தரமான நிலக்கடலை விதை உற்பத்தி முறைகள்  
      தரமான விதை உற்பத்தி முறைகள் 
         
  வேளாண்  உற்பத்தியில் தரமான விதைகளை உபயோகிப்பது மிக முக்கியமான அடிப்படைத் தேவைகளில் ஒன்று.  அதிக இனத்தூய்மையும், கல், மண், தூசி, பதர் போன்றவை நீக்கப்பட்டு அதிக புறத்தூய்மையும்,  பூச்சி நோய் தாக்காததும் நல்ல முளைப்புத்திறனுடன் கூடிய வேகமான வளர்ச்சியையும் கொடுக்கவல்ல  விதைகளே தரமான விதைகள் ஆகும். இவ்வாறு தரமான விதை உற்பத்தி செய்ய சில முக்கிய வழி முறைகளை  பார்ப்போம். 
      விதைப்புப் பருவம் 
        
  விதை  உற்பத்திக்கு சரியான பருவத்தில் விதைப்பது மிகச்சிறந்தது. பூச்சி நோய் தாக்குதலை தவிர்க்க,  வறட்சியை தவிர்த்திட, அதிக மழையினால் பயிர் பாதிக்காமலிருக்க, பூக்காமல் இருப்பதை தவிர்க்க,  அறுவடை சமயத்தில் அதிக மழையை தவிர்த்திட மற்றும் மகசூலை அதிகரிக்க தகுந்த பருவம் மிக  அவசியம். 
               
  நிலக்கடலையில்  அதிக மழையினால் செடிகள் உயரமாக வளர்ந்து விழுதுகள் நிலத்தினுள் செல்ல தாமதமாகி மகசூல்  குறைய வாய்ப்புள்ளது. மேலும் அறுவடை சமயத்தில் அதிக மழை பெய்து காய்கள் முளைத்தும்  மகசூல் குறையலாம். ஆகவே, பருவத்தே விதைத்திடல் பலனைக் கூட்டும். நிலக்கடலை விதைப்புக்குச்  சிறந்த பருவம் ஜ¤ன் - ஜ¤லை மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதங்களே ஆகும். 
      உயர் விளைச்சல் இரகங்கள் 
         
  உயர்விளைச்சல்  இரகங்களைத் தேர்வு செய்து அவற்றில் விதை உற்பத்தி செய்வது நல்லது. ஏனெனில் அவைகள் அதிக  உரமிடலைத் தாங்கும், குறைந்த வயதுடையவை. பூச்சி நோய் எதிர்ப்புத் திறன் உடையவை. அவற்றை  பயிர் செய்து அதிக மகசூல் பெற்று அதிக லாபம் பெற முடியும். 
      விளை நிலம் தேர்வு 
      
        
          - நல்ல  வளமான செம்மண்பாங்கான காற்றோட்டமும் நல்ல வடிகால் வசதி உடைய நிலமாக இருக்க வேண்டும்.
 
          - போரான்  மற்றும் கால்சியம் (சுண்ணாம்புச்) சத்துக்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான்  தரமான நல்ல விதைகளைப் பெறமுடியும்.
 
         
       
        
      
        
            
              பற்றாக்குறை  | 
              விளைவுகள்  | 
             
            
              போரான் சத்து  | 
              காய்களில் விதைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்:    ஒரு கொட்டை காய்கள் அதிகம் உற்பத்தியாகும்: பூஞ்சாணத் தொற்று அதிகரிக்கும்  | 
             
            
              கால்சியம் சத்து  | 
              விதையின் முளைவேர் கருப்பாகி முளைப்புத் திறன்    பாதிக்கும்  | 
             
               
       
      J தான்தோன்றி பயிர்கள் என்றால் என்ன? 
                 
  வயலில் உள்ள மண்களில் கலந்துள்ள விதைகளிலிருந்து முளைக்கும் பயிர்களே தான்தோன்றி  
  பயிர்களாகும். இவ்விதைகள் முந்தைய கால பருவ பயிர்களில் இருந்து கீழே விழுந்தவை  
  ஆகும். விதைக்காமல் தானகவே முளைத்து வளரக்கூடியவை என்பதால் இவ்வாறு  
  அழைக்கப்படுகின்றது.  
      விதைத் தேர்வு 
         
        18/64” அளவுள்ள (7.2 மி.மீ. வட்டமுள்ள) வட்டக்கண்  சல்லடை கொண்டு சலித்து நல்ல பருமனுள்ள, நோய் தாக்காத பொருக்கு விதைகளையே விதைப்புக்காக  பயன்படுத்த வேண்டும். உடைந்து போன, சுருங்கிய மற்றும் மிகவும் வற்றிப்போன நோய் தாக்கிய  விதைகளை நீக்கிவிட வேண்டும்.  
      விதை அளவு (ஒரு ஏக்கருக்கு) 
      சிறிய பருப்பு விதைகள் 
        (டிஎம்வி2, 7 போன்ற இரகங்கள்) =  50-55 கிலோ 
  பெரிய பருப்பு விதைகள் 
        (ஜேஎல்24, விஆர்ஐ2)       = 55-60 கிலோ 
      பயிர் விலகு தூரம் 
      நிலக்கடலை முற்றிலும் தன் மகரந்தச் சேர்க்கை கொண்ட  பயிராகும். விதைக்கப் பயிரிடப்படும் இரகத்தை மற்ற இரகங்கள் பயிரிடப்படும் நிலத்திலிருந்து  3 மீட்டருக்கு அப்பாலுள்ள நிலத்தில்தான் பயிரிடவேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட  நிலத்தில் முந்திய இரண்டு பருவங்களில் மற்ற இரக நிலக்கடலை பயிரிட்டிருக்கக் கூடாது. 
      விதை முளை கட்டுதல் 
         
