மக்காச்சோளம்  
      தக்க  பருவம்  
         
  மக்காச்சோளம் தமிழ்நாட்டை பொருத்தமட்டில் ஆடிப்பட்டம்  புரட்டாசிப் பட்டம் மற்றும் தை பட்டத்தில் பயிர் செய்யப்படுகிறது. இப்பருவங்களில் நவம்பர்  - டிசம்பரில் விதை உற்பத்திக்கு விதைப்பது ஏதுவாகும். ஏனெனில் விதை முதிரும் காலத்தில்  மழையில்லாமல் இருக்கும். மக்காச் சோளப் பயிரில் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் தண்ணீர்  தேங்கி நிற்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். 
      பயிர்  விலகு தூரம் 
         
  மக்காச்சோளப் பயிர் அயல் மகரந்தச் சேர்க்கை பயிராக இருப்பதால்  விதைப்பயிரை பிற மக்காச்சோள ரகப்பயிர்களிடமிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும்.  மற்ற இரகப் பயிர்களிடமிருந்து குறைந்தது 200 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் (சான்று  பெற்ற விதைக்கு). 
         
      நிலத்  தேர்வு 
       
மக்காச்சோளத்தின் வளர்ச்சிக்கு நல்ல வடிகால் வசதியுள்ள  மணற்பாங்கான செம்மண் மற்றும் வண்டல் மண் தேவைப்படுகிறது. விதைப்பயிர் செய்யும் நிலத்தில்  தான் தோன்றி பயிர்கள் இல்லாமலிருக்க வேண்டும். தான்தோன்றி பயிர் என்பது அதே வயலில்  முந்தைய பருவத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தால் அதிலிருந்து விழுந்த விதையிலிருந்து  வரும் செடிகளாகும்.  
      நிலம்  தயாரிப்பு 
                
  நிலத்தை ஐந்தாறு முறை நன்றாக உழுது கட்டிகள் இல்லாமல்  பண்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 10 வண்டி தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவை,  நான்கு பொட்டலம் அசோஸ்பைரில்லம் உடன் கலந்து ஒரே சீராகப் பரப்பி, நன்கு மண்ணுடன்  கலந்து உழவு செய்ய வேண்டும். 45 செ.மீ. பார்கள் அமைக்க வேண்டும். பார்களில் நடவு செய்தால்  தண்ணீரையும் சிக்கனமாகப் பயன்படுத்தலாம். 
      விதையளவும்  விதை நேர்த்தியும் 
                
  ஒரு ஏக்கர் விதைப்பயிர் பயிரிட 4 கிலோ ஆதார விதை தேவைப்படும்.  விதை மூலம் பரவக்கூடிய பூசண நோயான அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு  கார்பண்டாசிம் அல்லது திராம் போன்ற பூசணக் கொல்லிகளில் ஏதாவது ஒன்றை 2 கிராம் என்ற  அளவில் கலந்து விதைக்க பயன்படுத்த வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதால் பூசணத்தின்  வித்துக்கள் ஒழிக்கப்பட்டு விடும். 
         
  பூசணக் கொல்லி விதை நேர்த்தி செய்து குறைந்தது ஒருநாள்  கழித்து, பின்னர் மூன்று பொட்டலம் அல்லது 600 கிராம் அசோஸ்பைரில்லத்தை ஆறிய அரிசிக்  கஞ்சியுடன் கலந்து அதனுடன் ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை கலந்து சுமார் 15 நிமிடங்கள்  நிழலில் உலர்த்தி பின்பு நீங்கள் விதைப்பு செய்ய வேண்டும். அசோஸ்பைரில்லம் கலப்பதனால்  காற்றிலுள்ள தழைச்சத்து மண்ணில் நிலைப்படுத்தப்பட்டு பயிர் வளர்ச்சிக்கு உதவுகின்றது.  இதனால் அதிக விளைச்சல் பெற வாய்ப்பும் உள்ளது. 
      விதைப்பு  
         
  பார்கள் அமைக்கும் போது 45 செமீ இருக்குமாறு பார்த்துக  கொள்ள வேண்டும். பார்களில் செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளி இருக்குமாறு பக்கவாட்டில்  விதைக்க வேண்டும். குழிக்கு இருவிதைகள் என்ற அளவில் விதைக்க வேண்டும். 
      நீர்ப்பாசனம் 
                
  விதை விதைத்தவுடன் தண்ணீர் விட வேண்டும். பின்பு விதைத்த  மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீரும் நிலத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நீர் பாய்ச்சுதலும்  அவசியம். பொதுவாக மக்காச்சோளப் பயிருக்கு விதைத்த 30 நாட்கள் வரையிலும் குறைவாக நீர்ப்பாய்ச்ச  வேண்டும். அதன்பிறகு 10 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் நீர்ப்பாய்ச்சுதல் அவசியம். இந்தத்  தருணத்தில் தான் பெண் கதிர் கருவுறுதலுக்கான வழுவழுப்பான சூல்முடி வெளியே கொண்டு வரும்.  இந்த தருணத்தில் நீங்கள் நீர்ப்பாய்ச்சத் தவறினால் பெண்கதிரின் சூல்முடி வெளியே வராமல்  விதைப்பிடிப்பு குறையும். இதனால் விதை உற்பத்தி மிகவும் பாதிக்கப்படும். 
      உரமும்  உரமிடலும் 
                
