கம்பில் தரமான விதைப் பயிர் வளர்ப்பு முறைகள் 
      நிலத் தேர்வு 
                 
  விதை உற்பத்திக்கு ஏற்ற நிலத்தினை தேர்வு  செய்யும்போது நல்ல வடிகால் வசதி உள்ள நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில், கம்பு  பயிருக்கு நீர்ப் பாசனம் செய்யும்போது நீர் தேங்கா வண்ணம் இருக்கவேண்டும். மேலும்  தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் முந்தைய பருவத்தில் கம்பு பயிரிடப்பட்டு இருக்கக்கூடாது  என்பது மிகவும் அவசியம். அப்படி பயிரிடப்பட்டிருந்தாலும், ஒரே இரகமாக இருப்பதும் அவசியம்.  இவ்வாறு தேர்ந்தெடுப்பதன் மூலம் தன்னிச்சையாக முளைக்கும் பயிர்களால் ஏற்படும் இனக்கலப்பைத்  தவிர்க்கலாம். 
      J தான்தோன்றி பயிர்கள் என்றால் என்ன? 
                 
  வயலில் உள்ள மண்களில் கலந்துள்ள விதைகளிலிருந்து  முளைக்கும் பயிர்களே தான்தோன்றி பயிர்களாகும். இவ்விதைகள் முந்தைய கால பருவ பயிர்களில்  இருந்து கீழே விழுந்தவை ஆகும். விதைக்காமல் தானகவே முளைத்து வளரக்கூடியவை என்பதால்  இந்தப் பெயர். முந்தைய பருவத்தில் வேறு இரக நெல் பயிரிடப்படாத வயலைத் தேர்ந்தெடுத்தல்  மிகவும் அவசியம்.  இவ்வாறு செய்வதால் “தான்  தோன்றிப் பயிர்களால்” ஏற்படும் இனக் கலப்பை தவிர்க்கலாம் 
      இனத்தூய்மையைப்  பராமரிக்க பயிர் விலகு தூரம் 
                 
  கம்பு பெரும்பாலும் 64 முதல் 85 சதம் வரை  அயல் மகரந்த சேர்க்கையுடைய தானியப் பயிராகும். எனவே விதைப் பயிருடன் கலப்பு ஏற்படாமல்  இருக்க அதே இனத்தின் பிற இரக பயிர்களிலிருந்து குறைந்தது 200 மீ. தூரம் தனிமைப்பட்டிருக்க  வேண்டும். சான்று விதை உற்பத்திக்கு இந்தத் தூரம் தேவை. இதே ஆதார விதை உற்பத்திக்கு  400 மீ. தூரம் இருக்க வேண்டும். இவ்வாறு விதைப் பயிரைத் தனிமைப்படுத்துவதன் மூலம் ஒரு  இரகம் மற்றொரு இரகத்துடன் இனக்கலப்பு ஏற்படாமல் விதைகளின் பாரம்பரிய இனத்தூய்மையைப்  பாதுகாக்க முடியும். 
      விதை உற்பத்திக்கு  ஏற்ற பருவம் 
                 
  விதைப் பயிருக்கு பருவத்தில் பயிர் செய்ய  வேண்டியது மிக மிக அவசியமாகும். உற்பத்தி செய்யப்படும் விதையின் தரம் அது பயிரிடப்படும்  பருவகாலங்களினால் பாதிக்கப்படும் தன்மையுடையது. விதையின் தரமானது அது பயிரிடப்படும்  சூழ்நிலைக்கு ஏற்பவே அமைகின்றது. கம்பு பெரும்பாலும் மானாவாரியாகவும் இறவையில் எல்லா  பருவங்களிலும் பயிரிடப்படுகின்றது என்றாலும் விதை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற சரியான  பருவத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். கம்பு பயிர் வளர்ச்சி பருவத்தில் மப்பும்  மந்தாரமுமான வானிலை பயிருக்கு பயனுள்ளதாக இருந்தாலும், தரமான விதை உற்பத்திக்கு வறட்சியான  பருவ நிலையே மிகவும் ஏற்றது. கதிர் வெளிப்படும் போதும் அதன் பின்னரும் மழை பெய்தால்  கதிரில் மணிபிடித்தல் பாதிக்கப்படுவதுடன் தேன் ஒழுகல் நோயும் ஏற்படுவதற்கு வாய்ப்பு  உண்டு.  
          
  தரமான கம்பு விதை உற்பத்திக்கு குளிர் காலமான  கார்த்திகை மார்கழி (அக்டோபர் - டிசம்பர்) பருவமே மிகவும் ஏற்றது. 
      நாற்றாங்கால்  அமைத்தலும் வளமான நாற்றுக்களை பெறும் முறைகளும் 
          
  நல்ல ஆரோக்கியமான வளமான நாற்றுக்களை பெறுவதற்கு  நாற்றாங்காலை நேர்த்தியான முறையில் தேர்ந்தெடுப்பது மிகவும் இன்றியமையாதது. நல்ல தரமான  முறையில் உற்பத்தி செய்யப்பட்ட அதிக முளைப்புத் திறனும், வீரியத்தன்மையும் உள்ள விதைகளை  தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்றங்காலில் விதைப்பதன்மூலம் நல்ல வளமான நாற்றுக்களைப் பெறலாம். 
      நாற்றங்கால்  அமைப்பதற்கான நிலத்தேர்வும் உரமிடுதலும் 
                 
  விளைநிலத்தில் கலவன்களை தடுக்க நாற்றங்காலின்  முந்திய பயிர் கம்பு இல்லாமல் இருக்க வேண்டும். கம்பு நாற்று விடப்பட்ட நிலமாக இருந்தாலும்  நாற்றங்காலில் நீர்பாய்ச்சி அதில் புதைந்துள்ள விதைகளை முளைக்க வைத்து பின்னர் ஒரு  வாரம் கழித்து உழுது விடுவதால் பிற கம்பு நாற்றுக்களை அழித்து விடலாம். இதனால் விளைநிலத்தில்  கலப்பு ஏற்படுவதைத் தடுப்பதோடு, நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பும்  அதிகரிக்கின்றது. விளைநிலத்தில் கலவன்களை அகற்றுவதற்கான செலவும் குறைகின்றது. 
      நிலம் தேர்வு  
                 
  நாற்றங்காலுக்கு தேர்வு செய்யும் நிலமானது  மண்வளம் கொண்டதாகவும், நல்ல வடிகால் வசதியுள்ள நிலமாகவும் அமைவது முக்கியம். மேலும்  நாற்றங்கால் தண்ணீர் வசதி உள்ள இடத்திற்கு அருகாமையில் இருப்பது மிகவும் நன்று. 
      நாற்றங்கால்  பரப்பளவு 
                 
  ஒரு ஏக்கருக்கு பயிர் செய்வதற்கு தேவையான  விதைகளை விதைக்க 3 சென்ட் நாற்றங்கால் அவசியம். பயிர் செய்யப்பட்ட நாற்றங்கால் நிலத்தை  மூன்று முறை நன்கு உழுது, கட்டியில்லாமல் இருக்கவேண்டும். கடைசி உழவின் போது நன்கு  மக்கிய தொழு உரத்தை 3 கிலோ என்ற அளவில் இட்டு உழுது விடவேண்டும். 
      உயரப்பாத்தி  போடும் முறை 
                 
  இவ்வாறு நன்கு உரமிட்டு உழுது, நாற்றங்கால்  நிலத்தில் ஒவ்வொரு சென்ட் நாற்றங்காலிலும், ஆறு பாத்திகள் முறையே 3 மீ, 15 மீ நீள  உயரத்தில் அமைக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பாத்தியைச் சுற்றிலும் 15 செமீ அகலமும்  7.5 செமீ ஆழமும் உள்ள வாய்க்கால் அமைக்கவேண்டும். இதுபோல் 3 சென்ட்டிலும் சேர்த்து  மொத்தம் 18 உயரப் பாத்திகளை போட வேண்டும். 
      வீரியமான  நாற்றுக்களைப் பெறும் முறை  
                 
  நாற்றங்காலில் நாற்றுக்களை வீரியமானதாகவும்  வளமானவையாகவும் உருவாக்கினால் நிலத்தில் நடவு செய்யப்பட்ட பிறகு நல்ல எதிர்ப்புச் சக்தியும்,  நோய் தாங்கும் தன்மையும் பெற்று வளர்ந்து நல்ல மகசூல் தரும்.  
      விதைத் தேர்வும்  அதன் நன்மையும் 
                 