  எந்த பயிரிலும் சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தால்தான்  அதிக மகசூல் பெற முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். குறிப்பாக நிலக்கடலைக்கு  இது மிகவும் பொருந்தும். எனவே, விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்கவும் அவை விரைவில்  முளைத்து தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்கவும் விதைகளை முளைகட்டி விதைத்தல் ஒரு எளிய முறையாகும். விதைகளை  எப்படி முளை கட்டுவது என்று பார்போமா? 
      தேவையான பொருட்கள் 
      
        
          - தரம்  பிரித்த நல்ல விதை 55 கிலோ (ஒரு ஏக்கருக்கு)
 
          - கால்சியம்  குளோரைடு 140 கிராம்
 
          - 28  லிட்டர் தண்ணீர் (2குடம்) அதாவது விதையின் பாதியளவு தண்ணீர் 
 
          - கோணிப்  பைகள்  = 4 - 5
 
          - தீப்பெட்டி  உள் உறை
 
         
       
      செய்முறை  
       
2 கிலோ விதைக்கு 5 கிராம் கால்சியம் குளோரைடு,  அதாவது தீப்பெட்டி உள் அறை அளவு எடுத்து இதனை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.  அதுபோல 28 லிட்டர் கரைசல் (2 குடம் அளவு கரைசல்) தயார் செய்து கொள்ள வேண்டும். 
      
        
          - இவ்வாறு  தயாரிக்கப்பட்ட 0.5 சத கரைசலில் விதையை 6 மணிநேரம் ஊறவைக்கவும்.
 
          - இக்கரைசலில்  ஊற வைத்த விதைகளை ஈரச்சாக்கின் மீது பரப்ப வேண்டும். அதனை மற்றொரு ஈரச்சாக்கு கொண்டு  24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
 
          - இதற்குப்  பிறகு விதையில் கருமுளை வெளிவந்திருக்கும். இவ்வாறு முளைகண்ட விதைகளை பிரித்தெடுத்து  நிழலில் உலர்த்த வேண்டும்.
 
          - மீதமுள்ள  விதைகளை ஈரச்சாக்கால் மறுபடியும் மூடி 2 மணி நேரத்திற்கு ஒரு தடவை கரு முளை வந்த விதைகளை  சேகரிக்கவும்.
 
          - முளைகட்டிய  விதைகளை நிழலில் நன்கு உலர்த்தி விதைப்புக்கு பயன்படுத்தலாம் அல்லது அவ்விதையில் மற்ற  விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 
          - மிக  நீளமான முறை கரு வெளிவந்த விதைகளையும் இறந்த விதைகளையும் தனியே பிரித்து எடுத்துவிடவும்.
 
         
       
      இவ்வாறு நல்ல தரமான முளைப்புத்திறனுள்ள விதைகளை தேர்வு செய்து விதைப்புக்குப்  பயன்படுத்துதல் நன்று. 
      பயன்கள் 
      
        
          - 95  சதம் வரை விதை முளைப்பு கிடைக்கிறது. 
 
          - இறந்த  விதைகளை எளிதில் பிரித்துவிடலாம்.
 
          - முளைவிட்ட  விதைகளை விதைப்பதால் செடிகள் எண்ணிக்கையை சரியாக பராமரிக்கலாம்.
 
          - 10-15  சதம் அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.
 
         
       
      விதை நேர்த்தி 
                 
பயிர்  நன்கு வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நல்ல வகையில் அமையும் வண்ணம் விதைக்கும் செய்யப்படும்  சில வழிமுறைகளே விதை நேர்த்தி ஆகும். 
       
நிலக்கடலையில்  விதைமூலமும் மண்மூலமும் பரவும் வேர் அழுகல் தண்டு அழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களைக்  கட்டுப்படுத்தவும் பயிர் எண்ணிக்கையைச் சீராகப் பராமரிக்கவும் இராசயன பூசணக் கொல்லி  அல்லது உயிரியல் பூஞ்சாணக் கொல்லி அல்லது உயிரியல் பூஞ்சாண மருந்தான டிரைக்கோடெர்மா  விரிடியைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். காற்றில் கரைந்துள்ள நைட்ரஜன் சத்தை  பயிருக்கு அளிக்க டிஎன்ஏயூ14 ரைசோபியம் என்ற நுண்ணுயிரைக் கொண்டும் விதைக்கு விதை  நேர்த்தி செய்து பின்னர் விதைக்க வேண்டும். 
      பூசணக் கொல்லி விதை நேர்த்தி 
         
  ஒரு  கிலோ விதைக்கு 2 கிராம் திராம் மருந்தை கலந்து விதை நேர்த்தி செய்யவும். விதை நேர்த்தி  செய்த விதைகளை குறைந்த பட்சம் 24 மணி நேரம் வைத்திருந்து விதைப்பது நல்லது. 
      பூஞ்சாண விதை நேர்த்தி 
         
  டிரைக்கோ  டெர்மா விரிடி என்ற உயிரியல் பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோ விதைப்பருப்புக்கு 4 கிராம்  என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். விதையை விதைப்பிற்கு முன் ஈரப்படுத்தி பின் பூஞ்சாணத்தை  அதன் மீது தூவி கலக்க வேண்டும். 
        
