Horticulture
||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: பனை

பயிர் மேம்பாடு

பதநீர் விளைச்சல், ஈனும் போது பனையின் உயரம், மலர்கள் உருவாக எடுத்துக் கொள்ளும் காலம், பருவமல்லாக் காலங்களில் பூக்கும் திறன், சாறில் சர்க்கரையின் அளவு போன்றவை முதன்மையான பொருளியல் காரணிகளாகக் கருதப்படுகின்றன. பதநீர் மற்றும் பழங்களில் விளைச்சலைத் தவிர பழங்களின் பல்வேறு பண்புகளிலும் வேறுபாடுகள் உணரப்பட்டுள்ளன. நுங்கு, பழம் மற்றும் கிழங்கு விளைச்சல் அதிகமாகக் கிடைக்கும் வகைகளை பழத்தின் எடை, பழச்சதையின் எடை, பழம் ஒன்றுக்கு கொட்டையின் எடை மற்றும் பனங்கொட்டையின் எடை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். பழங்களின் பண்புகள் தவிர நாற்று உயரம், கிழங்கின் நீளம், ஓலையின் நீளம், ஓலைகளின் எண்ணிக்கை போன்றவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உணரப்பட்டுள்ளன.

ஏ.பி.04

கல்லாமொழி பிள்ளை மடம்

திசையன் விளை

பதநீர் விளைச்சல், பதநீரில் காணப்படும் சர்க்கரையின் அளவு போன்றவற்றை மரபுப் பண்புகளைப் பொருத்து அமைகிறது. அதிக பழம் மற்றும் பதநீர் விளைச்சலை இலக்காகக் கொண்டு பனை வகைகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.பதநீர் விளைச்சலை அடிப்படையாக வைத்து பனை வகைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குறியீடு பதநீர் விளைச்சல் வகைபாடு
O இல்லை உலர்
A நூறு லிட்டர் வரை வறுமை
B 100-200 லிட்டர் குறைவு
C 200-300 லிட்டர் நடுத்தரம்
D 300 லிட்டருக்கு மேல் நன்று

 பனையின் உயரத்தை வைத்து பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வகைபாடு உயரம் (மீட்டர்)
குட்டை 0.4
ஓரளவு குட்டை 4-8
நடுத்தரம் 8-12
உயரம் 12-16

           
பதநீரில் இருந்து பெறப்படம் பனைவெல்ல விழுக்காட்டை வைத்து பனைவகைகள் பின்வருமாறு வகைபடுத்தப்பட்டுள்ளன.

வகைபாடு பதநீரில் இருந்து பெறப்படும் வெல்ல விழுக்காடு
சராசரி 15.0
நன்று 15.0-18.0
மிகநன்று 18.0 க்கு

வகைகள்
முன்பு திருவில்லிபுத்தூரில் இயங்கி வந்த பனை ஆராய்ய்சி நிலையத்தில் இருந்து எஸ்.வி.வி.ஆர்.1. என்னும் வகை 1992 ஆம்ஆண்டு வெளியிடப்பட்டது. இவ்வகை ஆண்டொன்றுக்கு பனையொன்றுக்கு 140-150 பழங்களையும் 95 நாட்களில் 298 லிட்டர் பதநீரையும் அளிக்கவல்லது. இந்த வகை 7.55 மீட்டர் உயரமும்1.42 மீ தடிமனும் குலையொன்றுக்கு 14 பழங்கள் மற்றும் பனையொன்றுக்கு 140 பழங்கள் அளிக்கும் திறனும் கொண்டது. ஓரளவு குட்டையாக வளரும் தன்மை கொண்டது. இந்த வகையிலிருந்து பெறப்படும் பதநீரிலிருந்து அதிக அளவு வெல்லம் தயாரிக்கலாம். ஒரு லிட்டர் பதநீரில் 144 கிராம் வரை வெல்லம் பெற முடியும்.