  வளமான நாற்றுக்களை பெற தரமான விதைகளையே உபயோகிக்க  வேண்டும். விதைக்கப் போகும் விதைகளின் முளைப்புத்திறனை உறுதி செய்து கொள்வது நன்று.  ஏனெனில் நிலத்தில் பயிரின் எண்ணிக்கையைப் பொறுத்தே களை எடுத்தல், உரமிடுதல், நீர்ப்பாய்ச்சுதல்  போன்றவற்றை செய்ய வேண்டும். 1000 பயிர் இருக்கவேண்டிய இடத்தில் 250 பயிர்கள் இருந்தால்  அதற்கு செய்யும் செலவு எல்லாம் வீணே. அதனால் விதையின் தரத்தை அடிப்படையாகக் கொண்டே  மேற்கொண்டு உழவியல் முறைகளை செய்ய முடியும். விதைகள் மிகவும் பழையதாக இல்லாமலும்,  தூசி மண் போன்றவை இல்லாமலும், பிற விதை கலப்பில்லாமலும் இருப்பது அவசியம். மேலும்,  பழைய விதைகளின் முளைப்புத்திறன் குறைவாக இருப்பதோடல்லாமல் அவைகளின் நாற்றுக்களை உருவாக்க  முடிவதில்லை. பூஞ்சாண நோய்களினால் பாதிக்கப்பட்ட விதைகளை கட்டாயமாக அகற்றிவிட வேண்டும்.  இப்படித் தேர்வு செய்யப்பட்ட விதைகளையே பயன்படுத்த வேண்டும். 
      பூஞ்சாண நோயினால்  தாக்கப்பட்ட விதைகளை அகற்றுதல்  
                 
  கம்பு பயிரில் கதிர் விளையும்போதே எர்காட்  என்ற பூஞ்சாண நோயினால் தாக்கப்படுகிறது. இந்த நோய் உண்டாக்கும் பூஞ்சாணமானது விதையின்  உள்ளேயே தங்கியிருந்து அந்த விதையை விதைப்பதனால் முளைத்து விடும் பயிரையும் தாக்கும்  இயல்பு கொண்டது. எனவே இந்த பூஞ்சாண நோயினால் தாக்கப்பட்ட விதைகளை அகற்றிவிட வேண்டும். 
          
  இவ்வாறு நோய் தாக்கப்பட்ட விதைகளை உப்புநீர்க்  கரைசல் கொண்டு எளிதாக அகற்றிவிடலாம். 
      உப்புநீர்க்  கரைசல் தயாரிப்பு முறை 
                 
  உப்புநீர்க் கரைசல் தயாரிப்பதற்கு முதலில்  15 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு வாளியில் 10 லிட்டர் அளவு சுத்தமான தண்ணீர் எடுத்துக்  கொள்ளவும். 10 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ  சாதாரண சமையல் உப்பைப் போட்டு உப்புக் கரையும் வரை நன்கு கலக்கவும். இப்போது  இந்த உப்புக் கரைசலை விதைத்தரம் பிரிப்பதற்கு உபயோகிக்கலாம். 
          
  மேற்சொன்னவாறு தயார் செய்த உப்புக்கரைசலில், எந்த விதையை நாற்று  விடுவதற்கு பயன்படுத்தப் போகின்றோமோ அதை (சுமார் 1.5 கிலோ விதை) சிறிது  சிறிதாக போடவும். நல்ல தரமான விதைகள் நீரின் அடியில் தங்கிவிடும். எர்காட்  நோயினால் தாக்கப்பட்ட விதைகளும் பூஞ்சாணம் தாக்கிய மற்றும் நன்கு முற்றாத  விதைகளும் நீரின் மேற்பரப்பில் மிதக்கும். இவ்வாறு மிதக்கும் விதைகளை  அகற்றிவிடவேண்டும். நீரில் மூழ்கிய விதைகளையே விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.  சரி. உப்புநீரில் மூழ்கிய விதைகளை அப்படியே நாற்று நடுவதற்கு பயன்படுத்தக் கூடாது.  ஏனெனில், விதையின் மேற்பரப்பில் படிந்துள்ள உப்பு படிவத்தை அகற்றுவது மிக அவசியம்.  இதற்கு மூழ்கிய விதைகளை எடுத்து குடிநீரில் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு அலசி  கழுவவும். இவ்வாறு அலசுவதால் விதையின் மேல் படிந்த உப்பு படிவம் நீங்கிவிடும்.  இதுபோல் உப்புநீர்க் கரைசலில் தரம்பிரித்த விதைகளை நிழலில் நன்கு உலர வைக்க  வேண்டும். இவ்வாறு உலர வைத்த 1.5 கிலோ விதையுடன் 240 கிராம் அஸோஸ்பைரில்லம் என்ற  நுண்ணுயிர் கலவையைக் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். 
      ஒரு ஏக்கருக்குத் தேவையான விதை அளவு 
          
  ஒரு ஏக்கர் பயிர் செய்வதற்கு 1.5 கிலோ அளவு விதை தேவை. சான்று விதை  உற்பத்திக்கு ஆதார விதைகளையே விதைக்க வேண்டும்.  
      விதைப்பு 
                 
  இவ்வாறு தரம் பிரித்த, விதை நேர்த்தி செய்த விதைகளை ஏற்கனவே சொன்னபடி  தேர்வு செய்து வைத்திருந்த நாற்றங்காலில் அமைத்த உயரப்பாத்திகளில் விதைக்க வேண்டும். 
      எப்படி விதைத்தல் 
                 
  உயரப்பாத்திகளில் விரல்களினால் 1 செமீ ஆழத்திற்கு மிகாமல் கோடுகள்  போடவேண்டும். கோடுகளுக்கு இடையே 15 செமீ இடைவெளி இருத்தல் அவசியம். இதுபோல்  கோடு போடப்பட்ட பாத்திகளில் ஒரு ஏக்கர் நடவு செய்வதற்கு தேவையான 1.5 கிலோ  விதையை விதைக்க வேண்டும். விதைத்தவுடன் மண்ணை லேசாக தூவி விதைகளை மூடிவிட  வேண்டும். 200 கிலோ நன்கு மக்கிய பொடியான தொழு உரத்தை விதைக்கப்பட்ட கோடுகளில்  தூவி பின்பு கைகளினால் சமமாக பரப்பிவிட வேண்டும். 
      நாற்றங்காலில் நாற்றுக்களை பாதுகாத்தல் 
                 
  நாற்றுக்களை பாதுகாக்க பூச்சி, பூஞ்சாணக் கொல்லிகளை இடுவது மிகவும்  அவசியம். நாற்றங்காலில் நாற்றுக்கள் இளவயதுடையதாக இருப்பதால், அதிக வீரியம் உள்ள  பூச்சிக்கொல்லிகளை இடக்கூடாது. அதிக அளவிலும் உபயோகப்படுத்தக் கூடாது. 2 கிலோ  அளவுள்ள ஈரமான மணலுடன் 3 சதவீத கார்போபியூரான் என்ற குருணை மருந்தை 250 கிராம்  என்ற அளவில் கலந்து ஒரே சமமாக 18 பாத்திகளிலும் பரப்பிவிட வேண்டும். இவ்வாறு  பரப்பிவிடப்பட்ட மருந்தினால், நாற்றுக்களை தண்டுப்பூச்சியின் தாக்குதலிலிருந்து  பாதுகாக்க முடியும். 
      நீர்ப்பாய்ச்சுதல் 
          
  ஆறு உயரப்பாத்திகளுக்கு ஒரு திறப்பான் என்ற விகிதத்தில் 18 பாத்திகளுக்கு 3  திறப்பான் இருக்க வேண்டும்.  முதலில்  வாய்க்காலில் தண்ணீர் விட்டு வாய்க்காலில் தண்ணீர் நிறையும் போது  ஆறுபாத்திகளிலும் ஈரம் இருக்கின்றதா என்று பார்த்து, பாத்திகள் ஈரம் ஆனபின்பு  தண்ணீரை நிறுத்தி விட வேண்டும். 
         