         
      நுண்ணுயிர் நேர்த்தி 
       
நுண்ணுயிர்  நேர்த்திக்கு டிஎன்ஏயு14 ரைசோபியம் பாக்டீரியா மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை  பயன்படுத்துவது சிறந்தது. 
      தேவைப்படும் பொருட்கள் (ஒரு ஏக்கருக்கு) 
      
        
          - ரைசோபியம் 1 பாக்கெட் (200 கிராம்)
 
          - பாஸ்போ பாக்டீரியா 1 பாக்கெட் (200 கிராம்)
 
          - ஆடை இல்லாத ஆறிய அரிசிக் கஞ்சி 1லிட்டர் 
 
          - 55 கிலோ பொறுக்கு விதை
 
         
       
        
      
        
          - முதலில்  ஒரு லிட்டர் ஆறிய வடிகஞ்சியில் ரைசோபியத்தையும் பாஸ்போ பாக்டீரியாவையும் கொட்டி  ஒரு குச்சியை கொண்டு நன்கு கிளர வேண்டும்.
 
          - விதைகளை  சாக்குப் பையின் மேல் பரப்ப வேண்டும்.
 
          - நுண்ணுயிர்  கலவையை விதைகளின் மேல் ஒரு இலைக் கொத்து கொண்டு தெளிக்க வேண்டும்.
 
          - விதைகளை  மேலும் கீழும் புரட்டி நுண்ணுயிர் நன்கு படும்படி செய்ய வேண்டும்.
 
          - 15-30  நிமிடங்கள் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்க பயன்படுத்த வேண்டும்.
 
         
       
      நுண்ணுயிர் நேர்த்தியின்  பயன்கள் 
      
        
          - பாஸ்போபாக்டீரியா  நிலத்தில் பயிர்களால் கிரகிக்க முடியாத நிலையில் உள்ள மணிச்சத்தை பயிர் ஏற்கும் நிலைக்கு  மாற்றித்தருகிறது.
 
          - இதனால்  வேர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
 
          - இச்சத்து  பயிர்களின் இனப்பெருக்கத்திற்கு பயன்படுகிறது.
 
          - ரைசோபியம்  இடுவதால் பயிர் தழைச்சத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்கிறது.
 
          - இது  பயிரின் வேர்களின் வேர் முடிச்சுகளை உண்டாக்கி அதனுள் இருந்து கொண்டு காற்று மண்டலத்தில்  உள்ள தழைச்சத்தை பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது.
 
          - கூடுதல்  மகசூல் கிடைக்கிறது.
 
         
       
          
      விதை விதைப்பு 
       
சரியான நிலத்தை தேர்வு செய்து தக்க இடைவெளிவிட்டு  விதைத்து பயிர் எண்ணிக்கையைப் பராமரிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். 
      நிலம் தயாரித்தல் 
         
  விதை உற்பத்தி செய்வதாகத் தேர்ந்தெடுத்த நிலத்தை  நான்கைந்து முறை நன்கு உழவு செய்து கட்டிகளை உடைத்து புழுதிபட தயார் செய்ய வேண்டும்.  அகல உழுவதைவிட ஆழ உழவு செய்வது சாலச்சிறந்தது. கடைசி உழவிற்கு முன் ஒரு ஏக்கருக்கு  5 டன் (10 வண்டி) மக்கிய தொழு உரம் இடவேண்டும். நிலத்தை உழுது தயார் செய்த பின்னர்  அதை விதைப்பதற்கு ஏற்றவாறு மண்ணின் தன்மை மற்றும் நீர் பிடிப்பு ஆகியவற்றைப் பொருத்து  பாத்திகளாகவோ (அல்லது) பார்களாகவோ அமைத்துக் கொள்ளலாம். 
      பயிர் இடைவெளி 
         
  விதைக்கும் போது விதைக்கு விதை இடைவெளி விட்டு விதைப்பது  மிக முக்கியமாகும். விதை விதைக்கும் போது வரிசைக்கு வரிசை ஒரு அடியும் (30 செ.மீ),  செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும். விதைக்கப்படும் விதை  4 செ.மீ ஆழத்திற்கும் கீழே சென்று விடக்கூடாது. 
      பயிர் எண்ணிக்கை பராமரித்தல் 
         
  நிலக்கடலையில் பயிர் எண்ணிக்கையை சீராகப் பராமரிப்பதன்  மூலம் அதிக மகசூல் பெற முடியும். செடி எண்ணிக்கையைப் பராமரிக்க, கீழ்க்காணும் உத்திகளை  பின்பற்ற வேண்டும். 
      
        
          - தேவையான  அளவு விதைப்பருப்பைப் பயன்படுத்த வேண்டும்.
 
