Horticulture
||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: பனை

பனை நார்

நமது கிராமங்களில் கிடைக்கும் பநை நாரை நாம் அறிவியல்ரீதியில் பயன்படுத்தினால் இன்னும் பல ஆயிரம் குடும்பங்களுக்கு  வேலை வாய்ப்பு அளிக்கலாம். பனையுடன் பிடித்துக் கொண்டிருக்கும் மடலிலிருந்து தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தும்பு கிடைக்கிறது. இந்த மடல் பனையின் கொண்டையைப் பிடித்துக் கொள்கிறது.

.உரியா மட்டை

இது மிகவும் உறுதியாகவும் வலுவாகவும் இருக்கும். இதை நார் உரிக்காமல் காய வைத்து, வேலியாகக் கட்டலாம். வீடுகளுக்கு வரிச்சாகவும் பயன்படுத்துகிறார்கள். பனஞ்சட்டங்களை நீளவாக்கில் வைத்து, உரியாமட்டைகளைக் குறுக்காக வைத்து அகணி நாரால் அல்லது ஈர்க்கால் ஓலைகளைக் கட்டி பனஞ்சட்டத்தைத் தூண்களாய் நிறுத்தி வீடு கட்டப்படுகிறது. வாசலுக்குத் தகுந்தபடி , ரியாமட்டை சட்டம் செய்து, ஓலையை அழகாக வைத்து, அகணி நாரால் ஒரு புறத்தில் கட்டி கதவைத் திறந்து மூடிக் கொள்கிறார்கள். இந்தச் சிறிய அழகிய வீடுகளை திருநெல்வேலி மாவட்டத்தில் காணலாம்.கூரை தாழ்வாக இருப்பதால் காற்றினால் பாதிப்படைவதில்லை. வெய்யில் காலத்தில் குளுமையையும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பையும் இந்த வீடு தரும்.

.கறுக்கு

இளம் வடலிகளுடன் கறுக்குடன் கூடிய மட்டைகளை வெட்டி வேலியடைப்பார்கள். அப்பொழுது ரம்பம் போன்ற பகுதி ஆடுமாடுகள் உள்ளே போகாதபடி பாதுகாக்கும். இந்த கறுக்கு மட்டையின் மீது ஒரு வித எண்ணெய்ப் பசையுண்டு. எனவே வழவழப்பாக இருக்கும். மழை தொடாந்து பெய்தாலும், நீர்பட்டாலும் பாதிப்படையாது. எனவேதான் கறுக்கு மட்டை வேலி சுமார் 3 ஆண்டுகள் வரை உறுதியாக இருக்கும். இந்தக் கறுக்கை அறுத்து மக்கால் அங்குல அகலத்துடன் சீவி எடுக்கிறார்கள். இதற்கு கறுக்கு நார் என்று பெயர். மட்டையின் இரு மருங்கிலும் உள்ள கறுக்கு உடலில் காயத்தை உண்டாக்கும். ஆகையால் மட்டைகளின் இருபுறங்களிலும் உள்ள கறுக்கை ½ அங்குலத்தைச் சீவி அகற்றி விடுகிறார்கள். கறுக்கு நாரை நன்கு காய வைத்து விற்கின்றனர்.

கறுக்கு நாரின் பயன்கள்

  • கறுக்கு நாரை நன்கு நீரில் ஊறவைத்து ஒரு புறமுள்ள கறுக்கைச் சீவி எடுத்து விட்டு, இரண்டாய் வகிர்ந்து, ஓலையைக் கட்டி கூரை வேயலாம். இது நாரை விட வலுவானது.
  • கறுக்கைக் களைந்த பின் இந்தக் கறுக்கு நார் கருப்புக் கட்டிச் சிப்பம் கட்டப் பயன்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பனைவெல்லம் கொட்டான்களில் அடைக்கப்பட்ட உறுதியான கறுக்கு நாரால் கட்டப்படுகிறது. இந்த நாரைப் பிடித்து 10 கிலோ கருப்பட்டியுள்ள சிப்பத்தை சரக்கு ஊர்தியில் ஏற்றி இறக்கும் பொழுதும் அடிக்கடித் தூக்கும் போதும் அறுந்து போகாமல் மிகவும் வலுவாக இருக்கும்.
  • இந்த கறுக்கு நார் சிறு சிறு நாராக வகிர்ந்து, சடையாகப் பின்னி விற்கப்படுகிறது. இந்தக் கயிற்றைக் கொண்டு, ஓலைப் பாய்க் கட்டுகள், கருவாட்டுக் கூடைகள் கட்டப் படுகின்றன.
  • இந்தக் கறுக்கு இரும்புப் பட்டை மாதிரி வலுவுள்ளது. கருப்புக் கட்டிக் கொட்டானைச் சுற்றியபின் இரு நுனிகளையும் அப்படியே சேர்த்துத் திருகிச் சொருகிவிட்டால் இரும்புக் கம்பிகளைத் திருகி விட்டால்  எப்படிப் பிரியாமல் இருக்குமோ அப்படியே பிரியாமல் இருக்கும். சணல் கயிற்றை அப்படித் திருகி சொருக முடியாது. மேலும் அவ்வப்போது அந்த முடியை அவிழ்ப்பதும் சிரமம். ஆனால் இதில் பிரித்து, உள்ளிருக்கும் சரக்கின் தரத்தைக் காண்பித்து விட்டுக் கொட்டானை எளிதாக மறுபடியும் திருகிக் கட்டலாம்.