        
        
        
       
        
       
      நாற்றங்காலில் பூச்சிகளும் அவற்றை கட்டுப்படுத்தும்  முறைகளும் 
          
  நாற்றங்காலில் பொதுவாக பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. பூச்சிகள்  தென்படும்போது விதை விதைத்த 7 ஆம் நாள் மற்றும் 14வது நாளில் 2.4 லிட்டர் நீரில்  எண்டோசல்பான் 35 ஈசி என்ற மருந்தை 12 மிலி அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம்  தெளிக்கலாம். 
      நாற்றின் வயது 
          
  விதைப்பயிரின் வளர்ச்சியிலும் மகசூலிலும் நாற்றின் வயது மிக முக்கிய பங்கு  வகிக்கின்றது. வயது குறைந்த அல்லது வயது அதிகமான நாற்றுக்களை நடுவதால் மகசூல்  நிச்சயம் குறையும். கம்புப்பயிருக்கு நாற்றங்காலில் நாற்றுக்களின் வயது 18 நாட்கள்  மட்டுமே ஆகும். 18 நாட்களுக்கு அதிகமான வயதுடைய நாற்றுக்களை நடுவதை தவிர்க்க  வேண்டும். 
      நடவு வயலை தயார் செய்தலும் நாற்று நடுதலும் 
                 
  தேர்வு செய்யப்பட்ட நிலத்தில், உழவு செய்வதற்கு முன் ஒரு ஏக்கருக்கு 5 டன்  மக்கிய தொழு உரத்தை சமமாக பரப்பிவிட வேண்டும். உரம் போட்ட பின், அதை நன்கு  கலக்கிவிட இரண்டு அல்லது மூன்று முறை நாட்டுக் கலப்பையினால் உழவு செய்யவும்.  பின்பு அஸோஸ்பைரில்லம் என்ற உயிர் உரத்தை ஒரு ஏக்கருக்கு 800 கிராம் என்ற அளவில்  சமமாக இடவும். 
      பார் அமைத்தல் 
          
  இவ்வாறு உரம்போட்டு தயார் செய்த வயலில் 6 மீ நீளத்திற்கு 45 செ.மீ  இடைவெளியில் பார்கள் அமைக்கவும். கோ 7என்ற  இரகத்திற்கு 6மீ நீளமும் 40 செ.மீ இடைவெளியும் போதுமானது. இரகத்திற்கு ஏற்ப  இடைவெளியை அமைத்துக் கொள்ளலாம். 
      உரமிடுதல் 
          
  பார் பிடித்த நிலத்தில் பாரின் எந்தப்பக்கம் நாற்று நடப்போகின்றோமோ  அந்தப் பக்கத்தில் உரம் போட வேண்டும். அஸோஸ்பைரில்லம் என்ற உயிர். உரம் போட்ட  வயல்களில் 130 கிலோ யூரியா, 210 கிலோ சூப்பர், 60 கிலோ பொட்டாஷ் என்ற அளவில்  உரங்களை கலந்து இட வேண்டும். 
          
  உயிர் உரம் போடாத வயல்களில் 150 கிலோ யூரியா, 210 கிலோ சூப்பர், 60  கிலோ பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இடவேண்டும். 
      உயிர் உரம் இடுதல் 
          
  மனிதன் தனக்குத் தேவையான உணவை அரிசி, கம்பு, ராகி, கோதுமை மூலம் எடுத்துக்  கொண்டாலும் உயிர்ச்சத்துக்காக காய்கறிகளும், கனிகளும் எடுத்துக் கொள்வது  அவசியமோ அதுபோல வளரும் பயிருக்கு நுண் உரம் இடுவது மிகவும் அவசியமாகும். 
          
  இதற்காக வேளாண்மைத் துறையினரால் தயார் செய்யப்பட்ட நுண்ணுரத்தை ஒரு  ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் 20 கிலோ மணலுடன் கலந்து நாற்று நடுவதற்கு சற்று  முன்பு இட வேண்டும். அப்படி, நுண்ணுரம் கிடைக்காவிடில் ஜிங்க் சல்பேட் என்ற உரத்தை  ஒரு ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் 10 கிலோ மணலுடன் கலந்து ஒரே சீராக இட  வேண்டும். 
      நாற்றுக்களை எடுத்தல் 
          
  நாற்றங்காலில் 15ல் இருந்து 18 நாட்கள் வயதான நாற்றுக்களை வேரின் முனை  அறுந்து விடாதவாறு எடுக்க வேண்டும். இவ்வாறு எடுக்கப்பட்ட நாற்றுக்களின் வேரை  உயிர் உரக் கரைசலில் நனைத்து எடுப்பதன் மூலம் நல்ல வீரியமான நாற்றுக்களைப்  பெறலாம். 
      உயிர் உரக் கரைசல் தயாரித்தல் 
                 
        400 கிராம் அஸோஸ்பைரில்லம் என்ற உயிர் உரத்தை 16 லிட்டர் தண்ணீரில் கலந்து  பசைபோல் செய்யவும். இந்த பசையில் நாற்றங்காலில் இருந்து எடுத்த நாற்றுக்களின்  வேரை நடவு செய்வதற்கு 15 - 30 நிமிடத்திற்கு முன்பு நனையவிட்டு எடுக்கவும். 
      நாற்று நடுதல் 
                 
          உயிர் உரத்தில் வேரை நனைத்து எடுத்த நாற்றுக்களை உரம்போட்டு தயாராக உள்ள  பார்களில் 20 செ.மீ இடைவெளியில் நட வேண்டும். சரியான இடைவெளியில் நாற்றுக்களை  நடுவதன் மூலம் நல்ல மகசூல் பெறுவதுடன், நாற்றுக்கள் வீணாவதையும் தடுக்கலாம். 
      நீர் நிர்வாகம் 
          
  நீர் நிர்வாகத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை  என்றாலும் சில முக்கியமான கீழ்க்கண்ட பருவங்களில் தண்ணீர் பாய்ச்ச வேண்டியது  மிகவும் அவசியமாகும். 
  நாற்று நடவு செய்தபின்                                  1ல்  இருந்து 18 நாட்களுக்குள் 
  சிம்பு விடும் பருவம்                              19ல்  இருந்து 35 நாட்களுக்குள் 
  பூ பூக்கும் பருவம்                                36ல்  இருந்து 55 நாட்களுக்குள் 
  முதிர்ச்சி பருவம்                                 56ல்  இருந்து  85 நாட்களுக்குள்  
          
  மேற்சொன்ன இந்த பருவங்களில் நிலத்தில் ஈரப்பதம் இருக்க வேண்டியது அவசியமாகும். 
         
        
        
        
       
        
       
      களைக்கட்டுப்பாடு 
                 
  “களை எடுக்காப் பயிர் கால் பயிர்” என்பது பழமொழி. கம்பு விதைப் பயிருக்கு  களைகளை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும்.  அதற்காக நாற்று நட்ட மூன்றாவது நாள் ஒரு  ஏக்கருக்கு 200 கிராம் அட்ரசின் களைக் கொல்லியை தண்ணீரில் கலந்து நிலத்தின் மேல்  கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். மேலும் 30 - 35 நாட்களுக்குள் ஒரு  கைக்களையும் எடுப்பது அவசியம். 
      மேலுரம் 
                 
  கம்பு விதைப் பயிருக்கு மேலுரமாக யூரியாவை ஒரு ஏக்கருக்கு 120 கிலோ என்ற  அளவில் நாற்று நட்ட 15 நாட்களுக்குப் பிறகு இட வேண்டும். கவனமாக மேலுரம் இட்டவுடன்  நிலத்திற்கு தண்ணீர் கட்ட வேண்டும். 
      பயிர் பாதுகாப்பு 
                 
  விதைப் பயிரை பூச்சி, நோய் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பது தரமான விதை  உற்பத்திக்கு மிக அவசியம். எனவே அவ்வப்போது தென்படுகின்ற பூச்சி மற்றும் நோய்களை  கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க  வேண்டும். 
      கலவன்களை நீக்குதல் 
                 
  சாதாரணமாக கம்பு நடவு செய்த வயல்களில் பயிர்கள் ஒரே உயரமாக இல்லாமல் உயரம்  அதிகரித்தோ அல்லது குறைந்தோ இருப்பதைப் பார்க்கலாம். சில பயிர்கள் சீக்கிரம்  பூத்திருப்பதையும் சில பயிர்கள் பூக்காமல் இருப்பதையும் காணலாம். மேலும்  சிலவற்றில் கதிர்கள் பெரியதாகவும், சிலவற்றில் சிறியதாகவும், கதிரின் அமைப்பும்  அளவும் வேறுபட்டு இருப்பதையும் பார்க்கலாம். ஒரே இரகத்தைச் சேர்ந்த பயிராக  இருந்தால் அந்த வயலில் வேறுபாடுகள் எப்படி வந்திருக்க முடியும்? இவ்வாறு பல  இரகங்கள் கலந்த பயிரிலிருந்து விதை உற்பத்தி செய்வதால் குறிப்பிட்ட இரகத்தின்  இனத்தூய்மை மிகவும் பாதிக்கப்பட்டு அதனுடைய இயல்பான குணாதிசயங்கள் மறைந்து  விடுகின்றது. 
          
  சிலசமயம் பூஞ்சாணங்கள் தாக்கிய விதைகளினால் விதையின் புறத்தூய்மையும்  பாதிக்கப்படுகின்றது. 
          
