தென்னை- உங்கள் கேள்விகளும் -எங்கள் பதில்களும்

பூச்சி மற்றும் நோய் தாக்கம்

1. எலிகள் தென்னை மரத்தில் ஏறுவதை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?
        பெரிய தென்னைமட்டையை நடுவாக்காக கிழித்து ஒரு பகுதியை உச்சித்தண்டின் கீழ் சுற்றியும் மறுபகுதியை எதிர்திசையில் சுற்றவும்.
        நடுத்தண்டில் 2-3 அடிக்கு, சீமைக் கருவேல் அல்லது முற்கம்பிகள் சுற்றி விடவும்.  இவ்வாறு அணில் மற்றும் எலிகளை கட்டுப்படுத்தலாம்.

2. பூக்கள் மற்றும் குரும்பை உதிர்வதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

  • பூ உதிர்வைத் தடுக்க உப்பை (2 கிலோ/மரம்) பூ நுனியில் தடவவும். மேலும் வேர் பகுதிகளுக்கு உப்பு போட்டு நீர் பாய்ச்சவும்.
  • வேப்ப எண்ணெய் தெளித்து பூ உதிர்வை குறைக்கலாம்.
  • சாம்பல் இடவும்
  • பூப்பதற்கு முன் பாத்தியில் கொழிஞ்சி மற்றும் எருக்கு இடவும்.

3. தென்னையில் காண்டாமிருக வண்டு பெருக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

  • தோப்பில், மண் பானைகளில் தண்ணீரில் ஆமணக்கு புண்ணாக்கு போட்டு வைக்கவும்.  மூன்று நாட்களுக்கு பிறகு அதன் மணத்தால் வண்டு ஈர்க்கப்பட்டு சாகிறது.
  • வளரும் குருத்து மற்றும் பக்கத்துப் பகுதிகளில் வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளிக்கவும்.

4. தென்னையில் சிவப்பு கூண் வண்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
        கூண் வண்டு துளைத்த ஒட்டையை சுத்தம் செய்து, உப்பு போட்டு பஞ்சு கொண்டு அடைத்து வைக்கவும்.

5. தென்னை மரத்தண்டை கரையான் தாக்கத்திலிருந்து எவ்வாறு கட்டுப்படுத்துவது?

  • தென்னை மரத் தண்டின் 2 அடி உயரத்திற்கு சுண்ணாம்பு அடிக்கவும்
  • 500 கிராம் உப்பை 5 லிட்டர் தண்ணீரில் கலக்க தண்டின் மேல் ஊற்றவும்
  • பண்ணைப் பறவைகள் வளர்த்து, கரையானை சாப்பிட விடவும்

6. தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

  • கொழிஞ்சி மற்றும் தக்கைப் பூண்டு வளர்த்து, உழுது விடவும்
  • வேப்பம் புண்ணாக்கு இட்டு தொழு உரம் இடவும்

7. தென்னையில் சாறு ஒழுகல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
        ஒழுகும் இடத்தில் தண்டை சிறிதளவு வெட்டி விட்டு, சுத்தம் செய்து சுண்ணாம்பு தண்ணீர் ஊற்றவும்.

8. தேங்காய் எண்ணெயை தூசி இல்லாமல் சுத்தமாக, என்ன செய்ய வேண்டும்?
        தேங்காய் எண்ணெயில் சிறிது சக்கரை இட்டு சுத்தப்படுத்தவும்.

9.
தென்னையை தாக்கக் கூடிய பூச்சிகள் யாவை?

  • காண்டாமிருக வண்டு - ஒரிக்டெஸ் ரைனோசெரஸ்
  • சிலந்திப் பூச்சி - ஏசிரியா குயுரெரோனிஸ் (ஈரியோபைடு மைட்)
  • சிவப்பு கூண் வண்டு - ரின்கோபோரஸ் பெருஜினியஸ்
  • கருந்தலைப் புழு - ஒபிசினியா அரினோசெல்லா

10. தென்னை இலைகளில் எதனால் முக்கோண வெட்டு ஏற்படுகிறது?
        காண்டாமிருக வண்டு முக்கோண வெட்டுகளை உண்டாக்கிறது.  அவை இலைக் குருத்துகள் மற்றும் தென்னம்பாளைகளை சேதப்படுத்துகின்றன.  மத்திய தென்னங் குருத்து வெட்டுப்பட்டு, ஒட்டைகளுடன், மென்ற நார் குருத்தின் அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

11. தென்னை மரத்தில் காண்டாமிருக வண்டு தாக்கத்தை எவ்வாறு கண்டறிவது ?

  • வண்டு, விரியாத குருத்து மற்றும் பாளைகளை சேதப்படுத்துவதால், 10-15% மகசூல் குறையும்.
  • சேதப்பட்ட குருத்து விரியும் போது, முக்கோண வெட்டு தெரியும்.
  • மத்திய குருத்து வெட்டப்பட்டு/சுருண்டு இருக்கும்
  • நன்றாக விரிந்த இலைகளில் சாய் சதுர வெட்டுகள் தென்படும்
  • மத்திய குருத்தின் அடிப்பகுதியில், வண்டு, மென்று தின்ற நார் ஒட்டியிருக்கும்.