பச்சை மட்டை

பச்சை மட்டை பொதுவாகப் பச்சையாகவும், நன்கு விளைந்த மட்டை மஞ்சள் கலந்த பச்சை நிறமுடையதாகவும் இருக்கும். பச்சை மட்டைகளைக் கீழ்க் கண்டவாறு மூன்று பகுதிகளாகப் பிரித்து  பல்வேறு தொழில்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

  • வழவழப்பாகவும் அகலமாயும் உள்ள உட்புறத் தோல் – “அகணி”
  • முதுகுப் புறம் தடிப்பாக உள்ள பகுதி – “புறணி”
  • இரண்டும் நீங்கலாக நடுவில் உள்ள பகுதி – “சோற்றுநார்”

அகணியும் அதன் பயனும்

மட்டையை வெட்டியவுடன் அகணியை உரிக்க வேண்டும். ஓலை இருந்த நுனிப் பகுதியில், கூர்மையான கத்தியால் நான்கு அங்குலம் கிழிக்க வேண்டும். பிறகு மட்டையைத் தரையில் போட்டு ஒரு காலால் மிதித்துக் கொண்டு இரு கைகளாலும் அகணியை வெய்யிலில் காய விட வேண்டும். இரண்டொரு நாட்களில் காய்ந்தவுடன் அகணிக் கட்டுகளாகக் கட்டி விற்கப் படுகிறது. பிறகு மட்டையைக் குப்புறப் போட்டு, புறணியை இழுத்தால் தனியாக வரும். புறணியை இரண்டாக வகிர்ந்து தான்  கிழிக்க வேண்டும். அகணி மாதிரி ஒரே அகலமாய்க் கிழிக்க இயலாது. அகணி புறணி கிழிக்குமுன் மட்டையின் இருமருங்கிலும் உள்ள கறுக்கை ரிவாளால் சீவி விட வேண்டும். கறுக்குடன் நார் கிழிக்க இயலாது.

அகணி வடித்தல்

உரித்துக் காய்ந்த அகணியின் உட்புறத்தில் தும்பு ஒட்டிக் கொண்டிருக்கும். இதை அகற்றினால் அகணி, தோல் மாதிரி வரும். எனவே அகணியை சுமார் இரண்டு மணி நேரம் நீரில் ஊற விட வேண்டும். பிறகு எடுத்துக் கால் பாதத்தில் வைத்துக் கூர்மையான கதிதியால் எதிரிடையாய் இழுத்தால் நாரில் உள்ள கழிவு நீங்கி விடும். பாதத்தில் நாரை (சோறுள்ள பகுதியை) வைத்துக் கத்தியை அதன் மேல் வைத்து நாரை இழுத்தால் சோறு இழைக்கப் படும். பின்பு, அது 1,8 அங்குல அகலத்தில் நீளமாக வாரி வைத்தக் கொள்ளப் படுகிறது. இதற்கு “அகணி வடித்தல்” என்று பெயர்.

அகணி உறுதியானது. கூரை வேயும் பொழுது, ஓலையைக் குப்புற வைத்து இரண்டு இடங்களில் குத்தூசியால், அகணியை ப் பொருத்தி இழுத்துத் திருகி, மடித்து விட்டால் சுமார் 5 ஆண்டுகள் அசையாமல் இருக்கும். “ஆயிரம் அகணியால் கட்டிய வீட்டுக்கு ஆனையின் பலம்” என்பது பழமொழி. தென்மாவட்டங்களில் எல்லாக் கூரைகளும் அகணியால் தான் கட்டப்பட்டிருக்கும்.

