தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் ::

துளசி

துளசி இந்தியாவை தாயகமாக கொண்டது. இவை புனிதமாக கருதப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகிறது. துளசி வழக்கமான வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை கிருமிகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி கொண்டவை மற்றும் காற்றை சுத்தப்படுத்துகின்றன.  நடுவெப்ப காலநிலையில் நன்கு வளரும். துளசி இயற்கையாக கடல் மட்டத்திலிருந்து 2000 அடி வரை வளரும். இவை உலகம் முழுவதும் ஈரமான மணலில் இயற்கையாக வளரும். இவை வீட்டில் தொட்டிகளிலும், வீட்டுத் தோட்டங்களில் மூலிகைச் செடியாகவும் வளர்க்கப்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் துளசி பயிரிடப்பட்டு புதிதாக கோயில்கள் மற்றும் வழிபாட்டு மையங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. துளசி சாகுபடி செய்யாத நிலங்களிலும் சாலையோரங்களிலும் அதிகமாக காணப்படுகிறது. இந்த மூலிகை, பருவகாலத்தில் சேகரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வணிக ரிதியாக துளசி எண்ணெய் பிரித்தெடுக்க சாகுபடி செய்யப்படுகிறது.

வேதியியல்

துளசி இலையிலிருந்து எடுக்கப்படும் எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய் பூச்சிகள் மற்றும் பாக்டீரியாவிற்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது. இந்த எண்ணெய் பூச்சிக்கொல்லி மற்றும் ஆன்டி பாக்டீரியலாக செயல்படுகிறது.

 
இலை

பயன்கள்

துளசி ஒரு நறுமண மூலிகை. எனவே இவை மற்ற மூலிகைகளுடன் சேர்த்து உபயோகப்படுத்தப்படுகிறது. துளசியின் நறுமண இலை மற்றும் பூக்களை சாறாக அல்லது தேநீராக தயாரித்து வயிற்று வலிக்கு, இருமலுக்கு, மார்புச் சளிநோய், தோல் வியாதி மற்றும் வயிற்றுப் போக்கிற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மலேரியா மற்றும் காலராவிற்கு முற்காப்பு மருந்தாகப் பயன்படுகிறது. துளசி விதைகளை தண்ணீர், பழச்சாறு அல்லது பாலுடன் கலந்து உபயோகிக்கும்போது ஆன்டி ஆக்சிடன்டாக பயன்படுகிறது. துளசி, ஆற்றல் குறைவு, அல்சர், வாந்தி மற்றும் வயிற்றுப் பிரச்சனைக்கு மருந்தாகப் பயன்படுகிறது மற்றும் டானிக்காக பயன்படுகிறது. இதன் வேரிலிருந்து தயாரிக்கப்படும் பொடியை பால், நெய் அல்லது சாறாக்கி மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவை பூச்சிக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. வலி நிவாரணியாக பயன்படுகிறது. இந்த மூலிகை எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமன் செய்கிறது. சுற்றுப்புறச்சூழல் மாசு மற்றும் கேன்சருக்கு முற்காப்பு மருந்தாகப் பயன்படுகிறது. துளசி ஆன்டிஆக்சிடன்ட், விட்டமின் ஏ மற்றும் சி மற்றும் கால்சியம் அதிக அளவில் கொண்டுள்ளது. இது கொசுக்களுக்கு எதிரான பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது.

வகைகள்

1. பசுமை வகை (துளசி) மற்றும்
2. ஊதாவகை (கிருஷ்ண துளசி)

மண் மற்றும் தட்பவெப்பநிலை

இவை எல்லா வகை மண்களிலும் வளரும். அதிக உப்பு, காரத்தன்மை மற்றும் நீர் தேங்கும் பகுதிகளில் வளருவதில்லை. அங்ககத் தன்மையுள்ள மணல் கலந்த பசளை மண்ணில் நன்கு வளரும். வெப்பம் மற்றும் மிதவெப்ப காலநிலையில் நன்கு வளரும். உயர் வெப்ப நிலை மற்றும் நீண்ட நேரம் பகலாக உள்ள காலநிலையில் தாவர வளர்ச்சி மற்றும் எண்ணெய் உற்பத்தி சாதகமானதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இனப்பெருக்கம்

துளசி விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்ய, விதைகள் நாற்றங்கால் படுக்கையில் விதைக்கப்படுகின்றன. ஒரு எக்டர் நிலத்திற்கு 300 கி விதைகள் தேவைப்படும். நாற்றங்கால் அரை நிழல் மற்றும் பாசன வசதியுடன் இருக்க வேண்டும். மண்ணை 30 செ.மீ அளவிற்கு பறிக்க வேண்டும். நன்கு மக்கிய தொழுவுரங்களை மண்ணில் அளித்து மண்ணை பண்படுத்த வேண்டும். 4.5x1.0x0.2 மீ அளவுகொண்ட படுக்கைகளை அமைக்க வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு 2 மாதங்கள் முன்னரே, 1:4 என்ற விகிதத்தில் விதைகளை மணலுடன் கலந்து நாற்றங்கால் படுக்கைகளில் விதைக்க வேண்டும். 8 முதல் 12 நாட்களில் முளை வந்துவிடும் மற்றும் நாற்றுகள் 6 வாரங்களில் 4-5 இலைகளுடன் நடவிற்கு தயாராகிவிடும்.