12. காண்டாமிருக வண்டின் வாழ்க்கை சுழற்சி எத்தனை நாள்?  எவ்வாறு காண்டாமிருக வண்டினை அறியலாம்?
முட்டை : குப்பை குழி அல்லது இலைகள் மக்கும் இடங்களில் 5-15 செ.மீ ஆழத்தில், நீள் வட்ட அழுக்கு வெள்ளை நிற முட்டைகள் காணப்படும்.  8-18 வரை முட்டை பருவம், ஒரு பெண் வண்டு 140-150 முட்டைகள் இடும். 
கூண் வண்டு புழு பருவம் :  புழுக்கள் குண்டாக, மந்தமாக வெள்ளை நிறத்தில் ‘சி’ வடிவத்திலும், காப்பி நிற தலையுடன் 5-30 செ.மீ ஆழத்தில் இருக்கும்.
கூட்டுப்புழுக்கள்: 0.3-1 மீ ஆழத்தில்  மண் கூடுகளில் கூட்டுப்புழுக்கள் இருக்கும்
முதிர் வண்டு:  காப்பிக் கருப்பு நிறம்/கருப்பு நிறத்தில் குண்டாக, தலையின் முன்னால் கொம்புடன் முதிர் வண்டு இருக்கும்.  ஆண் வண்டுகளுக்கு நீளமான, பெண் வண்டுக்கு குட்டையான கொம்பும் இருக்கும்.

13. தென்னையில் காண்டாமிருக வண்டு பிரச்சனைக்கு தீர்வு என்ன?
பழைய மறித்த தென்னை மரங்களை பிடுங்கி எரித்துவிட வேண்டும். வண்டு பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், குப்பைக் குழிகளில் உள்ள புழுக்களைப் கண்டு எடுத்து, அழிக்க வேண்டும். 0.01 % கார்பரில் மருந்தை வாரம் தோறும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தெளிக்கவும். 5 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு கரைத்து, மண் பாண்டங்களில் ஊற்றி வைக்கவும்.  முதிர் வண்டுகளைக் கவர்ந்து அழிக்க இது உதவும்.

14. காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்த ஏதாவது உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகள் உள்ளதா? இருப்பின் அவை யாவை?

  • 5 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு கலந்து, மண் பானைகளில் ஊற்றி, காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கவும்.
  • பேக்குளோவைரஸ் ஒரைசிடிஸ் ஏற்றப்பட்ட வண்டுகளை (15 எண்ணிக்கை/எக்டர்) தென்னந்தோப்பில் விடுவதன் மூலம், இலை மற்றும் உச்சி தண்டு சேதத்தை கட்டுப்படுத்தலாம்.
  • வேப்பங்கொட்டை பொடி + மணல் கலவையை (1 : 2) 150 கிராம்/மரம் தண்டு உச்சியின் மேற்பகுதியில், உட்பகுதியின்  உள்ள மூன்று இலைகளின் அடிப்புறத்தில் இட வேண்டும்.

15. காண்டாமிருகவண்டு கட்டுப்பாடிற்கு என்ன பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தலாம்?

  • வேப்பம் புண்ணாக்கு பொடி+மணல் (1:2) @ 150 கிராம்/மரம் அல்லது வேப்பங்கொட்டை பொடி+மணல் (1:2) 150 கிராம்/மரம் கலவையின் உட்பகுதியின் மூன்று இலைகளின் அடிப்பகுதியில் இட வேண்டும்.
  • 5 கிராம் 10 G போரேட் மருந்தை, துவாரங்கள் உடைய பாக்கெட்டுகளில் தண்டு உச்சியின் இலைகளில், உட்புறமாக உள்ள இரண்டு இலைகளில் அடித்தண்டில் படுமாறு போட்டு வைக்கவும்.  6 மாத இடைவெளியில், வருடத்திற்கு 2 முறை மருந்து போட வேண்டும்
  •  25 கிராம் செவிடால் + 200 கிராம் மணல் கலவையை ஏப்ரல்-மே, செப்டம்பர்- அக்டோபர் மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் ஒரு வருடத்திற்கு, 3 முறை இட வேண்டும்.   10.5 கிராம் அந்து உருண்டகளை (3 உருண்டகள்) மணலால் மூடி 45 நாட்களுக்கு ஒரு முறை இட வேண்டும். - கேரளா வேளாண்மை பல்கலைக் கழகம்.
16. காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த பின்பற்றப்படும் கைவினை முறைகள் யாவை?
  • பிளவு பட்ட தென்னந் தண்டுகள் மற்றும் இலைகளை புதிய கள் பானம் செலுத்தியும், கள் பானைகளை தோப்பில் வைத்து வண்டுகளை ஈர்த்து அழிக்கலாம்.
  • ஒவ்வொரு அறுவடையின் போதும், உச்சித்தண்டை கண்காணித்து, முதிர் வண்டுகளை எடுத்து, அழித்து விட வேண்டும்.
  • கோடை காலத்தில் முதல் மழைக்கு பின்பும், பருவ மழைக்கு பின்பும், விளக்குப் பொறி வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • ரைனோ லூர் இனக் கவர்ச்சிப் பொறியை ஒரு எக்டருக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் பொருத்தி வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

17. கொப்பரை மகசூல் அதிகமாக என்ன செய்ய வேண்டும்?   கொப்பரை அளவு எதனால் குறைகிறது?

