Horticulture
||| | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: கோகோ
 

கோகோ

கோகோ விவசாயிகள் + நுகர்வோர்கள்

கோகோ சாகுபடி
கோகோ உலகளவில் சாக்லெட், உணவு பொருட்கள் சுவை மிகுந்த பானங்கள் மற்றும் மருத்துவ பொருட்களில் மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோகோவின் தேவை ஒவ்வொரு வருடமும் 15 முதல் 20 சதம் வரை அதிகரித்து வருகிறது. இதன் தேவை உற்பத்தியின் அளவினை விட அதிகமாக இருப்பதால் 60 முதல் 70 சதம் வரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து தேவையை பூர்த்தி செய்து வருகிறோம்.

உலகளவில் கோகோ விதைகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஐவரி கோஸ்ட் (12 இலட்சம் டன்) முதலிடம் வருகிறது. மற்ற நாடுகளான காணா (7.2 இலட்சம் டன்), இந்தோனேஷியா (4.4 இலட்சம் டன்), காமரூன் (1.75 இலட்சம் டன்) மற்றும் நைஜரியா (1.60 இலட்சம் டன்) அதிகளவில் விதைகளை உற்பத்தி செய்து உலகளவில் முன்னணி வகித்து வருகின்றன. உலக கோகோ உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 0.3 சதவீத அளவிலேயே உள்ளது.
கோகோ தென் அமெரிக்கா நாட்டின் அமேசான் ஆற்றுப் படுகையை தாயகமாக கொண்டு பூமத்திய ரேகையிலிருந்து 10-200 வட திசையிலும் அதே அளவு தென் திசையில் பரவி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது சுமார் 2500 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 200 டன் கோகோ உலர விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தாவரவியல்  பண்புகள்
தியோபிரமா கோகோ என்கிற தாவரவியல் பெயரைக் கொண்டுள்ள கோகோ, பயிர் ஸ்டெர்குலியேஸி குடும்பத்தை சார்ந்தது. வணிக ரீதியாக பயிரிடப்படும் கோகோவில் கிரையல்லோ (Criollo) மற்றும் ஃபாரஸ்டிரோ (Forestero) ஆகிய இரண்டு வகைகள் உள்ளது. இவற்றில் க்ரையல்லோ சிவப்பு நிற காய்களையும் ஃபாராஸ்டிரோ பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்களையும் கொண்டது. இதில் ஃபாரஸ்டிரோ வகைகள் தேர்வுகள் தான் இந்தியாவில் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

தட்பவெப்பநிலை
கோகோ பயிரானது தென்னை மற்றும் பாக்குத் தோப்புகளில் பயிரிட ஒரு சிறந்த ஊடுபயிராகும். 50 முதல் 60 சதம் வரை சீரான நிரந்தர நிழல் கோகோவிற்கு மிகவும் ஏற்றது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீ உயரம் வரை கோகோ சாகுபடி செய்யலாம். சாகுபடிக்கு 22­0 முதல் 320 செல்சியஸ் வெப்பமும், வருட சராசரி மழையளவு 1200 மில்லி மீட்டருக்கு குறையாமலும் இருப்பது சாலச் சிறந்தது.

மண் மற்றும் நீர்வளம்
கோகோ பயிரின் மண்ணின் கார அமிலத்தன்மை 4.5 அளவிற்கு குறையாமலும் 8.0 அளவிற்கு மிகாமலும் இருத்தல் அவசியம். நீரில் உப்பு நிலை அளவு 1.0 மி.மோஸ்/ கிராம் அளவிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.

பயிர்ப்பெருக்கம்
கோகோவில் விதையினப்பெருக்கம் மற்றும் விதையில்லாப் பெருக்கம் ஆகிய இரண்டு வகைகளிலும் பயிர்பெருக்கம் செய்யபட்டாலும் விதையினப்பெருக்க முறை தான் அதிகளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிக விளைச்சல் தாய் மரங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒட்டு ரகத்தேர்வுகள் தற்பொழுது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தென்னையில் ஊடுபயிராக சாகுபடி
முக்கிய பயிரான தென்னையில் இடைவெளியைப் பொருத்து ஏக்கருக்கு அதிக பட்சமாக 200 கோகோ செடிகளை சாகுபடி செய்யலாம். இளம் கோகோ செடிகளுக்கு குறைந்த அளவு 50 சதம் நிழல் அவசியமாகும். 25 அடி மற்றும் அதற்கும் அதிகமான இடைவெளியில் வளர்க்கப்படும் தென்னையில் இரண்டு தென்னை வரிசைக்கு இடைவெளியில் 10 அடி இடைவெளியிலும், இரண்டு தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு கோகோ செடியையும் நடவு செய்யலாம்.

பாக்கு தோப்புகளில் ஊடுபயிராக சாகுபடி
பாக்கு தோப்பில் (8 அடி இடைவெளியில் நடப்பட்ட தோப்பில்) இரண்டு பாக்கு மர வரிசைக்கு இடைவெளியில் 16 அடி இடைவெளியில் கோகோ மர கன்றுகளை நடலாம்.