  ஏக்கருக்கு 10 வண்டி தொழு உரம் இடவும். மேலும் ஒரு ஏக்கருக்கு  80 கிலோ யூரியா, 186 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 68 கிலோ பொட்டாஷ் என்ற அளவில்  அடியுரம் இட வேண்டும். அத்துடன் விதைத்த 20 நாட்கள் கழித்து மேலுரமாக மீண்டும் 20 கிலோ  யூரியாவும், 40 நாட்கள் கழித்து 44 கிலோ யூரியாவும் மற்றும் 18 கிலோ பொட்டாஷ் உரமும்  இட வேண்டும். 
      நுண்ணூட்டச்  சத்து பற்றாக்குறை 
                
  மக்காச் சோளப் பயிரில் எந்தச் சத்து குறைந்தாலும் பயிரின்  வளர்ச்சி உடனே பாதிக்கப்படும். பொதுவாகவே மக்காச்சோளத்தில் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளினால்  கணிசமான அளவு விளைச்சல் குறைந்து காணப்படுகின்றது. 
         
  இலைகளில் துத்தநாகம் மற்றும் மக்னீசியம் குறைபாடுகள் அதிக  அளவில் காணப்படுகின்றது. இவற்றில் துத்தநாகம் குறை ஏற்பட்டால் பயிரின் இளங்குருத்துக்கள்  வெளிரி விடுகின்றதை நீங்கள் நேரிடையாக காணலாம். மேலும் முதிர்ந்த இலையின் நரம்புகளுக்கு  இடையில் மஞ்சள் கோடுகள் காணப்படும். இக்குறையைப் போக்க நீங்கள் ஏக்கருக்கு 8 கிலோ  துத்தநாக சல்பேட் நுண்ணூட்டச் சத்தை அடியுரமாகப் பயன்படுத்தி நல்ல விதை மகசூல் பெறலாம். 
         
  மேலும் பயிர்களில் மக்னீசியம் குறை ஏற்படின் அடி இலைகளின்  விளிம்புகளுக்கும் மற்றும் நரம்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி வெளிறிக் காணப்படும். இரும்புச்  சத்து பற்றாக் குறையால் பயிர் முழுவதும் வெளிறியது போல் காணப்படும். மேற்கண்ட குறைகளைப்  போக்க நீங்கள் நுண்ணூட்டக் கலவையை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் 20 கிலோ மணலுடன்  கலந்து விதைத்தவுடன் மேலாகத் தூவி விட வேண்டும். 
         
      களை  நிர்வாகம் 
       
விதைப்பு செய்த 25ம் நாள் ஒருமுறையும், 45ம் நாள் ஒருமுறையும்  ஆக 2 தடவை களையெடுக்க வேண்டும். களையெடுத்த பின்பு உரமிட்டு நன்றாக மண் அணைக்க வேண்டும்.  களைக் கொல்லி தெளித்தும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். அட்ரசின் எனப்படும் களைக் கொல்லி  மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில் சுமார் 400 லிட்டர் தண்ணீரில் சீராகக்  கலக்கி விதைப்பு செய்த மூன்றாம் நாள் தெளித்தும் பின்பு உயிர்த் தண்ணீரும் கட்டப்படுவதை  அறிவீர்கள். 
      கலவன்  நீக்குதல் 
                
  பொதுவாக மக்காச் சோளப் பயிரில் மூன்று முறை கலவன்களை  அகற்றலாம். எனினும் தேவைக்கேற்ப அவ்வப்போது கலவன் அகற்றுவதினால் பயிரின் இனத்தூய்மையை  மென்மேலும் காக்கலாம். இவற்றிற்கு ஒவ்வொரு இரகத்தின் குணாதிசயங்கள் பற்றி அறிந்து  கொள்வது மிகவும் அவசியம் (அட்டவணை). 
         
  முதலில் பயிர் வளர்ச்சிப் பருவத்தில் கலவன் அகற்றுதல்  வேண்டும். இதன்போது உயரமான செடிகள், குட்டையான செடிகள், காம்பின் நிறம், இலையின் நிறம்  ஆகியவை கொண்டு கலவன் அகற்ற வேண்டும். 
         
  இரண்டாவது கலவன் பயிரின் பூக்கும் பருவத்தின் போது எடுக்க  வேண்டும். இப்பருவத்தில் பயிரின் ஆண்பூவின் நிறம் மற்றும் பூக்கும் தருணம், பெண் பூவின்  சூல்முடி நிறம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலவன் களையலாம். 
         
  இறுதியாக பயிர் அறுவடைக்கு முன்பே விதையின் நிறம் கொண்டு  கலவன் களையலாம். 
         
