தோட்டக்கலை :: வாசனைப் பயிர்கள்::ரோஸ்மேரி
ஊட்டி (ஆர், எம்) ரோஸ்மேரியின் சிறப்பு அம்சங்கள்
  • ஊட்டி (ஆர், எம்) 1 என்ற ரோஸ்மேரி இரகம் உதகை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் பராமரிக்கப்பட்ட ஐந்து வகையான ரோஸ்மேரி நாற்றுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டது.
  • இந்த இரகத்தின் செடிகள் துரிதமாக வளர்ச்சி (சராசரியாக 62 செ.மீ உயரம்) அடையும் தன்மையுடையது.
  • இந்த இரகத்தின் இலைகள் நீளமாகவும், உருளையாகவும், உள்நோக்கி மடங்கியதாகவும் இருக்கும்.
  • இந்த இரகம் வருடத்திற்கு 13 டன்கள் பச்சை இலை மகசூல் தரவல்லது. இதன் மகசூல் திறன் உள்ளூர் இரகத்தைக் காட்டிலும் 46 சதம் அதிகமாக உள்ளது.
  • இதன் இலைகள் அடர் பச்சை நிறத்துடன், தடிமனாக மற்றும் தோல் தன்மையுடனும் காணப்படும். இதன் பச்சை மற்றும் உலர்ந்த இலைகள் நல்ல மணத்துடன் சமையலுக்கு ஏற்றதாக உள்ளது.
  • நாற்றுகள் நட்ட 215 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். பின்பு வருடத்திற்கு மூன்று முறை 3 முதல் 4 மாத இடைவெளியில் அறுவடை செய்யலாம்.
  • இந்த இரகம் இலை கருகல் நோய், வெள்ளை ஈ மற்றும் அசுவினிக்கும் எதிர்ப்புத் திறன் கொண்டது.

  • இதன் இலைகள் அதிக எண்ணைச் சத்து கொண்டுள்ளது (0.9 சதம்) இதன் இலைகளில் அதிக அளவு மாவுச் சத்து (60.66 மி.கி-கி) மற்றும் புரதச்சத்து (24.90 மி.கி.கி) காணப்படுகிறது.
  • இதை மலைப் பிரதேசங்களில் ஜ%ன் - ஜ%லை மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் மானாவாரி பயிராக நடவு செய்யலாம்.
  • மலைப் பிரதேசங்களில் (கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டருக்கு மேல்) பயிர் செய்ய உகந்தது.
  • இந்த இரகம் வறட்சி மற்றும் பனி போன்ற காலநிலைகளை தாங்கி வளரக் கூடியது.

இயற்கை வேளாண்மையில் ஊட்டி (RM)1 ரோஸ்மேரி சாகுபடி குறிப்புகள்

மண் மற்றும் காலநிலை

கார அமிலத்தன்மை 5.5 முதல் 7 வரைகொண்ட நல்ல வடிகால் வசதி உள்ள செம்பொறை மண் ரோஸ்மேரி சாகுபடிக்கு உகந்தது. மண்ணின் கார அமிலத் தன்மை 5க்கும் குறைவாக இருக்கும்பொழுது எக்டருக்கு 2.5 டன் டாலமைட்டை மண்ணில் இட்டுபின் நட வேண்டும். பனி இல்லாத மித வெப்ப மழைக்காலம் மற்றும் மித கோடை (வெப்பநிலை 30 டிகிரிக்கு குறைவாக) உள்ள சீதோஷ்ண நிலை உகந்தது. கடல் மட்டத்திலிருந்து 900 முதல் 2500 மீட்டர் உயரத்தில் உள்ள குளிர்பிரதேச பகுதிகளில் நன்கு வளரும்
.

பருவம்

ரோஸ்மேரி வேர் நாற்றுக்களை ஜ%ன் - ஜ%லை மற்றும் செப்டம்பர் – அக்டோபர் போன்ற மாதங்களில் மானாவாரி பயிராக நடவு செய்ய ஏற்றது.

