Horticulture
||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: பனை
 

தாவரவியல்

பனை ஒரு பல்லாண்டுப் பயிர். மெதுவாக வளரும்இயல்பைக் கொண்டுள்ள பனைகளில் ஆண் மற்றும் பெண் பாலினங்கள் தனித்தனியே காணப்படுவதாலும் காய்ப்பதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதாலும் பனை பயிரிடும் ஆர்வம் மக்களிடையே குறைந்து வருகிறது.  நாற்று நிலையிலேயே பாலினத்தைக் கண்டறியும் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் நிலையில் உரிய விகிதத்தில் ஆண், பெண் பனைகளை நடவு செய்து பலன் காண முடியும். நியூக்ளிக் அமிலத்தை அடிப்படையாகக் கொண்ட மூலக்கூறு குறிப்பான்களைக் கொண்டு பாலினத்தைக் கண்டறியும் ஆய்வுகள் பேராசிரியர் வி.பொன்னுசாமி குழுவினரால் கேயாம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பனையில் ஆண், பெண் பனைகள் தனித்தனியே காணப்பட்டாலும் இரண்டுமே பொருளியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன.

பெண் பனை ஆண் பனை கிளை பனை ஆண் பாளை
பெண் பாளை பனங்குலை நுங்கு பனம் பழம்
வேர்:
பனை ஒன்றை வித்திலையினத்தைச் சேர்ந்தது. ஆணி வேர் இல்லாததால் படியால் சல்லி வேர்கள் மிகவும் உறுதியாக, வெகுதூரம் பரவி உணவு சேகரிக்கும் வண்ணம் அமைந்திருக்கும். நீர் இல்லாத தேரிகளிலும், வெப்பம் அதிகம் உள்ள இடங்களிலும் உணவு சேகரிக்க வேண்டியிருப்பதால் பனை வேர்கள் வியக்கத் தக்கவாறு அமைந்துள்ளன.

  • வேரின் வெளிப்புறத்தில் உறுதியான கருப்பு ஓடு போன்ற அமைப்பு உள்ளது. தரையில் உள்ள வெப்பம் வேரைத் தாக்கி விடாமல் இந்த அமைப்பு காப்பாற்றுகிறது. இதை கரையானோ, மற்ற பூச்சிகளோ அரிப்பதில்லை.

  • கருப்பு ஓட்டிற்கு அடுத்த பகுதி பஞ்சு போல் மெத்தையாக அமைந்திருக்கும்.

  • அதற்கடுத்தாற் போல் நடுவில் உணவைச் சேகரிக்கும் தண்டுப்பகுதி உள்ளது. அதில் தாமரைத் தண்டுகளில் உள்ளது போன்ற நுண்ணிய துளைகள் இருக்கின்றன.

  • சல்லி வேர்கள் நெடுந்தூரம் பரவி சேகரித்த நீரைத் தரையில் உள்ள வெப்பம் உறிஞ்சி விடாதபடி பஞ்சு போன்ற பகுதியும், ஓடு போன்ற பகுதியும் பாதுகாக்கின்றன.

  • சல்லி வேர்த் தொகுப்புடன் காணப்படும் தண்டின் அடிப்புறத்தின் கணுவிடைப் பகுதிகளில் வேர்கள் உருவாகும். தண்டு பெருக்கமடையும் பொழுது தொடர்ச்சியாக புது வேர்கள் உருவாகும். வயதான பனைகளின் அடிப்பகுதியில் தண்டைச்சுற்றி சல்லி வேர்கள் காணப்படும். தென்னை வளர்ச்சி ஊக்கியை வேர்வழி செலுத்தி ஆய்வு மேற்கொண்டதில் தரையில் காணப்படும் வயதான வேர்களை காட்டிலும் 90 செ.மீ ஆழத்தில் காணப்படும் இளம் வேர்கள் விரைவாக உறிஞ்சியதைக் கண்டறிய முடிந்தது. பத்து ஆண்டுகளுக்கும் குறைவான வயது கொண்ட பனைகள் வளர்ச்சி ஊக்கியை உறிஞ்ச 24 மணி நேரத்திற்கும் மேல் தேவைப்படும் எனவும் வயதான பனைகள் 5-6 மணி நேரத்தில் வளா்ச்சி ஊக்கியை உறிஞ்சும் எனவும் கண்டறியப்பட்டது.