  விதைக்காக நடவு செய்யப்பட்ட நிலத்தில் இருந்து அந்தக் குறிப்பிட்ட  இரகத்தின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்ட பயிர்களையும், களைகளையும் மற்றும் நோய்  தாக்கப்பட்ட பயிர்களையும் தக்க தருணத்தில் நீக்கி விடுவதன் மூலம் இனக்கலப்பும்,  புறக்கலப்பும் இல்லாத நல்ல விதைகளை உற்பத்தி செய்யலாம். கலவன்கள் நீக்குதலை  கீழ்க்கண்ட அட்டவணைப்படி செய்ய வேண்டும். 
      
        
            
              பயிர்த்தருணம்   | 
              நீக்கப்பட வேண்டிய கலவன்கள்  | 
             
            
              பூக்கும் முன்  | 
              உயரமான மற்றும் குட்டையான செடிகள், மாறுபட்ட இலை நிறம் மற்றும் தண்டின்    நிறம் உடைய பயிர்கள், சீக்கிரம் பூக்கும் பயிர்கள்  | 
             
            
              பூக்கும் பருவம்  | 
              காலதாமதமாக பூக்கும் செடிகள்  | 
             
            
              அறுவடைக்கு முன்   | 
              எர்காட் பூஞ்சாணம் தாக்கிய பயிர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட    இரகத்தின் தன்மைக்கேற்ற கதிர்கள் இல்லாத பயிர்கள்  | 
             
            
              அறுவடைக்குப்பின்  | 
              விதைப்பயிர் மணியின் பருமனுக்கும், வடிவுக்கும் மாறுபட்ட குண்டு, உருண்டை    அல்லது நீள வடிவ பூட்டைகள்  | 
             
               
       
      அறுவடை செய்தலும்  விதை பிரித்தெடுத்தலும் 
      அறுவடைக்கு  ஏற்ற தருணம் 
                 
  பயிரை சரியான தக்க தருணத்தில் அறுவடை செய்யாவிடில்  இதுவரை நாம் உழைத்த உழைப்பு வீணாகிவிடும். தக்க சமயத்திற்கு முன்பு அறுவடை செய்வதால்  நன்கு முற்றாத விதைகள் காயவைக்கும் போது சுருங்கி, சிறுத்து முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.  கால தாமதமாகி அறுடை செய்வதால் விதைகள் கதிரிலேயே முளைத்து விடுவதற்கும் பூச்சி, பூஞ்சாணங்கள்  மற்றும் பறவைகளினால் தாக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. 
          
  கம்பு பயிரை நாற்றுவிட்ட 80-95 நாட்களில்  அறுவடை செய்வது உத்தமம். இச்சமயத்தில் இலைகள் எல்லாம் சாய்ந்து செடியே காய்ந்து போனது  போல் இருக்கும். கம்பு விதைகளை தொட்டுப் பார்த்தால் கடினமாக இருக்கும். இச்சமயத்தில்  விதையின் ஈரப்பதம் 20-25 சதவீதம் இருக்கும். 
      விதை மகசூல் 
          
  ஒரு ஏக்கரிலிருந்து 800 கிலோவரை சராசரி  விதை மகசூல் எதிர் பார்க்கலாம். கதிரிலிருந்து விதைகளைப் பிரித்தெடுத்து அதன் தரத்தினை  மேம்படுத்துதல் அவசியம். 
      கதிரடித்தலும்  காயவைத்தலும் 
                 
  அறுவடை செய்த கதிர்களை கதிர் அடிக்கும் போது  விதையின் ஈரப்பதம் 15 முதல் 18 சதவீதம் இருக்க வேண்டும். இந்த ஈரப்பதத்தில் கதிரடிக்கும்  போது விதைகளுக்கு உட்காயமோ, வெளிக்காயமோ ஏற்படுவதில்லை. ஈரப்பதம் மேற்கூறிய ஈரப்பதத்திற்கு  குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருப்பின் விதைகளில் காயம் ஏற்படுகின்றது. இந்த விதைக்  காயங்களினால் விதையின் தரம் விரைவில் குறைவதோடு பூஞ்சாணங்களின் தாக்குதலுக்கும் உள்ளாகின்றது. 
      காய வைத்தல் 
          
  பிரித்தெடுத்த விதைகளை உடனே முறைப்படி உலர  வைக்காவிடில் விதைகள் சூடேறி அவற்றின் முறைப்புத்திறன் குறைய ஏதுவாகும். விதையின் ஈரப்பதம்  10 சதவீத அளவு குறையும் வரை காய வைக்க வேண்டும். விதைகளை வெயிலில் உலர்த்தும் போது  காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் பின் மாலை 3 முதல் 5 மணி வரையிலும் உலர்த்துதல்  வேண்டும். 12 மணி முதல் 3 மணி வரை உள்ள காலத்தை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் இக்கால  நேரத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகமாக இருப்பதாலும் வெப்பநிலை உச்சத்தில்  உள்ளதாலும் விதையின் தரம் மிகவும் பாதிக்கப்படும். 
      விதைச் சுத்திகரிப்பு 
                 
  விதைச் சுத்திகரிப்பின் போது முற்றாத, உடைந்த,  கெட்டுப்போன  விதைகளையும், விதையுடன் கலந்திருக்கும்  மற்ற விதைகள், கல், மண் தூசி முதலியவற்றையும் அகற்றி விட வேண்டும். பின்பு விதைகளின்  உருவம், பரிமாணம், கன அடர்த்தி முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு விதைகளின் தரத்தை  உயர்த்தலாம். கம்பு விதைகளை 4/64” (1.6 மிமீ) அளவுள்ள வட்ட வடிவமான சல்லடைகளின் மூலம்  சுத்திகரிப்பு செய்வதினால் மிகவும் தரம் வாய்ந்த விதைகளைப் பெறலாம். 
      J விதைச்சுத்திகரிப்பின் போது கவனிக்கப்பட வேண்டியவை 
          
  விதைப்பயிரை தானியப்பயிரைப் போல் அறுவடை  செய்து கதிரடித்து, தூற்றி சேமித்து வைப்பது விதைச் சேதாரத்தை அதிகப்படுத்துவதுடன்,  விதையின் தரத்தையும் வெகுவாக பாதிக்கின்றது. விதைச் சுத்திகரிப்பின் போது ஒரு இரகத்திற்கு  பயன்படுத்திய சல்லடைகளை வேறு இரகத்திற்கு மாற்றும் பொழுது நன்கு சுத்தம் செய்யாவிடில்  விதைக் கலப்பு நேர்ந்து விதைகளின் இனத்தூய்மை பாதிக்கப்படும். 
      தரமான விதைகளை  பாதுகாக்கும் முறைகள்  
          
  விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ  அதே அளவு கவனம் விதைகளை அடுத்த பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகின்றது. 
      விதையின்  ஈரப்பதம் 
          
  விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள்  முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. விதைகளின் ஈரப்பதத்தை 12 சதவீத அளவிற்குக் குறைத்து  சேமித்து வைக்க வேண்டும். நீண்ட கால நோக்கில் விதைகளை சேமித்து வைப்பதாக இருந்தால்  காற்றுப்புகாத பாலிதீன் பைகளில் 8 சதவீத ஈரப்பதம் உள்ள விதையை சேமித்து வைக்கலாம்.  விதையின் ஈரப்பதத்தை 10 சதம் அளவிற்கு குறைத்து பாலிதீன் உள்ளிட்ட துணிப்பைகளில் சேமிக்கலாம்.  இவ்வாறு பாலிதீன் பைகளில் சேமிக்கும் விதைகள் சுற்றுப்புறக் காற்றிலுள்ள ஈரத்தை உறிய  முடியாது. ஆகையால், அவை அதிக காலத்திற்கு முளைப்புத்திறனோடு இருக்கும். 
      விதை நேர்த்தி 
          
  விதையை சுமார் 12 சதம் ஈரப்பதத்தில் காய  வைத்து காப்டான் அல்லது திராம் 75 சதம் நனையும் தூளில் 100 கிலோ விதைக்கு 70 கிராம்  என்ற அளவில் 500 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு  செய்த விதைகளை சாதராண துணிப்பைகளில் சுமார் ஒரு வருடத்திற்கு மேலும் சேமித்து வைக்கலாம்.  விதைகளை 8 சதம் ஈரப்பத அளவிற்கு நன்கு காயவைத்து பின்பு விதைநேர்த்தி செய்து காற்றின்  ஈரம் புகா பாலிதீன் பைகளில் அடைத்து சேமித்தால் ஒன்றரை வருடகாலம் சேமிக்க முடியும்.  நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துகளையும் விதை நேர்த்தி செய்ய  உபயோகிக்கலாம். இதனால், சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவது குறையும். விதை நேர்த்தி செய்யும்  பணியாளர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். ஹேலோஜன் கலவையை ஒரு கிலோ விதைக்கு 3 கிராம்  என்ற விகிதத்தில் கலந்தும் சேமிக்கலாம். ஹேலோஜன் கலவையைத் தயாரிக்க சலவைத்தூள் (கால்சியம்  ஆக்ஸி குளோரைடு) + கால்சியம் கார்பனேட் + அரப்புத்தூள் ஆகியவற்றை 5:4:1 என்ற விகிதத்தில்  கலந்து ஒரு வாரம் காற்று புகா ஜாடியில் வைத்திருந்து பின்பு உபயோகிக்கலாம். ஹேலோஜன்  கலவை நச்சுத் தன்மை இல்லாதது. ஆகையால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. விதை  நேர்த்தி செய்பவர்கள் நச்சு இரசாயனங்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். 
      சேமிக்கும்  முறைகள்  
          
