தவேப வேளாண் இணைய தளம் :: விதை

விதை மாதிரி எடுத்தல்

 • விதை மாதிரி எடுத்தல் முறைகளும், வகைகளும்
 • மாதிரி எடுத்தல் இடைவெளி
 • மாதிரி எடுத்தல் அளவு  மற்றும் அனுப்புதல்

நோக்கம்

 • ஒரு விதைக்குவியலிலிருந்து தேர்வு செய்து எடுக்கப்பட்ட ஒன்றுபட்ட விதைகளே விதை மாதிரியாகும். விதைக் குவியலை ஒப்பிடும்பொழுது மாதிரியின் அளவு மிகச்சிறியதாக இருக்கும் என்பதால், மாதிரியை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் வேண்டும்.
 • விதை மாதிரிகளை தயார் செய்யும் பொழுது அவை ஐஎஸ்டிஏ விதிகளுக்கு உட்பட்டவையாகவும் அந்த விதைக்குவியலின் வகைக்குரியதாகவும் (Representative sample) இருப்பது அவசியமாகும்.

விதை மாதிரியின் வடித்தம்

பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பப்படும் அனைத்து இரக மாதிரிகளுக்கும் ஒரு துணைப் பதிவு எண் (Accession No) கொடுக்கப்படும். இந்த எண்ணை எதிர்கால குறிப்புகளுக்கு வைத்துக் கொள்ளலாம்.

விதைக் குவியல்

விதைக் குவியல் என்பது ஒரு பயிரிடப்பட்டஇரகத்தின் குறிப்பிட்ட விதை அளவு ஆகும். அந்த விதையின் வெளிப்புற அடையாளம் கண்டு அந்த இரகத்தினை கண்டுகொள்ள  ஏதுவாக இருக்கவேண்டும்.


மேலே

விதை மாதிரி எடுத்தல் முறைகள்
கைகளால் விதை மாதிரி எடுத்தல்

விதைகளின் வெளிப்புறத்தில் மெல்லிய மயிரிழைகளாலும் பூவடிச் செதில்களாலும் சூழப்பட்ட விதைகளான பருத்தி, தக்காளி மற்றும் புல்விதைகள் இம்முறை மூலம் மாதிரி எடுக்கப்படும். இந்த முறையில் விதை சேமிப்பு சாக்குகளின் அடிப்புறத்தில் இருந்து மாதிரி எடுத்தல் கடினம். ஆதலால் விதைகளை கொட்டி பின் கைகளால் மாதிரி எடுக்கவேண்டும். குறிப்பாக விரல் இடுக்குகளில் விதைகள் கீழே விழாமல் கவனமாக இருக்கவேண்டும்.

குத்தூசி / துளைக்கருவி மூலம் விதை மாதிரி எடுத்தல்

எளிதில் வழிந்தோடும் வழவழப்பான விதைகள் இம்முறையில் மாதிரி எடுக்கப்படும். இவ்வகை விதைகளை துளைக்கருவி மூலம் மாதிரி எடுக்கலாம்.

கொள்கலன் விதை மாதிரி சாதனம்

கொள்கலன்களில் சேமிக்கப்பட்டுள்ள விதைக் குவியல்களிலிருந்து மாதிரி எடுக்க இதனைப் பயன்படுத்தலாம்.

நொப்பி குத்தூசி

விதை மாதிரி எடுத்தல் முறைகளின் தந்தை என்றழைக்கப்படும் “ப்ரெட்ரிக் நொப்பி” என்பவரின் பெயரால் இம்முறை அழைக்கப்படுகிறது. விதைகளின் அளவிற்கு ஏற்றாற்போல்  இக்குத்தூசியின் பரிமாணங்களை மாற்றிக்கொள்ளலாம். அதன் சிறிய குழாய் போன்ற அமைப்பின் முனையில் ஒரு நீள்வட்டத் துவாரம் இருக்கும். இந்தக் குழாய்களை விதைப் பைகளின் மையத்தில் வைத்து அந்தத் துவராதம் வழியாக விதை மாதிரியை எடுத்தல் வேண்டும்.

நீண்ட கம்பு போன்ற குத்தூசி

விதை மாதிரி எடுக்க அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுவது இந்த குத்தூசி ஆகும். இதில் இரு வகைகள் உள்ளன.