குழி மற்றும் நடவு
கோகோ மரக்கன்றுகளை நடவு செய்ய 1.5 அடி ஆழம், நீளம் மற்றும் அகலமுள்ள குழிகளை பரிந்துரைக்கப்ட்ட இடைவெளியில் எடுத்து நடவு செய்யலாம். குழிகளை எடுத்து குறைந்தது ஒரு மாத காலத்திற்கு ஆற விட்டு மண், மற்றும் தொழு உரத்தை 3:1 என்கிற விகிதத்தில் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும். நடவின் போது கோகோ நாற்றின் வேர் பகுதியில் இருக்கும் மண்ணில் மேல்பரப்பும் பூமியின் மேல்பரப்பும் சம அளவில் இருக்குமாறு நடவு செய்யப்பட வேண்டும். நடவு செய்தபின் கைகளால் நாற்றினை சுற்றி மண்ணை அணைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கால்களால் நாற்றினை சுற்றி மிதித்து விட கூடாது.

பராமரிப்பு
கோகோ நடவு செய்யப்பட்ட இடங்களில் வெளிப்புற வரிசையில் அமைந்துள்ள செடிகளுக்கு கூடதலான நிழல் மேலாண்மையை மேற்கொள்ளவேண்டும். இதற்காக தென்னை மட்டையின் நுனி பாகத்தை வெட்டி செடியின் அருகே நட்டு தற்காலிக நிழலைத் தரவேண்டும். இது தவிர, வாழை கன்றுகளை நடவு செய்து கோகோ செடிகளுக்கு நிழலை ஏற்படுத்தலாம்.
கோகோ செடிகள் மரங்களாகும் வரை களைச்செடிகளை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கோகோ அதிக இலைகளை உற்பத்தி செய்யும் மரமாகும். வளர்ந்த கோகோ மரங்களிலிருந்து எக்டருக்கு வருடந்தோறும் 800 கிலோ இலைகள் உதிர்ந்து மக்கி மண்ணுக்கு உரமாக கிடைக்கிறது. உதிரும் இலைகளை மண்ணுக்கு மூடாக்காக பரப்பி மண்ணின் ஈரத்தன்மையையும் வளத்தையும் மேம்படுத்தலாம்.

நீர் மற்றும் உர மேலாண்மை
கோகோ பயிருக்கு ஆண்டு முழுவதும் மண்ணில் ஈரப்பதம் சீராக இருத்தல்  அவசியம். கோடை காலங்களில் ஒவ்வொரு மரத்திற்கும் நாள் ஒன்றுக்கு குறைந்த அளவு 20 லிட்டர் நீர் பாசனம் தேவைப்படுகிறது. சொட்டு நீர் மூலமாகவோ அல்லது வாய்கால் மூலமாகவோ நீர்பாசனம் செய்யலாம்.
இந்தியாவில் கோகோ பயிர்களுக்கு 100.:40:140 கிராம் என்ற அளவிலான தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது 220 கிராம் யூரியா, 250 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 240 கிராம் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.
முதல் வருட செடிகளுக்கு மேலே குறிப்பிட்ட அளவில் மூன்றில் ஒரு பாகம் அதாவது 75 கிராம் யூரியா, 85 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 80 கிராம் பொட்டாஷ் உரங்களை இரண்டு சம பாகமாக பிரித்து நடவு செய்த நாளிலிருந்து 6 மாத இடைவெளியில் இட வேண்டும்.
இரண்டாவது வருடம், மேலே குறிப்பிட்ட அளவில் மூன்றில் இரண்டு பாகம் அதாவது 145 கிராம் யூரியா, 165 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 160 கிராம் பொட்டாஷ் உரங்களை இரண்டு சம பாகங்களாக பிரித்து நடவு செய்த நாள் முதல் 4 மாத இடைவெளியில் இட வேண்டும்.
மூன்றாவது வருடம், கோகோ செடிகளுக்கு வருடம் ஒன்றிற்கு 100:40:140 (நைட்ரஜன்:பாஸ்பரஸ்: பொட்டாசியம்) என்கிற விகிதத்தில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தரவல்ல உரங்களை அளித்தல் அவசியம். 220 கிராம் யூரியா, 250 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 240 கிராம் பொட்டாஷ் ஆகியர உரங்களை மூன்று சம பாகங்களாக பிரித்து 4 மாத இடைவெளியில் இட வேண்டும்.
கோகோவில் உலர்ந்த விதைகளின் விளைச்சல் 2 கிலோ அளவிற்கு வந்தவுடன் மூன்றாவது வருடம் தந்த உர அளவை இரட்டிப்பாக்கி நான்கு பாகங்களாக பிரித்து 3 மாத இடவெளியில் இடவேண்டும்.
பொதுவாக கோகோவில் நுண்ணூட்டச் சத்துகளான இரும்பு மற்றும் துத்தநாகம் - ஆகியவற்றின் குறைபாடுகள் காணப்படுவதால் வருடத்திற்கு இரண்டு முறை 0.5 சதவிகித அளவில் துத்தநாக சல்பேட் மற்றும் அன்னபேதி உப்பு கரைசலை கை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