குட்டைப்பனை
விரைவில் ஈனும் அதிக பதநீர் தரும் குட்டைப் பனை வகைகளே விரும்பத் தக்கவையாகும். பனையின் அதிக உயரம் பனை ஏறும் தொழிலாளர்களுக்கு இடையூறுகளை உண்டாக்குதல் குட்டைப் பனைவகைகளை கண்டறிவது இன்றியமையாததாகிறது.

இந்திய அரசின் உயிர்த்தொழில் நுட்பத்துறை நிதியுதவியோடு நாடெங்கும் காணப்படும் குட்டைப் பனை வகைகளைக் கண்டறியும் கள ஆய்வு கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரியில் போராசிரியர்.வி.பொன்னுசாமி குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் பொழுது பல குட்டைப் பனை வகைகள் கண்டறியப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்திலும் பதநீர் சுரக்கும் மார்ச்-ஜ%ன்-ஜ%லை மாதங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பரவலாக பனை காணப்படும் ஐந்து மாநிலங்களில் 10 தொகுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 281 வகைள் சேகரிக்கப்பட்டன. இவற்றில் 48 வகைகள் அதிக பதநீர் தரவல்லவை என கண்டறியப்பட்டன. புதுச்சேரியில் கண்டறியப்பட்ட BFPU 24 என்னும் வகை அதிக அளவாக ஆண்டொன்றுக்கு பனை ஒன்றுக்கு 540.50 லிட்டர்  பதநீரும் அதைத் தொடா்ந்து இராமநாதபுரம் மாவட்டம் பிள்ளைமடம் பகுதியில் காண்படும் TNPM 08 என்னும் வகை 530.20 லிட்டர் பதநீரும் அளிக்க வல்லவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் கண்டறியப்பட்ட TNPO 02 வகையும் ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள நம்பியூரில் காணப்பட்ட BFNAM 01 வகையும் குறைந்த அளவாக 450 செ.மீ உயரமும் அதைத் தொடர்ந்து TNPO 01 வகையும் குட்டையாகக் காணப்பட்டன. புதுச்சேரியில் கண்டறியப்பட்ட BFPU 24, பிள்ளைமடத்தில் காணப்பட்ட TNPM08 மற்றும் பொள்ளாச்சியில் கண்டறியப்பட்ட TNPO 08 ஆகிய வகைகள் அதிக பதநீர் தரவல்லவையாகும். பனையின் பல்வேறு வகைகளில் காணப்பட்ட வேற்றுமைகளை கள ஆய்வுகள் தெளிவாக உணர்த்தின.

அயல் மகரந்தச் சேர்க்கையின் மூலம் பனையில் கருவுறுதல் நிகழ்வதால் விதை வழிப் பெருக்கம் மூலம் தாயையொத்த கன்றுகளை பெற முடிவதில்லை. இது தவிர வழிப்பெருக்கம் மேற்கொள்ளப்படும் பொழுது 50 விழுக்காடு நாற்றுக்கள் ஆண் பாலாகவும் எஞ்சிய 50 விழுக்காடு நாற்றுகள் பெண் பாலாகவும் இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு பெண் குட்டைப் பனை வகைகைளை திசு வளர்ப்பு மூலம் உருவாக்கும் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் உருவாக்கப்படும் திசு வளர்ப்பு கன்றுகள் மூலம் விரைவில் ஈனும் அதிக பதநீர் தரும் பெண் குட்டைப் பனை வகைகளை உழவர்களுக்கு அளிக்க இயலும்.

ஆராய்ச்சியில் ஈடுபட்ட நிறுவனங்கள்
எட்டாவது திட்ட காலத்தில் தென்னை, எண்ணெய்ப் பனை ஆகியவற்றோடு பனை அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தில் சேர்க்கப்பட்டு பனை மரபணு வங்கி பராமரிக்கப்பட்டு வருகிறது.

  • வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிள்ளிகுளம், வல்லநாடு – 628 252, தூத்துக்குடி மாவட்டம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளாக (1995-2004) 8 பனை வகைகளை ஆராய்ந்ததில் பி.எப்.34 என்னும் வகையில் (பெண் பனை) சராசரியாக 179.6 லிட்டர் /  பருவம் / பனை பதநீரும் அதிக அளவாக 287.85 லிட்டர் / பருவம் / பனை பதநீரும் இதையடுத்து பி.எப் 36 என்னும் வகை (ஆண் பனை) அதிக அளவாக 237.7 லிட்டர் பதநீரையும் சராசரியாக 113.8 லிட்டர் பதநீரையும் அளிக்கும் எனக் கண்டறியப்பட்டது.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட 131 வகைகள் கிள்ளிகுளம் வோளண்மைக் கல்லூரியில் 1989 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் நடப்பட்டுள்ளன. கடந்த 1994 ஆம் ஆண்டில் 133 வகைகைள் தூத்துக்குடி மாவட்டத்தில் சேகரிக்கப்பட்டு நடவு செய்யப்பட்டன. தூத்துக்குடி இராமநாதபுரம் மற்றும் விருது நகர் மாவட்டங்களில் 1995 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் அதிக எண்ணிக்கையிலான பழங்கள் மற்றும் குலைகளை அளிக்கும் 42 தாய்ப்பனைகள் இனம் காணப்பட்டுள்ளன. 42 தாய் பனைகளில் 29 வகைகளில் பழங்களின் பண்புகள் ஆராயப்பட்டன. பழம் ஒன்றின் எடை 546-2026 கிராம் ஆகவும் சராசரி எடை 1241.30 கிராம் ஆகவும் காணப்பட்டது. பழங்களின் சராசரி நீளம் 12.8 செ.மீ ஆகவும் வேறுபாடு 902-16.8 செ.மீ ஆகவும் காணப்பட்டது. பழங்களின் தடிமன் 31.4-48.0 செ.மீ ஆகவும் சராசரி தடிமன் 39.6 செ.மீ ஆகவும் காணப்பட்டது. பழச்சதையின் எடை 190-990 கிராம் ஆகவும் சராசரி எடை 494.80 கிராம் ஆகவும் காணப்பட்டது. பனங்கொட்டையின் எடை 90.0-293.3 கிராம் ஆகவும் சராசரி எடை 193.9 கிராம் ஆகவும் இருந்தது. பனங்கொட்டைகளின் நீளம் 6.3-12.6 செ.மீ ஆகவும் சராசரியாக 8.8 செ.மீ நீளம் கொண்டவையாகவும் 14.6-23.0 செ.மீ தடிமனும் சராசரியாக 19.1 செ.மீ தடிமன் உடையவையாகவும் காணப்பட்டன. பனங்கொட்டையின் சராசரி கன அளவு 154.2 கன செ.மீ ஆகவும் வேறுபாடு 80-250 கன செ.மீ ஆகவும் இருந்தன.

பழப்பண்புகள் குறித்த மரபியல் ஆய்வுகளை மேற்கொண்டதில் பல்வேறு வகைகைளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கண்டறியப்பட்டன. நுங்கு, கிழங்கு மற்றும் சீம்பு போன்றவை அதிகம் பெற பழங்களின் எடை தோலுடன் கூடிய பழத்தின் எடை, பனங்கொட்டையின் எடை போன்றவை முதன்மைக் காரணிகளாக அமையும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித்திட்டம் (பனை), வேளாண்மை ஆராயச்சி நிலையம், பாண்டரி மாமுடி, கோதாவரி (கிழக்கு) மாவட்டம், ஆந்திர பிரதேசம்.
  • இந்திய அரசின் உயிரியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தேசிய உயிரியல் வளங்கள் வாரிய நிதியுதவியோடு கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரியில் பேராசிரியர் வி.பொன்னுசாமி குழுவினரால் பனை குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கள ஆய்வில் சேகரிக்கப்பட்ட சுமார் 200 வகைகள் கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

Source:Dr.V.Ponnuswami, PhD, PDF (Taiwan), Former Dean & Professor (Horticulture), Horticultural College & Research Institute, Tamil Nadu Agricultural University, Coimbatore

e-mail:swamyvp200259@gmail.com
Website:www.swamyhortiiech.com

 
 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021