தண்டு
நிமிர்ந்து நிற்கும் தன்மையும் உறுதியான மையத் தண்டும் இதன் தனிச்சிறப்பு. உயரமான கிளைகளற்ற ஒற்றைத் தண்டினைக் கொண்ட பனையின் அடிப்பகுதி ஒரு மீட்டர் விட்டம் கொண்டதாகவும் 4 மீட்டர் உயரத்திற்கு மேல் 40-50 செ.மீ விட்டம் கொண்டதாகவும் உருளை வடிவிலும் காணப்படும். 25-40மீ உயரம் வரை வளரும்பனை ஆண்டொன்றுக்கு சராசரியாக 3 செ.மீ உயரம் வளரும். கிளைகள் மிகவும் அரிதாகக் காணப்படும். ஆண்டுதோறும் பூப்பதற்கு ஏதுவாக மையத்தண்டில் சிறிதளவு சத்து சேமித்து வைக்கப்படுகிறது. பெண்பனைகளின் தண்டு ஆண்பனைகளைக் காட்டிலும் வலுவானதாகக் காணப்படுகிறது. பனையின் அடிப்பகுதியில் உள்ள வைரத்தின் கனம்  சற்று குறைந்து கொண்டே நுனிவரை செல்லும். வைரத்தின் கனம் 6 அங்குலம் முதல் 9 அங்குலம் வரைதான் இருக்கும். வைரம் இரும்பு போன்ற உறுதியுடையது. வைரத்தில் இரும்புக் கம்பி போன்ற சிலாம்பு பின்னியிருக்கும். இதற்கு ஆல் என்று பெயர்.

மற்ற மரங்களுக்கும் பனைக்கும் வேறுபாடு உண்டு. மற்ற மரங்களில் வைரம் நடுவில் இருக்கும். இதற்கு பனையில் மேல்பகுதியில் இருக்கும். எனவே நடுவில் மெல்லிய சோற்றுப்பாகமும், வெளியில் உறுதியான வைரமும் உண்டு.

பனை மட்டை
பனை ஆண்டில் 12 மட்டைகள் விடும். மட்டை என்பது பனையின் கொண்டையைப் பிடித்துள்ள மடல், மட்டை, ஓலை உள்ளிட்ட பனையின் பகுதி. ஒவ்வொரு மாதமும் ஒரு குருத்து தோன்றும். குருத்து முற்றி சாரோலையாக மாறி மட்டையாக மடிந்து வளரும்.

பன்னாடை
கம்பி வலைபோன்று, மெல்லிய தும்புகளால் ஆன 1 முதல் 1 ½  அங்குலம் நீளமும்  ½ அடி அங்குலமள்ள சல்லடைத் துணி போன்றது பன்னாடை. ஒவ்வொரு பத்தலும், மரத்தின் கொண்டையிலிருந்து வெளிவரும் பொழுது, பன்னாடை பத்தலுக்கு நடுவில் முளைத்து வெளிவருகிறது. பன்னாடை உறுதியாகத் துணி போன்று மரத்தின் கொண்டையில் ஒவ்வொரு இளம் பத்தலுக்கும் இடையில் இருக்கிறது.

  • பத்தல் பனையிலிருந்து வெளிவரும் பொழுது, மெல்லியதாகவும், வெண்மையாகவும் இருக்கிறது. பனையின் புறப்பகுதியில் இருக்கும் மெல்லிய பத்தல் வெப்பத்தால் பாதிக்கப்படலாம். அவ்வாறு வெப்பத்தால் பத்தல் தாக்கப்படாமல் வளர துணி போன்ற பன்னாடை மூடிக்கொள்கிறது. மெல்லிய குருத்தும் இவ்வாறு பாதுகாக்கப்படுகிறது.

  • ஓலை அசைவதால், அடியில் உள்ள பத்தல்கள் அசைவுறும். அப்பொழுது இளம் குருத்து அசையாமல் இந்தப் பன்னாடை இறுகப்பிடித்துக் கொள்கிறது.