அகணியும் கடகமும்

தமிழ்நாட்டில் சாமான்கள் வைக்க எடுத்துச் செல்ல தானியம் சுமக்கப் பயன்படுவது நார்ப் பெட்டிகளாகும். பெரிய நார்ப் பெட்டிகளுக்கு கடகம் என்று பெயர். அதாவது ஓலையால் பெட்டிகள் பின்னி, வெளிப்புறத்தில் ஓலையின் பகுதியை அகணியால் தைத்து விட்டால், உறுதியாகவும் அழகாகவும் அமையும். வாய் விளிம்பில் புறணியை வளைத்து வைத்துக் கட்டப்படுகிறது. இதற்கு நார்ப் பெட்டி என்று பெயர். பல்வேறு அகலத்திலும், உயரத்திலும் நார்ப்பெட்டிகள் தயாரிக்கப் படுகின்றன.

சிறிய பெட்டிக்கு விதைப் பெட்டி என்றும், பெரிய  பெட்டிக்குத் தானியப் பெட்டி அல்லது சந்தைப் பெட்டி என்றும் நெல் அரிசி கொண்டு போகும் பெரிய  பெட்டிகளுக்கு “ நார்கடகம்” என்றும் பெயர். இந்தப் பெட்டிகள் இலேசாகவும் மழையில் நனைந்தால் கெடாமலும் இருக்கும். சிறிய அழகான வண்ண நாருடன் செய்யப்பட்ட கைப்பெட்டிகள் உண்டு. இதற்கு அரிசிப் பெட்டி என்று பெயர்.

நார்த் தொழிலில்  கையாளப்படும் கருவிகள்

1. மட்டை அரிவாள்   : பனையிலிருந்து மட்டையை வெட்டவும், நார் உரிக்கவும்  உதவுகிறது.
2.சத்தகக்கத்தி : பிறைச் சந்திரன் வடிவம் கொண்டது. காம்பு நீளமாக உள்ளது. மிகவும் பதமானது.
3.குத்தூசி : கட்டில் பின்ன உதவும் ஊசி

சத்தகக்கத்தி நார், மட்டைகளை நறுக்கவும், நாரைச் சத்தம் செய்யவும் துளையிடவும், நாரை ஒரே சீராக வாரவும்,வாரிய நாரைக் கொண்டு ஓலைப் பெட்டியைத் தைக்கவும், ஓட்டை விழுந்த  பெட்டிகளைச் செப்பனிடவும் உதவும் ஒரு சிறிய கருவியாகும்.

குத்தூசி

ஒரு நுனியில் கரண்டி போலவும் மறு நுனியில் திரண்டு ஊசி போலவும் இருக்கும்.

அகணியின் பயன்கள்

அகணி நாரைக் கொண்டு கிராமங்களில் வீட்டுக் கூரை வேய்தல், சட்டங்கள் கட்டுதல், கடகப் பெட்டி செய்தல், கட்டில் , நாற்காலி பின்னுதல், விறகு, பாய்க்கட்டுகள் மற்றும் எப் பொருளையும் கட்டுதல், கயிறு முறுக்குதல், கமலைக் கயிறு செய்தல், உரி செய்தல் போன்ற வழிகளில் கயிறுக்குப் பதிலாகப் பயன்படுகிறது.

கட்டில் கட்டுதல்

கட்டில்கள் செய்வதில் இரண்டு வகை உண்டு. ஒன்று நிலையான கால்களை வைத்துச் செய்வது மற்றது மடக்குக் கால்களை வைத்துச் செய்வது. 5 ½  அடி நீளம் 2 ½ அடி அகலம்        1½ அடி உயரம்  கொண்ட கட்டில்கள் செய்யப் படுகின்றன. எனவே தென்மாவட்டங்களில் உறுதியான பனஞ்சட்டங்களைக் கொண்டு கட்டில்கள் செய்யப்பட்டு நார் கொண்டு பின்னப்படுகின்றன.
மடங்காத கட்டில்கள், மடக்குக் கட்டில்கள் முதலியவை சிக்கனமாகவும், சொகுசாகவும் நாரினால் பின்னப் படுகின்றன. நாரினால் பின்னப்படும் கட்டில்களை சுமார் 5 அல்லது 7 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். நாரின் வழவழப்பான பகுதியை மேலே வைத்து பின்னுவதாலும் நார்க்கட்டிலில், துணி விரிக்காமலே படுக்கலாம். துணியைக் காட்டிலும் வழவழப்பாய் இருக்கும். காற்றோட்டம் கொண்ட படுக்கை வரிப்பாக பனை நார்க் கட்டில் விளங்குவதால் வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்த நாரைக் கொண்டு தயரிக்கப்படும் கட்டில்களைப் பயன்படுத்தினால் முதுகு வலி மற்றும் உடல்வலி குறையும் என தோட்டக் கலை அறிஞர் முனைவர்.சம்பந்த மூர்த்தி கூறுகிறார்.