  விதைகள் காற்றில் உள்ள ஈரத்தை கிரகிக்கும்  தன்மை உடையன. காற்றின ஈரத்தன்மை அதிகம் உள்ள இடங்களில் காற்று புகா பைகளை உபயோகிக்க  வேண்டும். பாலிதீன் (700 அடர்வு) பைகள் காற்றுப் புகாதவை. எப்போதும் புதிய பைகளையே  உபயோகப்படுத்த வேண்டும். இந்த காற்றுப்புகாத பைகளில் சேமிக்கும் போது விதையின் ஈரப்பதம்  8 சதவிகிதத்திற்கு இருத்தல் மிக அவசியம். விதைகளை 10 சத அளவிற்கு உலர்த்தி பாலிதீன்  உள்ளிட்ட துணிப்பைகளிலும் சேமிக்கலாம். விதை மூட்டைகளை வெறும் தரையின் மீது அடுக்கி  வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே போல் சுவற்றின்மீது சாய்த்து அடுக்குதல் வேண்டும்.  விதை மூட்டைகளை மரக்கட்டைகளின் மீது அடுக்கி வைப்பதன் மூலம் தரை மற்றும் சுவற்றில்  உள்ள ஈரப்பதம் விதையை அடைந்து அவற்றைப் பாதிப்பதை தவிர்க்கலாம். 
          
  சாக்குப்பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும்  பொழுது 6 அல்லது 7 வரிசைக்கு மேல் அடுக்கக் கூடாது. அப்படி அதிக வரிசைகளில் அடுக்கும்பொழுது  மேலே உள்ள மூட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளின் விதைகளைப் போட்டு அழுத்துவதால்  அடி மூட்டையில் உள்ள விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது. 
      விதைச் சான்றளிப்பு  
          
  பாரம்பரியத் தூய்மையும், பிறபயிர் கலப்பில்லாததும்,  அதிக அளவில் சுத்தத் தன்மையுடையதும், அதிக முளைப்புத்திறனும் வீரியமும் மற்றும் நோய்  தாக்காத விதைகளையே தரமான விதைகள் என்கிறோம். விவசாயிகளுக்கு விதையின் இனத்தூய்மை பற்றியும்  விதைத்தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பதே விதைச் சான்றளிப்புத்துறை ஆகும். விதை உற்பத்தியில்  தரக்கட்டுப்பாட்டு கொள்கை சட்ட பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறை விதைச் சான்றளிப்பு  ஆகும். விதைச்சட்டம் 1966ன்படி சான்றளிப்புக்கு குறித்தறிவிக்கப்பட்ட இரகங்களே அனுமதிக்கப்படுகின்றது.  எனவே தேர்ந்தெடுக்கும் இரகம் குறித்தறிவிக்கப்பட்ட இரகமாக இருக்க வேண்டும். இவ்வாறு  குறித்தறிவிக்கப்பட்ட இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும் அதிக சுத்தத்தன்மையும்  மிகுந்த முளைப்புத்திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்குச் கிடைக்கச் செய்வதே விதைச்  சான்றளிப்பின் முக்கிய நோக்கம் ஆகும். 
          
  விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது.  விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளதா  என்பது முதல், விதைப்பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம்,  பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக  உள்ளனவா என்பன வரையும் ஆய்வு செய்யப்படுகின்றது. மேலும் விதைகளை முளைப்புச் சோதனைக்கு  அனுப்பி சோதனை முடிவுகளை கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன.       
      ஆய்வின் போது வயல்தரம் மற்றும் விதைத்தரம்  குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு  சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன. 
      கம்பு விதை  உற்பத்திக்கு பரிந்துரைக்கபட்ட வயல் மற்றும் விதைத் தரம் 
      
        
            
              வயல் தரம்    (அதிகபட்சம்)  | 
              விதைத்தரம்  | 
             
            
              கலவன்கள்   | 
              1.00  | 
              விதைச்சுத்தம்   | 
              98%  | 
             
            
              குறித்தறிவிக்கப்பட்ட 
                நோய்கள் (அதிகபட்சம்)  | 
              0.10  | 
              கல், மண் முதலியன  | 
              2%  | 
             
            
                 | 
                 | 
              பிற இனப்பயிர் விதைகள் 
                (அதிகபட்சம்) 
                களை விதைகள் (அதிகபட்சம்) 
                முளைப்புத்திறன் 
                (குறைந்தபட்சம்) 
                ஈரத்தன்மை (அதிகபட்சம்)  | 
              0.10 
                  0.10 
                75% 
                12%  | 
             
               
       
              
  விதைச் சான்றிப்பிற்கு மேலும் விவரங்கள் வேண்டுமாயின் அருகாமையிலுள்ள விதைச்  சான்றளிப்பு அலுவலர்களை அணுகி விபரங்களை பெற்று பயன் பெறலாம். 
      கம்பில் வீரிய ஒட்டு  விதை உற்பத்தி முறைகள் 
          அதிக அளவு பயிரிடப்படும்  வீரிய ஒட்டு இரகங்கள் 
      
        
            
              வீரிய ஒட்டு இரகம்  | 
              ஆண் இரகம்  | 
              பெண் இரகம் 
                (ஆண் மலட்டுத் தன்மை    உடையது)  | 
             
            
              கே.எம்.2  | 
              கே.60-டி-230  | 
              எம்.எஸ்5141ஏ  | 
             
            
              எக்ஸ்7  | 
              பிடி1890  | 
              எல்111ஏ  | 
             
               
       
      தரமான விதை உற்பத்தி  நுணுக்கங்கள் 
          
  விதை உற்பத்தியின் பிரதான இலக்கே நல்ல முளைப்புத்திறன் மற்றும் வீரியமிக்க,  நோய் நொடியுற்ற அதிக மகசூல் மற்றும் இலாபம் தரக்கூடிய தரமான விதைகளை உற்பத்தி செய்வதுதான். 
      விதை உற்பத்திக்கு ஏற்ற  நிலத்தேர்வு 
                 
  மணற்பாங்கான வளமான மக்கிய தாவரப்பொருள் நிறைந்த வடிகால் வசதிகளுடன் கூடிய நீர்ப்பாசன  வசதியுள்ள இடத்தை விதை உற்பத்திக்காக தேர்ந்தெடுத்தல் நன்று. அந்த இடத்தில் முன்பருவத்தில்  கம்பு பயிரிடப்படாமல் இருப்பது அவசியமான ஒன்றாகும். அப்படி இருப்பின், நிலத்திற்கு  ஒருமுறை நீர்பாய்ச்சி விட்டு விதைகள் முளைத்தபின்னர் உழுது விடுவதால் தன்னிச்சையாக  முளைக்கும் பயிர் மற்றும் பிற கம்புப் பயிர்களால் ஏற்படும் இனக்கலப்பு மற்றும் மரபியல்  பண்புகளின் சீர்கேடு இவற்றை தவிர்ககலாம். 
      இனத்தூய்மையை பராமரிக்க  பயிர்விலகு தூரம் 
                 
  கம்பு பயிரில் 64-85% அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதால், விதைப் பயிருடன்  பிற இரகங்களின் கலப்பு ஏற்படாமல் அதன் இனத்தூய்மையை பாதுகாக்க கீழ்க்கண்ட பயிர் விலகு  தூரத்தைக் கடைபிடித்தல் மிகவும் அவசியம். 
      