கவாத்து செய்தல்
செடிகளை நட்ட இரண்டு வருடத்தில் செடியின் முக்கிய தண்டில் தோன்றும் போத்துகளை அவ்வப்போது கிள்ளி நீக்கி விட வேண்டும். செடிகளின் விசிறி கிளைகளை குடை வடிவத்தில் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். செடிகளை நட்ட மூன்று வருடம் கழித்து துப்புறவு கவாத்து அதாவது நோய் தாக்கப்பட்ட, மற்ற காய்ந்த கிளைகளையும் நீக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் விசிறி கிளைகளிலிருந்து மேல் நோக்கி வளரும் போத்துகளை கூர்மையான கத்தி கொண்டு வெட்டி விட வேண்டும். வெட்டிய பாகத்தில் தாமிர பூசண கொல்லி பசையை தடவ வேண்டும். நோய் மற்றும் பூச்சிகள் தாக்கப்பட்ட காய் மற்றும் பழங்களை கூர்மையான கத்திக்கொண்டு பூ மெத்தை (Cushion) பாதிக்கப்படாத வண்ணம் நீக்கி அழிக்க வேண்டும்.

பூக்கும் தன்மை
கோகோ செடிகள் நட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டிலிருந்து பூக்கத் துவங்கும். மரத்தின் முக்கிய கிளை மற்றும் விசிறி கிளைகளில் கொத்தாக பூக்கள் உருவாகும். ஒவ்வொரு பூ கொத்திலும் 10-20 பூக்கள் இருக்கும். ஒரு மரத்தில் பல ஆயிரக்கணக்கான பூக்கள் பூத்தாலும் அத்தனையும் காயாக மாறாது. பொதுவாக மே - ஜீன் மற்றும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அதிகளவில் பூக்கள் தோன்றும்.

அறுவடை
செடிகள் நட்ட மூன்றாவது வருடம் முதல் காய்க்க துவங்கும் (பொதுவாக ஜனவரி-பிப்ரவரி மாதத்தில் அதிக அளவில் பூக்கள் தோன்றும்). பூக்கள் பூத்து 120-150 நாட்களில் காய்கள் அறுவடைக்கு தயாராகின்றன. முதிர்ச்சி அடைந்த காய்கள் பச்சை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறமாக மாறும் நிலையில் அறுவடை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு முறையும் காய்களை அறுவடை செய்யும் போதும் பூமெத்தை (Cushion) பாதிக்கப்படாத வகையில் கத்தியால் காம்பு பகுதியில் வெட்டி அறுவடை செய்ய வேண்டும்.

பின்செய் நேர்த்தி
பழுக்க வைத்தல்
அறுவடை செய்த காய்களை நிழல் உள்ள இடங்களில் 5.6 நாட்கள் குவியலாக குவித்து சீராக பழுக்க வைக்க வேண்டும். இந்த பழங்களின் விதைகளில் உள்ள அமிலத்தன்மை குறைந்து வாசனைத் தன்மை ஏற்படுவதற்கு வழி வகுக்கும். மேலும் உலர் விதையினர் எடையையும் அதிகரிக்கும்.

விதையை பிரித்தெடுத்தல்
நன்றாக பழுத்த பழங்களை சிறிய தடி கொண்டு தேங்காய் போல் சரிபாதியாக உடைத்து விதைகளை மட்டும் தனியாக பிரித்தெடுக்க வேண்டும். காய்களை உடைக்கும் போது விதைகள் நசுங்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.

நொதித்தில்
கோகோ பழங்களிலிருந்து பிரித்தெடுத்த சதைப்பற்றுடன் கூடிய விதைகளை நொதிக்க வைத்து பதப்படுத்த வேண்டும். விதைகளை சுற்றியுள்ள வழவழப்பான சதையை நீக்கவும், முளையை கொல்லவும் விதையுறையை இளக்கவும், கசப்புத் தன்மையை குறைத்து மணம் மற்றும் சுவையை கூட்டவும் நொதித்தல் அவசியம்.