  • ஈரியோபைடு சிலந்தி பூச்சி தாக்கத்தினால், கொப்பரை அளவு குறைகிறது.    
  • இதனைக் கட்டுப்படுத்த கொப்பரை மகசூலை அதிகரிக்கலாம்.

18. தென்னையில், 2-3 மாத குரும்பைகளில் எதனால் முக்கோண மஞ்சள் புள்ளிகளும்முதிர்ந்த குரும்பைகளில் கோந்து வெளியேற்றமும்  காணப்படுகிறது?

  • ஈரியோபைடு சிலந்தி பூச்சி இந்த அறிகுறிகளை தோற்றுவிக்கிறது
  • முதல் பருவத்தில் அல்லி வட்ட இதழ்களுக்கு அருகில் முக்கோண மஞ்சள்  புள்ளிகள்
  • காய்ந்த திசுக்கள்
  • காய்களில் காப்பி நிற சுவடுகள், குறுக்கு பிளவுகள் மற்றும் தென்னை மட்டையில் பிளவுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோந்து வடிதல்
  •  பிளவுகளுடன், கூடிய கடினமான மட்டைகள் உடைய உருவமாற்றமடைந்த காய்கள்
  • 2-3 மாத குரும்பைகளில், முக்கோண மஞ்சள் புள்ளிகள் தென்படும்.  பின்னர் காப்பி நிறத்தில் மாறும்.  தாக்கம் தீவிரமானால் குரும்பைகள் உதிரும்.

19. தேங்காய் மட்டையின் தரத்தை சிலந்தி பூச்சி தாக்கம் எவ்வாறு
     பாதிக்கிறது?
குரும்பைகளின் ஓடுகளில் காப்பி நிற சுவடுகளை ஏற்படுத்துகிறது.  குரும்பைகள் வளர வளர, காப்பி நிற சுவடுகள், காய்ந்த கரும்புள்ளிகளாக மாறி குறுக்கு பிளவு உண்டாகிறது.  சீரான வளர்ச்சி இல்லாததால் குன்றிய சிறிய காய்கள் கிடைக்கின்றன.   கொப்பரை மகசூல் குறைகிறது.  தீவிரமான தாக்கம் இருக்கும் போது, தேங்காய் தரம் குறைவதோடு, அவற்றை உறித்து எடுக்கும் செலவும் அதிகமாகிறது.

20.
எவ்வாறு சிலந்தி பூச்சியை கண்டறியலாம்?
இளங்குஞ்சுகளும் முதிர் பூச்சிகளும், பழுப்பு நிறத்தில் நீண்ட உடலுடன் புழு போன்று  காணப்படும்.

21.
தென்னையில் நிரந்தரமாக சிலந்தி பூச்சியைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
2% வேப்பெண்ணெய் + பூண்டு கரைசல் அல்லது நீமசால் T/S 1% மருந்தை @ 4 மில்லி/லிட்டர் தண்ணீர் அல்லது 0.4%  வெட்டபிள் சல்பர் பரிந்துரைக்கப்படுகிறது.
        குறிப்பு - 10 லிட்டர் 2% வேப்பெண்ணெய் + பூண்டு கரைசல் (300 மில்லி தண்ணீரில் சார் எடுத்தது) தயாரிக்க, 50 கிராம் சோப்புக் கட்டியை (500 மில்லி தண்ணீர் கரைத்த) 200 மில்லி வேப்பெண்ணெய்யில் சேர்க்கவும்.
50 கிலோ தொழு உரம் மற்றும் 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு/மரம்/வருடம் இடவும்.
தென்னந்தோப்பில், பாத்திகளில், சணப்பை, காராமணி மற்றும் கலப்பகோனியம் போன்ற பசுந்தாள் உரங்களை விதைத்து மண்ணில் உழுதுவிடும் போது, கோடை காலத்தில் நிலப்போர்வையாக இருப்பதோடு,  மெதுவாக மக்க மக்க, ஊட்டச்சத்துக்கள் வெளிவரும்.

22.
சிலந்தி பூச்சிக் கட்டுப்பாட்டிற்கு, மருந்து தெளிக்கும்போது பின்பற்ற வேண்டிய முறைகள் யாவை?