  விதைக் கதிரை காயவைக்கும் போது இரகங்களின் குணாதிசயங்களுக்க  ஏற்ப கலவன் கதிர்களை அகற்றுவதன் மூலம் இனத்தூய்மையைப் பராமரிக்கலாம். 
      உங்கள்      கவனத்திற்கு 
              கலவன் செடிகளை பயிர் பூக்கும் பருவத்தில்      நீக்கும்போது விதை                 வயலிலிருந்து அப்புறப்படுத்தி விட      வேண்டும். இல்லையேல், அதிலுள்ள           மகரந்தம்      பரவி விதையின் இனத்தூய்மையை பாதிக்க வாய்ப்புள்ளது.
       
      
      பூச்சிக்  கட்டுப்பாடு 
                
பொதுவாக மக்காச் சோளத்தை பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை.  இளம் பயிர்களில் மட்டுமே சோளத்தண்டு ஈ, தண்டைத் துளைத்து வளர்ந்து வருவதால் நடுக்குருத்தை  துண்டித்துவிடும். இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 2 மில்லி எண்டோசல்பான்  மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும். சோளக்  குருத்துப்புழு விதைத்த 25-30 நாட்களில் பயிரின் நடுக்குருத்தை தாக்கும். இதனால் நடுக்குருத்தை  தாக்கும். இதனால் நடுக்குருத்து வாடிவிடும். வளர்ந்து பெரிய பயிரானபின் கதிர் சிறியதாக  வெளிவரும்.  ஆகையால் அவசியம் கார்போபியூரான்  3 சதம் குருணை மருந்தை ஏக்கருக்கு 3 கிலோ வீதம் செடி ஒன்றுக்கு இரண்டு குருணைகள் என்ற  அளவில் இட்டு கட்டுப்படுத்தலாம். 
      நோய்க்கட்டுப்பாடு 
                
  அடிச்சாம்பல் நோய் தாக்குதல் ஏற்பட்டால் டைத்தேன் எம்45  என்ற பூசணக் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் வீதம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். 
      அறுவடை 
      ஏற்ற  தருணம் 
         
  மக்காச்சோளக் கதிரை மூடியுள்ள மேலுறையின் பச்சை நிறம்  காய்ந்து வெள்ளை நிறமாக மாறியவுடன் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை தருணத்தில் விதைகளின்  ஈரப்பதம் 25 சதம் இருக்கும். 
      கதிர்களை  பிரித்தல் 
                
  அறுவடையான கதிர்களின் மேலுறையை நீக்கி கதிர்களை காயவைக்க  வேண்டும். விதைகளின் ஈரப்பதம் 15 - 18 சதம் வந்தவுடன் காய வைப்பதை நிறுத்தி விட்டு  கதிர்களை பிரிக்க வேண்டும். மிகச்சிறிய கதிர்களை நீக்கிவிட வேண்டும். கதிரிலுள்ள விதைகளின்  வரிசை, விதைகளின் எண்ணிக்கை மற்றும் நிறம் ஆகியவற்றை கொண்டு கலவன் கதிர்களை அடையாளம்  கண்டு நீக்கி விட வேண்டும். 
         
  மேலும் நன்கு மணிகள் பிடிக்காத நோய் தாக்கிய கதிர்களை  அகற்றி விட வேண்டும். 
      கதிரடித்தல் 
                
  மக்காச்சோள விதைகளைப் பிரித்து எடுக்கும் இயந்திரத்தை  கொண்டு விதைகளை பிரிக்கலாம். இதற்கு விதைப்பயிர் ஈரப்பதம் 15 சதமும் கதிரின் ஈரப்பதம்  25 சதமும் இருக்க வேண்டும். இதனால் விதையின் சேதாரத்தைத் தடுக்கலாம். மேலும் கதிரிலுள்ள  விதைகளை அடித்தும் பிரிக்கலாம். சரியான ஈரப்பதத்தில் விதைகள் பிரித்தெடுக்கப்படவில்லை  என்றால் சுமார் 48 சதம் வரை விதையில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு காயம் ஏற்பட்டால்  பூஞ்சாணம் அதிகம் தாக்கும். 
      விதைகளை  காய வைத்தல் 
                
  கதிரடித்த விதைகளை மீண்டும் காய வைக்க வேண்டும். காய வைப்பதற்கு  விதை காயவைக்கும் இயந்திரத்தை உபயோகிக்கலாம். அப்பொழுது காற்றின் வெப்பம் 40 டிகிரி  சென்டிகிரேட் அளவிற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் வெய்யிலில்  காய வைத்தால் அதிக வெப்பமுள்ள மதிய வெய்யிலை தவிர்த்து இளம் வெய்யிலில் காய வைக்கவேண்டும். 
      விதை  தரம் பிரித்தல் 
         
  தரம் மிகுந்த விதைகளைப் பிரிக்க 18/64 அங்குலம் வட்டக்கண்  கொண்ட சல்லடை கொண்டு விதைகளை பிரிக்கவேண்டும். அவ்வாறு தரம் பிரிப்பதால் நல்ல தரமான  ஒரே சீரான உருவம் கொண்ட விதைகளைப் பெறலாம்.  
      விதை  மகசூல் 
         
