தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் ::நோனி

நோனி


நோனி பழமானது உடல் நலம் மற்றும் புத்துணர்ச்சி தரக்கூடிய முக்கியமான பழமாகும். இதனுடைய பழத்தின் உபயோகமானது பழத்திலிருந்து வரும் விரும்பத்தகாத நெடியினால் மறைந்து விட்டது. இது இந்திய மல்பெரி பழம் என அழைக்கப்படுகிறது.

மண் மற்றும் பருவம் :

இவை எல்லா மண் வகைகளிலும் நன்கு வளரும். இவை கடினமான காலநிலை தாங்கி வளரக்கூடியவை. வடிகால் மண்ணில் நன்கு வளரும். அமிலத்தன்மை அதிகமாக உள்ள மண்களிலும் இவை நன்கு வளரும். ஈரத்தன்மை 20-350 செ. மற்றும் ஆண்டு மழையளவு 260-4000 மிமி இதற்கு தேவைப்படுகிறது.

காலநிலை :

நோனி பழங்கள் குளிர்காலத்தைவிட வெயில் காலங்களில் அதிகமாக விளையும். நோனி எந்த பகுதியில் விளைந்தாலும் வருடம் முழுவதும் புதிய இலைகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்கிறது.


இனப்பெருக்கம்:

நோனி விதைகள், தண்டுகள், வேர்த்துண்டுகள் அல்லது வின் பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதை மற்றும் தண்டுத் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. தரமான மற்றும் வீரியமிக்க பழங்களை தாவரத்திலிருந்து பறித்து விதைக்காக பயன்படுத்தலாம்.

விதை நேர்த்தி:
பழங்களை பறித்து, மென்மையாகும் வரை நன்கு பழுக்க வைக்க வேண்டும். இதற்கு சற்று பழுத்த பழங்களை சேகரித்திருந்தால் 3 முதல் 4 நாட்கள் எடுத்துக்கொள்ளும். நன்கு மென்மையான பிறகு, சதைப்பகுதி முற்றிலுமாக நீக்கப்பட்ட வேண்டும். தண்ணீரில் நன்கு கழுவி பின் மிதக்கவிட வேண்டும். ஆரோக்கியமான விதை நீரில் மிதக்கும். விதையானது உடனடியாக தண்ணீரில் மிதக்கும் பட்சத்தில், இளம் பழங்களானது தண்ணீரிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, சதைப்பகுதி முற்றிலுமாக நீக்கபட்டு விதையானது தேய்ந்து பெறப்படுகிறது. விதைகளை சேமிக்க வேண்டுமெனில், சதைப்பகுதி முற்றிலுமாக நீக்கப்பட்டு காற்றில் உலர்த்தப்பட வேண்டும். பின்பு காகிதப் பைகளில் சேகரித்து குளிர்ந்த அறையில் குறைவான ஈரப்பதத்தில் வைக்க வேண்டும். புதிய விதைகளில் 90 சதவிகித முளைப்புத்திறன் இருக்கும். ஹவாயன் நோனி பழத்தில் சராசரியாக ஒரு கிலோவிற்கு 40,000 விதைகள் இருக்கும்.
 

நடவிற்கு முன் விதைநேர்த்தி:


நடவிற்கு முன் நேர்த்தி செய்யாவிட்டால் நோனி விதைகள் 6 முதல் 12 மாதங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்திருக்கும். விதையின் கடினமாக மேல் தோலை நீக்குவதன் மூலம் விதையின் முளைப்பு காலத்தை குறைக்கலாம் மற்றும் விதையின் முளைப்பு விகிதத்தை அதிகரிக்கலாம். இதில் எளிதான முறை விதைகளை சதைப்பகுதியை நீக்குதற்கு முன்பு கலவை இயந்திரத்தில் வைத்து சில முறைகள் வெட்ட வேண்டும். மற்றொரு முறை விதையின் முளைப்பு விகிதத்தை அதிகரிக்க அதன் நுனிப்பகுதி சீவப்பட்டு தண்ணீரில் போட்டு தோல் பகுதி நீக்கப்படுகிறது. இம்முறைக்கு அதிக நேரம் தேவைப்படும். தோல் நீக்கப்பட்ட நோனி விதைகள் முளைப்பதற்கு வெப்பநிலை, சுற்றுச்சூழல், இரகம் மற்றும் மரபுவழி அமைப்பை பொருத்து 20-120 நாட்கள் ஆகும்.  380 செ-ல் விதை முளைப்புத்திறன் ஒரே சீராக இருக்கும்.