நொதிக்க வைக்கும் முறைகள்
பெட்டி முறை நொதித்தல்
அதிக அளவிலான விதைகளை நொதிக்க வைக்க இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. 120 x 95 x 75 செ. மீ. அளவுள்ள மரப்பெட்டிகளை கொண்டு நொதிக்க வைக்கப்படுகிறது. சதைக்கூழ் வழிந்து போகும் வகையிலும், காற்றுச் சுழற்சி ஏற்படும் வகையிலும் சட்டங்களைக் கொண்டு பெட்டியின் அடிப்பகுதியை வடிவமைக்க வேண்டும். விதைகளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளிதில் மாற்றும் வகையில் நகரும் அடுக்குகளாக இப்பெட்டிகள் அமைக்கப்படுகின்றன. குறைந்த அளவு மூன்று பெட்டிகள் வரிசையாக இருக்குமாறு அமைக்க வேண்டும்.  பெட்டிகளில் விதைகளை நிரப்பி அதன் மேல் பகுதியினை வாழை இலையினை கொண்டோ அல்லது சாக்குப்பைகளை கொண்டோ மூடிவிடவேண்டும். மூன்றாவது மற்றும் ஐந்தாவது நாளில் விதைகளை நன்றாக கிளறிவிட வேண்டும். பெட்டிகளில் வைத்த 7 நாட்களுக்குப் பிறகு விதைகளை எடுத்து உலர்த்த வேண்டும்.
கூடைமுறை நொதித்தல்
மூங்கில் கூடைகளை பொருத்தமான அளவில் பயன்படுத்தி அதன் அடிப்பகுதியில் சதை கூழ் வடிந்து போகுமாறு வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். இதற்காக வாழை இலையை கூடையினுள் பரப்பி அதன் மேல் விதைகளை நிரப்ப வேண்டும். அதன் மேல் பகுதியை வாழை இலையை கொண்டு மூடி கனமான பொருளை வைத்து சதை வியர்ப்புகள் நன்கு வடியும் வகையில் சற்றே உயரமான தளத்தில் வைக்க வேண்டும். மூன்றாவது மற்றும் ஐந்தாவது நாளில் நன்றாக கிளறிவிட்டு வாழை இலை கொண்டு மூட வேண்டும். 5-6 நாட்களில் முழுவதுமாக நொதித்த பின் உலர்வதற்காக விதைகளை வெளியே எடுக்க வேண்டும். ஊதா நிறமாக இருக்கும் விதையின் உட்புறம் காப்பி நிமாக (brown) மாற துவங்கும்.
உலர்த்துதல்
முற்றிலும் நொதித்த விதைகளை சூரிய ஒளியில் சுத்தமான களத்தில் சீராகப்பரப்பி உலர்த்த வேண்டும். 7-10 நாட்களில் விதையின் ஈரம் 70 சதவீதத்திலிருந்து 6.5 சதம் வரை உலர்த்த பட வேண்டும். உலர்த்தும் போது தினந்தோறும் நன்றாக கிளறிவிட வேண்டும். மழை காலங்களில் உலர்த்திய விதைகளை ஈரம் படாமல் பாதுகாக்க வேண்டும்.


சேமித்தல்
நன்றாக உலர்த்தப்பட்ட விதைகளை சுத்தமான சாக்குப் பைகளில் நிரப்பி காற்று ஈரப்பதம் இல்லாத அறையில் சேமிக்க வேண்டும். சாக்குப் பைகளை தரையில் வைக்காமல் மரக்கட்டைகளின் மேல் அடுக்கி வைக்க வேண்டும்.

மகசூல்
ஐந்து வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு மரத்திலிருந்தும் சராசரியாக ஒன்று முதல் இரண்டு கிலோ உலர் விதைகளை மகசூலாக கிடைக்கும்.

பயிர்பாதுகாப்பு
பூச்சி மேலாண்மை
1. மாவுப்பூச்சி
கோகோ பயிரைத் தாக்கும் பூச்சிகளில் மிக முக்கியமானது மாவுப்பூச்சி. இந்த மாவுப்பூச்சிகள், இளம் தண்டுகள், தளிர்கள் பூக்காம்புகள் மற்றும் காய்கள் மீது கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டு, சாற்றை உறிஞ்சி விடுகின்றன. இதனால் பூக்களும், காய்களும் உதிர்ந்து விடுகின்றன. செடிகளில் நேர் வளர்ச்சி குறைந்து, கீழ்மட்டத்தில் அதிக கிளைகள் தோன்றுகின்றன. இதனால் கோகோச் செடியின் ஒட்டு மொத்த கட்டமைப்பு பாதிக்கப்பட்டு, மகசூல் குறைந்து விடுகிறது. மாவுப்பூச்சியின் தாக்குதல் ஆண்டு முழுவதும் காணப்பட்டாலும் அதிக வெப்பமும், காற்றில் குறைந்த ஈரப்பதமும் காணப்படுகின்ற கோடைக்காலத்தில் இவைகளின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. மாவுப்பூச்சி தாக்கிய கோகோ மரத்தில் எறும்புகளின் நடமாட்டம் தென்படும்.
மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த 2 மி.லி. ரோகார் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும். பூச்சிகளின் தாக்குதல் தொடர்ந்து காணப்பட்டால் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது முறை ரோகர் மருந்தை தெளிக்க வேண்டும்.
மரம் ஒன்றுக்கு 10 கிரிப்ட்டோலேம்ஸ் பொறி வண்டுகளை விட்டும் இந்த மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