வயது

பல்லாண்டு பயிர். பனிரெண்டு வருடம் வரை வியாபார ரீதியில் பயிர் செய்யலாம்.
நிலம் தயார் செய்தல்

நிலத்தை இரண்டு முறை உழுது நன்கு பண்படுத்த வேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 50 டன் நன்கு மட்கிய தொழுஉரம், ஒரு டன் வேப்பம் புண்ணாக்கு, 5 டன் இயற்கை உயிராற்றல் மட்கு உரம் ஆகியவற்றை இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும். 30 செ.மீ உயரம், 1.5 மீட்டர் அகலம் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும். நாற்றுகள் நடும்பொழுது ஏக்கருக்கு 5 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 5 கிலோ பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை இட்டு மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும்.

விதை அளவு

50,000 நாற்றுகள் – எக்டர்.

நாற்றுகள் பெருக்கம் செய்யும் முறை

செடிகள் பூ விடுவதற்கு முன் 10 முதல் 15 செ.மீ நீளம் கொண்ட வெட்டுத் துண்டுகளை தேர்வு செய்ய வேண்டும். தண்டுக் குச்சிகளின் நுனி இலைகளை மட்டும் விட்டுவிட்டு கீழே எஞ்சியுள்ள இலைகளை நீக்கி நடுதலுக்கு உபயோகிக்க வேண்டும். தண்டுக் குச்சிகளின் வேர்விடும் திறனை அதிகரிக்க நடுவதற்கு முன்பு இயற்கை உயிர்சக்தி உரமான சாண மூலிகை உரம் 10 சத கரைசலில் 20 நிமிடம் நினைத்து பின் நட வேண்டும். பின் தண்டுத் துண்டுகளை மண் கலவை நிரப்பப்பட்ட பாலிதீன் பைகளில் நடவு செய்து நிழலான பகுதிகளில் வைத்து தினமும் இருமுறை நீர் ஊற்ற வேண்டும். அறுபது நாட்களில் வேர்விட்ட நாற்றுக்கள் நடுவதற்கு தயாராகி விடுகின்றன.
பாலித்தீன் தவிர்த்து மலைப்பாசி கொண்டு பதியன் நாற்று உற்பத்தி

நடவு

வேர் விட்டச் செடிகளை வரிசைக்கு வரிசை 45 செ.மீ மற்றும் செடிக்குச் செடி 45 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்து 6 மாதங்கள் கழித்து செடியின் மையத்தண்டை வெட்டி விட வேண்டும். அவ்வாறு செய்வதால் செடியின் பக்கக் கிளைகள் நன்கு வளரும்.

நீர் பாய்ச்சுதல்

இது வறட்சியை தாங்கும் தன்மை கொண்டுள்ளதால் மானாவாரியாக பயிரிட ஏற்றது. வறண்ட காலங்களில் நீர் பாய்ச்சுதலினால் பச்சை இலை மகசூல் அதிகமாக கிடைக்கும்.

உரமிடுதல்

அடியுரமாக தொழுஉரம் 50 டன்/ எக்டர், வேப்பம் பிண்ணாக்கு 1 டன்/ எக்டர், இயற்கை உயிராற்றல் மட்கு உரம் 5 டன்/ எக்டர் மற்றும் மண்புழு மட்கு உரம் 5 டன் / எக்டர் போன்றவற்றை நாற்று நடும்பொழுது இட வேண்டும். மேலும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா உயிர் உரங்களை எக்டருக்கு 5 கிலோ வீதம் அடி உரமாக இட வேண்டும்.

உயிர் உரங்கள் இடுதல்

நடவு செய்த இரண்டாம் ஆண்டு முதல் பாஸ்போபாக்டீரியம் மற்றும் அசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்களை எக்டருக்கு 5 கிலோ வீதம் 30 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். மேலும் பஞ்சகாவ்யம் 3 சதம் கரைசலை வருடத்திற்கு 5 முறை தெளிப்பதினால் இலைகளின் தரம் மற்றும் மகசூல் அதிகரிக்கும்.

பின்செய் நேர்த்தி

நட்டு ஒரு மாதம் கழித்து மண்ணை கொத்தி களை எடுக்க வேண்டும். வருடத்திற்கு 4 அல்லது 5 முறை களை எடுத்தல் அவசியம். பஞ்சகாவ்யா 3 சத கரைசலை இலைவழி தெளிப்பு வருடத்திற்கு 5 முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். தசகாவ்யா 3 சத கரைசலை வருடத்திற்கு 3 முறை தெளிக்க வேண்டும். மண்புழு மட்கு வடிநீர் 10 சத கரைசல் வருடத்திற்கு 3 முறை இலைவழி தெளிப்பு மூலம் ஒரு மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
இது பூச்சி மற்றும் பூசண நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.

