தென்னை - பருவம் மற்றும் தட்ப வெப்ப நிலை

தமிழ்நாடு

  • மாதங்கள்     :         டிசம்பர் - ஜனவரி,   ஜூன் - ஜூலை
    தைப்பட்டம், ஆடிப்பட்டம்
  • நல்ல நீர்பாய்ச்சல் வசதியுள்ள பகுதிகளில் வருடம் முழுவதும் தென்னை நடவு செய்யலாம்.

கேரளா

  • பருவ மழை தொடங்கும் சமயத்தில், மே மாதத்தில் நடுவது சிறந்தது.
  • தண்ணீர் வசதி உறுதியாக உள்ள இடங்களில் ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கலாம்.
  • கீழ் மட்ட(தரை)ப் பகுதிகளில் கனமழைப் பருவம் முடிந்தபின் செப்டம்பர் மாதத்தில் நடுவது நல்லது.

கர்நாடகா: மே - ஜூன் அதாவது ஆடிப்பட்டத்தில் நடுவது சிறந்த பலனைத் தரும்.

 

அட்ச ரேகை மற்றும் கடல் மட்ட உயரம்

  • தென்னை பொதுவாக ஒரு வெப்ப மண்டலப் பயிர் ஆகையால் வெப்பமான சூழ்நிலைகளில் நன்றாக வளரும்.
  • தமிழ்நாடு மற்றும் கேரளா

      பூமத்திய ரேகையின் இருபுறமும் 23 டிகிரி அளவில் (20 வடக்கு மற்றும் 20 தெற்கு அட்சயரேகைகளுக்கு இடையில்) தென்னை நன்கு வளரக்கூடியது. சராசரி கடல் மட்டத்திலிருந்து 600மீ உயரத்தில் செழித்து  வளரும். எனினும் சில இடங்களில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 900 மீ உயரத்திலும் வளரக்கூடியது.

  • கர்நாடகா

   பூமத்திய ரேகையிலிருந்து  23° வடக்கு மற்றும் 23° தெற்கு அட்சயரேகையில் நன்கு வளர்கிறது. 26° வடக்கு மற்றும் 27° தெற்கு அட்சயரேகையில் தென்னையின் வளர்ச்சி நன்றாக இருந்தாலும் காய் சரியாகப் பிடிப்பதில்லை. ஆகையால் இந்த பகுதியில் வணிக ரீதியில் பரிந்துரைக்கப்படுவது இல்லை.
வெப்பநிலை

  • தென்னையின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியைப் பாதிக்கும் காரணிகளில் வெப்பநிலையும் முக்கியமான ஒன்றாகும். தென்னை அதிக மற்றும் குறைந்த அளவு வேறுபாடுகளை (பகல் மற்றும் இரவு வெப்பநிலைகளில்) விரும்புவதில்லை. அதே போன்ற மிக அதிகமான வெப்பநிலை தென்னை மரத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
  • வெப்பநிலை 20 - லிருந்து 30° செல்சியஸ்ஸிற்குள் இருக்க வேண்டும் 27° செல்சியஸ் தென்னைக்கேற்ற சராசரி வெப்பநிலை ஆகும்.

மழைப் பொழிவு

  • குறைந்தது 1000 மி.மீ மழைப்பொழிவு தென்னைக்கு மிக அவசியம். நல்ல வடிகால் வசதியுள்ள பகுதிகளில் 3000 மி.மீ மழைப்பொழிவிலும் தென்னை நன்கு வளரும். மழைப்பொழிவானது இப்பகுதிகளில் பரவலாக இருத்தல் அவசியம் (கேரளா; ஆண்டிற்கு 1300-2300 மிமீ பரவலான மழைப்பொழிவு சிறந்தது) நீண்டகாலம் மழைப் பொழிவு இல்லையென்றால் பாசனம் அவசியம்.
  • கோடை காலங்களில் மழை பெய்வது வறட்சியைத் தடுக்கும். மழைப் பொழிவு அதிகமாக இருப்பதைக் காட்டிலும் பரவலாக இருப்பது நல்லது.
  • 500லிருந்து 800 மி.மீ. குறைந்தளவு மழைப்பொழிவுள்ள இடங்களில் கூட மண் ஈரம் அதிகமாக இருக்கும் பட்சத்தில்  தென்னை மரத்தின் வளர்ச்சி துரிதமாக இருக்கும்

காற்று மற்றும் ஈரப்பதம்

  • சராசரி ஈரப்பத அளவு 80-95%  (கர்நாடகா-காற்றின் ஈரப்பதம் 60 % குறையாமல் இருத்தல் அவசியம்). அதிக ஈரப்பதம், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலை அதிகரிப்பதோடு மரத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து எடுப்பதையும் குறைக்கிறது.
  • நெட்டை மரங்களில் மகரந்தத்தூள் பரவுவதற்கும், கருவுறுதல் நடைபெறுவதற்கும் காற்று அவசியமானதாகும். அனுகூலமான காற்று வீசும் போது மரங்கள் மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதும், அதை தாவரப் பகுதிகளுக்குக் கடத்துவதும் அதிகரிக்கின்றது. பொதுவாக தென்னை மரங்கள் பலத்த காற்றைத் தாங்கி வளர்ந்தாலும், புயலைத் தாங்க இயலாது.
  • புயலினால் தென்னை மரங்கள் வேருடன் சாய்க்கப்படலாம் அல்லது தலைபகுதி திருப்பி வளைக்கப்பட்டு விடலாம். கடலுக்கு அருகாமையில் தென்னைகள் நன்கு வளரும் என்றாலும் கடலிலிருந்து 100 கி.மீ தெலைவில் உள்ள நிலப்பகுதிகளிலும் வளரும் இயல்புடையவை. கடலுக்கு அருகாமையில் நீர்த் தேவைக்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது.

சூரிய ஒளி

  • தென்னைமரத்திற்கு எப்போதும் அதிக அளவு சூரியஓளி தேவை. நிழலான பகுதிகளிலும், மேக மூட்டமான பகுதிகளிலும் தென்னை நன்றாக வளருவதில்லை. மேகமுட்டமானது நீர் மற்றும் ஊட்டச்சத்துக் கடத்துதலைக் தடைசெய்கின்றது.







 

 

 

 

 

 

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்