  மேற்கண்ட முறைகளைக் கையாள்வதன் மூலம் ஒரு ஏக்கருக்கு  100 கிலோ வரையிலும் தரமான விதைகளைப் பெறலாம். 
      விதை  சேமிப்பு 
                
  விதையை சுமார் 12 சதம் ஈரப்பதத்தில் காய வைத்து கேப்டான்  அல்லது திராம் 75 சதம் நனையும் தூளில் 100 கிலோ விதைக்கு 70 கிராம் என்ற அளவில்  500 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு செய்த விதைகளை  சாதாரண துணிப்பைகளில் சுமார் ஒரு வருடத்திற்கு மேலும் சேமித்து வைக்கலாம். விதைகளை  8 சதம் ஈரப்பத அளவிற்கு நன்கு காயவைத்து பின்பு விதைநேர்த்தி செய்து காற்றின் ஈரம்  புகா பாலிதீன் பைகளில் அடைத்து சேமித்தால் ஒன்றரை வருடகாலம் சேமிக்க முடியும். நச்சுத்தன்மை  வாய்ந்த மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துகளையும் விதை நேர்த்தி செய்ய உபயோகிக்கலாம்.  இதனால், சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவது குறையும். விதை நேர்த்தி செய்யும் பணியாளர்களுக்கும்  பாதுகாப்பாக இருக்கும்.  ஹேலோஜன் கலவையை ஒரு  கிலோ விதைக்கு 3 கிராம் என்ற விகிதத்தில் கலந்தும் சேமிக்கலாம். ஹேலோஜன் கலவையைத்  தயாரிக்க சலவைத்தூள் (கால்சியம் ஆக்சி குளோரைடு) + கால்சியம் கார்பனேட் + அரப்புத்தூள்  5 : 4 : 1 என்ற விகிதத்தில் கலந்து ஒரு வாரம் காற்று புகா ஜாடியில் வைத்திருந்து பின்பு  உபயோகிக்கலாம். ஹேலோஜன் கலவை நச்சுத் தன்மை இல்லாதது. ஆகையால் சுற்றுப்புறச் சூழல்  பாதுகாக்கப்படுகிறது. விதை நேர்த்தி செய்யும் பெண்கள் நச்சு இரசாயனங்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். 
      விதை  சான்றளிப்பு 
      
        
            
                   வயல் தரம்   | 
                   | 
             
            
              கலவன் விதைப்பயிரில் 5 சதவீதமோ (அ) அதற்கும் மேலான    செடிகளில் உள்ள பெண் பூவில் சூல்முடி மகரந்தம் ஏற்கும் நிலையில் இருக்கும்பொழுது    கலவன் செடிகள் மகரந்தம் கொட்டிக் கொண்டோ (அல்லது) கொட்டி முடித்தோ இருக்கக்கூடாது.  | 
              0.2 சதம் (அதிக பட்சம்)  | 
             
            
              விதைத்    தரம்  | 
                 | 
             
            
              விதை புறத்தூய்மை (%) குறைந்தபட்சம்  | 
              98.0  | 
             
            
              அங்ககப்பொருட்கள் (%) அதிகபட்சம்  | 
              2.0  | 
             
            
              பிற பயிர் விதைகள் அதிகபட்சம்  | 
              10.0/கிலோ (எண்ணிக்கை)  | 
             
            
              வேறுரக விதைகள் அதிகபட்சம்   | 
              20.0/கிலோ  | 
             
            
              களை விதைகள் அதிகபட்சம்   | 
              இருக்கக்கூடாது  | 
             
            
              முளைப்புத்திறன் (%) குறைந்தபட்சம்  | 
              90.0  | 
             
            
              ஈரப்பதம் (%) அதிகபட்சம் 
                  
                    - ஈரக் காற்று புகும் பை
 
                    - ஈரக் காற்று புகாத பை 
 
                  | 
                
                  12.0 
                  8.0  | 
             
               
         
          
       
      வீரிய  ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி 
         
  வீரிய ஒட்டு இரகங்களின் ஆண், பெண் தயாதிகளாவன : 
      
        
            
                 | 
              பெண்  | 
                 | 
              ஆண்  | 
             
            
              கோ.எச்1  | 
              யு.எம்.ஐ 29  | 
              X  | 
              யு.எம்.ஐ 51  | 
             
            
              கோ.எச்2  | 
              யு.எம்.ஐ 810  | 
              X  | 
              யு.எம்.ஐ 90  | 
             
            
              கங்கா 5  | 
              (சி.எம் 111 X சி.எம்.202) X சி.எம்.500  | 
             
            
              கோ.எச்.3  | 
              (யு.எம்.ஐ101 X யு.எம்.ஐ 130) X (யு.எம். ஐ 90 X யு.எம்.ஐ    285)  | 
             
               
       
      தக்க  பருவம் 
       
        உங்கள் கவனத்திற்கு 
                        விதை முதிரும் காலத்தில் மழை இருந்தால்      விதைகளின் நிறம் மாறி                      பூஞ்சாணங்களில்      தாக்குதல் ஏற்பட்டு விதை தரம் குறையும். 
       