புறணியும் பயனும்

சத்தகக்கத்தியால் புறணியின் உட்புறத்தில் உள்ள சதைப்பகுதியை நீக்கிவிட்டால் பிரம்பு போல் ஆகிவிடும். இதனை சுளகின் விளிம்பு கட்டுதல், பெட்டி, கடகம் ஆகியவற்றின் வாய்க் கட்டில் பயன்படுத்துதல், கடகத்திற்கு ஊடாகப் புறணியையும், குறுக்கே அகணியையும் வைத்துப் பின்னுதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்துகின்றனர். புறணி நாரை நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பிறகு சோற்றுப் பகுதியை சீவினால் எளிதில் அகற்றி விடலாம்.

சோற்று நார்

சோற்று நார் முழுவதும் நீண்ட நூல் போன்று நன்கு வளையும் உருண்டையான தும்பினால் ஆனது. எனவே இதில் வெள்ளைத் தும்பும், சோற்றுப் பகுதியும் பின்னியிருக்கிறது. எனவே மட்டையைப் பச்சையாகவே மலக் கொட்டாப் புளியால் தட்டினால் மிருதுவான தும்பு கிடைக்கும். சிறிய நாராகவும் கையால் கிழிக்கலாம்.

இந்த சோற்று நாரைக் கொண்டு செய்யப்படும் சாமான்களில் சில.

மாட்டுத்தும்பு

மாடு கட்டும் கயிறு

புனையதும்பு

கதிரின் மேல் சுற்றிவரும் கல்ல்நடைகளைக் கட்டும் கயிறு(தாம்புக் கயிறு)

உரிக் கயிறு

பால் வெண்ணெயைப் பாதுகாப்பாக வைக்கத் தொங்கவிடும் கயிறு.

கமலைக் கயிறு

கிணற்றில் நீர் இறைக்கச் சாலுடன் பொருத்தப் படுவது

பிரிமனை

பானைகளைத் தரையில் வைக்க வட்டமாய்ச் செய்யப்படும் பிரிமணையில் சுற்றப்படுவது

சடைக் கயிறு

மூன்று சடையாகப் பின்னி கருவாடு, புளி முதலியவற்றைச் சிப்பமாய்க் கட்ட உதவுவது

ஊஞ்சல் கயிறு

மரங்களில் ஊஞ்சல் கட்டி குழந்தை விளையாட உதவுவது

மட்டைக் கறுக்கு

மட்டையின் இருபக்கங்களிலும் ரம்பம் போன்ற பகுதி இருக்கிறது. இதற்குக் கறுக்கு என்று பெயர். இந்தக் கறுக்கை ½ அங்குல அகலத்தில் கிழித்துவிட்டு நார் உரிப்பார்கள். இந்த மட்டைக் கறுக்கைப் பச்சையாகவோ  அல்லது காய்ந்த பின்னோ, இரண்டாக வகிர்ந்து(கறுக்கை அகற்றிய பின்) கட்டும் பொருளாக பயன்படுத்துகின்றனர். மட்டைக் கறுக்கு மிகவும் வலுவுள்ளது. முக்கியமாக மட்டைக் கறுக்கினால் தான் 10 கிலோ கருப்பட்டிச் சிப்பம் கட்டப்படுகிறது.

இந்த மட்டைக் கறுக்கைக் கொண்டு கட்டப்படும் கருப்புக் கட்டி கொட்டானைத் தென்னாட்டுக் கருப்பட்டி என்று கூறுவர்.

ஒரிசா மாநிலத்தில் பனை நார்ப் பெட்டிகளும், மிதிவண்டிக் கூடைகளும் செய்யப் படுகின்றன. இப்பொழுது நார்த் தொழில் மராட்டியம், குஜராத், ஒரிசா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் நடைபெறுகிறது.

