Horticulture
||| | | | | |
தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: கிராம்புத் துளசி
கிராம்புத் துளசி (கிளாசிமம்)
ஆசிமம் கிரேடிசிமம் - லேமியேசியே

துளசி வகைகளில் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் வகை கிளாசிமம் ஆகும். இவற்றின் இலைகளில் மிதைல் யூஜினால் (Methyle Eugenol) எனும் விலை உயர்ந்த மருந்துப் பொருள் அடங்கியுள்ளது. சாதாரணமாக இந்த மருந்துப் பொருள் கிராம்பில் (Clove) 75 சதம் அளவு காணப்படும். கிராம்பின் மணத்தை பெற்றிருந்தால் அதனை குளோவ் ஆசிமம் (Clove Ocimum) என்றும் அழைக்கின்றனர். துளசி வகைகளிலேயே இது மிகவும் அடர்த்தியாக வளரும் தன்மை கொண்டது. தற்போது ஜம்மு காஷ்மீரில் வணிகரீதியாகச் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பயன்கள்
இலைகளில் காணப்படும் யூஜினால், அழகுச் சாதனங்கள், சோப்பு, முகப்பவுடர் ஆகியவற்றிற்கு மணம் சேர்ப்பதற்கும், பிஸ்கட், கேக் மற்றும் இனிப்பு வகைகளுக்கும் ஐஸ் கிரீம் வகைகளுக்கும் மண மூட்டுவதற்காக சேர்க்கப்படுகிறது.

இரகங்கள்
ஜம்முவில் உள்ள மண்டல ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்தில் கிளாசிமம் -3சி எனும் வீரிய ஒட்டு இரகம் 1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரகத்தில் 90 முதல் 95 சதம் அளவு யூஜினால் மருந்துப் பொருள் அடங்கியுள்ளது. தற்போது இந்த இரகம் – (RRL-OG-14) ஆர்.ஆர்.எல்-ஓஜி-14 என்று பெயரிடப்பட்டு ஜம்மு மற்றும் உத்திரப் பிரதேச மாநிலங்களில் வணிக ரீதியாகச் சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மண்வளம்
எல்லா மண் வகைகளும் கிளாசிமம் சாகுபடிக்கு ஏற்றது. செம்மண் மற்றும் பொறை மண் வகைகள் வணிக ரீதியான சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை.

தட்பவெப்ப நிலை
கிளாசிமம் வறட்சியை நன்றாகத் தாங்கி வளரும் தன்மை கொண்டது. சமவெளியில் பயிரிட ஏற்றது. குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையிலும் நன்றாக வளரும்.

விதையளவு
ஒரு எக்டரில் விதைக்க இரண்டு கிலோ விதைகள் தேவைப்படும். விதைகளை மே-மாதத்தில் நாற்றங்கால் அமைத்து விதைக்க வேண்டும். நாற்றங்கால் அமைக்க 3 மீ X 3 மீ நீளம் மற்றும் அகலமுள்ள மேடைப்பாத்திகள் தயார் செய்து ஒரு சதுர மீட்டருக்கு 2 கிலோ தொழு எரு இட வேண்டும். விதைகளை நேர்க்கோடுகளில் தூவி விதைக்க வேண்டும். விதைகள் மிகவும் சிறியதாக இருந்தால் 1:4 என்ற வீதத்தில் மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.  விதைகள் விதைத்த 10 நாட்களில் முளைக்கும். பிறகு மணல் கொண்டு விதைகளை லேசாக மூடிய பிறகு காய்ந்த இலைச் சறுகுகளைக் கொண்டு பாத்திகளின் மீது பரப்பி பூ வாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும்.

நடும் பருவம்
ஜ%ன் - ஜ%லை அல்லது செப்டம்பர் – அக்டோபர் மாதம்.

நடவு முறை
அறுபது நாட்கள் வயதுடைய நாற்றுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம். நடவிற்கு பயன்படுத்தப்படும் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது எக்டருக்கு 15 டன் தொழு எரு இட்டு மண்ணைப் பண்படுத்த வேண்டும். 45 செ.மீ இடைவெளியில் பார்களை அமைத்து பக்கவாட்டில் தேர்ச்சியான நாற்றுகளை 30 செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.

உரமிடுதல்
ஒரு எக்டருக்கு 150 கிலோ தழைச்சத்து, 75 கிலோ மணிச்சத்து மற்றும் 75 கிலோ சாம்பல் சத்து தரவல்ல இரசாயன உரங்களை இட வேண்டும். இவற்றில் பாதியளவு தழைச்சத்து உரத்தை அடியுரமாக இட வேண்டும். மீதியுள்ள தழைச்சத்து உரத்தினை சமபாகமாகப் பிரித்து செடிகளை நட்ட நான்காவது மாத்திலும் மறுபாதியை ஏழாவது மாதத்திலும் இட வேண்டும். இதனால் இலை மகசூலை அதிகரிக்கலாம்.

நீர்ப்பாசனம்
செடிகளை நட்ட முதல் மாதத்தில் வாரம் இரண்டு முறையும், பிறகு மழை இல்லாத காலங்களில் வாரம் ஒரு முறையும் நீர்ப்பாசனம் தருவது அவசியம். வறட்சியான காலங்களில் இலைகளின் மகசூல் பாதிக்கப்படும்.

பின்செய் நேர்த்தி
செடிகளை நட்ட 60 நாட்களில் முதல் களை எடுப்பு செய்த பிறகு செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும். செடிகளை நட்ட 120 நாட்களில் இரண்டாவது களை எடுப்பு செய்தல் வேண்டும். இதற்குப் பிறகு செடிகள் உயரமாகவும் பரவலாகவும் விரைவில் வளர்ந்து விடுவதால் களைகள் முளைக்காது. செடிகளை நட்ட நான்காவது மாதத்திலும் ஏழாவது மாதத்திலும் இலைகளை அறுவடை செய்த பிறகு களை எடுத்து செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
செடிகளை நட்ட முதல் இரண்டு மாதங்களில் மாவுப் பூச்சியும், கரையான்களும் இலைகளைச் சேதப்படுத்தும், ஆதலால் லின்டேன் தூளை இலைகளின் மீது தூவி இவற்றைக் கட்டுப்படுத்தலாம். மாவுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 20 மி.லி. மாலத்தியான் அல்லது 20 மி.லி குவினைல்பாஸ் மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து மாவுப் பூச்சிகள் தோன்றும் போது தெளிக்க வேண்டும். இப்பயிரை நோய்கள் அதிகம் தாக்குவதில்லை.

அறுவடை
செடிகள் நட்ட 120 நாட்களில் பூக்க ஆரம்பிக்கும். இத்தருணத்தில் செடிகளைத் தரை மட்டத்திலிருந்து 15 செ.மீ நீளம் உயரத்தில் செடிகளை வெட்டி எண்ணெய் உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். பிறகு மூன்று மாதங்கள் இடைவெளியில் மறுபடியும் இலைகளை அறுவடை செய்யலாம். இலைகளை 24 மணி நேரத்துக்கு நிழலில் உலர்த்திய பிறகு வாசனை எண்ணெய் பிரித்தெடுக்கலாம்.

மகசூல்
ஒரு எக்டரில் 20-25 டன் பச்சை இலைகள் சராசரியாக ஓர் ஆண்டில் மகசூலாகக் கிடைக்கும். 200 முதல் 250 கிலோ வாசனை எண்ணெய் இவற்றிலிருந்து பிரித்து எடுக்கலாம்.

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014