 • பகுதிகள் உடனும்
 • பகுதிகள் இல்லாமலும்     

இந்தச் சாதனத்தின் உட்புறம் ஒரு பித்தளைக் குழாய் இருக்கும். அதை ஒட்டிய மேல்புறம் நீண்ட கம்பு போன்ற கூரிய முனைப்பகுதி இருக்கும். உள்புறக் குழாய் மற்றம் வெளிப்புறக் குழாயில் துவாரங்கள் இருக்கும். உள்புறக் குழாயை திருப்பினால் இரு குழாய் துவாரங்களும் நேர்கோட்டில் இருக்கும். உள்புற பித்தளைக் குழாய் பகுதிகள் இருந்தும் /  இல்லாமலும் இருக்கும்.

Sleeve Type triers


இந்தக் கருவியை கிடைநிலையிலோ, செங்குத்தாகவோ உபயோகிக்கவேண்டும். விதைப் பைகளின் உள்ளே மூலைவிட்டமாக 30 டிகிரி கோணத்தில் மூடிய நிலையில் உள்ளே செலுத்தவேண்டும். அதன் பின் துவாரங்களை திறந்தால் விதைகள் இக்கருவியின் உள்ளே நிரப்பிக்கொள்ளும். மீண்டும் அந்தத் துவாரங்களை மூடிய நிலையில் திறந்து விதை மாதிரியை ஒரு வாளியில் சேகரிக்கவேண்டும்.


மேலே

மாதிரி எடுத்தல் வகைகள்

Primary Samples

1. முதன்மை மாதிரி

ஒரு பையிலோ அல்லது குவியலில் இருந்தோ கையளவில் அல்லது கருவிகள் மூலம் எடுக்கப்படும் முதல் விதை மாதிரி முதன்மை மாதிரி ஆகும்.

2. ஒருங்கிணைந்த மாதிரி

பல முதன்மை மாதிரிகளை ஒன்று சேர்த்து உள்ளது ஒருங்கிணைந்த மாதிரி ஆகும்.

3. சமர்ப்பித்த மாதிரி

ஒருங்கிணைந்த மாதிரியைப் பாதியளவாகவோ (அ) ஆங்காங்கே எடுத்த சிறிய அளவை ஒன்று சேர்த்தோ விதை பரிசோதனை நிலையத்திற்கு சமர்ப்பிக்கவேண்டிய சிறு அளவு மாதிரி ஆகும்.

4. ஆய்வு மாதிரி

சமர்ப்பித்த மாதிரியிலிருந்து பிரித்து பரிசோதனைக் கூடங்களில் சோதனைக்கு எடுக்கப்படுவது செயல் மாதிரி ஆகும்.

மாதிரி எடுக்கும் திண்ணம்

விதை அளவு ஒரு குவியலின் அதிகப்பட்ட அளவீடு
கோதுமை மற்றும் நெல் போன்ற தானியங்களின் அளவை விடப் பெரியவை 20,000 கிலோ
கோதுமை மற்றும நெல் தானியங்களை விட சிறியவை 10,000 கிலோ
சோளம் 40,000 கிலோ

பைகளிலோ அல்லது குவியலாகவோ சேமிக்கும் விதைகளின் மாதிரி எடுக்கும் திண்ணம் ஐஎஸ்டிஏ விதிகளின் படி அமையவேண்டும்.

பைகளில் / மூட்டைகளில் எடுக்கப்படும் விதை மாதிரி

5 பைகள் வரை எல்லாவற்றிலும் விதை மாதிரி எடுக்கவேண்டும். முதன்மை மாதிரி 5-க்கு குறையாமல் இருக்கவேண்டும்.
6-30 பைகள் வரை குறைந்தது மூன்றில் ஒரு பையில் மாதிரி எடுக்கவேண்டும். முதன்மை மாதிரி 5-க்கு மேல் இருக்கக்கூடாது.
31-400 பைகள் வரை குறைந்தது ஐந்தில் ஒரு பையில் மாதிரி எடுக்கவேண்டும். முதன்மை மாதிரி 10-ற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
401 மற்றும் அதற்கு மேல் குறைந்தது ஏழில் ஒரு பையில் மாதிரி  எடுக்கவேண்டும். முதன்மை மாதிரி 80க்கும் மிகாமல் இருக்கவேண்டும்.

