Horticulture
||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: பனை

பனைத்தொழில்

பனையிலிருந்து பெறப்படும் மரச்சாமான்கள் விலை மதிப்பு மிக்கவையாகவும் வலிமை மிகுந்தவையாகவும் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கக் கூடியவையாகவும், அதிக ஈரப்பதம் மற்றும் கரையான்களைத் தாங்கி நிற்கும் தன்மை கொண்டவையாகவும் தேக்கு, மகோகனி மற்றும் செம்பனை போன்றவற்றுக்கு இணையான மரச்சாமான்களை அளிக்கும் வல்லமை கொண்டவையாகவும் விளங்குகின்றன. ஒரே வயதுடைய பனை வகைகளில் பனைக்கு பனை வேறுபாடுகள் காணப்படுகின்றன. நன்கு முதிர்ச்சியடைந்த பனைகள் அதிக விலைக்கு விறக்கப்பட்டாலும் பெரும்பாலும் முதிர்ச்சியடையாத நிலையில் பனைகள் செங்கல் சூளைகளுக்காக வெட்டப்படுவதால் குறைந்த விலையே கிடைக்கிறது.

நன்கு முதிர்ந்த பனை நீண்ட நாட்களுக்குத் தாங்கக் கூடிய தண்டினை அளிக்கும். வயதான பனைகளை மட்டும் வெட்டி வீட்டு மரச் சாமான்கள் செய்யப் பயன்படுத்தலாம். தரையிலிருந்து 10 மீட்டர் உயரம் வரையுள்ள தண்டுப்பகுதி வலுவானதாக இருப்பதால் கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் கட்ட பயன்படுகிறது. பனையிலிருந்து பெறப்படும் சட்டங்களைக் கொண்டு வீடுகள் கட்டப்படுகின்றன. பெருமளவில் கட்டிட வளாகங்கள் கட்டப்படும் பொழுது சாளரம் அமைக்க பனங்கைகள் பயன்படுகின்றன. சுமார் 85 வயதுடைய பனை 20 மீட்டர் நீளம் கொண்ட தண்டினைத் தரும்.

உயரம் பயன்பாடு
தரையிலிருந்து 3 மீட்டர் வரை வலிமையான முதிர்ந்த தண்டில் 6 பனங்கைகள் பெறலாம்
அடுத்த 4 மீட்டர் கட்டில்கள் மற்றும் மரச்சாமான்கள் செய்யலாம்
அடுத்த 5 மீட்டர் கூரைகளைத் தாங்கும் குறுக்கு நெடுக்கு சட்டங்கள் செய்யலாம்
கடைசி 8 மீட்டர் எதற்கும் பயனற்றது செங்கல் சூளைகளில் எரிக்கலாம்

வைரச்சட்டம்

வைரமான பகுதியை மட்டும் சுத்தம் செய்து சட்டமாகச் செய்து வீட கட்டும் சட்டங்களாவும், விட்டங்களாகவும் பயன்படுத்தலாம். முதலில் பனையின் அடிப்பகுதியை நறுக்கி விட்டு 20 அடி, 30 அடி நீளமாக முறிக்கப்படுகிறது. முறிக்கப்பட்ட துண்டுகளை நான்காகப் பிளந்து, உள்ளே உள்ள சோற்றுப் பகுதி நீக்கப்படுகிறது. இப்பொழுது வைரச் சட்டம் கிடைக்கிறது. இதைத் தேவைக்கேற்றவாறு சுத்தம் செய்து வீடு கட்டப் பயன்படுத்தலாம். அடிப்பகுதி உறுதியாகவும் பெரியதாகவும் இருப்பதால் வீடு கட்டுவதற்குத் தூண்களாய் நடப்படுகிறது. பூமிக்குள் புதைக்கப்படும் அளவுக்கு தாரை பூசிப் பிறகு குழிக்குள் நடுவார்கள். இதனால் விரைவில் பூச்சி அரிக்காது. வைரம் கருப்பாய் இருக்கும். இந்த வைரத்தின் கனத்தை வைத்துத் தான் சட்டத்தின் விலை முடிவு செய்யப்படுகிறது. நூறு ஆண்டுகள் வாழ்ந்து மடிந்த பனையில் நல்ல வைரம் உண்டு. கட்டில் சட்டம், சன்னல்கள், அழகிய ரூல் தடிகள், நடைக்குச்சிகள் செய்யப்படுகின்றன. மேசை, நாற்காலிகளும் செய்யப்படுகின்றன.

வைரத்தின் உள்ளிருக்கும் சோறு

மரக்கட்டையின் நடுவில் மெல்லிய வெண்மையான சோற்றுப்பகுதி உண்டு. பனையின் நடுப்பகுதி அட்டைகள் செய்யப் பயன்படுகிறது. இந்தச் சோற்றுப் பகுதியை எடுத்து, செங்கல் காளவாய்க்கு எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள். இந்த சோற்றுப் பகுதியைச் சேகரித்துத் தூளாக்கி, தக்கை தூள் போல பயன்படுத்தலாம். இது இலேசானது மின்சாரத்தையும் வெப்பத்தையும் ஊடுருவவிடாது.

