகும். இவை போன்றவைகளில் உள்சூழ் உறையானது பிரிந்து விடும்.

விதை வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி 

விதை முதிர்ச்சியின் போது ஏற்படும் உணவுப் பொருட்கள் சேமிப்பின் மாற்றங்கள், ஒரு விதையிலைத் தாவரங்கள் (எ.கா. கோதுமை) மற்றும் இரு விதையிலைத் தாவரங்கள் (எ.கா. சோயாபீன்ஸ்) போன்றவற்றில் விவரமாக அறிந்து கொள்ளலாம் .
கோதுமையில் , பூ மலர்ந்த பிறகு 35 நாட்களுக்கு விதையின் உலர்ந்த எடை அதிகரிக்கும். விதையின் ஈரப்பதம் 14-21 நாட்களுக்குள் அதிகரிக்கும், அதன் பின் குறையும். ஒடுக்கப்பட்ட சர்க்கரை மற்றும் சுக்ரோஸின் அளவ 7-14 நாட்களுக்குள் அதிகமாகவும் அதன் பின் ஸ்டார்ச் ஆக மாறும் போது அவற்றின் அளவு குறையும். ஸ்டார்ச் (மாவுச் சத்து) விதையின் முக்கிய சேமிப்பு உணவுப்  பொருளாகும். இதன் அளவு விதையில் அதிகரிப்பது உலர் பொருள் சேமிப்புப் போலவே இருக்கும்.
ஈரப்பதம் விரைவில் குறையக்கூடிய கோதுமை இரகங்களின் முளைப்புத்திறன் வேகமாக இருக்கும். விதையானது, அதிகளவு உலர் எடை, முளைப்புத் திறன் மற்றும் வீரியம் ஆகியவற்றை கொண்டுள்ள நிலை வினையியல் முதிர்ச்சி என்றழைக்கப்படுகிறது. பொதுவாக, விதையானது வயல் முதிர்ச்சி அடைந்து, 6-10 சதவிகிதம் என ஈரப்பதம் குறையும் போது அறுவடை செய்யப்படும். வயல் முதிர்ச்சி என்பது அந்தந்தப் பயிர்களின் தனித்த இயல்பாகும்.

சோயாபீன்ஸ் விதையானது பூ மலரும் நாட்களுக்குள் அதிகப்பட்ச உலர் எடையை அடையும். கருவுறுதலுக்கு பின் 12-18 நாட்களுக்குள் எண்ணெய் சேமிப்பு அதிகமாகவும், 24-42 நாட்களுக்குள் குறைவாகவும் இருக்கும். விதையின் புரதச்சத்து கருவுற்ற பின் 12-18 நாட்களில் அதிகமாகவும் அதன் பின் குறைந்தும் காணப்படும். முதலில் உள்ள அதிக புரதச் சத்தின் அளவு புரதமில்லா நைட்ரஜன் அளவின் எடையையே குறிக்கும். புரதச்சத்தின் அளவு கூடிய பிறகே எண்ணெயின் அளவு விதையில் கூடும்.


மேலே

விதைத் தூக்கம் 

விதைத் தூக்கம் என்பது விதையின் ஓய்வு நிலை (அ) விதை உயிர் வாழ ஏற்படும் ஒரு செயல்பாடு ஆகும். ஏனெனில் இது விதையின் முளைப்புத் திறனை தாமதப்படுத்துகிறது. ஆதலால் விதைத் தூக்கம் விதையின் உயிர் வாழ்விற்கு ஒரு முக்கியமான மற்றும் திறனுள்ள செயல்பாடு ஆகும்.
ஆமென் (1963) அவரின் கூற்றுப்படி விதைத் தூக்கம் என்பது “அக அமைப்பின் கட்டுப்பாட்டில் மற்றும் சுற்றுப்புறச்சூழலின் திணிப்பில் வளர் சிதை மாற்ற வழியில் ஏற்படும் ஒரு செயல்பாடே ஆகும்”. 