        
            
              கலப்பினங்கள்  | 
              பயிர்விலகு தூரம் 
                (குறைந்தபட்சம்) மீ  | 
             
            
                 | 
              ஆதார விதை  | 
              சான்று விதை  | 
             
            
              1.மற்ற இரகங்கள் மற்றும் வேறு வீரிய ஒட்டு இரகம்   | 
              1000  | 
              200  | 
             
            
              2.இனத்தூய்மைக்கான சான்றிதழ் 
                பெறாத அதே வீரிய ஒட்டு இரகம்  | 
              1000  | 
              200  | 
             
            
              3.இனத்தூய்மைக்கான சான்றிதழ் பெற்ற அதே ஆண்செடியைக் கொண்ட வீரிய ஒட்டு இரகம்  | 
              -  | 
              5  | 
             
            
              4.இனத்தூய்மைக்கான சான்றிதழ் பெறாத அதே ஆண்செடியைக் கொண்ட வீரிய ஒட்டு இரகம்  | 
              -  | 
              200  | 
             
               
       
      விதை உற்பத்திக்கு ஏற்ற  பருவம் 
                 
  பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் போன்ற காரணிகள் பருவகால மாறுபாடுகளுக்கேற்ப  மாறுபடும் தன்மை உடையது. அதனால் பருவத்தே பயிர் செய் என்ற பழமொழிக்கேற்ப விதைக்கும்  பருவம் மிகவும் முக்கியமானதாகும். கம்பு பயிர் வளர்ச்சிப் பருவம் மப்பும் மந்தாரமுமான  தட்பவெப்பநிலையில் இருந்தாலும், கதிர் மணி பிடிக்கும் பருவம் மற்றும் விதை முதிரும்  பொழுது மழை இல்லாத வறட்சியான நிலையே உகந்ததாகும். வீரிய ஒட்டு கம்பு இரகத்தைப் பொறுத்தவரை  கார்த்திகைப் பட்டம் மிகவும் சிறந்ததாகும். 
      நாற்றங்கால் அமைத்தலும்,  விதைத் தேர்வும் 
      விதைத் தேர்வு  
          
  வளமான நல்ல பயிரைப் பெற தரமான விதைகளை உபயோகிக்க வேண்டும். உணவு நிலையில் தன்னிறைவும்,  பிற நாட்டிற்கும் பகிர்ந்தளிக்கும் பாங்கையும் ஆக்கித்தந்த பெருமை தரமான வித்துக்களையே  சாரும். பயிர் விளைச்சலுக்குத் தேவையான மூலாதாரமே விதையாகும். இதையே வித்தின்றி பயிரில்லை,  பயிரின்றி உயிரில்லை, உயிரின்றி உலகில்லை, என்ற மூன்று வரிகளில் குறிப்பிட்டு விடலாம்.  ஆகவே விதையின் முளைப்புத்திறனை விதைக்கு முன்னரே உறுதி செய்து அதிகமான முளைப்புத்திறன்  பெற்ற விதைகளை உபயோகித்து போதிய பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். நல்ல தரமான  விதைகளை மற்ற கல்,மண்,தூசி, களை மற்றும் பிற கலப்பினப் பயிர்கள் இல்லாமல் பிரித்தெடுக்க  வேண்டும். பூச்சி மற்றும் பூஞ்சாண நோய் (தேன் ஒழுகல்) தாக்கிய விதைகளை விதைப்பதற்கு  உபயோகப்படாது. 
          
  எர்காட் என்னும் தேன் ஒழுகல் நோயினால் தாக்கப்பட்ட விதைகளை அகற்ற உப்புக் கரைசலைப்  பயன்படுத்தலாம். 
      விதை அளவு 
             
  ஒரு ஏக்கர் பயிர் செய்வதற்கு 1.25 கிலோ பெண் விதை மற்றும் 0.250 கிலோ ஆண்  விதையும் தேவை. 
      நாற்றங்கால் அமைத்தல் 
                 
  ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுக்களைப் பெற மூன்று சென்ட் நாற்றங்கால் போதுமானது.  தேர்வு செய்த நிலத்தை மூன்றிலிருந்து நான்குமுறை கட்டியில்லாமல் உழுது கடைசி உழவின்போது  நன்கு மக்கிய தொழு உரத்தை 300 கிலோ என்ற அளவில் இட வேண்டும். ஒவ்வொரு சென்ட் நாற்றங்காலிலும்  ஆறு பாத்திகள் முறையே 15X3 மீ நீள அகலத்தில் 15 செமீ உயரத்தில் அமைக்க வேண்டும். ஒவ்வொரு  பாத்தியைச் சுற்றிலும் 30 செ.மீ அகலமுள்ள வாய்க்கால்களை அமைக்க வேண்டும். 
      விதைப்பு 
                 
  உயரப் பாத்திகளில் 1 செமீ ஆழத்திற்கு மிகாமல் 15 செமீ இடைவெளியில் கோடுகள்  போட வேண்டும். இந்த கோடுகளில் ஆண் மற்றும் பெண் விதைகளை தனித்தனியே மூன்று மற்றும்  பதினைந்து பாத்திகளில் விதைக்க வேண்டும். பின்னர் விதைகளை 200 கிலோ தொழு உரம் கொண்டு  மூடி விட வேண்டும். வளரும் நாற்றுக்களை தண்டுப்பூச்சியின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க  250 கிராம் கார்போபியூரான் 3 சத குருணை மருந்தை 2 கிலோ அளவுள்ள ஈரமணலுடன் சேர்த்து  நாற்றங்காலில் சமமாக தூவிவிட வேண்டும். 
      நீர்ப்பாய்ச்சுதல் 
          
  பாத்திகளில் ஈரம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும்  பாத்திகள் வறண்டு விரிசல் விழுதல் கூடாது. எனவே அடிக்கடி கவனித்து தேவையான அளவு நீர்ப்பாய்ச்சுதல்  அவசியம். 
      நாற்றங்காலில் பயிர்  பாதுகாப்பு 
                 
  விதைத்த ஏழு மற்றும் பதினான்காவது நாளில் பூச்சிகள் தென்பட்டால் எண்டோசல்பான்  35 ஈசி என்ற மருந்தினை 12மிலி அளவில் எடுத்து   லிட்டர்  தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். 
      நாற்றின் வயது 
          
  வயது குறைந்த அல்லது அதிகமான  நாற்றுக்களை நடவு வயலில் நடும் பொழுது மகசூல் குறைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.  கம்புப் பயிர் நாற்றங்காலில் 18 நாட்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும். விதைத்த 18  நாட்களுக்குள் நடவு வயலை தயார் செய்து வைத்திருந்தால்தான் உரிய பருவத்தில், நாற்று  நட்டு நல்ல மகசூலை அடைய முடியும். 
      நடவு வயல் தயார் செய்து நாற்று நடுதல் 
                 
  தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல வடிகால்  வசதி உடைய நிலத்தில் 5 டன் தொழு உரத்தை சமமாக பரப்பி விட்டு அது மண்ணுடன் நன்கு  கலப்பதற்காக மூன்று உழவுகள் வரை கொடுக்கலாம். 
      பார் அமைத்தல் 
  நாற்பத்தைந்து செமீ இடைவெளியில் 5  மீட்டருக்கு பார்கள் அமைக்க வேண்டும். ஆண், பெண் நாற்றுக்களை 1 : 6 என்ற நடவு  விகிதத்தின்படி நட கட்டு வரப்பு அமைத்துக் கொள்ளலாம். 
      நாற்று நடுதல் 
                 
  நாற்று நடக்கூடிய பக்கத்தில் தழை,  மணி, சாம்பல் சத்துக்களை கலக்கி இட வேண்டும். மண் நன்றாக நனையும் வரை தண்ணீர்  பாய்ச்சி, நீர் வயலில் நிற்கும் பொழுதே நாற்றுக்களை நடவேண்டும். முதலில்  நாற்றுக்களைப் பிடுங்கும்பொழுது, நாற்றங்காலில் நீர் பாய்ச்சி வேர் பாகத்திற்கு  எந்த ஒரு சேதமும் ஏற்படாமல் கவனமாக இருத்தல் அவசியம். நாற்றுக்களை நடுவதற்கு  முன்னர் 400 கிராம் அசோஸ்பைரில்லத்தை 16 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில் வேர்  நனையுமாறு 15-30 நிமிடங்களுக்கு வைத்து பின்னர் நடவு வயலில் நடவும். நட்டபின்னர்  வயலைச் சுற்றிலும் எல்லை வரிசையாக 4 வரிசை ஆண் செடிகளை நடவேண்டும். 
          
  முதலில் ஆண் நாற்றுக்களை அந்தந்த  பார்களில் 20 செமீ இடைவெளியில் நட்டு முடித்த பின்னர் பெண் நாற்றுக்களை நட  வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் ஆண், பெண் நாற்றுக்களை மாற்றி விடக் கூடாது. 
      உரமிடுதல் 
          
  பயிருக்கு இன்றியமையாத சத்துக்களான  தழை, மணி, மற்றும் சாம்பல் சத்துக்களை போதிய அளவில் இட்டால்தான் எதிர்பார்க்கும்  மகசூல் மற்றும் விதைத்தரம் ஆகியவை கிடைக்கும். ஆகவே, அட்டவணையில் கொடுத்துள்ளபடி  தவறாமல் நாற்றுகளுக்கு தேவைப்படும் சத்துக்களைக் கொடுக்க வேண்டும். 
      