  • பத்தல் வலுவடைந்து ஓலைகளைக் களையும் பொழுது பன்னாடையும் வலுவடைந்து எளிதாக வெளியேற்றப்படுகிறது.

  • ஒவ்வொரு பத்தலுக்கும் இடையில் பன்னாடை வளர்வதால்தான் ஓலைகள் காற்றில் எவ்வளவு அசைந்தாலும் அடியில் பன்னாடை ஓலைகளையும் கொண்டையையும் சேர்த்து இறுகப் பிடிக்க உதவுகிறது. புயலடித்தால் பனையின் ஓலைகள் விழுவதில்லை.

மடல்
பனையுடன் பிடித்துக் கொண்டிருக்கும் கவட்டையான பகுதிக்கு மடல் (Sheath) என்று பெயர். இந்த பகுதியிலிருந்துதான் தும்பு கிடைக்கிறது. தும்பு சேகரிக்கப்படாமல் காய்ந்து போன மடலுக்குக் ‘குரங்குமட்டை’ என்று பெயர். இந்த மடல் பனையின் கொண்டையைப் படித்துக் கொள்கிறது.
(அ) உரியா மட்டை – ஓலைக்கும் மடலுக்கும் இடையில் உள்ள நீண்ட மட்டையில் அகணி நாரையும் புறணி நாரையும் பிரித்து எடுக்காமல் இருந்தால் அதற்கு உரியா மட்டை என்று பெயர்.
(ஆ) கறுக்கு – உரியாமட்டையின் இரு ஓரங்களிலும் ரம்பத்திலுள்ளது போல பல் பல்லாகக் காணப்படும் பகுதிக்கு கறுக்கு (0.9 முதல் 1.5மீ நீளம்) என்று பெயர். இது மிகவும் கருமையாக இருக்கும். நாற்று நிலையில் வளர்ச்சி விரைவாகவும் முதிர்ச்சி நிலையில் குறைவாகவும் காணப்படும்.

ஓலை
இளம் கன்றுகளின் ஓலையை வடலி ஓலை என்று கூறுவர். இதை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று குருத்தோலை, மற்றொன்று சாரோலை. குருத்தோலை முற்றினால் சாரோலையாகும். குருத்தோலை ஒவ்வொரு மாதமும் பனையின் உச்சியில் வெண்மையாகத் தோன்றி வெளிவரும். அதிலுள்ள ஏடுகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து குவிந்து கூரியவாளை ஒத்திருக்கும். இந்த குருத்தோலை வளர்ந்து, வெளிவந்து விரிந்து, அகலமாய் தொங்க ஆரம்பிக்கும். இந்த ஓலை மட்டையின் ஒரு நுனியில் கையிலுள்ள விரல்களைப் போன்று அமைந்திருக்கும். இளம் வடலிகளில் குருத்தோலையை வெட்டக் கூடாது. வெண்மையாக உள்ள குருத்தோலை, நிறம் மாறி உறுதியடைந்து பரந்து தொங்கும்பொழுது, “சாரோலை” என பெயர் பெறுகிறது.

நன்கு வளர்ச்சியடைந்த பனைகளில் 30-40 ஓலைகள் காணப்படும். பனையின் கொண்டை விட்டம் 1-1.5மீ ஆகும். ஓலைகள் கூட்டிலைகளாகக் காணப்படும். இளம் பனைகளைச் சுற்றி ஓலையடிகள் பதிந்திருக்கும். முதிர்ந்த பனைகளின் காய்ந்த ஓலைகளும் தண்டைச் சுற்றி காணப்படும். ஓலைகள் விரல் வடிவில் 1-1.5மீ விட்டத்துடன் காணப்படும். ஓலைகள் அகன்றவையாகவும் 1.0 முதல் 1.5மீ நீளம் கொண்டவையாக 60-80 பிரிவுகள் கொண்டவையாகவும் ஒவ்வொன்றும் 3 செ.மீ அகலத்துடனும் காணப்படும். ஓலைகள் கீழ்நோக்கி மடிப்பு கொண்டவையாக இருக்கும். மாதம் ஒன்றுக்கு ஒரு ஓலை உருவாகும். ஓலை உருவானதிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை பனையுடன் இருக்கும். ஓலைகள் தோன்றியதிலிருந்து விரிவடைவதற்கு 31 (முதிர்ச்சி நிலை) முதல் 58 நாட்கள் (இளம் நிலை) தேவைப்படும். பனையின் வயது அதிகரிக்கும் பொழுது ஓலைகள் விரிவடைய எடுத்துக் கொள்ளும் காலம் குறையும்.

