தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: வல்லாரை

வல்லாரை

வல்லாரை அதிக நாள் வாழும் தன்மை கொண்ட, நிலம் படிந்த செழுமையான பகுதிகள் அல்லது ஈரம் ததும்பும் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் அருமண மூலிகையாகும். இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். இது தொழுநோய், தோல் நோய்கள், வயிற்றுப் போக்கு மற்றும் அல்சருக்கு மருந்தாக பயன்படுகிறது. இது அருமணம் கொண்டது மற்றும் கசப்புத் தன்மை கொண்டது. இது இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சமையல் மூலிகையாக சட்னி, ஊறுகாய், புத்துணர்வு பானம் தயாரிக்கப் பயன்படுகிறது. பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது. மேற்கூறியவற்றுடன் நரம்பு டானிக்காகவும், ஞாபகசக்தி அதிகரிக்கவும் பயன்படுகிறது.

மண் மற்றும் காலநிலை:

ஈரப்பதமான மற்றும் சதுப்பு நிலம் மற்றும் நீர் நிலைகளைச் சுற்றி வளரும். அமில மண் மற்றும் உவர் மண்ணில் வளரும். ஈரத் தன்மையுள்ள, அங்கக தன்மை கொண்ட களிமண்ணில் நன்கு வளரும்.

 
இலை
மிதமான காலநிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும். நிழலான பகுதிகளில் நன்கு வளரும். 50 சதவிகிதம் நிழலில் மூலிகை அதிகமாக வளரும் மற்றும் மகசூல் அதிகமாக கிடைக்கும்.
இனப்பெருக்கம்:

சில இலைகளுடன் கணுக்கள் கொண்ட தண்டுத் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு எக்டருக்கு 1,00,000 எண்ணிக்கை தாவரங்கள் தேவைப்படும். இவை நேரடியாக வயலில் விதைக்கப்படுகின்றன அல்லது நாற்றங்கால் படுக்கைகளிலே நடவு செய்யப்பட்டு பிறகு விளைநிலங்களுக்கு மாற்றப்படுகின்றன.
நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். பின்பு போதுமான அளவு படுக்கைகளை அமைக்க வேண்டும். வேர்கள் நன்கு பிடிப்பதற்காக சிறிதளவு பாசனம் ஒன்று முதல் இரண்டு நாட்களுக்கு அளிக்க வேண்டும். பயிர் 30 x 30 செ.மீ இடைவெளியில் அக்டோபர் மாதத்தில் நடவு செய்ய வேண்டும்.

உர மேலாண்மை:

நிலம் தயாரிக்கும்போது தொழுவுரம் எக்டருக்கு 5 டன் அடியுரமாக அளிக்க வேண்டும். தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 100:60:60 கிகி பரிந்துரைக்கப்படுகிறது.

பாசனம்:

நடவு செய்த பிறகு சிறிதளவு நீர் பாய்ச்ச வேண்டும். குறைந்த அளவு பாசனம் 4-6 நாட்கள் இடைவெளியில் பயிர் நன்கு வளரும் வரை அளிக்க வேண்டும். பிறகு பயிரின் தேவைக்கு ஏற்ப பாசனம் செய்ய வேண்டும்.

ஊடு சாகுபடி:

களை பயிர் வளர்ச்சிக்கு இடையூராக இருக்கும். அதனால் களையெடுத்தல் அவசியமாகும். பயிரின் தொடக்க காலங்களில் 15-20 நாட்கள் இடைவெளியில் களையெடுக்க வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல்:

வளரும் கிளைகளிலிருந்து வெளிப்புற இலைகளை இடைவிட்ட அறுவடை 15 நாட்கள் இடைவெளியில் செய்யலாம். அதிக அளவு மகசூல் ஜீன் மாதத்திலிருந்து பெறலாம். பயிரை முழுவதுமாக அறுவடை செய்யாமல்  சிறிது நிலத்தில் விட்டு அறுவடை செய்ய முடியும். அப்போதுதான் அது மறுபடியும் வளரும். அக்டோபர் மாதம் முதல் அறுவடை செய்யலாம். சராசரியாக எக்டருக்கு 5500 கிகி மூலிகை, 2000கிகி உலர் மூலிகை மற்றும் 20 கிகி ஆசியடிக்கோசிட் கிடைக்கும்.

 

Last Updated : April 2015