பனையின் அடிப்பகுதி

பனையை வெட்டும் பொழுது தரையிலிருந்து சிறிது உயரம் விட்டடுத்தான் பனையை முறிப்பார்கள். இந்த அடிப்பகுதி 21/2 அடியிலிருந்து 3 அடிவரை விட்டமுள்ள உருளையாய் இருக்கும். வெளிப்பகுதியில் வைரத்தின் கனம் குறைந்தது 6 அங்குலம் இருக்கும். இந்த வைரம் பனையின் அடிப்பகுதியிலும் இருப்பதால் அடிப்பகுதியை அப்படியே தோண்டி எடுக்கிறார்கள். வெளியில் உள்ள சல்லி வேர்களை ஒழுங்காக அகற்றிவிட்டு நடுவில் உள்ள சோற்றுப் பகுதியைத் தோண்டி எடுத்துவிட்டால் பெரிய வட்டமான தொட்டி கிடைக்கும். இந்தத் தொட்டி கால் நடைகளுக்குத் தீவனம் சேர்த்து வைக்கப் பயன்படுகிறது.

தோல் இழைக்கும் கட்டை

பனையின் அடிப்பகுதி சுமார் 4 அடி நீளத்துண்டாக நறுக்கப்படுகிறது. மீண்டும் 3 பகுதிகளாப் பிளக்கப்படுகிறது. மேல்பகுதி நன்றாக சுத்தம் செய்யப்படுகிறது. இதை பனையுடன் சாய்த்து வைத்து அதன்மீது பதப்படுத்தப்படும் தொலைப் பரப்பி, அதிலுள்ள சவ்வை உரிக்கப்ப பயன்படுத்துகிறார்கள. தோல் பதனிடும் கூடங்களில் இதைக் காணலாம்.

நீர் பாயும் தடி

பனையை இரண்டாகப் பிளந்து, நடுவில் உள்ள சோறு நீக்கப்படுகிறது. வைரம் பொருந்திய அரைவட்டக் குழாய் போன்ற பனை கிடைக்கிறது. நீர் பாய்ச்சும் கால்வாய்களாக இவை பயன்படுத்தப்படுகின்றன.

பனை ஏற்றம்

பனையைக் கொண்டு ஏற்றம் செய்வதுண்டு. அதாவது முழப்பனையை ஒரு கவட்டை பனையில் பொருத்துவார்கள். அடிப்பகுதி கனமாய் இருக்கும். நுனிப்பகுதியில் நீர் இறைக்கும் கமலையைப் பொருத்துவார்கள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கீழே தடியை ஊன்றிக்கொண்டு, பனையில் நடப்பார்கள். அப்போது கமலையில் நீர் நிரப்பப்பட்டு, வெளியே இழுக்கப்பட்டு நீர் வயலுக்குப் பாயும். இதற்கு ஏற்றம் என்று பெயர்.
விறகு  
          ஐம்பதாயிரம்செங்கல் சுட 20 டன் பனை மேவைப்படுகிறரு. இரு வித்திலை மரவகைகளைக் காட்டிலும் பனைகளின் விலை குறைவாக இருப்பதே பெருமளவு பனைகள் செங்கல் சூளைகளுக்காக வெட்டப்படுவதற்கான காரணமாகும்.

வேர்க்கூடைகள்

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், உச்சிப்புளி, தூத்துக்குடி நெல்லை மாவட்டம் திருச்செந்தூர் போன்ற இடங்களில் வேர்களைச் சேகரித்து கூடைகள் முடையப்படுகின்றன. முதலில் கருப்பு ஓடு போன்ற பகுதியை சீவி, நடுவில் உள்ள வேரை எடுத்து இரண்டாகப் பிளந்தோ அல்லது பிளக்காமல் அப்படியே வைத்தோ கண் பெரிதாய் உள்ள கூடைகள் முடைகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தக் கூடைகளில் மீன், கருவாடு போன்ற பொருள்களைச் சேகரித்து அனுப்புவதால் இதற்கு ‘மீன் தெல்லி’ என்று பெயர். கடினமான தன்மை கொண்ட பனை வேர்கள் மீன் வரைகள் நெய்யப் பயன்படுகின்றன.

Source: Dr.V.Ponnuswami, PhD, PDF (Taiwan), Former Dean & Professor (Horticulture), Horticultural College & Research Institute, Tamil Nadu Agricultural University, Coimbatore

e-mail:swamyvp200259@gmail.com
Website:www.swamyhortiiech.com

Updated on Jan 2016

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016