நாற்று நிலையில் விரைவான வளாச்சியை அடைய அதிக நாட்கள் தேவைப்படும். இதைத் தொடர்ந்து ஆரம்ப கட்ட இளநிலை, இளநிலை மற்றும் முதிர்ச்சி நிலைகளில் ஓலைகள் வளர்ச்சியடைய அதிக நாட்கள் தேவைப்படும். பல்வேறு வளர்ச்சி நிலைகளை ஒப்பிடுகையில் முதிர்ச்சி நிலையில் ஓலைகளின் வளர்ச்சி அதிகமாகக் காணப்படும்.

பனையின் உயரம் 2 மீட்டர் ஆக இருக்கும் பொழுது ஓரிரு ஓலைகளை நீக்கலாம். நன்கு முதிர்ச்சியடைந்த பனையில் 16-22 ஓலைகளை விட்டு விட்டு அதாவது 50 விழுக்காடு ஓலைகளை நீக்கலாம். அனைத்து ஓலைகளையும் அகற்றி விட்டு நுனி ஓலையோடு வைத்திருப்பது பனையை வெகுவாகப் பாதிக்கும்.  ஓலை முழுவதையும் வெட்டி விடுவதால் பனை தன் வளர்ச்சிக்குத்தக்க உணவை, ஓலையில் பச்சையம் மூலம் தயாரிக்க முடிவதில்லை. பனை குச்சிபோல் உயர்ந்து வளரும். தரையிலிருந்து சுமார் 12 அடிக்கு மேல் ஒரே சீராக பனை உருண்டு மேலே போகப் போகச் சிறிய உருண்டையாய் இருக்குமாயின் ஓலை வெட்டியபனை என்று பொருள். அதாவது ஆண்டுதோறும் ஓலை முழுவதையும் களைந்த விட்டபடியால் பனை திரட்சியாக வளரவில்லை எனவே வைரம் இருக்காது. இருந்தால் குறைவாய் இருக்கும்.

ஓலை மற்றும் ஓலையடிகளை கோடை காலத்தில் நீக்கக் கூடாது. பருவ மழை தொடங்கும் முன்பாகவோ அல்லது பதநீர் எடுப்பதற்கு முன்பாகவோ பழைய காய்ந்த ஓலைகளையும், ஓலையடிகளையும் அகற்ற வேண்டும். பனைகளைத் தூய்மைப் படுத்தும் பொழுது தண்டுகளில் எவ்வித காயமும் ஏற்படக்கூடாது.

ஓலைநீக்க அளவு (விழுக்காட்டில்) பதநீர் விளைச்சல் (லிட்டரில்) விளைச்சல் அதிகரிப்பு (விழுக்காட்டில்)
51.75 37.43 -
26.50 76.30 68.40