மகசூல்

எக்டருக்கு 12 முதல் 13 டன் பச்சை இலைகள்

அறுவடை

ரோஸ்மேரி செடி பூக்கும் தருணத்தில் இலைகளை அறுவடை செய்யலாம். 30 முதல் 35 செ.மீ நீளம் கொண்ட பூக்கும் தருணத்தில் உள்ள இலையுடன் கூடிய மேல் தண்டுகளை அரிவாள் கொண்டு அறுவடை செய்ய வேண்டும். கடினத் தன்மையடையாத நன்கு வளர்ந்த தண்டு பகுதிகள் எண்ணை வடித்தலுக்கு உகந்தது. கடினத்தன்மை கொண்ட தண்டு பகுதிகளை எண்ணை வடித்தலுக்கு உபயோகப்படுத்தினால் எண்ணையின் தரம் மற்றும் மனம் பாதிக்கப்படுகிறது. முதல் வருடத்தில் நடவு செய்த 215 நாட்களில் மகசூலுக்கு தயாராகின்றது. பின்வரும் வருடங்களில் வருடத்திற்கு மூன்று முறை முறையே மூன்று முதல் நான்கு மாத இடைவெளியில் மகசூல் பெறலாம்.

இலைகளை பதப்படுத்துதல்

அறுவடை செய்த இலைகளில் மண் மற்றும் தூசு போன்றவற்றை நீக்க மூன்று முறை நன்கு கழுவ வேண்டும். பின் நிழலில் உலரவைக்க வேண்டும். நீலகிரி பகுதிகளில் 10 முதல் 15 நாட்கள் வரை உலர வைக்க வேண்டும். இலைகளை சரி சமமாக உலர வைப்பதற்கு மேட்டுப்பாளையம் போன்ற சமவெளி பகுதிகளுக்கு இலைகளை எடுத்துச் சென்று சிமெண்டு தரையில் மின்சார விசிறி மூலம் காற்றோட்ட வசதி ஏற்படுத்தி உலர வைக்க வேண்டும். இதனால் மூன்று நாட்களில் 10 சதம் ஈரம் கொண்டு நல்ல தரமான இலைகளைப் பெறலாம். பின் இவற்றை உணவுப்பொருள் அடைக்கும் தரம் கொண்ட பாலித்தின் பைகளில் சேகரிக்கலாம்
.
மகசூல்

வருடத்திற்கு எக்டருக்கு 2.5 டன் உலர்ந்த இலைகள்

 

ரோஸ்மேரி எண்ணை வடிகட்டுதல்

அறுவடை செய்தவுடன் உள்ள தண்டு மற்றும் இலைகளை நீராவி முறையில் வடித்து ரோஸ்மேரி எண்ணை பெறலாம். நிழலில் உலர்த்தப்பட்ட இலைகளிலிருந்தும் அதே அளவு எண்ணை பெறலாம். மேலும் தொடர்ச்சியாக 120 நிமிடங்கள் நீராவி வடித்தலுக்கு உட்படுத்தினால் அதிக அளவு எண்ணை பெறலாம்.

எண்ணெய் மகசூல்

எக்டருக்கு 80 முதல் 100 கிலோ
செலவு : ரூ.65,000/-
வருமானம் : ஏக்கருக்கு ரூ.1,25,000/- இலட்சம்

ரோஸ்மேரி மூலிகையின் மருத்துவ பயன்கள் :

  1. கேன்சர் நோய் வராமல் தடுக்க உதவுகிறது
  2. இத்தாவரத்திலிருந்து எடுக்கப்படும் நறுமண எண்ணெய் உயர்வகை வாசனைத் திரவியங்கள், முக அலங்கார பொருட்கள் மற்றும் குளியல் சோப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
  3. இத்தாவரத்தின் இலை வயிற்றுவலி அஜீரணம் உட்பட பல்வேறு உடல் உபாதைகளுக்கு மருந்தாகவும், வாசனை மூலிகை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
  4. ரோஸ்மேரி எண்ணெய் மனதினை அமைதிப்படுத்தவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது.
  5. ரோஸ்மேரி இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை தொடர்ந்து பருகுவதால் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது.
  6. தலைவலி, ஜலதோஷம் இவற்றிற்கு சிறந்த நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.

Last Update October 2014