        
            
              உரம்  | 
              தழை 
                கி.ஏக்  | 
              மணி 
                கி.ஏக்  | 
              சாம்பல் 
                கி.ஏக்  | 
             
            
              அடியுரம் 
                மேலுரம் (விதைத்த 30வது நாளில்)  | 
              20 
                20  | 
              20 
                -  | 
              20 
                -  | 
             
               
       
      இதைத் தவிர தூர்கள் அதிகமாக விடும் சமயத்தில் டீ.ஏ.பி. 1 சத கரைசலை இலை வழி  கொடுப்பது நல்லது. 
      நீர் நிர்வாகம் 
                 
  நடவு செய்து மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சுதல் மிகவும் அவசியம். அதன்  பின்னர் ஏழிலிருந்து பத்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. ஆனால்  மிகவும் முக்கியமாக அதிக தூர் விடும் சமயம், பூ பூக்கும் தருணம், விதையின் வளர்ச்சி  பருவத்தில் நிலத்தில் ஈரப்பதம் இருத்தல் மிகவும் அவசியமாகும். 
      களைக் கட்டுப்பாடு 
          
  களைகள் பயிருடன் சத்து, சூரிய வெளிச்சம், நீர் ஆகியவற்றுக்கும் போட்டியிடுவதுடன்  நிலத்தையும் ஆக்கிரமித்து விடுகின்றன. பல பூச்சி, பூஞ்சாண நோய்களை விளைவிக்கும் காரணிகளுக்கு  புகலிடமாகவும் இருக்கின்றன. விளைச்சலும் 20-80 சதம் வரை பாதிக்கப்படுகிறது. ஆகவே களைகளை  ஒழித்தல் அவசியம். 
          
  கம்பு பயிருக்கு நாற்று நட்ட மூன்றாவது நாள் ஒரு ஏக்கருக்கு 200 கிராம் என்ற  அளவில் அட்ரசின் களைக் கொல்லியை 400 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம்  நிலத்தின் மேல் தெளிக்க வேண்டும். முப்பதிலிருந்து நாற்பது நாட்களுக்குள் ஒரு கை களை  எடுப்பது அவசியம். 
      பயிர்பாதுகாப்பு 
          
  குருத்து ஈ தாக்குதல் அதிகமாக இருந்தால் நாற்ற நட்ட 15 ஆம் நாளில் எண்டோசல்பான்  என்ற மருந்தை 400 மிலி என்ற அளவில் 200 லி தண்ணீரில் கலந்து தெளியுங்கள். 
          
  கதிர் ஈ தாக்குதல் இருந்தால், மணிகள் அனைத்தையும் தின்று விடும். எனவே கதிர்  பால் பிடிக்கும் தருணத்தில் கார்பரில் 10 சதம் தூளை 10 கிலோ என்ற அளவில் தூவி விடலாம். 
      கலவன்களை நீக்குதல் 
          
  எந்த ஒரு பயிரிலும் கலவன்கள் கலந்து இருந்தால் அது உற்பத்தி செய்யப்படும் விதையின்  இனத்தூய்மையை பாதிக்கும். எனவே தேர்ந்தெடுத்த இரகத்தின் குணாதிசயங்களில் இருந்து மாறுபட்ட  பயிர்கள், களைகள் மற்றும் பூஞ்சாண தாக்குதலுக்கான பயிர்களையும் அடிக்கடி கவனித்து நீக்கி  விட்டால் இனக்கலப்பு மற்றும் புறக்கலப்பு இல்லாத விதைகளை பெறலாம். எந்தெந்த தருணத்தில்,  என்ன வித குணாதிசயங்களுக்காக நடவு வயலை பார்வையிட வேண்டும் என்பது பற்றி கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. 
      
        
            
              பார்வையிடும் தருணம்  | 
              பார்க்கவேண்டிய காரணிகள் மற்றும் நீக்க வேண்டிய கலவன்கள்.  | 
             
            
              1.முதல் - பூக்கும் முன்னர்  
                (விதைத்த 30 நாட்களுக்குள்   | 
              பயிர் விலகு தூரம், தன்னிச்சையாக முளைத்த செடிகள், நாற்று நட்ட விகிதம் (ஆண்,பெண்)    பூஞ்சாணத் தாக்குதல் உள்ள செடிகள்  | 
             
            
              2.இரண்டு மற்றும் மூன்றாவது - பூக்கும் தருணம்   | 
              பயிர் விலகு தூரம், மகரந்தம் உதிர்க்கும் பெண் செடிகள், கலவன்கள், பசுங்கதிர்    நோய் தாக்கிய செடிகள்  | 
             
            
              3.நான்காவது - விதை முதிரும் பருவம் மற்றும் அறுவடைக்கு முன்  | 
              எர்காட், பசுங்கதிர் நோய் தாக்கிய கதிர்களை உடைய செடிகள்  | 
             
               
       
         
        
        
        
       
        
       
      அறுவடை மற்றும் விதை  பிரித்தெடுத்தல் 
      தக்க தருணத்தில் அறுவடை செய்யாவிடில், இதுவரை செய்த செலவு மற்றும் உழைப்பு அனைத்தும்  வீணாகி விடும். நன்கு முதிர்ச்சி அடையாத நிலையில் அறுவடை செய்தால், விதைகள் முற்றாமல்  காய வைக்கும் போது சுருங்கி சிறுத்து முளைப்புத்திறன் குறைந்து விடும். காலதாமதமான  அறுவடை, விதைகள் கதிரிலேயே முளைத்து விடவும், நிறம் மங்கி கறுப்பாகி, விதைகள் உதிர்வதற்கும்,  பூச்சி பூஞ்சாண தாக்குதலுக்கும், பறவைகள் தாக்கவும் வாய்ப்புள்ளது. எனவே சரியான சமயத்தில்  அறுவடை செய்வது மிகவும் முக்கியம். இலைகள் பழுப்பாகி மணிகள் நன்கு முற்றிய நிலையில்  அறுவடை செய்வது நல்லது. அந்த நேரத்தில் விதையின் எடை அதிகரித்து நன்கு முற்றிய நிலையில்,  நல்ல முளைப்புத்திறன் மற்றும் வீரியத்துடன் இருக்கும். விதையின் ஈரப்பதம் 20 - 25 சதவிகிதம்  வரையில் இருக்கும். முதலில் ஆண் செடியிலுள்ள கதிர்களை அறுவடை செய்து தனியே வைத்த பின்னர்  பெண் செடி அறுவடை செய்தால் கலவன் ஏற்படாமல் இனத் தூய்மையை பாதுகாக்கலாம். 
         
        
        
        
       
        
       
      விதைத் தரம் பராமரித்தல் 
      விதைகளை கதிரிலிருந்து பிரித்தெடுத்து விதையின் தரம் குறையா வண்ணம் வைத்திருத்தல்  அவசியம். 
      கதிரடித்தல் 
          
  அறுவடை செய்த பெண் செடியிலுள்ள கதிர்களிலிருந்து மணிகளைப் பிரித்தெடுக்கும்  பொழுது 15-18 சத ஈரப்பதம் இருந்தால் விதைக்கு எந்த வித சேதமும் ஏற்படாது. அதிகமாக  இருப்பின் காயங்கள் ஏற்பட்டு பூஞ்சாணத் தாக்குதலுக்கு ஆளாக ஏதுவாகிறது. குறைவாக இருப்பின்  விதை உடைய நேரிடும். அதனால் விதையின் முளைப்புத்திறன் குறையும். 
      காயவைத்தல் 
          
  பிரித்தெடுக்கப்பட்ட விதைகளை காலை நேரத்தில் இளம் வெய்யிலில் வைத்து உலர்த்துவது  நல்லது. மதிய நேரத்தில் (12 மணி முதல் மூன்று மணி வரை) புற ஊதாக் கதிர் வீச்சுகள் விதையின்  தரத்தைப் பாதிக்கும். விதையின் ஈரப்பதம் பத்து சதமாக இருக்கும் வரை காய வைக்க வேண்டும். 
      விதைச் சுத்திகரிப்பு  மற்றும் தரம் பிரித்தல் 
                 