2. தேயிலைக் கொசு நாவாய்ப் பூச்சி
சிறிய கொசு வடிவத்தில் காணப்படும் இந்த நாவாய்ப் பூச்சிகள் கோகோ காய்களில் நுண்துளைகள் இட்டு, சாற்றை உறிஞ்சி விடுகின்றன. அதன் விளைவாக, காய்கள் மீது சாம்பல் நிறத்தில், வட்ட வடிவமான நீர்க்கோர்த்தப் புள்ளிகள் தோன்றுகின்றன. பின்னர் இப்புள்ளிகள் கருமை நிறமடைந்து விடுகின்றன. நுண்துளைகளிலிருந்து பழுப்பு நிறச்சாறு வடிந்து கொண்டிருக்கும். காய்கள் சிறுத்து, உருமாறி விடுகின்றன.
தேயிலைக் கொசு நாவாய்ப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த கீழ்கண்ட மேலாண்மை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
1. கோகோத் தோட்டத்திற்கு அருகில் முந்திரி, கொய்யா, திராட்சை மற்றும் வேம்பு போன்றவைகள் பயிரிடப்படுவதை தவிர்கக வேண்டும்.
2. உதிர்ந்து விழந்துள்ள பூ மொட்டுகள் மற்றும் இளங்காய்களைச் சேகரித்து தீயிலிட்டு எரித்து அழித்து விட வேண்டும்.
3. இளம் தளிர் பருவத்தில் 2.0 மி.லி. குளோர்பைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
4. பூ பூக்கும் பருவத்தில் 2.0 மி.லி.ரோகார் (டைமித்தோயேட்) மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, அத்துடன் 30 கிராம் யூரியாவையும் கலந்து கோகோச் செடிகள் மீது தெளிக்க வேண்டும்.
5. இளம் காய் பருவத்தில் 2.0 கிராம் நனையும் செவின் (கார்பரில்) 50 % மருந்தையும் 30 கிராம் யூரியாவையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

3. செந்நிறத் தண்டுத் துளைப்பான்
இந்தப் பூச்சி இளம் கோகோச் செடிகளை அதிக அளவில் தாக்குகின்றது. இப்பூச்சியின் இளம் புழுக்கள் முதன்மைத் தண்டில் ஜார்க்கட் பகுதிக்கு சற்று கீழே, தண்டைத் துளைத்துச் சென்று சேதம் செய்கின்றன. அதனால் முதன்மைத் தண்டின் மேற்பகுதி முழுவதும் காய்ந்து விடுகிறது. விசிறிக் கிளைகளில் இப்புழுக்களின் தாக்குதலால், இலைகள் காய்ந்து விடுகின்றன. கிளைகள் ஒடிந்து விடுகின்றன.
இப்பூச்சியைக் கட்டுப்படுத்த, பூச்சி தாக்கிய பாகங்களை வெட்டி எரித்துவிட வேண்டும். 2 கிராம் நனையும் செவின் (கார்பரில்) 50% மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

4. சாம்பல் நிற கூன் வண்டுகள்
பொதுவாக ஜீலை-செப்டம்பர் மாதங்களில் இந்த கூன் வண்டுகளின் தாக்குதல் அதிக அளவில் காணப்படும். இவைகள் இளம் தளிர்களைத் தின்று விடுகின்றன. இலைகளில் சிறு ஓட்டைகளை ஏற்படுத்துகின்றன. இவ்வண்டுகளின் புழுக்கள் மண்ணுக்கடியில் வாழ்கின்றன. எனவே இவைகளைக் கட்டுப்படுத்த 2 கிராம் நனையும் செவின் (கார்பரில்) 50% மருந்தை, 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து மரத்தைச் சுற்றியுள்ள மண்பகுதி முழுவதுமாக, நன்றாக நனையுமாறு ஊற்ற வேண்டும். இந்த மருந்தை இலைகளின் அடிப்பகுதியில் நன்றாகப்படுமாறு தெளிக்க வேண்டும். வருடத்திற்கு இரண்டு முறை, மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் இம்மருந்தை தெளிக்க வேண்டும்.

5. அசுவினிப் பூச்சி
பொதுவாக அசுவினிப் பூச்சிகள் இளந்தளிர்களின் அடிப்பாகம், இளந்தண்டுகள், பூ மொட்டுகள் மற்றும் இளங்காய்கள் மீது கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகின்றன. இப்பூச்சிகளின் தாக்குதலால் இளம் பூக்களும், தளிர் இலைகளும் கொட்டி விடுகின்றன. சில சமங்களில் இலைகள் சுருண்டு காணப்படுகின்றன. அசுவினிப்பூச்சிகளின் தாக்குதல் ஜீலை முதல் ஜனவரி வரை அதிக அளவில் காணப்படும். இப்பூச்சிகள் தாக்கிய மரங்களில் எறும்புகள் நடமாட்டம் காணப்படும். அசுவினிப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த 1.5 மி.லி. ரோகார் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மாத இடைவெளியில் இரு முறைகள் தெளிக்க வேண்டும்.

