Horticulture
||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: பனை

சூழலியல்

பல ஆயிரம் ஆண்டுகளாக காணப்பட்ட பனைகள் இயற்கைத் தேர்வின் மூலமாக இன்றைய சூழலுக்கு ஏற்ற தகவலமைப்புகளை பெற்றுள்ளதென கந்தையா என்னும் அறிவியலார் தெரிவிக்கிறார்.

மண்
தரிசு நிலங்களிலும் தேரிக்காடுகளிலும் அனைத்து மண் வகைகளிலும் பனை வளரும். இருந்த போதிலும் மணல் சாரி மண், செம்மண், கரிசல் மண் மற்றும் ஆற்று வண்டலில் பனை நன்கு வளரும். ஏனைய மரவகைகள் வளராத மண் வகைகளிலும் வளரும் சிறப்பியல்பு பனைக்கு உண்டு. போதிய மண் வளமும் நிரம்பிய பகுதிகளில் மித மிஞ்சி விளைச்சலைத் தரும். மணற்பாங்கான இடங்களிலும் திறந்த வெளி புல்வெளிகளிலும் இரண்டாம் நிலைக் காடுகளிலும் பனைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் நதிக்கரையோரங்களில் வண்டல் மண் படுகைகளில் பனை பெருமளவு காணப்படுகிறது. ஆழமான வேர்த்தொகுப்பைக் கொண்டுள்ள பனை நெல் வயல்களின் எல்லைகளை உணர்த்தவும் ஏரிக்கரைகளை வலுப்படுத்தவும் வளர்க்கப்படுகிறது.

இலங்கையில் அமிலத் தன்மையுள்ள மண் வகைகளில் பனை வளர்வதில்லை எனவும் கம்பூசியாவில் பி.எச் 5.5 உள்ள மண் வகைகளில் வளர்வதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மணல் மேடுகளில் பனை வளர்வதால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது.

உரமிடல்
பன்னையின் வயது அதிகமாகும் பொழுது ஊட்டச்சத்துகளின் தேவையும் அதிகரிக்கும்.

ஆண்டு எரு அளவு
(கிலோ / பனை)
எரு அளவு (டன்/எக்டர்)
இரண்டாம் ஆண்டு 10 11.10
மூன்றாம் ஆண்டு 20 22.20
நான்காம் ஆண்டு 20 22.20
ஐந்தாம் ஆண்டு 30 33.30
ஆறாம் ஆண்டு 30 33.30
ஏழாம் ஆண்டு 40 44.40
எட்டாம் ஆண்டு 40 44.40
ஒன்பதாம் ஆண்டு 50 55.50
பத்தாம் ஆண்டு 50 55.50
பதினோறாம்ஆண்டிலிருந்து ஆண்டொன்றுக்கு 60 66.60
அங்கக வேளாண்மையில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வகையான எரு வகைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

வழிமுறை பதநீர்  விளைச்சல் (லிட்டரில்) பதநீர் சேகரிக்கும் காலம் (நாட்கள்) பனை வெல்ல உற்பத்தி (கிலோ)
தொழு எரு – 60 கிலோ / பனை 121.16 53.65 15.25
ஆட்டெரு – 20 கிலோ / பனை 33.85 39.00 15.70
கொழிஞ்சி -30 கிலோ / பனை 107.16 67.25 15.50
பசும் இலைகள் -100 கிலோ / பனை 65.48 65.75 17.85
எரு இடப்படாதவை 65.50 55.00 15.80

பொதுவாக ஆடுகளை கிடைபோட்டு ஊட்டமிடப்படுகிறது. இருந்த போதிலும் விதைப்புக்கு முன்பாக குழி ஒன்றுக்கு 10 கிலோ தொழு எருவும் அதைத் தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை பனை ஒன்றுக்கு 10 கிலோ வீதம் அதிகரித்தும் இட வேண்டும். பதினோராம் ஆண்டில் 60 கிலோ / பனை என்ற அளவை அடைந்தவுடன் அதே அளவு தொழு எருவை ஆண்டு தோறும் இட வேண்டும்.