          - தூய்மையான,  நன்கு முற்றிய பருமனான பொருக்கு விதைகளை பயன்படுத்த வேண்டும்.
 
          - விதை  நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
 
          - முளைகட்டுதல்  முறையினை பின்பற்றிட வேண்டும்.
 
          - நிலத்தைத்  தயார் செய்யும்போது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
 
          - விதைப்பில்  நன்கு அனுபவமும் பயிற்சியும் பெற்ற நபர்களைக் கொண்டு சரியான இடைவெளி கொடுத்து விதைக்க  வேண்டும்.
 
         
       
      மேற்கூறிய முறைகளைக் கையாண்டு இடப்படும் உரம் வீணாகாமல்  தடுத்து நன்கு பயன்படுத்தி செடிகளின் எண்ணிக்கை குறையாது பராமரித்து அதிக மகசூல் பெறலாம். 
      உர நிர்வாகம் 
                 
  பயிர் செழித்து வளர்வதற்கும் பயிர்ச்சத்து குறைபாடு  ஏற்படாமல் தவிர்க்க, வேர் வளர்ச்சிக்கும், பூக்கள் அதிகரிக்க மற்றும் வறட்சி, பூச்சி  நோய்களைத் தாங்கி வளர்ந்து அதிக மகசூல் பெறுவதற்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த உர  நிர்வாகம் செய்வது மிக அவசியமாகும். 
      தொழு உரம் : ஒரு ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு  உரம் அல்லது கம்போஸ்ட் உரத்தினை இட்டு நிலத்தினை 4-5 தடவை நன்கு உழவு செய்ய வேண்டும். 
      இரசாயன உரங்கள் 
        பேåட்ட  மற்றும் நுண்ணுயிர்ச் சத்துக்கள் இட்ட மகசூலை அதிகரிக்கலாம். 
      
        
          - தழைச்சத்து  உரங்கள் பயிர் வளர்ச்சிக்கு உதவுகின்றன
 
          - மணிச்சத்து  உரங்கள் வேர் வளர்ச்சிக்கும் காய்கள் உருவாகவும்
 
          - சாம்பல்  சத்து உரங்கள் தரமான மகசூலுக்கும் பூச்சி, நோய், வறட்சி தாங்கிடவும்
 
          - நுண்ணூட்ட  சத்துக்கள் பயிர் குறைபாடு இன்றி வளர்ந்து மற்ற சத்துக்களை எடுக்க உதவுகின்றன.
 
         
       
      பேåட்டச் சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை அடியுரமாக இடவேண்டும். 
      உர அளவு (ஒரு ஏக்கருக்கு  - கிலோவில்) 
      
        
            
                 தழை   | 
                 மணி   | 
                 சாம்பல்  | 
             
            
                 16  | 
                 16  | 
                 24  | 
             
            
                 யூரியா   | 
                 சூப்பர்    பாஸ்பேட்   | 
                 பொட்டாஷ்  | 
             
            
                 35 கிலோ   | 
                 99 கிலோ   | 
                 38 கிலோ  | 
             
               
       
      மேலும் போராக்ஸ் 4 கிலோ மற்றும் நுண்ணுயிர் கலவை  5 கிலோவும் இடவேண்டும். போராக்ஸ் மற்றும் நுண்ணூட்டக் கலவையை விதைப்பு முடிந்தவுடன்  நிலத்தின் மேல் இடவேண்டும். 
      களை நிர்வாகம் 
      களை நிர்வாகத்தின் முக்கியத்துவம் 
         
  நிலக்கடலையில் அதிக மகசூல் பெற களை கட்டுப்பாடு மிகவும்  அவசியம். நிலத்தில் உள்ள பயிர்சத்து வீணாகாமல் தவிர்த்திடவும், களைகள் மூலம் மண், ஈரம்  வீரயமாவதைத் தவிர்த்திடவும், பயிர்களுக்கு போதிய சூரிய ஒளி கிடைத்திட மற்றும் பூச்சி  நோய்கள் பரவாமல் தடுத்து அதிக விளைச்சல் பெறுவதற்கு களை கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறது.  விதைத்த 45 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். ஏனெனில், களை நிர்வாகம்  பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம். 
      விதைப்பதற்கு முன் 
      
        
          - கோடை உழவு செய்யலாம்.
 
          - ஆழ உழுதல் மற்றும் களைச் செடிகளைப் பிடுங்கி  எடுத்து தீயிட்டு அழித்தல் 
 
          - பயிர் சுழற்சி செய்தல், வயல் வரப்புகளை  சுத்தமாக வைத்திருத்தல் போன்ற பராமரிப்பு முறைகளை கையாண்டு கட்டுப்படுத்தலாம்.
 
          - கோரை / அருகு போன்ற கட்டுப்படுத்த கடினமான  புல் வகைகளை முற்றிலும் கொல்லும் களைக் கொல்லிகளைப் பயன்படுத்தி அழிக்கலாம்.
 