  • ராக்கர் தெளிப்பான் பயன்படுத்தும்போது ஒரு மரத்திற்கு 1-1.5  லிட்டர் தெளிப்புக் கரைசல் தேவை.  கைத்தெளிப்பான் பயன்படுத்தும்போது,  500-700 மில்லி தெளிப்புக் கரைசல் தேவை.
  • மகரந்த சேர்க்கை நடைபெறாத பாளைகளை விட்டுவிட்டு,  2-7 வது குலைகள் வரை தெளிக்கவும்.  3, 4, 5, வது குலைகள் நிறைய தெளிக்கவும்.  ஏனெனில் அவற்றில் அதிகமான பூச்சித்தாக்கம் இருக்கும்.
  • வருடத்திற்கு மூன்று முறை தெளிக்கவும்.   டிசம்பர்-பிப்ரவரி,  ஏப்ரல்-ஜுன், மற்றும் செப்டம்பர்-அக்டோபரில் தெளிக்கவும்.  மருந்து தெளிக்கும்போது அவை சரியாக குரும்பையின் அல்லி வட்டங்களில் நன்றாக படும்படி தெளிக்கவும்.  சராசரியாக ஒரு மரத்திற்கு 1-1.5 லிட்டர் தெளிப்பு கரைசல் தேவை.  பூச்சிக்கொல்லி தெளிக்கும் முன் காய்களை பறித்து விடவும்.

23. சிலந்தி பூச்சி தாக்கத்தை மேலாண்மை செய்ய என்ன உர நிர்வாகம் பரிந்துரைக்கப்படுகிறது?

  • தமிழ்நாட்டில்,  சிலந்திப்பூச்சி கட்டுப்பாட்டு நிர்வாக முறைகள் பின்பற்றப்படுகிறது
  •  தொழு உரம் மற்றும் உர நிர்வாகம் (மண்ணில் இடுதல்/மரம்/வருடம்)
  • யூரியா 1.3 கிலோ
  • சூப்பர் பாஸ்பேட் 2.0 கிலோ
  • பொட்டாஷ் 3.5 கிலோ
  • சிலந்திப் பூச்சிக்கான நோய் எதிர்ப்புத்  திறனை உருவாக்க அதிகமான அளவு பரிந்துரைக்கப்படுகிறது.
  • வேப்பம் புண்ணாக்கு @ 5 கிலோ
  • தொழு உரம் (மக்கிய உரம்) @  50 கிலோ
  • நுண்ணுாட்டங்கள்  (மண்ணில் இடுதல்/மரம்/வருடம்)
  • போராக்ஸ் 50 கிராம்
  • ஜிப்சம் 1.0 கிலோ
  • மெக்னீசியம் சல்பேட் 500 கிராம்
  • சணப்பை பசுந்தாள் பயிரை வருடத்திற்கு இருமுறை ஊடுபயிர் செய்யவும்.  (விதையளவு 30 கிலோ/எக்டர்)

24. தென்னை மரத்தண்டில் துளைகளும்காப்பி நிற கோந்து வடிதலும் எதனால் ஏற்டுகிறது?
·         சிவப்புக் கூண் வண்டு,  தண்டில் துளைகள் மற்றும் காப்பி நிற கோந்து வடிதலை உண்டாக்குகிறது.   இதனால் உள் இலைகள் மஞ்சள் அடைந்து, நாளடைவில்,  மத்திய குருத்து வாடல் ஏற்படுகிறது. 
ஏனைய அறிகுறிகள்

  • மென்ற நார்பகுதிகள் வெளியே வருவதால்
  • இலை அடிப்பகுதி பிளவு ஏற்படுகிறது
  • மத்திய குருத்து வாடல்

25. எவ்வாறு சிவப்பு கூண் வண்டை தெரியலாம்?
இளமஞ்சள் நிறத்தில் கால்கள் இல்லாத பூச்சிகள், சிவப்பு,  காப்பி நிற கூண் வண்டுகள் தெரியும்.  ஆண் வண்டுகள் நீளமான முகத்துடன் காணப்படும்.

26.
சிவப்பு கூண் வண்டு தென்படும் போது, என்னென்ன உடனடி கட்டுபாடு முறைகள் மேற்கொள்ள வேண்டும்?

  • தண்டு காயம் ஏற்படுவதை தவிர்க்கவும்.  இலைகளை வெட்டும்போது,  120 செ.மீ உயரம் விட்டு வெட்டினால் புழுக்கள் வெட்டுப்பகுதிகளில் உட்புகுவதை தவிர்க்க முடியும்.
  • தண்டின் உச்சியில் உள்ள முதல் மூன்று இலைகளுக்கு அடியில் மணல்: வேப்பம்புண்ணாக்கு அல்லது வேப்பம் கொட்டை பொடி  (2:1) கலவை போடவும்.  அல்லது லிண்டேன் 1.3 மருந்தை (1:1 கன அளவு) மூன்று மாதத்திறகு ஒருமுறை இட்டு காண்டாமிருக வண்டு தாக்கத்தை கட்டுப்படுத்தி, அவ்வண்டு பாதித்த பகுதிகளில் சிவப்பு கூண் வண்டு முட்டையிடுவதைத் தவிர்க்கலாம்.
  • பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் பொறிகளை பயன்படுத்தவும்.