சிம்சன் (1965) அவரின் கூற்றுப்படி “விதைத் தூக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சுற்றுப்புறக் காலக்கட்டத்தில் முளைப்புத் திறனுள்ள விதை முளைக்கத் தவறுவதும், பின் அத்தடைகள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ நீக்கப்பட்டால் முளைப்பதுவுமே ஆகும்.
ஆமென் (1963) படி, விதைத் தூக்கம் இரண்டாக வகைப்படும்.

 1. முதல் நிலைத் தூக்கம்
 2. இரண்டாம் நிலைத் தூக்கம்

முதல் நிலைத் தூக்கம் 

தாய் செடியிலிருந்து விதைப் பரவும் பொழுது, அதாவது முதிர்ச்சி பெறும் முன்போ, முதிர்ச்சியின் போதோ, முதிர்ச்சியின் பிறகோ, விதையின் நிலையைப் பொறுத்து விதைத் தூக்கம் உந்தப்படுவது முதல் நிலை விதைத் தூக்கம் ஆகும்.

இரண்டாம் நிலை விதைத் தூக்கம்

நன்கு முதிர்ச்சியடைந்த மற்றும் ஈரப்பதம் வாய்ந்த விதையானது சுற்றுப்புறச்சூழலின் காரணங்களால் முளைக்காமல் இருப்பது இந்நிலை ஆகும். (எ.கா) வசந்த கால கோதுமை மற்றும் குளிர்கால வால் கோதுமையில் இரண்டாம் நிலைத் தூக்கம் கீழ்க்கண்ட முறைகளில் திணிக்கலாம்.

 1. உலர் வால் கோதுமை விதைகள் 50-90 டிகிரி செ தட்பவெப்பநிலைக்கு உள்ளாக்குதல்.
 2. வால் கோதுமையை ஈரப்பதம் மிக்க கொள்கலனில் 20 டிகிரி செ வெப்பத்தில் 7 நாட்களுக்கு வைப்பது.
 3. வசந்த கால கோதுமை அதிக ஈரப்பதத்தில் காற்றுப்புகாத கொள்கலனில் 50 டிகிரி செ வெப்பத்தில் ஒரு நாள் வைப்பது.
 4. நீருனுள் விதையை ஊறவைத்து, இருட்டில் 20 டிகிரி செ.. வெப்பத்தில் 1-3 நாட்களுக்கு வைப்பது.

வினையியல் முதிர்ச்சி அடைந்த பிறகு ஒன்றிலிருந்து ஒன்றரை மாதங்களில் இரண்டாம் நிலை விதைத் தூக்கத்தை தூண்டலாம். கோதுமையை 2 வாரம் தேக்கி வைத்தும் தூக்கம் முறியவில்லை. 0.1 சதவிகிதம் ஜிஏ3, 0.5-1.0 சதவிகிதம் எத்தனால், குறைந்த வெப்பத்தில் குளிர் நிலைப்படுத்துதல், கனி உறை நீக்குதல் மற்றும் 20 டிகிரி செ வெப்பத்தில் சேமிப்பது போன்றவற்றை தூக்கத்தை முறிக்கும் முறைகளாகும்.

இரண்டாம் நிலை விதைத் தூக்க செயல்பாடுகள்

 • முளைப்புத்திறனிற்கு ஏதுவாக உள்ள வளர்சிதை மாற்ற வழிகளில் முக்கிய இடங்களில் தடைகள் வருவது.
 • வளர்ச்சியை ஊக்குவிக்கும் (அ) வளர்ச்சியை தடுக்கும சாதகமில்லாத சமநிலைக் கொண்ட முதல் நிலை விதைத் தூக்கம் (விதையுறைக்குட்பட்ட தூக்கம்).
 • பலப் பயிர்களில் விதைத் தூக்கமானது முளைக்கருவை சுற்றியுள்ள பாகங்களினால் (விதையுறை தூக்கம்), தூண்டப்படுகிறது. இதனுள், விதைக் கொம்பை (Glumes), பூக்காம்புச் செதில் (Lemma) மற்றும் பூச்செதில் (Palea) போன்றவை அடங்கும். இந்த வகையில் முளைக்கருவானது விதைத் தூக்கத்திற்கு உட்படாமல் இருக்கும்.