  முற்றாத உடைந்த பூச்சி பூஞ்சாண தாக்குதலுக்கு ஆளான விதைகளை பிரித்தெடுத்தால்தான்  சேமிப்பின் போது விதை தரம் குறையாமல் பாதுகாக்க முடியும். கம்பு விதைகளை 4/64” அளவுள்ள  வட்டக்கண் கொண்ட சல்லடையின் மூலம் பிரித்தெடுக்கலாம். சலிக்கும் முன் சல்லடையில் வேறு  விதைகள் எதுவும் துவாரங்களில் இல்லாமல் இருக்கிறதா என்பதை கவனித்து அவற்றை நீக்கி விட  வேண்டும். இதனால் பிற இரகத்தைச் சேர்ந்த விதைகளின் கலப்பு இல்லாமல் விதையின் இனத்தூய்மையை  பராமரிக்க இயலும். 
      தரமான விதைகளின் சேமிப்பு 
                 
  அளவுக்கு அதிகமாக விதை உற்பத்தி செய்தாலும் அதனை நல்லமுறையில் சேமித்து வைத்தால்தான்  அதனை பின்னர் பயன்படுத்த முடியும்.  
      விதை சேமிப்பு  
          
  குறுகிய கால விதை சேமிப்பிற்கு புதிய அல்லது சுத்தம் செய்யப்பட்ட துணி அல்லது  சாக்குப்பைகளே போதுமானது. ஆனால் கடற்கரை ஓரங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக உள்ள  இடங்களில் காற்றுப்புகாத 700 காஜ் தடிமனுள்ள பாலிதீன் பைகளில் சேமித்தால்தான் அதன்  முளைப்புத்திறனை பாதுகாக்க முடியும். 
      விதையின் ஈரப்பதம் 
          
  அடுத்த பருவத்திற்கு மட்டும் சேமிக்க வேண்டுமானால் விதைகளை 12 சத ஈரப்பதத்திற்கு  குறைவாக காய வைத்தல் வேண்டும். ஆனால் காற்றுப் புகாத பைகளில் சேமிக்க ஈரப்பதம் எட்டிற்கும்  குறைவாக இருத்தல் அவசியம். 
      விதை நேர்த்தி  
          
  பூஞ்சாணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்தால், விதைகள் சேமிப்பு காலத்தில்  முளைப்புத் திறன் குறையாமலும், பூஞ்சாண தாக்குதலுக்கு ஆளாகாமலும் இருக்கும். இதற்கு  திராம் அல்லது கேப்டான் என்ற மருந்தினை கிலோவுக்கு 2 கிராம் மற்றும் கார்பரில் மருந்து  200 மிகி என்ற அளவில் 5 மில்லி தண்ணீரில் கலந்து விதை நேர்த்தி செய்து சேமிக்கலாம்.  ஹேலோஜன் கலவை கொண்டும் விதை நேர்த்தி செய்யலாம். 
      சேமிப்புக் கிடங்கின்  சுகாதாரம் 
                 
  தரமான விதை உற்பத்தி செய்து, அவற்றை நல்ல முறையில் சுத்திகரித்து தக்க சேமிப்பு  முறைகளை கையாண்டு வந்தாலும் சேமிப்பு கிடங்கில் பூச்சிகள் அல்லது எலித் தொந்தரவு இருந்தால்  இவ்வளவு தூரம் பாடுபட்டதற்கு பயன் இல்லாமல் போய்விடும்.  எனவே மாலத்தியான் 50 சத ஈசி என்ற மருந்தை 1:300 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து  100 சதுர மீட்டர் பரப்புக்கு தெளிக்க வேண்டும். 
      இடைக்கால விதை நேர்த்தி  
                 
  விதை சேமிப்பில் முளைப்புத் திறன் சரிய ஆரம்பிக்கும்  பொழுது, அதாவது 3 அல்லது 4 மாதங்கள் சேமித்த பின்பு இடைக்கால விதை நேர்த்தி செய்யலாம்.  அந்த சமயத்தில் விதைகளை டை சோடியம் பாஸ்பேட் (36 மில்லி கிராம்/லிட்டர் தண்ணீர்) கரைசலில்  ஒரு பங்கு விதைக்கு இரண்டு பங்கு கரைசல் என்ற விகிதத்தில் ஆறு மணி நேரம் ஊர வைக்க வேண்டும்.  அதற்கு பின் முதலில் நிழலிலும் பின்பு இளம் வெய்யிலிலும் உலர்த்தி 12 சதம் ஈரப்பத அளவிற்கு  கொண்டு வர வேண்டும். அதன்பின், முன்பு கூறிய படி விதை நேர்த்தி செய்து விதைகளை சேமித்தால்  முன்பை விட இரண்டு - மூன்று மாதம் அதிகம் சேமிக்க முடியும். 
      விதை சான்றளிப்பு 
                 
  தரமான விதைகள் என்பது தன்னுடைய இனத்தூய்மையில் சிறிதும் குன்றாமலும்,  களைவிதை, பிற இரக விதை, நோய்தாக்கிய விதை ஆகியவை இல்லாமலும் இருக்கும். மேலும்  தரமான விதை அதிக வீரியத்துடனும், முளைப்புத் தன்மையும் கொண்டிருக்கும். இதனால்  விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது வயல்களில் அதிக இடைவெளி இல்லாமல்  சரியான செடிகளின் எண்ணிக்கை பராமரிக்க முடியும். அதிக வீரியத்துடன் வளர்வதால்  நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை  கொண்டிருக்கும். எனவே விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது மூட்டுவழி  செலவுகளை குறைக்க முடியும். 
          
  விதை உற்பத்தி தரக்கட்டுபாடுக்கென்று சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே  விதைச் சான்றளிப்பாகும். இதைத் தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன் என்று கூட  சொல்லாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக  சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்கு  கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும். 
          
  விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு  உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா  என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப்  பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல்  முதலியவை சரியாக உள்ளனவா என்பது வரை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் விதைகளை  முளைப்புச் சோதனைக்கு உட்படுத்தி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள்  வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு  மேற்கொள்ளப்படுகிறது. 
          
  ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட  தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை  விற்பனைக்கு தயாராகின்றன. 
          
  எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன்  மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய  முடியும்.  
      சான்று விதைக்கான வயல்  மற்றும் விதைத்தரம் 
      
        
            
              சிறப்புத் தேவைகள்   | 
              அதிகபட்சம் (சதம்) 
                ஆதார விதை   | 
              அதிகபட்சம் (சதம்) 
                சான்று விதை  | 
             
            
              
                - கலவன்கள் (பெண் செடியில்)
 
               
                ஏதாவதொரு ஆய்வின்    போது  | 
              0.05        | 
              0.10  | 
             
            
              
                - கலவன்கள் (ஆண் செடியில்)
 
               
                ஏதாவதொரு ஆய்வின்    போது  | 
              0.05        | 
              0.10  | 
             
            
              
                - பசுங்கதிர் நோய் (பெண் செடி)
 
               
                ஏதாவதொரு ஆய்வின்    போது  | 
              0.05        | 
              0.10  | 
             
            
              
                - பசுங்கதிர் நோய் (ஆண் செடி)
 
               
                ஏதாவதொரு ஆய்வின்    போது  | 
              0.05        | 
              0.10  | 
             
            
              
                - தேன் ஒழுகல் நோய் தாக்கியது
 
               
                (பெண் செடி) (கடைசி    ஆய்வின் போது)  | 
              0.02        | 
              0.04  | 
             
            
              
                - கரிப்பூட்டை நோய் தாக்கியது
 
               
                (பெண் செடி) (கடைசி    ஆய்வின் போது)  | 
              0.05        | 
              0.01  | 
             
               
       
      விதைத்தரம் 
      
        
            
              
                -  
 
                | 
              விதை சுத்தம் (குறைந்த பட்சம்)   | 
              98%  | 
              98%  | 
             
            
              2)  | 
              தூசு,கல்,மண், முதலியன   | 
              2%  | 
              2%  | 
             
            
              3)  | 
              பிற இரகப் பயிர்கள் (அதிகபட்சம்)  | 
              10 (கிலோவுக்கு)  | 
              20 (கிலோவுக்கு)  | 
             
            
              4)   | 
              களை விதைகள் (அதிக பட்சம்)  | 
              10 (கிலோவுக்கு)  | 
              20 (கிலோவுக்கு)  | 
             
            
              5)   | 
              நோய் தாக்கிய விதைகள்   | 
              0.02%  | 
              0.04% 
                (எண்ணிக்கையில்)  | 
             
            
              6)  | 
              முளைப்புத்திறன் (குறைந்த பட்சம்)  | 
              75%  | 
              75%  | 
             
            
              
                -  
 
                | 
              ஈரத்தன்மை (அதிகபட்சம்)  | 
              12%  | 
              12%  | 
             
            
              8)  | 
              ஈரத்தன்மை (காற்றுப்புகாத பைகளில் அதிகபட்சம்  | 
              8%  | 
              8%  | 
             
               
       
        
        
        
        
               |