தொட்டி கலவை:

களையற்ற மற்றும் நூற்புழு இல்லாத இயற்கையான வனப்பகுதி மண்ணுடன் மணல் கலந்து, மக்கிய அங்ககப் பொருட்களை உபயோகித்தால் நாற்று உற்பத்தி நன்றாக இருக்கும். நூற்புழு தாக்கப்பட்ட மண் அல்லது ஊடகத்தை தவிர்க்க வேண்டும் அல்லது உபயோகிக்கும் முன் சூடாக்க (குறைந்தது 500 செ-ல் 15 நிமிடங்கள்) வேண்டும். நாற்றங்கால் பகுதிகளில் அதிகமாக இயற்கை ஊடகங்களை நோனி தயாரிப்பிற்கு உபயோகிக்கின்றனர். வணிக ஊடகங்களை அதிகமாக உபயோகிப்பதில்லை. மூடாக்கு (உதாரணம்: மரத்தூள், இலைக்குப்பை மற்றும் மணல்) போடுவதன் மூலம் களையைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்கலாம்.

நோனி விதைகள் நல்ல நிழலிருந்து முழு சூரிய ஒளியில் முளைக்கும். முளைப்பு ஒளி மற்றும் பாதி நிழலில் (20-30%) சீராக இருக்கும். முளைவிட்டவுடன் பாதியளவு நிழலில் (20-30%) கொள்கலனில் நாற்றுகளை தனித்தனியாக வளர்க்க வேண்டும்.

நடவு:
முளைத்த நோனி நாற்றுகளை 2 முதல் 12 மாதங்கள் வரை நடவு செய்யலாம். நடவு செய்த பிறகு, நடவு அதிர்ச்சி மற்றும் வேர் பிடித்தல் காரணமாக நாற்றின் வளர்ச்சி முதல் வருடம் மெதுவாக இருக்கும். அதன் பிறகு ஒளிச்சேர்க்கையின் போது வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

தண்டுத்துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் :

பல்வேறு அளவுடைய தண்டுத்துண்டுகளை பயன்படுத்தலாம். ஆனால், 20-40 செ.மீ (8-16) அளவு கொண்டு தண்டுத்துண்டுகள் பயனுள்ளதாக இருக்கும். தண்டுத்துண்டுகள் 3 வாரங்களில் வேர் பிடிக்கும். இவை 6 முதல் 8 வாரங்களில் நடவிற்கு தயாராகிவிடும். வேர்த்தண்டுகள் தொட்டிகளில் வளர்க்கபட்டு 24 வாரங்களில் நடவு செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

பயிர் பாதுகாப்பு :
நோனி சில பூச்சிகளால் தாக்கப்பட்டு பாதிப்படையும். அசுவிணி (உதாரணம் பூசணி மாவுப் பூச்சி, ஏபிஸ் காசிபி), செதில் பூச்சி (உதாரணம் பச்சை செதில் பூச்சி, காக்கஸ் விரிடிஸ்), கூன் வண்டு, இலைத் துளைப்பான், வெள்ளை ஈ (பச்சை செதில் பூச்சி, காக்கஸ் விரிடிஸ்) இலைப்பேன், (உதாரணம் பச்சை இலைப்பேன், ஹிலியேதிரிப்ஸ் ஹேமாரோடாலிஸ்) ஆகியவற்றால் தாக்கப்படுகிறது.

ரசாயன உரங்கள் சாறு உறிஞ்சும் பூச்சிகளை (உதாரணம் அசுவிணி, வெள்ளை ஈ, செதில் பூச்சி) கட்டுப்படுத்த உபயோகிக்கும்போது நோனி இலைகளில் புகைக்களி போன்று ஏற்படுகிறது. சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஊடுறுவும் பூச்சிக்கொல்லிகளை வருடத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். புழுக்களைக் கட்டுப்படுத்த தொடு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.

ஈரமான சமயங்களில்,  அதிக மழை அல்லது வெள்ளப் பகுதிகளில், நோனி பயிரை பூஞ்சை தாக்க வாய்ப்புள்ளது. இலைப்புள்ளி (கொலடோடிரைகம்) தண்டு, இலை மற்றும் காய் கருகல் (பைடோப்தோரா மற்றும் ஸ்கிலிரோடம்) நோய்கள் ஏற்படும். பூஞ்சை இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை அகற்ற வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பூசணக்கொல்லிகளை பயன்படுத்தலாம். சில இலைநோய்கள் பூஞ்சைகளால் (பூஞ்சை இலைப்புள்ளி பைதோப்தோரா என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது) ஏற்படுகின்றன. இவை இலைகள் மற்றும் காய் வளர்ச்சியை பாதிக்கின்றன. நோனியில் பொதுவாக மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய் வேர் முடிச்சு ஆகும். இவை வேர் முடிச்சு நூற்புழுவால் (மெலாய்டோகைனி) ஏற்படுகிறது. இவற்றை பாசனம், செயற்கை உரம் மற்றும் மக்கிய உரங்களை அளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