முதல் நிலை விதைத் தூய்மை வகைப்பாடுகள்

 • வெளிப்புறத் தூக்கம்
 • உட்புறத் தூக்கம்

வெளிப்புறத் தூக்கம் 

விதையுறை மற்றும் வேறு காரணிகளான தடைகள் அல்லது கடின விதை நிலை போன்றவை.

இயற்பியல் காரணிகள்

கடின விதையுறைக்காரணமாக நீர் (அ) காற்றின் பரிமாற்றம் விதையினுள் செல்லாமல் இருப்பதே காரணமாகும். (எ.கா) பயறுவகை, அக்கேசியா, ப்ரோசபிஸ், சப்போட்டா போன்றவை.

வேதியியல் காரணிகள் 

விதையுறையில் முளைப்பைத் தடுக்கும் காரணிகளாகும்.

பொறியியல் காரணிகள் 

முளை வேர் வெளிவருவதற்கான பாகங்களில் தடைகள் (எ.கா) டெர்மினேலியா விதையில் முளைவிடுவதற்கு தேவையான இடப்பற்றாக்குறை.

உட்புறத் தூக்கம் 

முளைக்கருவின் உள்ள தடைகள் (அ) முதிர்ச்சியற்ற முளைக்கரு (அ) இரு காரணங்களும் இணைந்தது. இதனில் மேலும் உள்ள வகைப்பாடுகள்.

புறஅமைப்பியல் காரணிகள் 

முதிர்ச்சியற்ற முளைக்கருவினால் சாதகமான சூழ்நிலையிலும் விதைகள் முளைக்காமல் இருப்பது. (எ.கா) ஆப்பிள்.

வினையியல் காரணிகள் 

வளர்சிதை மாற்ற வழிகளில் உள்ள தடைகள் - எபிஎ (ABA), கெளமாரின்ஸ், பீனால்ஸ் போன்றவை.

புறஅமைப்பு வினையியல் 

மேற்கூறியவை இரண்டும் இணைந்து செயல்பட்டால் விதைத் தூக்கம் ஏற்படும்.

இரண்டாம் நிலை விதைத் தூக்கம் 

தடைக்காரணிகள் நீக்கப்பட்டாலும், விதைகள் முளைக்காமல் இருப்பது, சாதகமில்லாத சுற்றுப்புறச் சூழ்நிலைக்கேற்ப தழுவிப் பரவும் முறையாகும்.

வகைபாடுகள்

வெப்பநிலை

வெப்பநிலை மாற்றங்களினால் விதைத் தூக்கம்

ஒளிநிலை

ஒளிநிலை மாற்றங்களினால் விதைத் தூக்கம்

ஒளியின் தரத்திற்குட்பட்ட விதைத் தூக்கம்

 

ஊடுகலப்பு அழுத்தம் அழுத்தம் அல்லது அதிக ஊடுகலப்பு அழுத்தம்

 

ஹார்பர் (1977) படி, விதைத் தூக்கம் கீழ்க்கண்ட வகைப்பாடுகளாக பிரிக்கலாம்.

தோற்றத்தின் இயல்பு இயல்பான / உடன்பிறந்த தூண்டுதலால் திணித்தல்
தோன்றிய காலம்  முதல் நிலை
இரண்டாம் நிலை
தோன்றிய இடம்   வெளிப்புறம்
உட்புறம்
இரண்டும் இணைந்த வகை

மேலே

விதைத்தூக்கத்தின் நிறைகள்

 • விதையின் சேமிப்பு காலம் மிகைப்படும்.
 • சாதமில்லாத காலங்களை விதைகள் கடந்துவிடும்
 • இருப்பிட முளைப்பைத் தடுக்கிறது.

விதைத் தூக்கத்தின் குறைகள்

 • விதைத் தூக்கத்தை முறியடிக்கும் காலம் அதிகமாகத் தேவைப்படும்.
 • களைச்செடி விதைகளின் வாழ்நாள் மேம்படுகிறது.
 • விதைத் தூக்கத்திற்குட்பட்ட விதைக்குவியலை பயிர் செய்யும் போது தேவைப்படும் பயிர்களின் தொகையில் பற்றாக்குறை ஏற்படும்.