வ.எண். மூலப் பொருள் செய்யும் பொருளின் பெயர் பயன்கள்
1. சோற்று நார் அகணி உரி 1.வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் போன்ற பொருள்களை பானைகளை வைத்துக் கைக்கெட்டாமல் தொங்க விடுதல்.
2. எறும்பு, எலி ஆகியவற்றின் தொல்லை இராது.
2. சோற்று நார் பிரிமனை நீர்க் குடங்கள், சமையல் பாத்திரங்கள் தரையில் பட்டு உடையாமலும், கரிபடியாமலும், அசையாமலும் இருக்க வைக்கப் பயன்படும்.
3. அகணி, புறணி, குருத்தோலை விதைப் பெட்டி விதைக்கும் விதையைப் பெட்டியில் நிரப்பிக் கையில் வைத்துக் கொண்டு நிலத்தில் விதையைத் தூவ வசதியாய் பயன்படுவது
4. அகணி, புறணி, குருத்தோலை கடகப் பெட்டி தானிய வகைகள் வைக்கவும், அவற்றை எடுத்துச் செல்லவும் பயன்படும் பெரிய பெட்டி
5. அகணி, புறணி, குருத்தோலை பலகாரப் பெட்டி அல்லது பணியாரப் பெட்டி அழகான வண்ணங்களுடன் செய்யப்பட்டது. விதைப் பெட்டிக்கும்  சற்று பெரியது. திருமணமான இணையர்களுக்கு வீட்டில் செய்யும் பலகாரங்களை போட்டுக் கொடுத்து அனுப்பும் பெட்டி
6. அகணி, புறணி, குருத்தோலை அஞ்சடுக்குப் பெட்டி ஒரு பெட்டிக்குள் ஐந்து பெட்டிகள் கொண்ட அடுக்குண்டு. தேவையான பொழுது பயன்படுத்திக் கொண்டு மற்ற வேளைகளில் ஒன்றுக்குள் ஒன்றாய் வைத்து, உயரமான இடத்தில் தொங்க விடுவது
7. அகணி, புறணி, குருத்தோலை அஞ்சறைப் பெட்டி மிளகு, சீரகம் போன்ற குழம்புக்குத் தேவையான பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து விடாமல் தனித்தனியாக இருப்பதற்காக 8” நீளம் 6” உயரம் கொண்ட நீண்ட சதுரப் பெட்டியில் வைக்கப் படுகிறது. இதில் ஐந்து தனித்தனி அறைகளுள்ளதால் அஞ்சறைப் பெட்டி என அழைக்கப் படுகிறது.
8. அகணி, புறணி, குருத்தோலை இறைக்கூடை இரண்டு பேர் எதிரெதிரே நின்று கொண்டும், நான்கு கயிறுகளைப் பிடித்துக் கொண்டும் நீர் இறைக்கப் பயன்படும் முக்கோணப் பெட்டி, வயலுக்கு நீர் பாய்ச்ச உதவுவது. சூசலம் மாவட்டம் மேச்சேரி அருகேயுள்ள தீராம்பட்டியில் இறைக்கூடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
9. அகணி, புறணி, குருத்தோலை சோற்றுப் பெட்டி 4” நீளம் 1 ½ ” உயரம் ஓலையால் பின்னி புறணியால் சுற்றி அகணியால் தைக்கப் பட்டது. சிறிய சமையல் பாத்திரங்களை இதனுள் வைத்துக் கட்டி நீண்ட தூரம் செல்லும் பொழுது மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்வர்.
10. அகணி, புறணி, குருத்தோலை துணிப் பெட்டி 1 ½’ x1 ½ ‘ x 2 ½’ x 18” அளவில் உள்ள பெட்டி.வட்ட வடிவமான வாய் அழகாய் வண்ண நார் கொண்டு தைக்கப் பட்டிருக்கும். பட்டுச் சேலைகளை வைத்துக் கொள்வார்
11. சோற்று நார் அகணி 1.கமலை வடம் நீர் இறைக்க உதவும்
2.தேர் வடம் விழாக்காலங்களில்  நூற்றுக் கணக்கான மக்கள் தேரை இழுக்கப் பயன்படுவது
3.யானை வடம் யானையைக் கட்டி வைக்கப் பயன்படும்
4.மாட்டுத் தும்பு மாட்டைத் தொழுவத்தில் கட்டி வைக்கப் பயன்படும்
5.நீர்க் கயிறு கிணற்றில் நீர் இறைக்கப் பயன்படுவது
6.சாரக் கயிறு கோயில் கட்டும் பொழுது உயரமான சாரம் கட்டவும், கனமான சட்டங்களைக் கட்டி இழுக்கவும் பயன்படும்
12. அகணி கட்டில், நாற்காலி உட்காரும்  நாற்காலியின் அடிப்பகுதி, படுக்கும் கட்டில் முதலிய பின்னப் பயன்படும்.