27. தென்னையில் எவ்வாறு சிவப்புக் கூண் வண்டுத் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்?

  • எல்லா ஓட்டைகளையும் அடைத்து,  தாக்கம் அடைந்த நீளத்தைவிட துாரமாகத் துளைத்து, பைரோகோன் E அல்லது  கார்பரில் 1% அல்லது 10 மில்லி மோனோகுரோட்டோபாஸ் மருந்தை உட்செலுத்தவும்.   தண்டின் மேல் பகுதியில் மட்டும் ஒரு ஓட்டையை விட்டுவிட்டு பிற துளைகளை அடைத்து விடவும்.  1% கார்பரில் (20 கிராம்/லிட்டர் அல்லது 0.2% டிரைகுளோர்போன் அல்லது 0.1% எண்டோசல்பான் கரைசல் @ 1 லிட்டர் உட்செலுத்தி மூடவும்.  தேவையெனில் ஒரு வாரம் கழித்து மறுபடியும் மருந்து செலுத்தவும்.
  • 1% டி.டி.வி.பி அல்லது அலுமினியம் பாஸ்பைடு ஒன்று அல்லது இரண்டு உபயோகித்து கூண் வண்டைக் கட்டுப்படுத்தவும்.


28.
சிவப்பு கூண் வண்டிற்கு என்னென்ன பொறிகள் உள்ளன?

  • தென்னை மரப் பொறிகள்
  • இனக்கவர்ச்சிப் பொறிகள் (2 எக்டருக்கு ஒன்று)

29. சிவப்பு கூண் வண்டு தாக்கத்தைக் கட்டுப்படுத்த தென்னை மரப்பொறிகள் மற்றும் இனக் கவாச்சி பொறிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
தென்னை மரப் பொறிகள்:
        மண் பானைகளில் கரும்பு மொலாசஸ் 2.5 கிலோ அல்லது கள் 2.5 லிட்டர் (அன்னாசி (அ) கரும்பு மொலாசஸ் +  ஈஸ்ட்)  + அசிடிக் அமிலம் 5 மில்லி + 5 கிராம் ஈஸ்ட் வைக்கவும்.  30 குறுக்காக வெட்டிய தென்னந்தண்டு அல்லது இலைக்காம்புகளை வைத்து அதிகமான சிவப்புக் கூண் வண்டிகளை பொறியில் சிக்க வைக்கலாம்.  பொறிகளில் கூண்டு வண்டை கொல்லுவதற்காக ஏதாவது ஒரு பூச்சிக் கொல்லியை உபயோகிக்கவும்.
இனக்கவர்ச்சி பொறி  @  1/2 எக்டர்
         பெரிய வாலியில் பூச்சிகள் உள்ளே,  செல்லும்படியாக 3-4 ஓட்டைகள் போடவும்.  உள்ளே இனக்கவர்ச்சி பொறியை தொங்கவிட்டு தண்ணீர் விடவும்.  பூச்சித்தாக்கம் அதிகமாக இருக்கும் இடங்களில் வாலிகளை வைக்கவும்.  ஒரு வாரம் கழித்து, வண்டுகளை நீக்கி, புதிய தண்ணீர் ஊற்றி கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

30
. தென்னந்தண்டில் எதனால் காயங்கள் ஏற்படுகிறது?   மட்டைக்காம்புகள் ஏன் சிவப்பாகிறது?
         பட்டைக் கூண் வண்டு, இலைக்காம்புகளை சிவப்பாகிறது.    தண்டில் காயங்கள் தென்படும், தண்டு ஒழுகல் நோய் வரும், முதிர்ந்த பூச்சிகள் கருப்பு நிறத்தில் சிறியதாக இருக்கும்.

31
. தென்னையில் பட்டை கூண் வண்டை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
       0.2% பென்தியான  (அ) 0.2% டைகுளோர்வாஸ் மருந்தை ஸ்டவ் திரியில் நனைத்து மருந்தை தண்டில் உட்செலுத்தவும்.  பிறகு ஓட்டையை மூடிவிட்டு, தேவைப்பட்டால் ஒரு மாதம் கழித்து மறுபடியும் செய்யவும்.

32.
தென்னம்பட்டையில் உள்ள சிறிய ஓட்டைகளை எவ்வாறு சரி செய்யலாம்?
         மரப்பட்டை துளைப்பான் சிறிய ஓட்டைகளை ஏற்படுத்தி உள்ளே நார்க் குகைகளால்  இணைக்கிறது.    இதற்கு 0.2% பென்தியான் (அ) 0.2” டைகுளோரோவாஸ் மருந்தை ஸ்டவ் திரியில் நனைத்து உட்செலுத்தி கட்டுப்படுத்தலாம்.  தேவைப்பட்டாடல் ஒரு மாதம் கழித்து மறுபடியும் மருந்து செலுத்தலாம்.