6. வேர்ப்புழுக்கள்
வேர்ப்புழுக்கள், புதிதாக நடப்பட்டுள்ள இளம் கோகோ செடிகளின் வேர்ப்பகுதிகளில், வேர்களின் மேற்பரப்பில் உள்ள திசுக்களை சுரண்டி தின்று விடுகின்றன. இதனால் இலைகள் மஞ்சள் நிறமடைந்து தொங்கி விடுகின்றன. தென்கைளின் வேர்பகுதிகளையும் இந்த வேர்ப்புழுக்கள் தாக்குவதால் தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகச் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோகோச் செடிகளில் இப்புழுக்களின் தாக்குதல் அடிக்கடி ஏற்படும்.
இந்த வேர்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த புதிதாக நடவு செய்யப்பட்டுள்ள கோகோ கன்றுகளைச் சுற்றி 10% செவின் தூளை 10 கிராம், செடி என்ற அளவில் இட வேண்டும். வளர்ந்த செடிகளில் இப்புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த 2 கிராம் நனையும் செவின் 50% மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, மரத்தை சுற்றியுள்ள மண்பகுதி நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

7. இலைகளைத் தின்னும் புழுக்கள்
இப்பூச்சியின் புழுக்கள் இளம் இலைகளையே அதிகமாகத் தின்னும். மேலும் இளங்காய்கள் மற்றும் முதிர்ந்த பழங்களின் மேல் தோலையும் தின்னும். இப்புழுக்களின் தாக்கதல் ஜீன்-ஜீலை மாதங்களில் குருத்து இலைகளில் அதிகமாகக் காணப்படும்.
இப்புழுக்களை அழிப்பதற்கு 2 கிராம் செவின் (கார்பரில்) 50 சதம் நனையும் தூள் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

8. காய்து துளைப்பான்
இப்பூச்சியின் புழுக்கள் இளம் மொட்டுகளை துளைப்பதால், மொட்டுகள் உதிர்ந்து விடுகின்றன. இப்புழுக்கள் இளம் காய்களில் துளைகளிட்டு, காய்களின் உட்பகுதியை தின்று விடுகின்றன. காய்கள் இல்லாத பருவத்தில் மரப்பட்டையைத் துளைத்து தின்னுகின்றன.
இப்புழுக்களை அழிப்பதற்கு 2 மி.லி. மானோகுரோட்டோபாஸ் மருந்து அல்லது 2 கிராம் செவின் (கார்பரில்) 50 சதம் நனையும் தூள் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இப்புழுக்களால் தாக்கப்பட்டு, உதிர்ந்து விழுந்துள்ள பூக்கள், மொட்டுகள் மற்றும் இளம் காய்களை சேகரித்து, தீ யிலிட்டு எரித்து அழித்து விட வேண்டும்.
பொதுவாக கோகோப் பயிரைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கக்கூடிய சில வகை எதிர்ப்பூச்சிகள் அல்லது நன்மை செய்யும் பூச்சிகள், கோகோத் தோட்டங்களில் இயற்கையாகவே காணப்படுகின்றன. கோகோப் பயிரைப் பூச்சிகள் தாக்கத் தொடங்கும் சமயத்தில் இந்த எதிர்ப்பூச்சிகள் அதிக அளவில் தோன்றும். தேவையில்லாமலும், தேவைக்கு அதிகமாகவும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தினால் நன்மை செய்யும் எதிரிப்பூச்சிகளும் அழிந்து போகக்கூடும். எனவே பூச்சி மேலாண்மையில் அவசியம் ஏற்பட்டாலொழிய பூச்சி மருந்துகள் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பது சாலச் சிறந்தது.

9. எலிகள் மற்றும் அணில்கள்
கோகோ மரத்தில் அறுவடைக்குத் தயாராக உள்ள காய்களை, அணில்கள் மற்றும் எலிகள் கடித்து தின்று, அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
எலிகள் பெரும்பாலும் காய்களின் காம்புப் பகுதிய ஒட்டியுள்ள இடத்தில் கடிக்கின்றன. இளம் மற்றும் முதிர்ந்த காய்களைக் கடித்து சேதப்படுத்துகின்றன. இரவு நேரத்தில் எலிகளின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.
எலிகளைக் கட்டுப்படுத்த 10 கிராம் பிரோமடையலோன் மெழுகு கட்டிகளை மரக்கிளைகளில் 12 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை வைக்க வேண்டும். இக்கட்டிகள் முஷ்முஷ் மற்றும் ரோபான் என்ற பெயர்களில் விற்கப்படுகின்றன.
அணில்கள் கோகோ காய்களின் மையப்பகுதியைக் கொறித்து தின்று சேதப்படுத்துகின்றன. அணில்கள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் தாக்குதலை ஏற்படுத்தும். 4-5 அணில்கள் இரண்டு எக்டர் பரப்பளவு வரை தாக்குதலை ஏற்படுத்தும், அணில்களைக் கட்டுப்படுத்த தேங்காய் கீற்றுப்பொறியை, கோகோ காய்கள் இல்லாத செப்படம்பர், நவம்பர் மாதங்களில் மரக்கிளைகளின் வைக்க வேண்டும். இம்மாதங்களில் அணில்களுக்கு மாற்று உணவுகள் (முந்திரி, மா, பலா, பழங்கள்) கிடைப்பதில்லை. எனவே அணில்கள் பொறியிலுள்ள உணவை நாடி வரும். கோகோ காய்களை சரியான பருவத்தில் அறுவடை செய்து விட வேண்டும். இது மிகவும் அவசியமாகும்.