பனையின் பதநீர் விளைச்சல் ஊட்டச்சத்துகளைப் பொருத்து மாறுபடும். ஊட்டச்சத்துகள் அளிக்கப்படாத பனை ஒன்று ஆண்டொன்றிற்கு 37.3 லிட்டர் பதநீரும், 50 கிலோ தொழு எரு + தழை, மணி, சாம்பல் சத்துகள் ஒவ்வொன்றும் 500 கிராம் என அளித்தால் பழங்களும், தொழு எரு 50 கிலோ + தழை, மணி, சாம்பல் சத்துகள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ என அளித்தால் 109.6 பழங்களும் ஊட்டச்சத்துகள் ஏதும் அளிக்கப்படாத பொழுது 45 பழங்களும் கிடைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. தொழு எரு போன்ற அங்கக எருக்களை பனையொன்றுக்கு ஆண்டொன்றுக்கு 25 கிலோ என அளித்தால் பதநீர் விளைச்சல் 14 விழுக்காடு கூடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

காலநிலை
வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளின் மணல் வெளிகளில் நன்கு வளரும். சராசரி வெப்பநிலை 300 செ வரை தேவைப்பட்ட போதிலும் 450 செ மற்றும் 00 செ வெப்பநிலைவரை தாங்கி வளரும். நிலநடுக்கோட்டின் இரு மருங்கிலும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இரு கண்டங்களில் மிக வறண்ட நிலப் பகுதிகளை அலங்கரிக்கும் தாவரமாக பனை விளங்குகிறது.

இயற்கைச் சூழலில் வளம் குன்றிய மண் வகைகளில் குறைந்த மழைப் பொழிவில் வரப்புகளில் தானாக வளர்ந்து பல்வேறு பயன்களை அளிக்கும் பயிராகவே பனை கருதப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, இலங்கை, மடகாஸ்கர், நடுவண் மியான்மர் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் வறண்ட வானிலை மற்றும் குறுகிய கால பருவ மழை நிலவும் பகுதிகளில் பனை பெருமளவு காணப்படுகிறது. வறண்ட சூழலில் சராசரி மழைப்பொழிவு 500-900 மி.மீ வரை உள்ள பகுதிகளிலும் ஈரப்பதம் மிகுந்த சூழலில் 5000 மி.மீ வரை உள்ள பகுதிகளிலும் பனை நன்கு வளரும். நீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. அதிக மழைப்பொழிவு நிலவும் கேரளா, கீழ் மியான்மார் மற்றும் கம்பூசியா போன்ற பகுதிகளில் பனை பெருமளவு காணப்படுகிறது. வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையைப் பெற்றுள்ள போதிலும் தொடர் வெள்ளத்தால் பனை ஓரளவு பாதிக்கப்படுவதாக காட்செங்கோ என்னும் அறிஞர் கூறுகிறார்.

தேரிக்காடுகளில் காணப்படும் மணல் மேடுகளில் காற்றுத் தடுப்பானாக பனை பயன்படுகிறது. சரியான திசையில் நடவு செய்வதால் மியான்மார் நாட்டில் புழுதிப் புயல் வீசும் பகுதிகளில் காற்றுத் தடுப்பானாக பயன்படுத்தப்படுகிறது. வெளிப்பகுதி உறுதியாக குழாய் போன்று இருப்பதால் எவ்வளவு பலமான புயல் வீசினாலும் பனைகள் முறிந்து சாய்வதில்லை. புயல் தடுப்புக்குப் பனைகளை நெருக்கி நடுவது நல்லது. இயற்கைச் சீற்றங்களில் குறிப்பாக ஆழிப் பேரலையில் இருந்து பாதுகாக்கும் அரணாக கடற்கரையோரங்களில் நடப்பயன்படுகிறது. இளம் பனைத் தண்டுகள் முதிர்ந்த பனைத் தண்டுகளைக் காட்டிலும் மெதுவாக எரியும் தன்மை கொண்டவை. காட்டுத் தீ பரவலாக ஏற்படும் மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் தீ தடுப்பானாக பயன்படுகிறது.

இந்தியாவில் கடல் மட்டத்தில் இருந்து 500-800 மீட்டர் உயரம் வரை உள்ள மலைப் பகுதிகளிலும் பனைகள் காணப்படுகின்றன. தென்னையைக் காட்டிலும் அதிக அளவிலான பச்சைய நிலைப்புக் குறியீட்டு எண் மற்றும் ஒப்பீட்டு ஈரப்பத அளவு ஆகியவற்றைப் பெற்றிருப்பதோடு வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையையும் பனை பெற்றுள்ளது.