         
       
        
      விதைப்புக்குப் பின்  
      களைக் கொல்லி பயன்படுத்துதல் 
         
  ஒரு ஏக்கருக்கு புளுகுளோரலின் களைக் கொல்லியை  800 மில்லி என்ற அளவில் விதைத்த 3 நாட்களுக்குள் நிலத்தில் அடித்து களைகளைக் கட்டுப்படுத்தலாம்.  மணலுடன் கலந்தும் தூவலாம். கைத் தெளிப்பான் கொண்டும் தெளிக்கலாம். கைத் தெளிப்பான்  கொண்டு தெளிக்கும்போது அகல வாய் தெளிப்பு முனை பயன்படுத்தி தெளிக்க வேண்டும். 
         
        
        
        
        
       
        
       
      பயன்கள் 
      
        
          - களைக்கொல்லி  அடிப்பதன் மூலம் முதல் களை எடுக்க வேண்டியதில்லை.
 
          - களை  எடுப்பதற்கு குறைந்த ஆட்களைப் பயன்படுத்தினால் போதுமானது.
 
          - பயிருக்கு  இடப்பட்ட இயற்கை/செயற்கை உரங்களின் சேதாரம் தவிர்க்கப்பட்டு விதை உற்பத்தி செலவு குறையும்.
 
          - பயிர்களின்  வளர்ச்சி வேகம் கூடி மகசூல் அதிகரிக்கவும்.
 
          - மேலும்  களைக்கொல்லி பயன்படுத்துவதன் மூலம் வேலை ஆட்கள் பற்றாக்குறையைச் சமாளித்து விடலாம்.
 
         
       
      முக்கிய பின்செய் நேர்த்தி 
      மண் அணைத்தல் 
         
  நிலக்கடலையில் இது ஒரு முக்கிய பின்செய் நேர்த்தி  ஆகும். விதைத்த 45ம் நாள் மண் அணைக்க வேண்டும். அதாவது மண்ணை எடுத்து செடியினைச் சுற்றியும்  அதன் மேலும் இட்டு அணைத்து விடவேண்டும். மண் அணைப்பதால் விழுதுகள் எளிதில் மண்ணில்  இறங்குவதற்கு ஏதுவாகின்றன. செடியில் அதிக எண்ணிக்கையில் காய்கள் பிடிக்கும். 
      ஜிப்சம் இடுதல் 
         
  நிலக்கடலை உற்பத்தியில் பயிருக்கு ஜிப்சம் இடுவது  மிக அவசியம். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச் சத்தும் அடங்கி உள்ளன. சுண்ணாம்புச்  சத்து காய்கள் திறட்சியாகவும், அதிக எடை உடையதாகவும் உருவாக வழி செய்கிறது. கந்தகச்  சத்து நிலக்கடலையில் எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கிறது. 
         
  ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சத்தை விதைத்த  40-45ம் நாள் இட்டு செடிகளைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். 
      நீர் நிர்வாகம் 
         
  விதை உற்பத்தியில் வயலில் களைகள் அதிகமாக பெருகுவதைத்  தடுக்கவும், பூச்சி நோய் கட்டுப்பாட்டிற்கும் செடிகள் நன்கு வேåன்றி காய் உருவாகவும்  சிறந்த நீர் நிர்வாகம் மிக முக்கியமாகும். நிலக்கடலை விதை உற்பத்தியில் நீர் பாய்ச்ச  வேண்டிய அதிமுக்கிய நிலைகளாவன: 
      
        
          - விதைக்கும் சமயம்
 
          - உயிர்த் தண்ணீர் (விதைத்த 4-5வது நாள்)
 
          - விதைத்த 20-22ம் நாள்
 
          - விழுது இறங்கும் சமயம் மற்றும்
 
          - காய்பிடிப்பு மற்றும் முதிர்சி தருணத்தில்  நன்கு நீர்பாய்ச்ச வேண்டும்.
 
         
       
        
      பயிர் பாதுகாப்பு 
                 
  பயிர்களில் காணப்படும் பூச்சிகளை நன்கு கட்டுபடுத்தி  மகசூல் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வது மிக முக்கியமாகும். பல முறைகளைக் கையாண்டு  ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செய்து தரமான விதை உற்பத்தி செய்தல் வேண்டும். 
      நிலக்கடலையைத் தாக்கும்  பூச்சிகள் 
        பொதுவாக  நிலக்கடலையை தாக்கும் பூச்சிகளை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம். 
      
        
          - சாறு  உறிஞ்சும் பூச்சிகள்
 
          - இலையை  கடித்து உண்ணும் பூச்சிகள்
 
          - காய்களை  துளைத்தும், வேர்களை கடித்து சேதம் விளைவிக்கும் பூச்சிகள்.
 
         
       
            இந்த  மூன்று வகை பூச்சிகளும் எப்படி பயிருக்கு சேதம் விளைவிக்கின்றன, அவற்றை எவ்வாறு கட்டப்படுத்த  வேண்டும் என்பதை இப்பொழுது பார்ப்போம். 
          சாறு உறிஞ்சும் பூச்சிகள் 
          இலைப்பேன் 
      இலைப்பேன் தாக்கிய செடியில் 
      
        
          - இலையின்  மேல் பகுதியில் வெண்படலம் போன்று காணப்படும். கீழ்ப்பாகம் பழுப்பு நிறமாக மாறியிருக்கும்.
 
          - இலைகள்  கிண்ண வடிவில் மேல நோக்கி குவிந்து இருக்கும்.
 