சிறிய பெட்டிகளிலோ, பொட்டலங்களிலோ விதைகள் இருந்தால் 100 கிலோ எடையளவு விதையை அடிப்படைப் பகுதியாக வைத்துக் கொண்டு அவைகளை ஒன்று சேர்த்த 20 பகுதிகாளக 5 கிலோ எடையுடன் வைக்கவேண்டும். ஒவ்வோர் பகுதிகளையும் மாதிரி எடுக்கும் போது கணக்கில் கொள்ளவேண்டும்.


மேலே

விதை அளவு அதிகமாக இருக்கையில்

500 கிலோ வரை குறைந்தது 5 முதன்மை மாதிரிகள்
501-3000 கிலோ வரை ஒவ்வோர் 300 கிலோவிற்கும் ஒரு முதன்மை மாதிரி ஆயினும் 5 முதன்மை மாதிரிக்கு குறையாமல்
3001-20000 வரை ஒவ்வோர் 500 கிலோவிற்கும் ஒரு முதன்மை மாதிரி ஆயினும் 10 முதன்மை மாதிரிக்கு குறையாமல்
20001 மற்றும் அதற்கு மேல் ஒவ்வோர் 700 கிலோவிற்கும் ஒரு முதன்மை மாதிரி ஆயினும் 40 முதன்மை மாதிரிக்கு குறையாமல்.

விதை மாதிரி அனுப்புவதற்கான விதிமுறைகள்

 1. விதைக்குவியலை பையிலோ / பெட்டிகளிலோ அனுப்பும் போது நன்கு அடைத்து அதன் அடையாள குறியீட்டுடன் அனுப்புதல் மிக முக்கியம்.
 2. மாதிரி எடுக்கையில், அனைத்து மாதிரிகளுக்கும் அந்தந்த விதைக்குவியலின் சான்றிதழ் பெற்ற அடையாளத்தை குறிப்பிடவேண்டும்.
 3. மாதிரி எடுப்பவர் மாதிரி சேகரிக்கும் பைகளையோ / பெட்டிகளையோ அடைக்கவேண்டும் அல்லது அடைப்பதை மேற்பார்வையிடவேண்டும்.
 4. விதை மாதிரிகளை எடுத்த பின்னர், அனைத்து மாதிரிகளையும் நன்கு கலக்கவேண்டும்.
 5. விதைப் பிரிப்பான் மூலம் விதை மாதிரிகளை பிரித்து தேவைப்படும் அளவை பரிசோதனைக் கூடத்திற்கு அடையாளக் குறியீட்டுடன் அனுப்பவேண்டும்.
 6. விதைப் பிரிக்கும் கருவி இல்லையென்றால் அனைத்து மாதிரிகளையும், தரையில் கொட்டி நன்கு கலந்து, இரு பகுதிகளாக தொடர்ந்து பிரித்து தேவைப்படும் அளவை எடுக்கவேண்டும்.
 7. விதைகளின் ஈரப்பதத்தை அறிய, அரைக்கும் தானிய வகைகளில் 100 கிராம், மற்ற தானிய வகைகளில் 50 கிராம்  அளவு எடுத்து, காற்றுப் புகாத பாலித்தீன் பைகளில் (700 gauge) அல்லது கண்ணாடி புட்டிகளில் அடைத்து பரிசோதனைக்கு அனுப்பவேண்டும்.

பரிசோதனைக்கு அனுப்பும் மாதிரியின் அளவு 
சமர்ப்பித்த மாதிரியின் எடை
பல்வேறு சோதனைகளுக்கான விதையின் எடை கீழ்கண்டவாறு இருக்கவேண்டும்.
1. ஈரப்பதம் சோதனை
அரைக்கும் தானிய வகைகள் -    100 கிராம்
மற்றவை                 -           50 கிராம்
2. சிற்றினம் மற்றும் பயிரிடக்கூடிய இனம் ஆகியவற்றை உறுதி செய்ய

பயிர் பரிசோதனைக்கூடம் மட்டும் (கிராம்) நிலப்பகுதி மற்றும் பரிசோதனைக்கூடம் (கிராம்)
பட்டாணி, பீன்ஸ், சோளம், சோயாபீன்ஸ் மற்றும் இவற்றை போன்றப் பயிர்கள் 1000 2000
வால் கோதுமை, ஓட்ஸ், கோதுமை மற்றும் இவற்றை போன்ற பயிர்கள் 500 1000
பீட்ரூட் மற்றும் இதனை போன்றவை 200 500
மற்ற பேரினங்கள் 100 250