மஞ்சரி
பனை நடப்பட்ட 12-15 ஆம் ஆண்டுகளில் பூக்கத் தொடங்கும் பொழுது பாலினத்தைக் கண்டறியலாம். தமிழ்நாட்டில் பனைகள் பிப்ரவரி முதல் சூலை வரை பூக்கும். மஞ்சரிகள் பாளைகளாகக் காணப்படும். ஆண்டொன்றுக்கு பனையொன்று 5-8 பாளைகளை ஈனும். பாளைகள்  ஓலைகளை விட சிறியதாக இருக்கும். மஞ்சரியில் கிளைத்த பாளைகள் நார்த்தன்மையோடு காணப்படும். ஆண், பெண் பாளைகள் தனித்தனி பனைகளில் வெவ்வேறு வடிவங்களில் காணப்படும். அல்லியதழ்கள் உறுதியானவையாகக் காணப்படும். சதைப்பகுதி மெல்லியதாக் காணப்படும். பெண் மலர்கள் ஆண்மலர்களைக் காட்டிலும் நீளமாகக் காணப்படுகின்றன. ஆண் பாளைகள் 68 நாட்களிலும் பெண் பாளைகள் 11 நாட்களிலும் பூத்தல் நிலையை நிறைவு செய்யும். நான்கு வகையான வயது கொண்ட பனைகளில் பாளைகளின் எண்ணிக்கை குறித்து ஆராய்ந்ததில் பனையின் வயது கூடும் பொழுது பாளைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது கண்டறியப்பட்டது. ஒரு பாளை வெளிவந்த 10 நாட்கள் கழித்த அடுத்த பாளை ஆண் பனையிலும் 11 நாட்கள் கழித்து அடுத்த பாளை பெண் பனையிலும் தோன்றும் எனக் கண்டறியப்பட்டது. ஆராய்ச்சிகளில் இருந்து நாப்தலீன் அசிட்டிக் அமிலம் லிட்டருக்கு 25 மிலி கிராம் எனத் தெளிக்கும் பொழுது அதிக எண்ணிக்கையிலான பாளைகள் உருவாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்பாளை
ஆண்பாளைகள் 2 மீட்டர் நீளம் கொண்டவையாகவும், ஆண்பாளை ஒவ்வொன்றிலும் 5-10 கிளைகளுடனும் காணப்படும். ஒவ்வொரு கிளையும் உறையால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 2-3 மலர்கள் காணப்படும். கிளைகள் தடிமனாகவும் உருளையாகவும் 30-40 செ.மீ நீளம் கொண்டவையாகவும் 2.5-4.0 செ.மீ அகலமுடையதாகவும் இருக்கும். மஞ்சரியின் முதன்மை கிளைகள் சமமாகவும் நுனியில் இரண்டு அல்லது மூன்று கிளைகளோடும் அரிதாக நான்க கிளைகளோடும் சதைப்பற்று மிக்க மலர்களைக் கொண்டும் காணப்படும். அடியிலிருந்து நுனிவரை செல்லும் பொழுது மஞ்சரியைச் சுற்றிலும் பல்வேறு பூவடிச் செதில்கள் காணப்படும். மஞ்சரியில் மலர்கள் எதிரெதிர் கோணங்களில் அமைந்திருக்கும். ஒட்டு மொத்தமாக பாளை ஒன்றில் 2,00,000 முதல் 2,50,000 மலர்கள் காணப்படும். சிறு காம்பற்ற ஆண் மலர்கள் மிகவும் நெருக்கமாகக் காணப்படுவதோடு பூ உறைகளோடு மூடியும் காணப்படும். பூக்கள் மூன்று புல்லியிதழ்கள், மூன்று அல்லியிதழ்கள் ஆறு மகரந்தக் கம்பிகள் ஆகியவற்றுடன் காணப்படும். மகரந்தத்தூள்கள் பெரிதாகவும் காம்பற்றும், நீள் வட்ட வடிவத்துடனும் இரு அடுக்கு கொண்டவையாகவும் நீள வாக்கில் பிளவுபட்டும் காணப்படும்.

பெண்பாளை
பெண் பாளைகள் கிளைகள் அற்றவையாகவும் ஆண் பாளைகளைவிட பெரியதாகவும் காணப்படும். பெண் பாளையில் 2-4 கிளைகளும் ஒவ்வொரு கிளையும் உறையுடனும் காணப்படும். ஒவ்வொரு மஞ்சரியிலும் 30-75 பெண் பூக்கள் காணப்படும். பெண் பூக்கள் பெரியதாகவும் கோள வடிவமாகவும் ஆறு மடிப்பு கொண்ட மலரிதழ்களைக் கொண்டும் சதைப்பற்றுமிக்கதாகவும் காணப்படும். சூலகம் கோள வடிவத்துடனும் 3-4 அறைகள் கொண்டதாகவும் 3-4 சூல் முடிகளைக் கொண்டதாகவும் காம்பற்றதாகவும் காணப்படும். பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