          - இலைகளின்  ஓரங்கள் காய்ந்து காணப்படும்.
 
          - இலைகள்  சுருங்கி வளர்ச்சியின்றி இருக்கும்.
 
         
       
        
      பச்சைத் தத்துப் பூச்சி 
         
  இந்த தத்துப்பூச்சி தாக்கப்பட்ட பயிர்களில் கீழ்கண்ட  அறிகுறிகள் தென்படும். 
      
        
          - இலைகளில்  கொப்புளங்கள் ஏற்பட்டு பொரிந்தது போல் தெரியும்
 
          - இலைகளின்  ஓரங்கள் மஞ்சள் நிற மாற்றம் காணப்படும்.
 
         
       
        
      அசுவினி  
      அசுவினி தாக்கப்பட்ட பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி,  சுருங்கிக் காணப்படும். 
         
  கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றை அடித்து சாறு  உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். 
         
  ஒரு ஏக்கருக்கு மானோ குரோட்டபாஸ் 300 மில்லி அல்லது  குளோர்பைரிபாஸ் 300 மில்லி அல்லது டைகுளோராவாஸ் 250 மில்லி அடித்து கட்டுப்படுத்தலாம். 
      இலையைக் கடித்து உண்ணும்  பூச்சிகள்  
      சுருள்பூச்சி 
         
  இது இலைகளின் பச்சையத்தை சுரண்டி சாப்பிட்டு உயிர்வாழும்.  தாக்குதலுக்கு உள்ளான செடிகள் காய்ந்தும் சுருங்கியும் காணப்படும். இப்பூச்சியின் புழு  ஆரம்பித்தல் நடு நரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். பின் வளரவளர இது இலைகளை சுருட்டி  அதனுள் வாழும். 
      கீழ்கண்ட முறைகளைப் பயன்படுத்தி  இதனைக்கட்டுப்படுத்தலாம். 
      
        
          - சரியான  பருவத்தில் விதைக்க வேண்டும்.
 
          - விளக்குப்  பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கவனிக்க வேண்டும். அதிக பூச்சிகள் இருந்தால்  உடன் மருந்து அடித்துக் கட்டுப்படுத்தலாம்.
 
         
       
        
      ஒரு ஏக்கருக்கு பாஸலோன் 4 சதத் தூள் 10 கிலோ (அல்லது)  எண்டோசல்பான் 4 சதத்தூள் 10 கிலோ (அல்லது) குளோர்பைரிபாஸ் 500 மில்லி தெளித்து கட்டுப்படுத்த  வேண்டும். 
      புரோடீனியா மற்றும் ஹ¤லியாதிஸ் 
         
  நிலக்கடலையைத் தாக்கும் பூச்சிகளுள் புரோடீனியா  முக்கியமானது. இது இலையை முழுவதும் கடித்துத் தின்று விடும். பச்சைநிற ஹ¤லியாதிஸ் புழுக்கள்  இலைகள் இளம் குருத்துகளாக இருக்கும் போது கடித்து பாதிப்பு உண்டாகும். 
        
      கட்டுப்படுத்தும் முறைகள் 
      
        
          - விளக்குப்  பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை அழிக்கலாம்.
 
          - இனக்கவர்ச்சி  பொறி வைத்தும் தாய் அந்துப் பூச்சிகளை அழிக்கலாம்.
 
          - ஒரு  ஏக்கருக்கு எண்டோசல்பான் 10 சதத்தூள் 10 கிலோ (அல்லது) டைகுளோர்வாஸ் 300 மில்லி  (அல்லது) எண்டோசல்பான் 500 மில்லி தெளித்து இளம் புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.  வளர்ந்த புழுக்களை ஒரு ஏக்கருக்கு குளோரோபைரிபாஸ் 400 மில்லி தெளித்து கட்டுப்படுத்த  வேண்டும்.
 
         
       
        
      சிவப்புக் கம்பளிப்புழுக்கள் 
         
  இவை கூட்டம் கூட்டமாக வந்து இலைகளைக் கடித்து உண்ணுகின்றன.  பாதிக்கப்பட்ட பயிர்கள் ஆடுமாடு மேய்ந்தது போல் காணப்படும். இதனை விளக்குப் பொறி  வைத்தும் வளர்ந்த புழுக்கள் மற்றும் முட்டைத் தொதிகளை கையால் பொருக்கியும் அழிக்கலாம்.  மேலும், ஒரு ஏக்கருக்கு டைகுளோர்வாஸ் 300 மில்லி (அல்லது) குளோர்பைரிபாஸ் 500 மில்லி  (அல்லது) பெனிட்ரோதியான் 300 மில்லி என்ற அளவில் பூச்சிக் கொல்லி இரசாயன மருந்து  தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். 
      வேர் மற்றும் காய்களை தாக்கும்  பூச்சிகள்  
      வெள்ளை வேர்ப்புழு 
         
  இது நிலக்கடலை செடியின் வேர்களை கடித்து உண்டு செடிகளுக்கு  சேதம் விளைவிக்கிறது. இதனை கோடை உழவு செய்து புழுக்களை சேகரித்து அழிக்கலாம். மேலும்  கடைசி உழவின் போது போரேட் குருணை 10 சத மருந்தை ஒரு ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில்  நிலத்தில் தூவி உழவேண்டும். 
      காய் துளைப்பான் 
                 