நீர்ப்பாசனம்
பனையில் நீர்ப்பாசனம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். பருவ மழைக் காலங்களில் பனை நடவு செய்யப்படுகிறது. பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக பனைகளுக்கு இடைப்பட்ட பகுதியை நன்கு உழுது பனை நாற்றுகளைச் சுற்றிலும் 45 செ.மீ வட்ட விட்டத்தில் வட்டப் பாத்திகளை அமைக்க வேண்டும். பருவ மழை தவறும் சூழலில் ஒரு மாதம் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் ஊற்ற வேண்டும். பருவ மழை பொழியாத காலங்களில் ஒரு ஆண்டு வரை வாரம் ஒரு முறை நீர் ஊற்ற வேண்டும். ஒரு எக்டருக்கு ஒவ்வொரு முறை நீருற்றவும் 25 பெண் பண்னைத் தொழிலாளர்கள் தேவைப்படுவர்.
பதநீர் விளைச்சலை அதிகரிக்க ஏதுவாக பதநீர் எடுக்கும் நான்கு மாதங்களுக்கு பனைகளுக்கு அருகில் துளைகள் இடப்பட்ட பானைகளை தரையில் பதித்து பதினைந்து நாட்களுக்கொருமுறை நீர் ஊற்றி பனைகளுக்குத் தேவையான நீர் கிடைக்கும்படி செய்யலாம். விதைத்த முதல் ஆண்டில் மழைப் பொழிவு நிகழாத எட்டு மாதங்களுக்கு வாரம் ஒரு முறை பானைகளைக் கொண்டு நீரூற்ற வேண்டும்.

பனையில் பாசனமுறைகள் ஏற்படுத்தும் தாக்கம் (ஓலை / பனை)


பாலினம்
பாசன முறைகள் பாசனம்செய்யப்படாதவை சராசரி
15 நாட்களுக்கு ஒரு முறை மாதம் ஒரு முறை
ஆண் 30.38 29.28 27.13 29.13
பெண் 26.25 28.50 29.75 28.17
சராசரி 28.32 29.19 28.44 -

பாத்திகளை சுத்தம் செய்தல்
முதல் ஆண்டில் பாத்திகளை சுத்தம் செய்ய ஒவ்வொரு முறையும் 25 பெண் பண்ணைத் தொழிலாளர்கள் தேவைப்படுவர். இரண்டாம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு வரை ஆண்டொன்றுக்கு நான்கு முறை பாத்திளை சுத்தம் செய்ய, ஒவ்வொரு முறையும் 25 பெண் பண்ணைத் தொழிலாளர்கள் தேவைப்படுவர். ஆறாம் ஆண்டிலிருந்து எட்டாம் ஆண்டு வரை ஆண்டொன்றுக்கு நான்கு முறை பாத்திகளை சுத்தம் செய்ய ஒவ்வொரு முறையும் 30 பெண் பண்ணைத் தொழிலாளர்கள் தேவைப்படுவர். ஒன்பதாம் ஆண்டிலிருந்து 12 ஆம் ஆண்டு வரை ஆண்டொன்றுக்கு நான்கு முறை பாத்திகளை சுத்தம் செய்ய ஒவ்வொரு முறையும் 38 பெண் பண்ணைத் தொழிலாளர்கள் தேவைப்படுவர். பதிமூன்றாம் ஆண்டிலிருந்து ஆண்டென்றுக்கு நான்கு முறை பாத்திகளை சுத்தம் செய்ய ஒவ்வொரு முறையும் 50 பெண் பண்ணைத் தொழிலாளர்கள் தேவைப்படுவா்.

ஊடுபயிர்
பருவ மழைக் காலங்களில் நிலக்கடலை, எள், தட்டைப் பயறு மற்றும் பச்சைப் பயறு போன்றவற்றை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம். பழப்பயிர்களான மாதுளை, நெல்லி, சீத்தா, கொய்யா, மேற்கு இந்திய செர்ரி, கேரிசா மற்றும் இலந்தை போன்றவற்றை பனையில் ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம் பதநீர் மற்றும் நுங்கு கிடைக்காத காலங்களில் கூடுதல் வருவாய் பெறலாம். முருங்கையை வரப்புப் பயிராகவும் தட்டை பயிறை தானியப் பயிராகவும் வளர்த்து கூடுதல் வருவாய் பெறலாம்.

பனைகளை சுத்தம் செய்தல்
ஆறாம் ஆண்டிலிருந்து பனைகளை சுத்தம் செய்தல் அசவியம். பனையின் உயரம், வயது போன்றவற்றைப் பொருத்து சுத்தம் செய்யவும். பனைத் தொழிலாளருக்கு அளிக்கப்படும் கூலி மாறுபடும்.

Source:Dr.V.Ponnuswami, PhD, PDF (Taiwan), Former Dean & Professor (Horticulture), Horticultural College & Research Institute, Tamil Nadu Agricultural University, Coimbatore

e-mail:swamyvp200259@gmail.com
Website:www.swamyhortiiech.com

Updated on Jan 2016
 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016