33
. எப்பொழுது கருந்தலை கம்பளிப்புழு தென்னையை தாக்குகிறது? அதன் அறிகுறிகள் என்ன?

  • மழைக்கு பிறகு, நவம்பர்-மே மற்றும் ஆகஸ்ட்-நவம்பரில் பூச்சித்தாக்கம் தென்படும்.  எல்லா வயது தென்னை மரங்களும் பாதிக்கப்படுகிறது.
  • அடி இலைகளின் சிற்றிலைகளில் காய்ந்த அறிகுறிகள் தெரியும். சிற்றிலைகளின் மேல்பகுதியில், பஞ்சுக்கூடுகள் இருக்கும்.
  • கேரளாவில் கோடை காலத்தில் ஜனவரி-மே மாதத்தில் பூச்சித்தாக்குதல்  தீவிரமாக இருக்கும்.

34. கருந்தலைக் கம்பளி புழுக்களை எவ்வாறு கண்டறியலாம்?

  • புழுக்கள் காப்பிப் பச்சை நிறத்தில் இருக்கும்.
  • பஞ்சுக் கூடுகளில் கூட்டுப்புழு இருக்கும்.
  • முதிர் அந்துப்பூச்சி சாம்பல் வெள்ளை நிறத்தில் காணப்படும்.

35. எவ்வாறு கருந்தலைக்  கம்பளி புழுவை கட்டுப்படுத்தலாம்?

  • பூச்சித்தாக்கம் தீவிரமாக இருக்கும்போதும், உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் பயனளிக்காத போதும் இலையின் அடிப்பாகத்தில் 0.2% டைகுளோர்வாஸ் (100 EC)  0.05% மாலத்தியான 1 மி.லி/லிட்டர், குயினல்பாஸ் 0.05% எண்டோசல்பான் 0.05% அல்லது பாசலோன் 0.05% மருந்தை தெளிக்கவும்.
    குறிப்பு: பூச்சிக் கொல்லிகள் தெளித்த 21 ஆம் நாள் முதல் புழு மற்றும் கூட்டுப்புழு ஒட்டுண்ணிகளை வெளியிடவும்.
  • 10 மில்லி 36 WSC மோனோகுரோட்டோபாஸ் மருந்து + 10 மில்லி தண்ணீர் கலந்து 7 x 10 செ.மீ பாலித்தீன் பைகளில் ஊற்றி வேர்மூலம் உட்செலுத்தவும்.

36. கருந்தலைப் புழுக்களை கட்டுப்படுத்த என்னென்ன உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் உள்ளன?

  • கோனியோசஸ் நெபண்டிடிஸ், பிரேகிமேரியா நோசடோய் போன்று புழு பருவ ஒட்டுண்ணிகளை (2 மற்றும் 3 ஆம் பருவ புழுக்கள்) @ 1:8  (சார் உயிரினம்) @ 3000/எக்டர் தென்னங்குருத்துப் பகுதியில் விடவும்.
  • பெத்திலிட், பிரேக்கனாய்டு, இக்நிமோனிட்ஸ், போன்ற புழுப்பருவ ஒட்டுண்ணிகளையும்,  யூபோடிலிட் போன்ற கூட்டுப்புழு பருவ ஒட்டுண்ணிகளையும் ஜனவரி மாதம் முதல் வெளியிட்டு கோடை காலத்தில்  பூச்சிப் பெருக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

37. தென்னையில் எதனால் இலை உதிர்கிறது?
       நத்தைப் புழு இலை உதிர்வை ஏற்படுத்துகிறது.  மணல் கலந்த வண்டல் மண் உள்ள கேரள கர்நாடகப் பகுதிகளில் புழுக்கள் காணப்படும்.  வேர்களை சேதப்படுத்தும், கன்றுகளில் துளைவிட்டு அடித்தண்டு வரை செல்லும்.  இதற்கு, இதன் ஒரு  வருட ஆயுட் காலத்தில் 8 மாதம் புழுப்பருவம்.  செப்டம்பர்-அக்டோபரில் அதிகமான புழுக்கள் இருக்கும்.  முன் பருவ மழைக்கு பின்னர் மே-ஜுன் மாதத்தில் மண்ணில் இருந்து  முதல் வண்டுகள் வெளியே வரும்.

38. நத்தைப்புபுழுக்களை எவ்வாறு கண்டறியலாம்?

  • பச்சை மற்றும் சாம்பல் கருப்பு நிற புழுக்கள்
  • அடர் காப்பி நிற ஓடுகள் உடைய கூட்டுப்புழுக்கள் பச்சை சிறகுகள் அந்துப்பூச்சி அல்லது சிறிய சாம்பல் காப்பி நிற அந்துப்பூச்சி

39. எவ்வாறு நத்தைப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்?

