Horticulture
||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: பனை

அறிமுகம்

இந்திய வரலாற்றிலும் இலக்கியங்களிலும் நாட்டுப்புறப் பாடல்களிலும் பனை குறித்து பரவலாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட பாண்டவ மன்னர்கள் பனம் பழங்களை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்ததாக தொன்மங்கள் கூறுகின்றன. சந்திர குப்த மெளரியரின் அரசவைக்குத் தூதராக வந்த சிரேக்க வரலாற்று  ஆய்வாளர் மெகசுதனிசு சர்க்கரைமிட்டாயை உட்கொண்டதாக ஒரு கருத்து நிலவுகிறது. இச்சர்க்கரையின் துகள் இதர மூலங்களில் இருந்து பெறப்பட்ட சர்க்கரைத் துகளைவிட அதிக தடிமனுடன் காணப்பட்டதிலிருந்து பனையிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை மிட்டாயைத் தான் மெகசுதனிசு உட்கொண்டிருக்கக்கூடும் என்று தெரிய வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே அமைந்துள்ள பண்டைய வணிகப் பாதைகளில் பனைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. தென்கிழக்காசிய நாடுகளின் பெளத்த மடாலயங்களில் பனை குறித்த குறிப்புகள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கியங்களிலும் நீதி இலக்கியங்களிலும் தற்கால தமிழ் இலக்கியங்களிலும் பனை குறித்த குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. “முழா அரை போந்தை பொருந்தி நின்று” என்னும் புறப்பாட்டின் வாயிலாக பனை (போந்தை) வளத்தினை நற்கண்ணையார் எடுத்துக்காட்டுகிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலுக்குக் கிழக்கே 18 கி.மீ தொலைவில் சங்க கால பெண்பாற்புலவரான அவ்வையாரால் மூன்று பந்தல்கள் நிறுவப்பட்டதாகவும் அந்த பந்தல்களில் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் அப்பொழுது ஏழ்மையான நிலையில் இருந்த தனது பணிப்பெண்ணை மணந்து கொள்ளும் படி அங்கு வந்திருந்த இளவரசர் ஒருவரிடம் அவ்வையார் கேட்டதாகவும் கூறப்படுகிறது. வெளிப்படையாக மறுக்க முடியாத அந்த இளவரசர் பனம்பழங்கள் காய்க்காத பருவத்தில் பனம் பழங்களை கொண்டு வந்தால் அப்பெண்ணை மணந்து கொள்வதாகக கூறியிருக்கிறான். அவ்வையாரின் ஆற்றலால் பனை விரைவாக வளர்ந்து பூத்த பழங்களை அளித்ததாகவும், உடனே மண விழாவும் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டு மன்னர்கள் பனம் பூ மாலை சூடி ஆட்சி புரிந்தனர்.

தமிழ்நாட்டின் மாநில மரமாக 1978 ஆம் ஆண்டு பனை அறிவிக்கப்பட்டது. உலக அளவில் தென்னைக்கு அடுத்ததாக சிறப்பிடம் பெறும் பனைக் குடும்பத்தாவரம் பனை ஆகும். இந்திய துணைக் கண்டம் முழுவதும் பரவிக் காணப்படும் பனையின் தாவரவியல் பெயர் பொராசஸ்பிளாபெல்லிபெர் என்பதாகும்.

பண்டைக் காலந்தொட்டு பனைவெல்லம், பதநீர், நுங்கு, பனம்பழச்சாறு, கிழங்கு, குருந்தோலைகள் போன்றவை விரும்பி உண்ணப்பட்டு வருகின்றன. பனையின் ஓலை, நார் மற்றும் வேர்களில் இருந்து பல்வேறு கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பல்வேறு பயன்களைஅள்ளித் தரும் பனை “கற்பக விருட்சம்” என வழங்கப்படுகிறது. பனை மரங்களை வெட்டாமல் வளர்த்தால் ஆண்டொன்றுக்கு 12-15 ஓலைகளும் பெருமளவு பதநீரும், பனைவெல்லமும், நுங்கும், பனம் பழமும், சீம்பும், கிழங்கும் கிடைக்கும்.
பனையிலிருந்து பெறப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்

பனை பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனைத்தேன்
நுங்கு மிட்டாய், குளிர்பானம், கீர்
பழம் சாறு
கிழங்கு அல்வா, லட்டு, கேசரி, பாயாசம், இட்லி, பக்கோடா
சீம்பு அல்வா, பனிக்கூழ்

 பனையொன்றில் பெறப்படும் மதிப்பு மிகு பொருட்கள்

பொருள் அளவு பொருள் அளவு
பதநீர் 150 லிட்டர் வெல்லம் 20 கிலோ
நார் 1 கிலோ கிராம் தூரிகை 12 எண்ணம்
மட்டை 2.5 கிலோ கிராம் கூடை 2 எண்ணம்
ஊலை 8 எண்ணம் பாய் 6 எண்ணம்
நார் 16 எண்ணம் கூடை 1 எண்ணம்


பல்வேறு பயன்களை அளிக்க வல்லதாக பனை இருப்பினும் காய்ப்புக்கு எடுத்துக் கொள்ளும் நீண்ட காலம், பாலியல் வேற்றுமை மற்றும் பதநீர் சேகரிக்க பனை ஏறுவதில் உள்ள இடர்பாடு போன்றவற்றால் உழவர் பெருமக்கள் பனையை ஒதுக்கி வருகின்றனர்.நூறாண்டு வாழும் தன்மையுடைய பனை இயற்கைச் சூழலிலேயே வளர்கிறது. அண்மைக் காலமாக பனைசார்ந்த தொழில்கள் ஊரகப் பொருளியலை மேம்படுத்தும் என்ற கருத்து வலுப்பெற்று வருவதால் பனை குறித்து பரவலாகப் பேசப்படுகிறது.

Source:Dr.V.Ponnuswami, PhD, PDF (Taiwan), Former Dean & Professor (Horticulture), Horticultural College & Research Institute, Tamil Nadu Agricultural University, Coimbatore

e-mail:swamyvp200259@gmail.com
Website:www.swamyhortiiech.com

 
 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021