விதையில்லாப் பெருக்கம்

துளிசியின் நுனிகளை வெட்டி அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் நடவு செய்தால் 90-100 சதவிகிதம் முளைத்துவிடும். இதற்கு 8-10 கணுக்கள் மற்றும் 10-15 செ.மீ நீளமுடைய துண்டுகள் உபயோகிக்கப்படுகின்றன. முதல் இரண்டு, மூன்று ஜோடி இலைகளைத் தவிர மற்றவை அகற்றப்படுகின்றன. பிறகு அவை நன்கு தயாரிக்கப்பட்ட நாற்றங்கால் படுக்கைகள் அல்லது பாலித்தீன் பைகளில் நடவு செய்யப்படுகின்றன. 4 – 6 வாரங்களில் வேர்கள் பிடித்துவிடும். அவை விளைநிலங்களில் நடவு செய்ய தயாராகின்றன. வரிசைகளுக்கு இடையே 40 செ.மீ இடைவெளியில் விட வேண்டும்.

உர மேலாண்மை

விளை நிலம் தயார் செய்யும்போது எக்டருக்கு 15டன் தொழுவுரத்தை அடியுரமாக அளிக்க வேண்டும். தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 120:60:60கிகி பரிந்துரைக்கப்படுகிறது.

பாசன மேலாண்மை

தாவரங்கள் நன்கு வளர ஒரு மாதத்திற்கு வாரம் இருமுறை பாசனம் செய்ய வேண்டும். பிறகு, மழையின் அளவு மற்றும் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து வார இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும்.

களை மேலாண்மை

களையில்லாமல் இருக்க போதுமான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முதல் களையெடுத்தல் நடவு செய்த ஒரு மாதம் கழித்து எடுக்க வேண்டும். அடுத்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக களையெடுக்க வேண்டும். பிறகு களையெடுத்தல் அவசியமில்லை. செடி வளர்ந்து புதர் போல் மண்ணை மூடி விடும். ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் களையெடுத்தல் அவசியமாகும்.

பயிர் பாதுகாப்பு

துளசி அதிகளவில் பூச்சி மற்றும் நோய்களால் தாக்கப்படுவதில்லை. சில பூச்சிகள், இலைச் சுருட்டுப் புழு போன்றவை துளசியை தாக்குகின்றன. 0.2 சதவிகிதம் மாலத்தியான் அல்லது 0.1 சதவிகிதம் மெத்தில் பாரத்தியான் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

துளசி போன்ற மருத்துவ தாவரங்களுக்கு ரசாயன பூச்சிக்கொல்லிகள் அவசியமில்லை. அங்கக தன்மைகொண்ட வேம்பு சார்ந்தவற்றை பயன்படுத்துவது போதுமானது. சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மீன் எண்ணெய் சோப்புகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 0.3 சதவிகிதம் தெளிக்கவும். நாற்று கருகல் மற்றும் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த நாற்றங்கால் படுக்கைகளில் 0.1 சதவிகிதம் மெர்குரியல் பங்கிசைடு மண்ணில் அளிக்க வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல்

முதல் அறுவடை நடவு செய்த 90 நாட்களுக்குப் பிறகு செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு 75 நாட்களுக்குப் பிறகும் அறுவடை செய்யலாம். பயிர் நன்கு வளர்ந்த பிறகு 15 செ.மீ அளவிற்கு வெட்டி அறுவடை செய்ய வேண்டும். அப்போதுதான் பயிர் அடுத்த அறுவடைக்கு தயாராகும். வெயில் காலங்களில் அறுவடை செய்வதால் அதிக அறுவடை செய்யலாம் மற்றும் எண்ணெய் அளவும் அதிகமாக இருக்கும்.

ஒரு வருடத்திற்கு ஒரு எக்டருக்கு துளசி மூலிகைகள் தோராயமாக 10,000 கிகி கிடைக்கும். இந்த மூலிகை 0.1 முதல் 0.23 சதவிகிதம் எண்ணெய் கொண்டது மற்றும் எக்டருக்கு 10-20 கிகி எண்ணெய் கிடைக்கிறது. பாசனம் செய்யப்பட்ட துளசியில் அதிக அளவு மகசூல் கிடைக்கும். (20 டன் வரை மற்றும் எண்ணெய் மகசூல் எக்டருக்கு 40கிகி வரை).

 

Last Updated : July 2016