விதைத் தூக்கத்தின் குறைகள்

 • விதைத் தூக்கத்தை முறியடிக்கும் காலம் அதிகமாகத் தேவைப்படும்.
 • களைச்செடி விதைகளின் வாழ்நாள் மேம்படுகிறது.
 • விதைத் தூக்கத்திற்குட்பட்ட விதைக்குவியலை பயிர் செய்யும் போது தேவைப்படும் பயிர்களின் தொகையில் பற்றாக்குறை ஏற்படும்.

விதைத்தூக்கம் தோன்றும் இடம் மற்றும் காரணம்

வ.எண் பயிர்கள் தோன்றும் இடம் தடையின் பெயர்
1. காஸ்ப்பியம் கனியின் மேல்தோல் விதை வெளியுறை அப்ஸ்சிக் அமிலம்
2. கொத்தமல்லி கனியின் மேல்தோல் கெளமாரின்
3. சூரியகாந்தி கனியின் மேல்தோல் விதை வெளியுறை ஹைட்ரோ சைனிக் அமிலம்
4. நெல் உமி அப்ஸிசிக் அமிலம்
5. கோதுமை கனியின் மேல்தோல் விதை வெளியுறை கேட்டசின், டானின், அறியாத காரணிகள்
6. வால் கோதுமை உமி கெளமாரின்
பினாலிக் அமிலம்
ஸ்கோபோலெடின்
7. கிரஷ்யன்ஆலிவ் கனியின் மேற்தோல் விதை வெளியுறை கெனமாரின்
8. பீட்ரூட் கனியின் மேற்தோல் பினாலிக் அமிலம் அப்ஸிலிக் அமிலம் கரிமமற்ற அயனிகளின் அதிக அளவு
9. ஓட்ஸ் உமி அறியாத காரணம்

விதைத்தூக்கத்தின் வகைபாடுகள்

வ.எண் வகை காரணம் முளைக்கருவின் இயல்பு முன் நேர்த்தி
1. இயற்பியல் ஊடுருவறல்ல விதையுறை முழு வளர்ச்சி, விதைத் தூக்கமின்மை தோல் ஒதுக்கீடு (பொறியியல் மற்றும் அமிலம்)
2. வினையியல் முளைப்புத் திறனை தடைசெய்யும் வினையியல் காரணிகள் முழு வளர்ச்சி விதைத் தூக்கம் வளர்ச்சி ஊக்கிகளில் நனைத்து எடுத்தல் (ஜிஏ 3, எத்ரல் மற்றும் கரைசல் - KNO3 தையோ யூரியா)
3. ஒன்றிணைந்த முறை 1+2 முழு வளர்ச்சி விதைத் தூக்கம் தோல் ஒதுக்கீடு மற்றும கரைசல்
4. புற அமைப்பு வளர்ச்சி குன்றிய முளைக்கரு வளர்ச்சி குன்றிய தூக்கமின்மை குளிர்ந்த நிலைப்படுத்தும் சிகிச்சை
5. புற அமைப்பு வினையியல் வளர்ச்சிக் குன்றிய முளைக்கரு, வினையியல் வளர்ச்சி குன்றிய தூக்கமின்மை குளிர்ந்த சிகிச்சை மற்றும் கரைசலில் நனைத்து எடுத்தல்.

மேலே

விதைத்தூக்கத்தை முறிக்கும் நேர்த்திகள் இயற்பியல் விதைத்தூக்கம்

தோல் ஒதுக்கீடு

 • அமிலம்
 • பொறியியல்
 • இயற்பியல் நேர்த்தி
 • சுடுநீர் நேர்த்தி

தோல் ஒதுக்கீடு

இது இயற்பயில் (அ) வேதியியல் முறையில் விதையுறையின் கடினத்தை பலவீனப்படுத்தும் (அ) மென்மைக்குரிய நேர்த்தி முறையாகும். மால்வேசி மற்றும் லெக்யூமினேசி குடும்பங்களின் விதைகளுக்கு இம்முறை பொருத்தமாக இருக்கும்.