பீலி
பனையில் பாளை (Spadix) முதலில் தோன்றும் பொழுது அதைச் சுற்றி தோல் போன்ற பகுதி மூடி வளருகிறது. இதற்குப் பீலி (Spathe Cover) என்று பெயர். பாளை பசுமையாய் வளரும் பொழுது, பூச்சிகள் அரித்து விடாமலும், இளம் பாளையை வெப்பம் தாக்காமலும் இப்பீலி பாதுகாக்கிறது. பாளையைச் சீவும் பொழுதுதான் இந்தப் பீலி துண்டித்து அப்புறப்படுத்தப்படுகிறது. இல்லாவிடில் கீழே விழும்வரை, பாளையின் அடிப்பகுதியில் பீலி ஒட்டிக் கொண்டேயிருக்கும். பாளையின் அடிப்பகுதி பலமிழந்து கீழே விழும் பொழுது இந்தப் பீலியும் கீழே விழுகிறது.

மயநிலை
X=8   அல்லது 9, n=18, வேற்று நான்கு மயநிலை ; ஆண், பெண் தனித்தனி பனைகள் பாலின விகிதம் 1:1 ஆண் பனைகள்   XY குரோமோசோம் இணையையும் பெண் பனைகள்  XX இணையையும் பெற்றுக் காணப்படும்.

மகரந்தச் சேர்க்கை
ஆண் பூக்களில் மலர் விரிதல் காலை 7.00 முதல் 8.00 மணியளவில் தொடங்கி காலை 9.00 -10.00 மணியளவில் அதிகரித்து நண்பகல் 1.00 -2.00 மணியளவில் நிறைவடையும். இதன் பிறகு மலர்கள் விரிவது நின்றுவிடும். அரிதாக ஒன்றுக்கும் மேற்பட்ட மலர்கள் ஒரே வேளையில் விரியும். மலர்கள் விரியும் பொழுது மகரந்தத் தூள் கொட்டும். மலர்கள் விரிவடைந்த ஒரு நாள் கழித்து நூறு விழுக்காடு மகரந்தத் தூள் ஏற்புத் திறன் நிகழும். இதன் பிறகு மகரந்தத்தூள் ஏற்பு படிப்படியாகக் குறைந்து மூன்று நாட்கள் கழித்து 2 விழுக்காடாகக் குறைந்து காணப்படும். மகரந்தத்தூளின் வயது அதிகமாகும் பொழுது மகரந்தத்தூள் ஏற்பு குறையும். பொதுவாக வீரியத்தன்மை 88.6 விழுக்காடாகவும் மலட்டுத்தன்மை 11.4 விழுக்காடாகவும் காணப்படும். கோளம் மற்ம் நீள்வட்ட வடிவில் மகரந்தத் தூள் காணப்படும். தேனீக்கள், குளவிகள், வண்டுகள் போன்ற பூச்சியினங்கள் மூலமாகவும் காற்றின் மூலமாகவும் பனையில் அயல் மகரந்தச் சோக்கை நிலவுவதால் ஆண் பனைகள் போதுமான எண்ணிக்கையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பழம்
மகரந்தச் சேர்க்கை நிகழ்ந்த 120-130 நாட்களில் கருவுற்ற பெண் மலர்களிலிருந்து கனிகள் வளாச்சியடைந்து முதிர்ந்த பழமாகும். பழங்கள் கோள வடிவிலும் அடிப்பகுதி தட்டையானதாகவும் 15-20 செ.மீ விட்டத்துடனும் 1.5-2.5 கிலோ எடையுடனும் அடர் கருநீலம் அல்லது கருமை நிறத்தோலுடனும் காணப்படும். மலர்காம்பு பழத்துடன் இணையும் இடத்தில் காணப்படும் 6 மலரிதழ்கள் மூன்று மூன்றாக இரு அடுக்குகளில் காணப்படும். ஒவ்வொரு பழமும் 1-3 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