நார்ப் பகுதிக்குத் தேவைப்படும் கருவிகள்

  1. மட்டைக் கத்தி
  2. நார் இழைக்கும் கத்தி
  3. புறணி வெட்டும் அரிவாள்
  4. நார் நெசவு ஊசி
  5. கைத்தமர்க் கருவி
  6. சுத்தியல்
  7. பத்தக் கொறடு
  8. கைரம்பம்
  9. மடக்கு அடிக்குச்சு
  10. 1/2 “ உளி
  11. திருப்புளி
  12. சிறு விளக்கு
  13. மண்ணெண்ணெய், எரிவளி அடுப்பு 
  14. சாயம் காய்ச்சும் அலுமினியப் பாத்திரம்
  15. வாளி
  16. தச்சுக் கருவிகள்

நாரிலிருந்து பெறப்படும் நவீன பொருட்களும் அவை பயன்படும் விதமும் வியப்பானவை

1. படுப்பதற்கு கட்டில்
2. கழிவுகளைப் போட காகிதக் கூடை
3. மிதி வண்டியில் சாமான்களைக் கொண்டு செல்ல மிதிவண்டிக் கூடை
4. சாப்பாட்டுப் பாத்திரம் வைக்க சாப்பாட்டுக்கூடை
5.  பயணத்திற்குச் சாமான்கள் வைக்க பயணக் கூடை
6. துணிமணிகள் வைக்க சிறுபெட்டி
7. அலுவலகக் கோப்புகள் வைக்க தட்டு
8. ஊர்தி ஓட்டுநர் அமர ஓட்டுநர் இருக்கை
9. வழிபாட்டுக்குப் பூ கொண்ட போக பூக்கூடை
10. பூக்களைக் கொண்டு வீட்டை அலங்கரிக்க பூத்தொட்டி
11. புத்தகம் வைத்துச் செல்ல பள்ளிக் கூடை
12. மருந்து எடுத்துச்செல்ல மருத்துவர் கூடை
13. குழந்தைகள் உறங்க நார்த்தொட்டி
14. உட்காரும் நாற்காலி நாற்காலி
15. சொகுசு உலா செல்ல மடக்கு நாற்காலி
16. இதழ் வைக்க இதழ் தாங்கி
17. சாய்ந்து இளைப்பாற சாய்விருக்கை
18. கையில் கொண்டு செல்ல கைப்பை
19. பணம் வைக்க பணப்பை
20. அலுவலகத்திற்கு வைக்கும் மறைப்பு அலுவலகத்திரை

கட்டில் கட்டுதல்

கட்டில் ‘கண்பின்னல்’ என்ற வகை முடிச்சினால் பின்னப்படுகிறது.

தேவையான பொருட்கள்

  1. அகணி நார் 150 எண்ணம்
  2. 6’ x 3’ x 2’ 
  3. கத்தி மற்றும் பின்னல் ஊசி
  4. நீர், வாளி முதலியன.

செய்முறை

அகணி நாரை வார்த்துக் கொண்டு, முதலில் கட்டில் சட்டத்தில் நீண்ட பாவைக் கட்ட வேண்டும். அது முடிந்த பின்னர் சட்டத்தில் குறுக்குப் பாவு வைத்துக் கட்ட வேண்டும். இவ்விரண்டும் முடிந்த பின்னர் குறுக்குப் பின்னல் பின்னி முடிக்க வேண்டும். மொத்தம் இரண்டு பாவும், இரண்டு குறுக்குப் பின்னலும் கொண்டு முடிவதாகும். இம்முறையில் முடிக்கப் பட்ட கட்டில்கள் மிகவும் நீடித்த உழைப்புடையதாக இருக்கும். கட்டி முடிக்கப் பட்ட பொருட்களின் மீது மழை நீர் படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் மழை நீர் நாரின் இயற்கை நிறத்தை மாற்றும் தன்மையுடையது.