நோய்கள்
1. கருங்காய் நோய்
காயிலிருந்து பழம் வரை எந்த நிலையில் வேண்டுமானாலும் தாக்கக் கூடும். காய் அல்லது பழத்தின் மேற்பரப்பில் வட்ட பழுப்பு நிற நீர்க்கோத்த புள்ளிகள் தோன்றி முழுவதும் பரவுகின்றது காய்கள் கரும்பழுப்பு அல்லது கறுப்பு நிறத்தில் மாறுகின்றது. காய் மற்றும் பழத்தின் உள்பகுதியும் கறுப்பு நிறமாகி விதைகள் அழுகுகின்றது.
கட்டுப்பாடு
காய்ந்த மற்றும் நோய் தாக்கிய காய், பழங்களை அகற்ற வேண்டும். நல்ல வடிகால் வசதி செய்ய வேண்டும். நிழலை குறைத்து நல்ல காற்றோட்டம் ஏற்படுமாறு சரி செய்ய வேண்டும். போர்டோகலவை ஒரு சதம் மழைக்கு முன் ஒரு முறையும் பின்பு தேவைப்பட்டால் தெளிக்க வேண்டும்.

2. கேங்கர் நோய்
இந்நோய் மரத்தின் ஆதாரத் தண்டு மற்றும் விசிறிக் கிளைகளிலும் காணப்படும். ஆரம்பத்தில் சாம்பல் நிற நீர் கோர்த்த புள்ளிகளாகக் காணப்படும். இந்நோய் நாளாக செந்நிறத்தில் மாறும். இப்பகுதியிலிருந்து செந்நிற திரவம் ஒழுகிப் பின் காய்ந்து விடும். இதனால் மரத்தின் நடுப்பகுதியில் பிளவு உண்டாகி மரம் ஒடிந்து விடும். இந்நோய்க் காரணியான பூஞ்சை, கருங்காய் நோய் தாக்கப்பட்ட காய்களிலிருந்தும், மண்ணிலிருந்தும் மரத்திற்குப் பரவுகிறது.
இந்நோயைக் கட்டுப்படுத்த கருங்காய் நோய் தாக்கப்பட்ட காய்களைக் கண்டு பிடித்து அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். கோகோ தோட்டத்தில் முறையான வடிகால் வசதிகள் செய்யப்பட வேண்டும். இந்நோயின் ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சிறிதளவு செதுக்கி விட்டு போர்டோ பசையைத் தடவ வேண்டும்.

3. மரக்கரி காய் அழுகல் நோய்
கோடை காலங்களில் அதிகமாக தாக்கும். காய்களிலிருந்து பழம் வரை எல்லா நிலைகளிலும் பாதிப்புக்குள்ளாகின்றது. மஞ்சள் நிற புள்ளிகள் காய், பழம் தண்டுப்பகுதயில் அல்லது நுனியில் உண்டாகின்றது. பெரிதாகி எல்லா இடங்களிலும் பரவி சாக்லேட் பழுப்பு நிமாகிறது. காய் மற்றும் பழத்தின் மேற்பரப்பில் பூசன விதைகள் தோன்றுவதால் கறுப்பு நிற பாசிப் படர்ந்தது போல் காட்சியளிக்கும்.

கட்டுப்பாடு
சிறந்த மேலாண்மையை பின்பற்றி மரங்களை நன்கு பராமரித்தல் அவசியம், நோய் தாக்கிய காய், மற்றும் பழங்களை அகற்ற வேண்டும். இந்நோயைக்கட்டுப்படுத்த 1% போர்டோ கலவையை தெளிக்க வேண்டும்.

4. குழற்கோடு கருகல் நோய்
நாற்றுக்களின் மேல் நுனியிலிருந்து இரண்டாவது (அ) மூன்றாவது இலைகள் மஞ்சள் நிறமாக வெளியேறுகிறது. நோய் தாக்கிய இலைகள் சில நாட்களில் விழுகின்றன. தாக்கப்பட்ட இலைகள் வெள்ளை நிற பூசண வளர்ச்சியால் மூடப்படுகின்றன. பாதிக்கப்பட்ட கிளைகளை நீள வாக்கில் வெட்டி பார்க்கும் பொழுது குழற்கோடு பகுதியில் கருமை நிறக் கீற்றுகள் காணப்படும்.