  நிலக்கடலையைத் தாக்கும் காய்த்துளைப்பான்களை தவிர்க்க  கடைசி உழவின் போதும் மண் அணைக்கும் போதும் அதாவது விதைத்த 45ம் நாள் மாலத்தியான்  5 சத தூள் 10 கிலோ அல்லது எண்டோசல்பான் 4 சத தூள் 12 கிலோ ஒரு ஏக்கருக்கு என்ற அளவில்  மண்ணில் கலந்து தூவி கட்டுப்படுத்தலாம். 
      1.10.2 நிலக்கடலையைத் தாக்கும்  நோய்கள்  
      இலைப்புள்ளி நோய் 
                 
  இந்நோய் நிலக்கடலை பயிரின் வளர்ச்சியில் எல்லா பருவத்திலும்  ஏற்படலாம். இந்நோய் தாக்கிய இலைகளின் மேல் கருப்பு நிற புள்ளிகள் தென்படும். மேலும்  இலைகள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு  கார்பன்டைசிம் 200 கிராம் (அல்லது) மான்கோசெப் 400 கிராம் பயன்படுத்த வேண்டும். 
      துரு நோய் 
                 
  இந்நோய் நிலக்கடலையின் எல்லா வளர்ச்சி பருவத்திலும்  காணப்படும். இலையின் அடிப்பாகத்தில் மஞ்சள் நிற கொப்பளங்கள் தோன்றும். இந்நோயின்  தீவிரம் அதிகமாகும் போது இலைகள் காய்ந்து உதிர்ந்து பெருத்த சேதத்தை விளைவிக்கும். 
          
  இதனைக் கட்டுப்படுத்த மான்கோசெப் ஒரு ஏக்கருக்கு  400 கிராம் (அல்லது) குளோரோதலொனில் 400 கிராம் (அல்லது) டிரிடி மார்ப் 200 மில்லி  தெளிக்க வேண்டும். 
      
        
            
              தண்டழுகல்  | 
              கழுத்தழுகல் மற்றும் வேரழுகல் நோய்  | 
             
            
              தண்டழுகல்   | 
              இந்நோய் தாக்கிய செடியின் தண்டுப்பகுதியில் கடுகு    போன்ற வெண்மை நிற பூசணம் காணப்படும்.  | 
             
            
              கழுத்தழுகல்  | 
              இந்நோய் தாக்கிய செடிகளின் தண்டுப்பகுதியில் அதாவது    செடி மண்ணைத் தொடும் பகுதியில் சிவப்பு நிறத்தில் திட்டுதிட்டாகக் காணப்படும் இலைகள்    மற்றும் தண்டுப் பாகம் பழுப்பு நிறம் அடைந்து கருகிவிடும்.  | 
             
            
              வேரழுகல்   | 
              நோய் தாக்கிய செடியின் வேர் பகுதியில் வெள்ளை    நிற பூசணங்கள் காணப்படும். செடிகளைப் பிடுங்கினால் வேர்கள் கீழே தங்கி காய்ந்த இலைக்கொத்து    மட்டும் கையில் வரும்.  | 
             
               
       
             
  இப்பூஞ்சாண நோய்களை விதை நேர்த்தி செய்து விதைப்பதன்  மூலம் கட்டுப்படுத்தலாம். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டைசிம் மருந்து கலந்து  விதைநேர்த்தி செய்யவேண்டும். மேலும் நோய் தாக்கிய செடிகளை வேரோடு பிடுங்கி எறிந்து  விட்டு 1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற விகிதத்தில் கார்பன்டைசிம் மருந்து கலந்து  ஊற்றி விடவேண்டும். 
      விதை அறுவடை மற்றும் சேமிப்பு  
                 
  சரியான தருணத்தில் அறுவடை செய்வது தரமான விதை உற்பத்தியில்  மிக முக்கிய பணியாகும். உரிய காலத்தில் திட்டமிட்டு அறுவடை செய்வதினால் நிலக்கடலையில்  அறுவடை சேதாரத்தை கட்டுப்படுத்தலாம். உரிய காலத்திற்கு அதாவது விதை நன்கு முற்றுவதற்கு  முன்பே அறுவடை செய்தால் விதையின் முளைப்புத்திறன் பாதிக்கப்படுவதுடன் காய்கள் சிறுத்தும்  மணிகள் சுருங்கியும் காணப்படும். மேலும் பூஞ்சாணம் தாக்குதலும் அதிகமாகும். சரியான  அறுவடை தருணத்திற்குப் பின் அறுவடை செய்வதால் நிலக்கடலை நிலத்திலேயே முளைக்க ஆரம்பித்துவிடும்.  இதனால் விழுதுகள் அறுந்து காய்கள் மண்ணிலேயே நின்று விடுகின்றன. எனவே, தரமான விதைகளைப்  பெற ஏற்ற தருணத்தில் அறுவடை செய்வது மிக அவசியம். 
      அறுவடை நுட்பங்கள் 
      
        
          - நுனி  இலை மஞ்சளாக மாறுதல் மற்றும்
 
          - அடி  இலைகள் காய்ந்து உதிர்வது பயிர் முதிர்ச்சி அடைந்ததற்கு அறிகுறியாகும்.
 