              
  மக்காச்சோளம் தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ஆடிப்பட்டம்  புரட்டாசிப் பட்டம் மற்றும் தை பட்டத்தில் பயிர் செய்யப்படுகிறது. இப்பருவங்களில் நவம்பர்  - டிசம்பரில் விதை உற்பத்திக்கு விதைப்பது எளிதாகும். ஏனெனில் விதை முதிரும் காலத்தில்  மழையில்லாமல் இருக்கும். மக்காச்சோளப் பயிரில் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் தண்ணீர்  தேங்கி நிற்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
  
        
       
      பயிர்  விலகு தூரம் 
       
மக்காச்சோளப் பயிர் அயல் மகரந்தச் சேர்க்கை கொண்டிருப்பதால்  பிற இரகப் பயிர்களிடமிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும். இதற்கு வீரிய ஒட்டு இரகப்  பயிரை அதே நிற விதை கொண்ட பிற இரகங்களிடமிருந்து குறைந்தது 200 மீட்டர் இடைவெளி விட்டு  உற்பத்தி செய்ய வேண்டும். வேறுவித நிறமுடைய இரகங்களிலிருந்து 300 மீட்டர் இடைவெளி விடவேண்டும்.  டியோசிண்ட் என்ற கலப்பினப் பயிர் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
நிலத்தேர்வு 
          
  மக்காச்சோளத்தின் வளர்ச்சிக்கு நல்ல வடிகால் வசதியுள்ள  மணற்பாங்கான செம்மண் மற்றும் வண்டல் மண் தேவைப்படுகிறது. விதைப்பயிர் செய்யும் நிலத்தில்  தான் தோன்றி பயிர்கள் இல்லாமலிருக்க வேண்டும். 
நிலம்  தயாரிப்பு    
         
  நிலத்தை ஐந்தாறு முறை நன்றாக உழுது கட்டிகள் இல்லாமல்  பண்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 10 வண்டி தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவை,  நான்கு பொட்டலம் அசோஸ்பைரில்லம் உடன் கலந்து ஒரே சீராகப் பரப்பி, நன்கு மண்ணுடன்  கலந்து உழவு செய்ய வேண்டும். 45 செமீ. பார்கள் அமைக்க வேண்டும். பார்களில் நடவு செய்தால்  தண்ணீரையும் சிக்கனமாகப் பயன்படுத்தலாம். 
விதைப்பு  செய்தல் 
விதையளவு 
         
  ஒரு ஏக்கருக்கு 5 கிலோ பெண் தாயாதி விதையும் 2 கிலோ  ஆண் தாயாதி விதையும் தேவைப்படும். மேலும் அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர்க் கலவையை இரகங்களுக்கு  கூறியது போலவே சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். 
விதை  நேர்த்தி 
          
  இரகங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது போலவே இதற்கும் விதைநேர்த்தி  செய்ய வேண்டும். 
விதைப்பு 
         
  பாருக்கு பார் 2 அடி இடைவெளி விட்டு பார் அமைக்க வேண்டும்.  பிறகு செடிக்கு 25 செ.மீ இடைவெளி விட்டு விதைகளைப் பார்களின் பக்கவாட்டில் குழிக்கு  இரண்டு விதைகள் என இட்டு விதைக்க வேண்டும். விதைக்கும்போது 4 பெண் வரிசை 2 ஆண் வரிசை  (4க்கு 2 வரிசை) என்ற விககிதத்தில் விதைக்க வேண்டும். 
எல்லை  வரிசைகள்  
          
  3 எல்லை வரிசைகள் ஆண் இரக விதைகளைக் கொண்டு விதைக்கவும். 
நீர்ப்பாசனம் 
          
  விதை விதைத்தவுடன் தண்ணீர் விட வேண்டும். பின்பு விதைத்த  மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீரும் நிலத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நீர் பாய்ச்சுதலும்  அவசியம். பொதுவாக மக்காச்சோளப் பயிருக்கு விதைத்த 30 நாட்கள் வரையில் குறைவாக நீர்ப்பாய்ச்ச  வேண்டும். அதன்பிறகு 10 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் நீர்ப்பாய்ச்சுதல் அவசியம். இந்தத்  தருணத்தில் தான் பெண் கதிர் கருவுறுதலுக்கான வழுவழுப்பான சூல்முடி வெளியே கொண்டு வரும்.  இந்த தருணத்தில் நீங்கள் நீர்ப்பாய்ச்சத் தவறினால் பெண்கதிரின் சூல்முடி வெளியே வராமல்  விதைப்பிடிப்பு குறையும். இதனால் விதை உற்பத்தி மிகவும் பாதிக்கப்படும். 
உரமும்  உரமிடுதலும் 
         
  ஏக்கருக்கு 10 வண்டி தொழு உரம் இடவும். மேலும் அடியுரமாக  ஏக்கருக்கு 40 கிலோ தழை, 40 கிலோ மணி, 20 கிலோ சாம்பல் சத்து இடுங்கள். 
         