  • டைகுளோர்வாஸ் 76 WSC  2 மில்லி/லிட்டர்
  • பேசில்லஸ் துரிஞ்சன்சிஸ்
  • டிரைஅசோபாஸ் 40 EC  5 மில்லி
  • மிதைல் டெமட்டான் 25 EC  4 மில்லி/லிட்டர்
  • 15 மில்லி மோனோகுரோட்டோபாஸ் + 15 மில்லி தண்ணீர் கலந்து வேர்மூலம் உட்செலுத்துதல்,

40. சிற்றிலை நுனிகள் ஏன் சுருள்கிறது?
·         தென்னை தத்துப்பூச்சியினால் இலைநுனிச் சுருள் ஏற்படுகிறது.

41
. தென்னை தத்துப்பூச்சி, தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

  • கார்பரில் 50 WP 2 கிராம்/லிட்டர
  • இலைக் கம்பளிப்புழுவைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 10 மில்லி + தண்ணீர் 10 மில்லி கலந்து,  45 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை வேர்மூலம் உட்செலுத்தவும்.
  • விளக்குப்பொறிகள் வைத்து பூச்சிகளை பிடிக்கவும்.
  • டைகுளோர்வாஸ் 76 WSC மருந்தை 2 மில்லி/லிட்டர்


42.
இலையின் நடு நரம்பை மட்டும் விட்டுவிட்டு இலைப்பகுதிகளை எது சாப்பிடுகிறதுஅதை எவ்வாறு கண்டறிவது?

  • இலை தின்னும் கம்பளிப் புழுக்கள் நடுக்குச்சியை மட்டும் விட்டு, இலைகளை திண்ணும். புழுக்கள் முந்தைய பருவத்தில் காப்பி நிறத்திலும்,  பின்னர் பச்சை நிறத்திலும் இருக்கும்.  பூச்சிகள்  பழுப்பு வெள்ளை நிறத்தில் காணப்படும்.
  • டைகுளோர்வாஸ் 76 WSC 2 மில்லி/லிட்டர் தெளிக்கவும்.


43. தென்னை இலையில் எதனால் சீரற்ற ஓட்டைகள் வருகின்றன?
      பை புழு இலைகளில் சீரற்ற ஓட்டைகளை ஏற்படுத்துகிறது.  புழுக்கள் நுாற்களால் ஆன முக்கோண உருண்டை கூடுகளில் காணப்படும்.

44. எதனால் இளவயதில் குரும்பை உதிர்வும், வேர்பாதிப்பும் ஏற்படுகிறது?
வெள்ளைப் புழுக்கள் குரும்பை உதிர்வையும், வேர் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன.  பிற அறிகுறிகள் என்னவெனில்
        மஞ்சள் நிற இலைகள்
        பூப்பு தாமதமடைதல்
        மகசூல் குறைவு
போன்றவை ஆகும்.


45
. தென்னை சிற்றிலைகளை வெட்டி சுருட்டுவது எது?
        சுவேஸ்டஸ் கிரிமியஸ், சிற்றிலைகளில் ஒரு பக்கத்தை வெட்டி சுருட்டி கூட்டினுள் செலுத்தும். 
அதன் அடையளங்கள்
       புழுக்கள்:  மென்மை, பச்சை நிறத்தில் இரு முனைகளிலும் சிறுத்து,  தலை மற்றும் உடலுக்கு இடையே தடுப்பு உள்ள புழுக்கள்.
        பூச்சி: முன் இறகுகளில், சாக்லேட் காப்பி நிறத்தில் மஞ்சள் புள்ளிகள் இருக்கும்.

46
. வெள்ளைப் புழுவை எவ்வாறு கண்டறியலாம் ?
        கோடுகள் போட்ட இறகுகளுடன் காப்பி நிற வண்டுகள் தென்பட்டால், வெள்ளைப் புழுக்கள் இருக்கும் என அறியலாம்.

47
. வெள்ளைப் புழுவை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

வேம்பு, ஐலேந்தஸ் மற்றும் அக்கேசியா போன்ற கவர்ச்சிப் பயிர்களை நடலாம்.  அல்லது இலைகளுடன் வேப்பங்குச்சிகளை வெட்டி தென்னை மரங்களுக்கு அருகில் மழைக்காலத்தில் நட்டு வைக்கலாம்.  வண்டுகளை கவர்ந்து இழுக்க உதவுகிறது.

விளக்குப்பொறி @ 1/எக்டர்

நடவின் போது, மண்ணில் மாலத்தியான் 5 D அல்லது என்டோசல்பான் 4 D மருந்து, 25 கிலோ இடவும்.  (மரம் ஒன்றுக்கு 10 D போரேட் மருந்து 100 கிராம் அல்லது குளோர்பைரிபாஸ் 0.04% கரைசல் நனைக்கவும்) வருடத்திற்கு இருமுறை என ஏப்ரல்-மே மற்றும் செப்டம்பரில் மருந்து இடவும்.

48
. கரையான் தாக்கத்தை எவ்வாறு தவிர்க்கலாம்?