கழிவுக் காகிதக்கூடை

கழிவுக் காகிதக்கூடைக்குத் தேவையான அகணி நார், புறணி நார் முதலியவற்றை முதலில் எடுத்துக் கொண்டு, மரத்தினாலான சட்டத்தின் அடித்தட்டை(6”x6”) முதலில் புறணி வைத்துக் கட்ட வேண்டும். பின்னி முடித்தபின் அதை உயரமான (12”) காலுடன் இணைத்து அடித்தட்டிலிருந்து செங்குத்தான புறணிகளை ஆணி வைத்து வரிசைப் படி அடித்து (12”x12”)  மேல்பகுதி அளவு நோக்கிப் பின்னி வர வேண்டும். கூடையின் கழிவுப் புறணிகளை சீராக வெட்டி விட்டு விளிம்பு வைத்து அடித்தபின் கூடையை முடிக்க வேண்டும். இந்தக் கூடைகள் பெரும்பாலும் அலுவலகங்களிலும் கடைகளிலும் வீடுகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.

மிதி வண்டிக் கூடை

மிதி வண்டிக் கூடைக்குத் தேவையான அகணி நார், புறணி நார் முதலியவற்றை முதலில் எடுத்துக் கொண்டு, மரத்தினாலான சட்டத்தின் அடித்தட்டை முதலில் புறணி வைத்துக் கட்டி முடிக்க வேண்டும். அதன் பிறகு உயரமான கால்களுடன் மேல் சட்டங்களுடன் இணைத்து அடித்தட்டிலிருந்து செங்குத்தான உயரத்திற்கு நான்கு புறமும் புறணி வைத்து வரிசைப்படிச் சம அளவில் அடித்து அகணி நார் பின்னி வர வேண்டும். கூடை முடிவடைந்தவுடன் புறணி,  அகணி முதலியவற்றை வெட்டிச் சீராகச் சரி செய்தபின் அதிலிருக்கும் சல்லித் தும்புகளை சிறு விசிறி விளக்கின் உதவியால் சுத்தம் செய்ய வேண்டும். இக்கூடை பெரும்பாலும் மிதிவண்டியின் முன்புறத்திலும் பின் பகுதிப் பக்கவாட்டிலும் கட்டப்பட்டு அதில் தேவையான சாமான்கள் எளிதில் எடுத்து வர பயன்படுத்துகின்றனர். மேற்கூறிய மிதி வண்டிக் கூடைகள் பல வடிவங்களில்(சதுரமான வடிவம், நீண்ட சதுர வடிவம், அரை வட்ட வடிவம், நீண்ட சதுரங்களுடைய  அரை வட்ட வடிவம்) செய்து விற்கப் படுகின்றன.

சாப்பாட்டுக்கூடைகள்

அளவாய் வெட்டி எடுக்கப்பட்ட புறணி நாரினால் கூடையின் அடித்தட்டைப் பின்னிக் கொண்டு  அதன் மேல் செங்குத்தான கால்களுடன் கூடிய மேற்பகுதியைப் பொருத்த வேண்டும். பின்னர் கூடையை மேலிருந்து கீழாகவோ, அல்லது கீழிருந்து மேலாகவோ செங்குத்தாகப் புறணிகளைக் குறிப்பிட்ட அளவில் சீராக அடித்துப்பின்ன ஆரம்பிக்க வேண்டும். பின்னி முடித்த பிறகு நீட்டிக் கொண்டுள்ள அகணி, புறணி நார்களை சீராக வெட்டி எடுத்துச் சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின் மேல், கீழ் இரண்டு பகுதிகளுக்கும் விளிம்பு அடிக்க வேண்டும். கூடையிலுள்ள சிறிய சல்லித் தும்புகளை சிறு விசிறி விளக்கு மூலம் நீக்கி விட்டு கூடைக்கு சாயம் பூச வேண்டும். கடைசிக் கட்டமாக அதற்குப் போடப்பட்டுள்ள வடிவமைப்புகளில் சாயக் கலவையைப் பூசி அழகு செய்ய வேண்டும். பிறகு கூடைக்கு தோல் கைப்பிடி இணைப்பதுடன் வேலை முடிவடைந்து விடுகிறது. சோற்றுக் கூடைகள்  பெரும்பாலும் சாப்பாட்டுப் பாத்திரங்களை எடுத்துச் செல்லப் பயன்படுகின்றன.