  20ம் நாளில் மேலுரமாக 20 கிலோ தழை மற்றும் 10 கிலோ சாம்பல்  சத்து இடுங்கள். 
  40ம் நாளில் மேலுரமாக 20 கிலோ தழை மற்றும் 10 கிலோ சாம்பல்  சத்து இடவும். 
நுண்ணூட்டச்  சத்துப் பற்றாக்குறை 
         
  மக்காச்சோளப் பயிரில் எந்தச் சத்து குறைந்தாலும் பயிரின்  வளர்ச்சி உடன் பாதிக்கப்படும். பொதுவாகவே மக்காச் சோளத்தில் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளினால்  கணிசமான அளவு விளைச்சல் குறைந்து காணப்படுகின்றது. எனவே இவற்றைத் தவிர்க்க நுண்ணூட்டச்சத்து  கலவையினை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் 15 கிலோ காய்ந்த மணலுடன் கலந்து பார்களின்  பக்கவாட்டில் ஒரே சீராகப் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 
         
  இலைகளில் துத்தநாகம் மற்றும் மக்னீசியம் குறைபாடுகள் அதிக  அளவில் காணப்படுகிறது. இவற்றில் துத்தநாகம் குறை ஏற்பட்டால் பயிரின் இளங்குருத்துக்கள்  வெளிரி விடுகின்றதை நேரிடையாக காணலாம். மேலும் முதிர்ந்த இலையின் நரம்புகளுக்கு இடையில்  மஞ்சள் கோடுகள் காணப்படும். இக்குறையைப் போக்க ஏக்கருக்கு 8 கிலோ துத்தநாக சல்பேட்  நுண்ணூட்டச் சத்தை அடியுரமாகப் பயன்படுத்தி நல்ல விதை மகசூல் பெறலாம். 
         
  மேலும் பயிர்களில் மக்னீசியம் குறை ஏற்படின் அடி இலைகளின்  விளிம்புகளுக்கும் மற்றும் நரம்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி வெளிறிக் காணப்படும். இரும்புச்  சத்து பற்றாக் குறையால் பயிர் முழுவதும் வெளிறியது போல் காணப்படும். மேற்கண்ட குறைகளைப்  போக்க நீங்கள் நுண்ணூட்டக் கலவையை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் 20 கிலோ மணலுடன்  கலந்து விதைத்தவுடன் மேலாகத் தூவி விட வேண்டும். 
களை  நிர்வாகம் 
         
  விதைப்பு செய்த 25ம் நாள் ஒருமுறையும், 45ம் நாள் ஒருமுறையும்  ஆக 2 தடவை களையெடுக்க வேண்டும். களையெடுத்த பின்பு உரமிட்டு நன்றாக மண் அணைக்க வேண்டும்.  களைக் கொல்லி தெளித்தும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். அட்ரசின் எனப்படும் களைக்கொல்லி  மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில் சுமார் 400 லிட்டர் தண்ணீரில் சீராகக்  கலக்கி விதைப்பு செய்த மூன்றாம் நாள் தெளித்தும் பின்பு உயிர்த் தண்ணீரும் கட்டப்பட  வேண்டும். 
கலவன்  நீக்குதல் 
          
  இரகப் பயிர்களுக்கு செய்யப்படுவது போலவே வீரிய ஒட்டு  இரகங்களுக்கும் கலவன்களை அகற்ற வேண்டும். கலவன்களை நீக்கும்போது பெண் வரிசையிலும்  ஆண் வரிசையிலும் தனித்தனியே நீக்கவேண்டும். பெண் வரிசையில் காணப்படும் ஆண் செடிகளையும்  ஆண்வரிசையில் உள்ள பெண் இரகங்களையும் மேலும் பிற மாற்றங்கள் கொண்ட செடிகளையும் நீக்கிவிட  வேண்டும். 
    
  கலவன்  என்றால் என்ன? 
         
  கலவன் என்பது பயிர் ரகங்களின் ஒரு குறிப்பிட்ட தன்மையிலிருந்து  மாறுபட்ட செடியோ (அ) விதையோ ஆகும். 
 
  உங்கள் கவனத்திற்கு 
       கலவன்கனை பூக்கும் தருணத்தில் நீக்குவதால் இனக்கலப்பில்லாத                       தூய்மையான விதைகளைப் பெறலாம். 
 