அமிலத் தோல் செதுக்கீடு

அடர் கந்தக அமிலம் 100 மிலி / கிலோ என்ற அளவில் விதைகளை நேர்த்தி செய்யவேண்டும். விதையுறைகள் இயல்பு மற்றும் வகையைப் பொருத்து நேர்த்தியின் காலம் மாறுபடும். எ.கா

மரப்பயிர்கள் 1-3 மணி நேரம்
ரோஜா விதைகள் அமிலத்தில் மிதமான நேர்த்தி செய்துபின் வெப்பத் தோல் செதுக்கீடு செய்யவேண்டும்.

பொருளியில் தோல் ஒதுக்கீடு

விதைகளை மணற்தாள் மீது உரசி (அ) கருவி மூலம் (அ) ஊசி வைத்து செல்லுவதற்கு வழிவகுப்பது இம்முறையாகும்.
(எ.கா)
பாகல் விதைகளை மணல் மற்றும் விதையின் விகிதம் 2:1 என்ற அளவில் 5-10 நிமிடங்கள் விதையினை மணங்பகுதியில் உரசவேண்டும்.

சுடு நீர் நேர்த்தி

பயிறு வகை விதைகளுக்கு இம்முறை பொருந்தும். விதைகளை கொதிக்கும் நீரில் 1-5 நிமிடம் முதல் 60-80 நிமிடங்கள் வரை ஊறவைக்கவேண்டும். சுண்டல் மற்றும் நிலக்கடலைப் போன்ற பயிர்களில் சுடு நீர் நேர்த்தி 1 நிமிடத்திற்கு மேல் செய்வது விதையைப் பாதிக்கும்.

குளிர்ந்த / வெப்ப நிலைப்படுத்துதல்

முளைக்கருவின் காரணத்தால் விதைத்தூக்கம் இருக்குமாயின், இவ்வகை நேர்த்தி பயன்படும்.

குளிர்ந்த நிலைப்படுத்துதல்

விதைகளை 0-5 டிகிரி செ குளிர்ந்த  நிலையில் ஒரு ஈரப்பதமுள்ள ஊடகத்தில் 2-3 நாட்கள் முதல் பல மாதங்கள் வரை அடைகாக்கும் முறை ஆகும். அடைகாக்கும் காலம். விதையின்  இயல்பு மற்றும் விதைத்தூக்கத்தின் வகையைப் பொருத்து மாறுபடும். (எ.கா) செர்ரி மற்றும் ஆயில்  பாம் விதைகள்.

வெப்பநிலைப்படுத்துதல்

சில விதைகள் 40-50 டிகிரி செ வெப்பம் தேவைப்படும். (எ.கா) ஆயில் பாம் விதைகள் 40-50 டிகிரி வெப்பத்தில் இரு மாதங்கள் நிலைப்படுத்துதல் அவசியமாகும். நேர்த்தியின் போது விதையின் ஈரப்பதம் 15 சதவிகிதம் மிகாமல் இருக்கவேண்டும்.

வளர் சிதை மாற்றப் பொருட்களை (தடைப் பொருட்கள்) கசியச் செய்தல்

விதைகளை நீரில் 3 நாட்கள் ஊறவைக்கவேண்டும். நீரை 15 மணிக்கொரு முறை மாற்றவேண்டும். அப்படி செய்வது விதைகள் நொதித்தலை தடுக்கும். விதைகளை ஓடும் நீரில் ஒரு நாள் ஊற வைப்பதும் தடைகளை நீக்கும். (எ.கா) கொத்தமல்லி (கெளமாாரின்), சூரியகாந்தி (ஹைட்ரோ சைனிக் அமிலம்).

வெப்பநிலை நேர்த்திகள்

குளிர் மற்றும் மலைப் பிரதேசப் பயிர்களின் விதைளை மிக் குறைந்த குளிர்ந்த நிலையில் வைப்பது விதைத் தூக்கத்தை முறிக்கும்.
(எ.கா) ஆப்பிள் விதைகளை 5 டிகிரி வெப்பத்தில் வைப்பது விதைத் தூக்கத்தை முறிக்கும்.