சமர்ப்பித்த மாதிரியை அனுப்புதல்

 1. சமர்ப்பித்த மாதிரியை முதலில் அடைத்து அடையாளக் குறியீடு செய்யவேண்டும்.
 2. அதன் அடையாள முத்திரையில், பயிரின் இரகம், விதையின் வகை, விதையின் அளவு, அதன் உரிமையாளர் பெயர், அதனை உற்பத்தி செய்தவர் பெயர், விதை நேர்த்தி, அறுவடை நாள், கதிரடித்த நாள், மாதிரி எடுத்தவர் பெயர், மாதிரி எடுத்த நாள் மற்றும் சோதனை வகைகள் போன்ற விவரங்கள் உள்ளடக்கி இருக்கவேண்டும்.
 3. மாதிரியைக் குறியீடு செய்தவுடன், அதனை பாதுகாப்பான முறையில் பையில் கட்டி அனுப்பவேண்டும். முளைப்புத்திறன் சோதனைக்கு அனுப்ப வேண்டிய மாதிரிகளை ஈரப்பதம் உட்புகாத பைகளில் கட்டி அனுப்பவேண்டும்.
 4. விதைப் பரிசோதனைக்கூடங்களுக்கு நேரம் தவறாமல் மாதிரிகளை அனுப்பவேண்டும்.

விதைப் பரிசோதனைக்கூடங்களில் பயன்படுத்தப்படும் மாதிரியின் வகைகள்

சேவை விதை

விதை சான்றிதழ் மையங்கள் மற்றும் விதை ஆய்வாளர்கள் தவிர மற்றவர் அனுப்பும் விதை மாதிரி.

சான்று விதை

சான்றிதழ் மையங்கள் மற்றும் அலுவலர்களிடம் இருந்து பெற்ற விதை

அதிகாரப்பூர்வ விதை

விதை ஆய்வாளர்களிடம் இருந்து பெற்ற விதை


மேலே

விதைத் தூய்மை மற்றும் மற்ற சிற்றினங்களில் விதை எண் போன்ற சோதனைகளுக்கு தேவையான  விதை அளவு


பயிர்
விதைக்குவியல் அளவு (கிலோ) சமர்ப்பித்த மாதிரி அளவு (கிராம்) தூய்மை ஆய்விற்கான செயல் மாதிரி அளவு (கிராம்) மற்ற சிற்றினங்களின் மாதிரி விதை
எண் (கிராம்)
நெல் 20000 400 40 400
கோதுமை 20000 1000 120 1000
சோளம் 40000 1000 900 1000
மக்காச்சோளம் 10000 900 90 900
கம்பு 10000 150 15 150
துவரை 20000 1000 300 1000
பச்சைப்பயறு 20000 1000 120 1000
உளுந்து 20000 1000 150 1000
சுண்டல் 20000 1000 1000 1000
தட்டைப்பயறு 20000 1000 400 1000
சோயாபீன்ஸ் 20000 1000 500 1000
நிலக்கடலை (காய்) 20000 1000 1000 1000
நிலக்கடலை (விதை) 20000 1000 600 1000
எள் 10000 70 7 70
சூரியகாந்தி (இரகம்) 20000 1000 250 1000
சூரியகாந்தி (கலப்பின வகை) 20000 1000 125 250
பருத்தி பஞ்சு நீக்கியது (இரகம்) 20000 1000 350 1000
பருத்தி பஞ்சு நீக்காத இரகம் 20000 350 35 350
பருத்தி பஞ்சு நீக்கிய (கலப்பின வகை) 20000 350 35 350
பருத்தி பஞ்சு நீக்காத (கலப்பின வகை) 20000 250 25 250
கத்தரி 10000 150 15 150
மிளகாய் 10000 150 15 150
வெண்டை 10000 150 15 150
தக்காளி (இரகம்) 10000 70 7 70
தக்காளி (கலப்பின இரகம்) 10000 7 7 7
முட்டைக்கோஸ் 10000 100 10 100
காலிபிளவர் 10000 100 10 100
நூல் கோல் 10000 100 10 100

ஆதாரம் : M. Bhaskaran, 2003. Text book “Principles of Seed Production and Quality Control”

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in


மேலே

Updated On: March, 2016

 

 

முதல் பக்கம் | விதை கிராமத் திட்டம் | தொடர்புடைய இணையதளங்கள் | தொடர்புக்கு


© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016.