பயணக்கூடை

பயணம் செய்வதற்கு வேண்டிய சாமான்களை எடுத்துச் செல்ல பயன்படும் கூடைக்கு பயணக்கூடை(Tour Basket) என்று பெயர். இதற்குத் தேவையான மரத்தினாலான சட்டம் ஒன்றைத் தயார் செய்து வைத்து  கொண்டபின் அதற்கான அகணி, புறணி முதலியவற்றைத் தேவையான அளவில் செய்து கொண்டு, சட்டத்தின் அடிப்பகுதியை முதலில் பின்னி முடிக்க வேண்டும். அதன் பின்  அடிப்பகுதியிலிருந்து சீராகச் சம அளவில் புறணிகளை ஆணி வைத்து அடித்தோ, அல்லது நார் வைத்துக் கட்டியோ கீழிருந்து மேல் நோக்கிப் பின்னி வர வேண்டும். பின்னி முடித்த பிறகு,  அதற்குரிய இரண்டு மேல் பகுதிகளிலும் இரண்டு பகுதிகளைத் தனித் தனியாகப் பின்னி அவற்றைக் கூடையுடன் கீல் வைத்துப் பொருத்த வேண்டும். தாழ்ப்பாளும் அவ்வாறே செய்தபின்,  கூடைக்கு மேல் பகுதியின் அதிகப் படியான உயரத்திலிருந்து “ப” வடிவத்தினாலான கைப்பிடியை மட்டையினால் தயார் செய்து அத்துடன் கெட்டியான கம்பியையும் இணைத்துக் கூடையுடன் இணைக்க வேண்டும். இவ்வேலைகள் யாவும் முடிந்தபின் கூடைக்குத் தகுந்தாற்போல் சாயம் பூசி அலங்கரிக்க  வேண்டும். இத்துடன் கூடை முடிந்து விடும்.

பயணக்கூடையின் தயாரிப்பு

  1. மரச் சட்டம்          1”x 10” x 10”
                                  -----------------
                                 14”x 14” x 12”
  2. அகணி எண்ணம்
  3. புறணி
  4. ஆணி
  5. தாழ்ப்பாள்
  6. கீழ் தாழ்ப்பாள்
  7. சாயம்

சிறு பெட்டி உற்பத்தி

  1. மரச் சட்டம்         
  2. நார்
  3. ஆணிகள்
  4. கொக்கிகள்

சிறுபெட்டி செய்வதற்கு மரத்தினால் ஆன சட்டத்தைத் தயார் செய்து வைத்துக் கொண்டு, அகணியையும், புறணியையும் வார்த்து வைத்துக் கொண்டு பெட்டியின் கால்களுடன் கூடிய மேல் சட்டத்தைப் பொருத்த வேண்டும். சீராகப் பெறப்பட்ட புறணி நாரை பெட்டியின் செங்குத்தான கால்களுக்கு இணையாக வரிசையுடன் சமஅளவில் வைத்து அடிக்க வேண்டும். அதன்பின் அகணி நாரால் பின்னி முடிக்க வேண்டும். அதன்பின், பெட்டியின் மேல் முடியையும் முந்திய முறைப்படியே புறணி அடித்து, அகணி நாரால் பின்னி முடிக்க வேண்டும். பின்னி முடிக்கப்பட்ட முடியையும், நடுப்பகுதியையும், கீழ் தாழ்ப்பாள் முதலியவற்றுடன் கைப்பிடியையும் இணைத்து திருகாணி வைத்து பொருத்த வேண்டும். எல்லா வேலைகளும் முடிந்தபின் சிறுவிளக்கினால் சிறியதும்புகள், நார்கள் அனைத்தையும் சுத்தம்செய்து சாயம் பூச வேண்டும். முற்றுப்பெற்ற பெட்டி பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

பனைநாரும் பிரம்பும்

பனை நாரில் பெறப்படும் சாமான்கள் பிரம்பினால் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதில் பிரம்பு என்ற மூலப்பொருள் கிடைப்பது அரிது. அதே வேளையில், நார் எளிதில் கிடைக்கிறது. விலையும் மலிவு. நாரினால் செய்த சாமான்கள் பிரம்பினால் செய்யப்படும் சாமான்களின் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலையில் கிடைக்கும்.

மூங்கில் கூடையில் அகணிக் கட்டு
மூங்கில் கூடை எளிதில் பிரிந்து விடும். எனவே இந்தக் கூடையைப் பலப்படுத்தச் சுற்றிலும் 6” இடை விட்டு 3” அகலமுள்ள நாரை சாயம் பூசி, மேல் விளிம்பிலிருந்து அடிவரை முடைவார்கள். பார்ப்தற்கு மிகவும் அழகாக இருக்கும்.

Source: Dr.V.Ponnuswami, PhD, PDF (Taiwan), Former Dean & Professor (Horticulture), Horticultural College & Research Institute, Tamil Nadu Agricultural University, Coimbatore

e-mail:swamyvp200259@gmail.com
Website:www.swamyhortiiech.com

 

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021