அதிக வெப்பநிலை நேர்த்திகள்
விரைவில் பூக்கக்கூடிய குளிர் கால ஓராண்டுப் பயிர்களுக்கு இம்முறை பொருந்தும்.
எ.கா ப்ளுபெல் விதைகள் கோடைக்காலத்தில் விரைவில் உதிர்ந்துவிடுவதால் அதிக வெப்பத்திற்கு ஆட்படுத்துவது முக்கியமாகும்.

மாற்று வெப்பநிலை நேர்த்திகள்

குளிர்ப் பிரதேச பயிர்களுக்கு இம்முறை பொருந்தும். (எ.கா) ப்ளூ ரஷ்.நெருப்பு மிதவெப்ப மண்டல மற்றும் வறண்ட நிலப் பயிர்களின் விதைகள் மிகவும் கடினமாக இருப்பதால் நீர் உறிஞ்சும் சக்தி இல்லாமல் இருக்கும். இவற்றின் விதைத் தூக்கத்தை முறியடிக்க நெருப்பு போன்ற வெப்பநிலை தேவைப்படும்.
எ.கா காலுனா வல்காரிஸ்.

ஒளி மற்றும் பைட்டோக்ரோம்

ஊக்கிகள் - தடுப்பான்கள் (அடிப்படைக் காரணம்)

முளைப்புத் திறன் செயல்பாட்டிற்கு ஊக்கிகள் தடைகள் ஆகியவை சமநிலையில் இருக்கவேண்டும்.

 • ஜிப்பெரிக் அமிலம் உணவுப் பொருட்கள் ஆக்கத் திசுவின் செயல்பாட்டிற்கு சென்று சேர உதவி புரிகிறது. மேலும் வளர் அணுப்பகுப்பிற்கும் உதவுகிறது.
 • சைட்டோகைனின் டிஎன்ஏ - ஆர்என்ஏ வடிவ மாற்று முறையைக் கட்ப்படுத்தி முளைப்புத் திளனை மேம்படுத்துகிறது.
 • அப்ஸிசிக் அமிலம் என்பது ஒரு தடையாகும். அது ஆர்என்ஏ உற்பத்தியை தடை செய்து முளைப்புத் திறனை தடை செய்கிறது.

பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மூலம் விதை நேர்த்தி

தடுப்பான்கள் மூலம் ஊட்பறு விதைத்தூக்கத்தை முறிப்பதற்கு வளர்ச்சி ஊக்கிகள் குறைந்த அளவில் பயன்படும்.

ஜிப்பெரிஸிக அமிலம், சைட்டோகைனின் மற்றும் கைனடின் போன்றவை அமிலம் “ஒளிக்கு” பதில் பயன்படுத்துவது ஆகும். KNO3 2 சதவீதம் ஒளி தேவைப்படும். விதைகளுக்கு பயன்படுத்தலாம். (எ.கா) ஓட்ஸ், வால் கோதுமை மற்றும் தக்காளி.

தையோ யூரியாவை ஒளி மற்றும் குளிர்ந்த வெப்பநிலை தேவைப்படும் விதைகளுக்கு பயன்படுத்தலாம். எ.கா லெட்ரூஸ் 10-30 மோலார் என்ற அளவில் உபயோகிக்கவேண்டும்.

எத்ரர் பருத்தி விதையின் தூக்கத்தை தையோ யூரியா, ஹைட்ராக்னில் அமைன், நைட்ரிக் அமிலம் மற்றும் நைட்ரேட் போன்றவை விதைத் தூக்கத்தை முறிக்க பயன்படுத்தலாம்.

சப்ஹைட்ரல் சேர்மங்களான 2 மெர்காப்டோ எத்தனால் மற்றும் 2,3 – மெர்காப்டோ எத்தனால் போன்றவை உபயோகிக்கலாம்.