பயிர்  பாதுகாப்பு 
பூச்சிக்  கட்டுப்பாடு 
         
  பொதுவாக மக்காச் சோளத்தை பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை.  இளம் பயிர்களில் மட்டுமே சோளத்தண்டு ஈ, தண்டைத் துளைத்து வளர்ந்து வருவதால் நடுக்குருத்தை  துண்டித்து விடும். இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 2 மில்லி எண்டோசல்பான் மருந்தை  1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும். சோளக் குருத்துப்புழு விதைத்த 25 - 30 நாட்களில்  பயிரின் நடுக்குருத்தை தாக்கும். இதனால் நடுக்குருத்து வாடிவிடும். வளர்ந்து பெரிய  பயிரானபின் கதிர் சிறியதாக வெளிவரும். ஆகையால் அவசியம் கார்போபியூரான் 3 சதம் குருணை  மருந்தை ஏக்கருக்கு 3 கிலோ வீதம் செடி ஒன்றுக்கு இரண்டு குருணைகள் என்ற அளவில் இட்டு  கட்டுப்படத்தலாம். 
நோய்  கட்டுப்பாடு 
         
  அடிச்சாம்பல் நோய் தாக்குதல் ஏற்பட்டால் டைத்தேன் எம்45  என்ற பூசணக் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் வீதம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். 
ஆண்  பூங்கொத்து நீக்குதல் 
          
  பெண் வரிசையில் உள்ள செடிகளிலிருந்து ஆண் பூங்கொத்துகளை  செடியிலிருந்து வெளியில் வந்த உடனேயே பிடுங்கி எறிவதை ஆண் பூங்கொத்து நீக்குதல் என்கிறோம். 
         
  ஆண் பூங்கொத்து நீக்குதல், சுமார் 14 நாட்கள் வரை தொடர்ந்து  செய்ய வேண்டும். 
         
  ஆண் பூங்கொத்து நீக்கும்போது, செடியை இடது கையால் பூங்கொத்துக்கு  கீழே பிடித்துக் கொண்டு வலது கையல் பூங்கொத்தை ஒரே இழுப்பால் பிடுங்கவும். இவ்வாறு  பிடுங்கிய பூங்கொத்துக்களை அந்தந்த இடத்திலேயே புதைத்து அழிக்கவேண்டும்.  
         
  ஆண் பூங்கொத்து நீக்கும்போது முழுமையாக பூங்கொத்தை  நீக்கவேண்டும். மேலும் இலைகளை நீக்கிவிடக்கூடாது. 
மக்காச்சோள  வீரிய ஒட்டு விதை உற்பத்தியில் ஆண் பூங்கதில் நீக்குதல் 
  
    - ஒரு கையால் பெண் செடியை உறுதியாகப்  பிடித்துக் கொண்டு, ஆண் கதிரை சிறிது கூட செடியில் விட்டு வைக்காமல் பிடுங்க வேண்டும்.
 
    - பிடுங்கிய ஆண் பூங்கதிரை வயலிலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும்.
 
    - ஆண் பூங்கதிர் பிடுங்கப்பட்ட பெண் செடி
 
   
 
அறுவடை 
       
இரகப்பயிருக்கு போலவே ஏற்ற  தருணத்தில் அறுவடை செய்வதோடு ஆண், பெண் வரிசையில் விதைப்பதால் அறுவடை செய்யும்போது  ஆண் மற்றும் பெண் தாயாதி விதைகளை தனித்தனியே அறுவடை செய்யவேண்டும்.  முதலில் ஆண் வரிசை முழுவதையும் அறுவடை செய்து வயலில்  இருந்து அகற்றி விட்டு பின்பு பெண் வரிசையை அறுவடை செய்ய வேண்டும். பெண் வரிசையிலிருந்து  கிடைக்கும் விதைதான் வீரிய ஒட்டு விதை. 
கதிர்களை பிரித்தல் 
         
  அறுவடையான கதிர்களின் மேலுரையை  நீக்கி கதிர்களை காயவைக்க வேண்டும். விதைகளின் ஈரப்பதம் 15 - 18 சதம் வந்தவுடன் காய  வைப்பதை நிறுத்தி விட்டு கதிர்களை பிரிக்க வேண்டும். மிகச்சிறிய கதிர்களை நீக்கிவிட  வேண்டும். கதிரிலுள்ள விதைகளின் வரிசை, விதைகளின் எண்ணிக்கை மற்றும் நிறம் ஆகியவற்றை  கொண்டு கலவன் கதிர்களை அடையாளம் கண்டு நீக்கி விடவேண்டும். 
         
  மேலும் நன்கு மணிகள் பிடிக்காத  நோய் தாக்கிய கதிர்களை விடவேண்டும். 
கதிரடித்தல் 
          
  மக்காச்சோள விதைகளைப் பிரித்து  எடுக்கும் இயந்திரத்தை கொண்டு விதைகளை பிரிக்கலாம். இதற்கு விதைப்பயிர் ஈரப்பதம்  15 சதமும் கதிரின் ஈரப்பதம் 25 சதமும் இருக்கவேண்டும். இதனால் விதையின் சேதாரத்தைத்  தடுக்கலாம். மேலும் கதிரிலுள்ள விதைகளை அடித்தும் பிரிக்கலாம். சரியான ஈரப்பதத்தில்  விதைகள் பிரித்தெடுக்கப்படவில்லை என்றால் சுமார் 48 சதம் வரை விதையில் காயம் ஏற்பட  வாய்ப்புள்ளது. அவ்வாறு காயம் ஏற்பட்டால் பூஞ்சாணம் அதிகம் தாக்கும். 
விதைகளை காய வைத்தல் 
         