கட்டுப்பாடு
நோய் தாக்கிய கிளைகளை அகற்றி நோயின் அறிகுறி தோன்றிய பாகத்திலிருந்து 30 செ.மீ. மேல் வெட்டி எடுப்பதால் நோய் பரவுவதை தடுக்கலாம். நோய்க்கு எதிர்ப்புத்தன்மையுடைய இரகங்களை வளர்க்க வேண்டும்.


5. வெள்ளை நூற் கருகல் (மராஸ்மியஸ ஸ்கேன்டென்ஸ்)
இலை, இலையின் மேற்பரப்பு, இலை தண்டுகள், இளம் தண்டுகள் மற்றும் கிளைகளின் மேற்பரப்பில் பூசன இழைகள் நூல் போன்று நீளமாக காணப்படும். இலைகள் கறுப்பு நிறமாகி கிளைகளிலிருந்து பிரிந்து கீழே விழாமல் பூசண இழைகளால் பின்னப்பட்டு தொங்கும்- தாக்கப்பட்ட கிளைகள் அதிகமாக இறக்க நேரிடுகிறது.
கட்டுப்பாடு
தேவைக்கும் அதிக அளவு நிழல் படாமல் இருக்க வேண்டும். போர்டோகலவையை ஒரு சதம் (அ) காப்பர் ஆக்ஸிகுளோரைடு (0.3%-3 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து) கலவையை மழைக்கு முன்பு ஒரு முறையம் பின்பு தேவைப்பட்டால் தெளிக்க வேண்டும்.

6. செர்லி வாடல் (அ) இளங்காய்கள் வாடல்
காய் பிஞ்சுகளில் இந்நோய் தாக்குதல் தீவிரமாக காணப்படும். ஜனவரி முதல் மே மாதங்களில் அதிகம் காணப்படும். தாக்கப்பட்ட பிஞ்சுகள் சுருங்கி உருமாறி வாடி அதே சமயம் கீழே விழாமல் மரங்களில் ஒட்டி கொண்டிருக்கும். இந்நோய்க்கான காரணிகள் பூச்சி, பூசணம் தாக்குதல், சத்து பற்றாக்குறை மற்றும் அதிக காய்கள் உற்பத்தி போன்ற பல்வேறு காரணங்களும் கூறப்படுகின்றன.
கட்டுப்பாடு
எந்த காரணியால் இந்நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து தகுந்த கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும்.

பூசணக் கொல்லிகள் தயாரிக்கும் முறைகள்
(i) 1%போர்டோ கலவை
மயில் துத்தம் (காப்பர் சல்பேட்)     : 1 கிலோ
சுண்ணாம்புத்தூள்                            : 1 கிலோ
தண்ணீர்                                            : 100 லிட்டர்
ஒரு கிலோ மயில் துத்தம் எடுத்து 20 லிட்டர் நீரில் கலக்க வேண்டும். பின்பு சுண்ணாம்புத்தூள் 1 கிலோ எடுத்து 50 லிட்டரில் வேறொரு பிளாஸ்டிக் பக்கட்/மண் பாத்திரம் எடுத்து கலக்க வேண்டும். பின்பு மயில்துத்த கரைசலை மெதுவாக சுண்ணாம்புக் கரைசலில் விட்டு நன்கு கலக்க வேண்டும். கடைசியாக போர்டோகலவையின் கார அமிலத்தன்மையானது நடு நிலைமையாக (7.0) இருக்க வேண்டும். இதனைக் கண்டறிய தயாரித்த கரைசலில் நன்கு தீட்டிய கத்தியை முக்கி எடுத்துப் பார்க்கும்போது, பளபளப்பான நீட்டிய பகுதிகளில் சிவப்பு நிற படிவு/திட்டு இருந்தால் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இதனை சரி செய்ய சுண்ணாம்புக் கரைசலை நடுநிலைக்கு கொண்டு வந்து பின்பு உபயோகப்படுத்த வேண்டும்.
(ii) போர்டோ பசை
மயில் துத்தம் (காப்பர் சல்பேட்)     :           1 கிலோ
சுண்ணாம்புத்தூள்                            :           1 கிலோ
தண்ணீர்                                            :           10 லிட்டர்
(iii) பூஞ்சாணக்கொல்லி கரைசல் சதவீதத்தில் தயாரிக்கும் முறை
0.1சதம் : 1 கிராம் பூஞ்சாணக்கொல்லி 1 லிட்டர் தண்ணீர்
0.2சதம் : 2 கிராம் பூஞ்சாணக்கொல்லி 1 லிட்டர் தண்ணீர்
0.3 சதம் : 3 கிராம் பூஞ்சாணக்கொல்லி 1 லிட்டர் தண்ணீர்
என்ற அளவில் கலந்து பின்பு தெளிக்க வேண்டும்.

தென்னையில் கோகோ ஊடுபயிர் மாதிரி வரைபடம்

பாக்கு தோப்பில் கோகோ ஊடுபயிர் மாதிரி வரைபடம்

 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013