ஸ்ட்ரைக்கால் (ஸ்ட்ரைக்கா என்ற ஒட்டுண்ணியின் கசிவு ) என்ற செடியின் கசிவை உபயோகிக்கலாம்.


மேலே

அகச்சிவப்பு கதிர்வீச்சு நேர்த்தி

விதைகளின் மேல் அகச்சிவப்பு கதிர் வீச்சை செலுத்தி விதைத் தூக்கத்தை முறிக்கலாம்.

அழுத்தல் நேர்த்தி

ஆவியில் தேவையான அழுத்தம் கொடுத்து வேக வைத்து விதைத்தூக்கத்தை முறிக்கலாம்.

காந்த முறை விதை நேர்த்தி

விதைகளை காந்தப் புலன்களில் 1-10 நாட்கள் வரை வைத்திருந்து தூக்கத்தை முறிக்கலாம்.

விதை மாற்று வீதம்

விதை மாற்று வீதம் என்பது மொத்த நடவு செய்த பகுதியில் வயல் சேமிப்பு விதை அல்லாமல் சான்று / தரமான விதைக் கொண்டு விதைத்த பகுதியின் சதவீதம் ஆகும்.

தமிழ்நாட்டில் வேளாண் பயிர்களில் விதை மாற்று வீதம் (2008)

வ.எண் பயிர் கடைப்பிடிக்கப்படும் விதை மாற்று வீதம்
1. நெல் 67.00
2. மக்காச்சோள இரகங்கள் & கலப்பின இரகங்கள் 70.00
3. சோள இரகங்கள் & கலப்பின இரகங்கள் 11.00
4. கம்பு இரகங்கள் & கலப்பின இரகங்கள் 91.00
5. கொண்டை கடலை 5.00
6. உளுந்து 42.00
7. பச்சைப்பயறு 21.00
8. துவரை 6.00
9. நிலக்கடலை 6.07
10. சூரியகாந்தி இரகங்கள் 13.00
11. பருத்தி 100.00

ஆதாரம்: www.seednet.gov.in 
Updated on March, 2013

33 இரகங்களுக்கு மற்றும் 100 சதவீத் - வீரிய இரகங்களுக்கு

நிலக்கடலையின் குறைந்த விதை மாற்று வீதம் விவசாயிகள் விதைக்கான பயிர்களை தக்க வைத்திருப்பதோ (அ) பின்வரும் விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொண்டதையோ குறிக்கும். இந்த விதைகள் தரம் குறைந்தவை அல்ல. விவசாயிகளுக்க இடையில் ஏற்படும் விதைப் பரிமாற்றம் கூட புதிய இரகங்கள் பரவுவதற்கு ஏதுவாகும். அரசு கடைப்பிடிக்கும் குறைந்த வி.மா.வீதத்தை மேற்கூறிய அட்டவணையின் படி அதிகப்படுத்துவதனால் விதை உற்பத்தி பகுதிகளிலிருந்து புதிய இரகங்கள் மற்றும் வீரிய இரகங்கள் பரவும்.

பொதுத் துறையை பாரக்கும் போது, என்எஸ்சி, எஸ்எப்சி மற்றும் மாநில விதைக் கழகம் ஆகியவை தரமான விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்கிறது. அரசுக்கு சொந்தமான விதை நிலங்கள் மற்றும் விவசாயிகளின் விதை நிலங்கள் உடன்பாட்டின் கீழ் உற்பத்தி செய்யப்படும் தரமான விதைகள் வேளாள் விரிவாகக் மையங்களின் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. விதைப் பெருக்கத் திட்டமானது வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் கீழ் மாநில விதை உற்பத்தி நிலையங்களில் இயக்கப்படுகிறது. இது போன்ற நிலையங்களில் விதை உற்பத்தி செய்வதில் உள்ள நடைமுறை இடர்பாடுகள் தான் இப்போதைய விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய தரமான விதைகள் பற்றாக்குறைக்கு காரணமாகும்.

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in


மேலே

Updated on: March, 2016
 

முதல் பக்கம் | விதை கிராமத் திட்டம் | தொடர்புடைய இணையதளங்கள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016.