          - சில  செடிகளைப் பிடுங்கி காய்களை உடைத்துப் பார்த்தால் தோலின் உட்பாகம் கரும்பழுப்பு நிறமாக  இருக்கும்.
 
         
       
        
      சரியான அறுவடைத் தருணம் 
      
        
          - நிலம்  காய்ந்து இருந்தால் நீர்பாய்ச்சியபின் களை கொத்து மூலமாகவோ, கையினாலோ செடிகளை பிடுங்க  வேண்டும்.
 
          - செடிகளைப்  பிடுங்கி காய்களைப் பறிக்காமல் குவித்து வைக்கக் கூடாது.
 
          - செடிகளைப்  பிடுங்கி சேகரித்தவுடன் ஆட்களை கொண்டு காய்களை செடியிலிருந்து பரித்தெடுக்க வேண்டும்.
 
         
       
        
      உலர வைத்தல் 
         
  அறுவடையின்போது காய்களில் கிட்டத்தட்ட 35-40 சத  ஈரப்பதம் இருக்கும். காய்களை இரண்டு மூன்று நாட்கள் நன்கு வெய்யிலில் உலர்த்த வேண்டும்.  அவ்வப்பொழுது காய்களை நன்கு கிளறி விட வேண்டும். காய்களை 12 சத ஈரப்பத் வரும் வரை  காய வைக்கலாம். விதைப்பருப்பின் ஈரப்பதம் 6-7 சதம் இருக்கலாம். பொதுவாக பருப்பை பல்லில்  கடித்துப் பார்த்து விதை காய்ச்சளைத் தெரிந்து கொள்ளலாம். இரண்டு விரல்களுக்கு இடையில்  வைத்து நசுக்கும் போது தோல் எளிதாக உறிவது சரியான காய்சலுக்கு அடையாளமாகும். 
         
  இவ்வாறு உலர்த்திய காய்களை நல்ல கோணிப்பைகளில் சேமித்து  வைக்க வேண்டும். சேமிக்கும் முன்பு காய்களை 1 கிலோவுக்கு 4 கிராம் திராம் மருந்து  கலந்து சேமிக்கலாம். தரையின் மீது மூட்டைகளை அடுக்கி வைக்கக்கூடாது. மரக்கட்டை அல்லது  பலகை மீது அடுக்க வேண்டும். சுவர் ஓரங்களின் மீது சாய்த்து வைக்காமல் இடம் விட்டு அடுக்கி  வைக்க வேண்டும். சேமிப்புக்கிடங்கு நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும். 
      தரமான விதை உற்பத்திக்கு  விதைச்சான்று 
                  
  விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி  செய்யப்படும் விதையின் இனத்தூய்மை பற்றியும் விதைத்தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பதே  விதைச் சான்றளிப்பு ஆகும். விதைச் சான்று பயிர் வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது.  ஆய்வின்போது பரிந்துரைக்கப்பட்ட வயல் மற்றும் விதைத் தரம் இருந்தால் மட்டுமே உற்பத்தி  செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்கு தயாராகிறது. 
         
  எனவே உங்கள் விதை உற்பத்தி வயல்கள் விதைச் சான்றளிப்புக்கு  உட்படுத்தி இனக்கலப்பற்ற தரமான விதைகளை நீங்களும் உற்பத்தி செய்ய முடியும். விதைச்சான்று  பெறுவதற்கு நீங்கள் உங்கள் அருகாமையில் உள்ள விதைச் சான்றளிப்பு அலுவலர்களை அணுகி மேலும்  விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 
      பரிந்துரைக்கப்பட்ட வயல்  மற்றும் விதைத் தரம் 
      
        
            
              வயல் தரம்  | 
                                     ஆதார நிலை அதிகபட்சம் (%)   | 
              சான்று நிலை அதிகபட்சம்    (%)   | 
             
            
              கலவன்கள்   | 
              0.10 சதம்            | 
              0.20  | 
             
            
              விதைத்தரம்   | 
                 | 
                 | 
             
            
              சுத்தமான விதைகள்(குறைந்த பட்சம்)   | 
              96 சதம்  | 
                
                96 சதம்  | 
             
            
              கல்,மண்,தூசி (குறைந்த பட்சம்)  | 
              4 சதம்   | 
              4 சதம்  | 
             
            
              பிற இனப்பயிர் விதைகள் (அதிகபட்சம்)  | 
              இருக்கக்கூடாது  | 
              இருக்கக்கூடாது  | 
             
            
              களைவிதைகள் (அதிகபட்சம்)  | 
              இருக்கக்கூடாது  | 
              இருக்கக்கூடாது  | 
             
            
              முளைப்புத்திறன் (குறைந்த பட்சம்)  | 
              70 சதம்   | 
              70 சதம்  | 
             
            
              ஈரத்தன்மை           (அதிகபட்சம்)  
                காற்றுப்புகும் பை 
                காற்றுப்புகாத பை   | 
                
                  9 சதம் 
                  5 சதம்  | 
                
                  9 சதம் 
                  5 சதம்  | 
             
               
       
        
        
               |