  கதிரடித்த விதைகளை மீண்டும்  காய வையுங்கள். காய வைப்பதற்கு விதை காயவைக்கும் இயந்திரத்தை உபயோகிக்கலாம். அப்பொழுது  காற்றின் வெப்பம் 40 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  அதேபோல் வெய்யிலில் காய வைத்தால் அதிக வெப்பமுள்ள மதிய வெய்யிலை தவிர்த்து இளம் வெய்யிலில்  காயவையுங்கள். 
விதை தரம் பிரித்தல் 
          
  தரம் மிகுந்த விதைகளைப் பிரிக்க  18/64 அங்குலம் வட்டக்கண் கொண்டு விதைகளை பிரிக்கவேண்டும். அவ்வாறு தரம் பிரிப்பதால்  நல்ல தரமான ஒரே சீரான உருவம் கொண்ட விதைகளைப் பெறலாம். 
விதை மகசூல் 
          
  ஒரு ஏக்கருக்கு சராசரியாக  700 கிலோ வீரிய ஒட்டு விதை மகசூல் கிடைக்கும். 
விதை சேமிப்பு 
          
  விதையை சுமார் 12 சதம் ஈரப்பதத்தில்  காய வைத்து கேப்டான் அல்லது திராம்  75 சதம்  நனையும் தூளில் 100 கிலோ விதைக்கு 70 கிராம் என்ற அளவில் 500 மில்லி லிட்டர் தண்ணீரில்  கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு செய்த விதைகளை சாதாரண துணிப்பைகளில் சுமார்  ஒரு வருடத்திற்கு மேல் சேமித்து வைக்கலாம். விதைகளை 8 சதம் ஈரப்பத அளவிற்கு நன்கு காயவைத்து  பின்பு விதைநேர்த்தி செய்து காற்றின் ஈரம் புகா பாலித்தீன் பைகளில் அடைத்து சேமித்தால்  ஒன்றரை வருடகாலம் சேமிக்க முடியும். ஹேலோஜன் கலவை கொண்டும் விதை நேர்த்தி செய்தும்  சேமிக்கலாம். 
விதைச் சான்றளிப்பு  
         
  விவசாயிகளுக்கு விதையின் இனத்தூய்மையைப் பற்றியும் விதையின்  தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பதே விதைச்சான்று துறைதான். இம்முறை சட்டப்பூர்வமாக  1966 ம் ஆண்டில் ஏற்பட்டது. விதைச் சான்றளிப்புக்கு குறித்தறிவிக்கப்பட்ட இரகங்களே  அனுமதிக்கப்படுகின்றது. எனவே தேர்ந்தெடுக்கும் இரகம் குறித்தறிவிக்கப்பட்ட இரகமாக இருக்கவேண்டும்.  இவ்வாறு குறித்தறிவிக்கப்பட்ட இரகங்களின் விதைகளை மிகுந்த தூய்மை மற்றும் முளைப்புத்திறனுடன்  உள்ள விதைகளாக விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதே விதை சான்றளிப்புத் துறையின் முக்கிய  நோக்கமாகும். 
         
  விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு  வாங்கும் விதைகள் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து வாங்கப்பெற்றதா என்பது முதல்,  பயிர் விலகு தூரம், பயிரின் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், சுத்திகரிப்பு,  மூட்டை பிடித்தல் என்று ஒவ்வொரு கட்டத்திலும் சரிபார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாது  விதைகளின் முளைப்புத்திறன் விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றது.  பின்பே அதற்குரிய அடையாள சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன. 
         
  ஆய்வின்போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் பற்றி குறித்துரைக்கப்பட்ட  தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிப்பு தரப்படுகின்றது.  அவை பின் விற்பனைக்கு தயாராகிறது. 
வயல் தரம் 
  
    - கலவன் (%) அதிக பட்சம்                          0.5 
 
   
 
மகரந்தம் கொட்டும் செடிகள்  (%) அதிக பட்சம்        1.0 
விதைத் தரம் 
  
    - விதை புறத்தூய்மை (%) குறைந்தபட்சம்                     98 சதம்
 
    - அங்ககப் பொருட்கள் (%) குறைந்தபட்சம்             2.0
 
    - பிறபயிர் விதைகள் அதிகபட்சம்                      10.0
 
    - வேறுரக விதைகள் அதிகபட்சம்                            10.0/கிலோ (எண்ணிக்கை) 
 
    - களை விதைகள்                                   இருக்கக்கூடாது
 
    - முளைப்புத்திறன் (%) குறைந்த பட்சம்                       90.0 
 
   
 
ஈரப்பதம்  (%) அதிகபட்சம்      
  ஈரக்காற்றுப்புகும் பை                                    12.0 சதம் 
  ஈரக்காற்றுப்புகாபை                                 8.0 சதம்          |