பழத்தின் புறத்தோல் மெல்லியதாகவும், நார்த்தன்மை கொண்டதாகவும் உடையக் கூடியதாகவும் இருக்கும். வளா்ச்சி நிலையில் வெளிர் ரோஜா நிறத்துடனும் முதிர்ச்சியடைந்த நிலையில் கருப்பு அல்லது இளஞ்சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்துடனும் புறத்தோல் காணப்படும். கருப்புத் தோல் கொண்ட பழங்கள், சிவப்புத் தோல் கொண்ட பழங்கள் என இரு வகைகள் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றன. சிவப்புத் தோல் கொண்ட வகைகள் அதிக விளைச்சல் தரவல்லவையெனவும் சத்து மிகுந்தவையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. சதைப்பகுதி தடிமன் மிக்கதாகவும் சாறு நிரம்பியதாகவும் நார்த்தன்மை கொண்டதாகவும் நறுமணம் வீசக் கூடியதாகவும் மஞ்சள் நிறம் கொண்டதாகவும் காணப்படும். பழங்களின் சதைப்பகுதி 7-10 விழுக்காடு நாரைத் தருகிறது. பழங்களின் உட்பகுதி கடினமானதாகவும் விதைகளுக்கு பாதுகாப்பு அரணாகவும் பழுப்பு நிற விதையுறையுடனும் காணப்படும்.

மூன்று சூலக அறைகளில் பழங்கள் உருவாகின்ற போதிலும் உருவாகும் விதைகளின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து மூன்று வரை இருக்கும். விதையின் ஆரம்ப கட்ட வளர்ச்சி நிலைகளில் கூழ்மமாக இருக்கும். கருவுற்ற 60-70 நாட்களில் நன்கு வளர்ச்சியடைந்து விடும். விதைகள் இருபக்க பிளவு கொண்டதாகவும் கூர்மை உடையதாகவும் இளம் விதைகளுள் காணப்படும் நீர்மம் இனிப்புச் சுவை மிக்கதாகவும் இருக்கும். இளம் வளர்ச்சி நிலையில் உள்ள பழத்தின் நீளம் 23 செ.மீ ஆகவும் சராசரி வளர்ச்சி வீதம் நாளொன்றுக்கு 0.60 செ.மீ ஆகவும் காணப்படும். இது போன்று இளம் பழங்களின் தடிமன் 27 செ.மீ ஆகக் காணப்பட்டதோடு நாளொன்றுக்கு வளர்ச்சி வீதம் 0.60 செ.மீ ஆகவும் காணப்படும். ஆரம்ப கட்டத்தில் பழங்களின் வளர்ச்சி விரைவாகவும் உச்ச நிலையை அடைந்த பிறகு வளர்ச்சி வீதம் குறைந்தும் காணப்படும்.

பகுதிப்பொருள் எடை (கிராம்) விழுக்காடு
மேல்தோல் 89.1 8.7
பழச்சதை 108.2 10.5
நார் 138.3 13.5
கொட்டை 690.5 67.3
மொத்தபழம் 1026.1 100.0

பனையின் பழம் மற்றும் விதைகளின் பண்புகளில் ஏற்படும் மாறுபாடு

பழத்தின் தன்மை பழ எடை சதைப் பகுதியின் எடை (கிராம்) விதையொன்றின்  எடை (கிராம்) விதையின் நீளம் (செ.மீ) விதையின் அகலம் (செ.மீ) விதையின் தடிமன் (செ.மீ) பழம்:சதைப்
பகுதி
பழம்:விதை சதைப்பகுதி ;
விதை
ஒற்றை கொட்டை 281.60 175.80 113.30 7.20 5.70 4.80 1.60 2.48 1.55
இரட்டை கொட்டைகள் 475.80 259.10 108.70 7.70 5.90 4.30 1.83 2.18 1.19
மூன்று கொட்டைகள் 720.80 360.00 122.20 8.20 6.01 4.50 2.00 1.96 0.98
திருப்பு முனை வேறுபாடு 42.20 28.30 10.00 0.20 - 0.11 0.08 0.15 0.11

Source:Dr.V.Ponnuswami, PhD, PDF (Taiwan), Former Dean & Professor (Horticulture), Horticultural College & Research Institute, Tamil Nadu Agricultural University, Coimbatore

e-mail:swamyvp200259@gmail.com
Website:www.swamyhortiiech.com

 
 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021