மருத்துவ பயிர்கள் உற்பத்தியில் இரசாய உரங்களை பயன்படுத்தக்கூடாது அல்லது பயன்பாடு குறைவாக இருக்க வேண்டும். அங்கக முறையில் கட்டுப்படுத்த வேம்பு சார்ந்தவற்றை பயன்படுத்த வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மீன் எண்ணெய் சோப்பு பயன்படுத்தலாம். தாவரங்களான பூண்டுசாறு, விட்டெக்ஸ், லாண்டனா கேமரா, கிளிரோடென்ரான், காலோடிராபிஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து சீரான இடைவெளியில் தெளிப்பதன் மூலம் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
நாற்றழுகல் மற்றும் வேரழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த டிரைகோடெர்மா விரிடி (2கிகி/எக்டர்) மற்றும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் (2கிகி/எக்டர்) அளிக்க வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல்:

பழங்கள் வெள்ளை நிறமாக மாறும்போது அல்லது நன்கு பழுத்தபின்பு அறுவடை செய்ய வேண்டும். மரம் 3 ஆண்டு முதல் மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும் மற்றும் 5 வருடங்களிலிருந்து தொடர்ச்சியாக மகசூல் கொடுக்கும். ஆண்டு மகசூல் நோனி வகைகள் அல்லது மரபுவழி மற்றும் சுற்றுச்சூழல் (மண்) மற்றும் சாகுபடி முறை அடிப்படையில் மாறுபடும். சராசரியாக ஆண்டு மகசூல் எக்டருக்கு 80,000கிகி அல்லது அதிக மகுசூல் கொடுக்கக்கூடிய ரகமாக இருந்தால் மகசூல் அதிகரிக்கும். மகசூல் மண்வளம், சுற்றுப்புற சூழல், மரபுவழி மற்றும் தாவர அடர்வு ஆகியவற்றின் மூலம் தீர்மாணிக்கப்படுகிறது.

பயன்கள் :

இவை உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இருதய நோயைக் குணப்படுத்த பயன்படுகிறது. இதில் உள்ள ஸ்கோபோலேடீன் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. எனவே இரத்த அழுத்தம் குறைகிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை உடலில் நைட்ரிக் ஆக்ஸைடை உற்பத்தி செய்கிறது. இதனால் இரத்தக் குழாய்கள் எளிதாக விரிவடைகின்றன. 

சுழற்சி மண்டலத்தை ஆரோக்கியமாக்குகிறது. இவை மூட்டு இணைப்புகள் நன்கு வேலைசெய்ய உதவுகிறது. நோனி இணைப்புகள் மற்றும் அதன் திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது. இது கணையம் நன்கு இயங்க உதவுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை அளிக்கிறது. நோனி பழச்சாறு அருந்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட செல்கள் தானாக சரிசெய்யப்படுகிறது. நோனியானது பாதிப்படைந்த வலுவில்லாத செல்களை சீராக்க உதவுகின்றது. இது கணையத்திலுள்ள சரியாக செயல்படாத பீட்டா செல்களை சீராக்குதல் (அ) அவற்றுக்கு உதவுவதன் மூலமாக இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது.

நோனி இருதய செல்களுக்கு அதிக மக்னீசியத்தை அளித்து அதன் செயலை ஒழுங்குபடுத்துகிறது.  மார்புச்சளி நோயைக் குணப்படுத்த உதவுகிறது. ஒவ்வாமை மற்றும் அழற்சியை சரிசெய்ய உதவுகிறது. ஹார்மோனை சமன் செய்கிறது. நரம்பு மண்டல பாதிப்பை குறைக்க உதவுகிறது.

நோனி டீ மலேரிய காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுகிறது. நோனி தாவரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் டிகாசன் மஞ்சட்காமாலை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தலையில் ஏற்படும் தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 
இலை அல்லது பழங்களானது எலும்புருக்கி நோய், தசைபிடிப்பு மற்றும் ரூமேட்டிசம் நோயைக் குணப்படுத்த உதவுகிறது. இதன் பழங்கள் பசியைத் தூண்டுகின்றன. தாவரப்பட்டை சிவப்பு நிறத்தையும், வேர்கள் மஞ்சள் நிறத்தையும் கொண்டுள்ளன. இவை சாயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவை பாரம்பரியமாக துணிகளுக்கு சாயம்போட பயன்படுத்தப்படுகிறது.

ஆதாரம்:

Dr. K. Rajamani, Department of Medicinal Plants,TNAU,
Medicinal plants production towards globalization,
Page no: 107-111.
ISBN no:978-81-905951-1-7
Last Update: March 2015