  •    5% வேப்பெண்ணெய்யில் துணியை நனைத்து, தென்னை மரத்தின் அடித்தண்டில் 2 மீட்டர் உயரத்திற்கு சுற்றி வைக்கவும்.
  • 1% காப்பர் சல்பேட் கரைசல் (அல்லது) 80% முந்திரி ஓடு எண்ணெய் அல்லது குளோர்பைரிபாஸ் @ 3 மில்லி/லிட்டர் தண்ணீர் அல்லது 5% வேப்பெண்ணெய் அல்லது 20% வேப்பங்கொட்டை கரைசல் தெளித்து இலைகளில் கரையான் தாக்கத்தை கட்டுப்படுத்தவும்.

நாற்றங்காலை 0.05% குளோர்பைரிபாஸ் கரைசலில் 20-25 நாட்கள் இடைவெளியில் நனைக்கவும்.  தென்னை மரத் தண்டை அதே மருந்து கொண்டு பூசவும்.

49
தென்னை இலைகளின் மேற்ப்புரத்தில் எதனால் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படுகிறது?
     கண்ணாடி இறகுப்பூச்சித் தாக்கத்தால், இலைகளில், வெள்ளைப் புள்ளிகள் ஏற்படும்.

50
. எவ்வாறு கண்ணாடி இறகுப் பூச்சிகளை கண்டறிவது?
         அடர் ஒட்டுகளுடன் வெள்ளை நிற குஞ்சுகள் வெள்ளை நிற வலையுடன் கூடிய கண்ணாடி இறகுகள்

மேலே செல்கமேலே செல்க

51
. கண்ணாடி இறகுப் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
      கீழ்கண்டவற்றுள் ஏதாவது ஒன்றை தெளிக்கவும். 

  •    மாலத்தியான் 50 EC 2 மில்லி/லிட்டர்
  •   டைமெத்தோயேட் 30 EC 1 மில்லி/லிட்டர்
  •   மிதைல் டெமட்டான் 25 EC 1 மில்லி/லிட்டர்
  • பாஸ்பமிடான் 40 SL 1.25 மில்லி/லிட்டர்
  •  மோனோகுரோட்டாபாஸ் 36 WSC 1 மில்லி/லிட்டர் (0.01%- CDB)
  • மித்தோமில் 25 EC 2 மில்லி/லிட்டர்
  •  வேப்பெண்ணெய் 3%

52. இலைகளின் அடிப்பாகத்தில் வட்ட செதில்கள், மேல்பாகத்தில் மஞ்சளடைதல் எதனால் ஏற்படுகிறது?
·         செதில் பூச்சிகள் இலைகளின அடிப்பாகத்தில் வாழ்கின்றன.  மேல்பாகத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன. மேலும் வட்ட வடிவில் மெழுகு சுரக்கின்றன.

53
. தென்னையில் செதில் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

  •    மாலத்தியான் 50 EC 2 மில்லி/லிட்டர்
  • முதிர்ந்த காய்களைப் பறித்துவிட்டு, மோனோகுரோட்டோபாஸ் 36 WSC @ 2 மில்லி/எக்டர் தெளிக்கவும்.

மருந்து தெளித்த 45 நாட்களுக்குப் பிறகு தான் காய் பறிக்க வேண்டும்.

54. தென்னையின் நடு இலைகள் குன்றி,  ஒன்றோடு ஒன்று இணைந்து, குரும்பு உதிர்வது எதனால் ஏற்படுகிறது?

சூரைப்பூச்சி தாக்குதலால் இலைகள் குன்றி,  ஒட்டிக்கொண்டு இருப்பதோடு குரும்பை உதிர்வு ஏற்படுகிறது.

55.
சூரைப்பூச்சி தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
        கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கவும்

  •    மாலத்தியான் 50 EC 2 மில்லி/லிட்டர்
  •    டைமெத்தோயேட் 30 EC 1 மில்லி/லிட்டர்
  •    மிதைல் டெமட்டான் 25 EC 1 மில்லி/லிட்டர்
  •    பாஸ்பமிடான் 40 SL 1.25 மில்லி/லிட்டர்
  •    மோனோகுரோட்டோபாஸ் 36 WSC 1 மில்லி/லிட்டர்
  •    மெத்தேமில் 25 EC 2 மில்லி/லிட்டர்
  •    வேப்ப எண்ணெய் 3%

56. தென்னைப் புனுகுகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
        0.5 கிராம் கார்போபியூரான் 3 G குருணைகளை கனிந்த வாழைப்பழத்துடன் சேர்த்து நச்சுப் பொறியில் வைக்கலாம்.

57.
தென்னந்தோப்பில் எலித் தாக்கத்தை எவ்வாறு கண்டறியலாம்?

  • இளநீரை எலிகள் சேதப்படுத்தும்.
  • எலி வங்குகள் இருக்கும்.

தென்னைமரத்தடியில் உதிர்ந்த காய்கள் கிடக்கும்.

58
. எலிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

  •   மரத்தின் அடிப்பகுதியில், 2 மீ  உயரம் வரை, 40 செ.மீ அளவிலான நி.மி சீட்டுகள் அல்லது சீமைக் கருவேல் முள் போட்டு எலிகள் மரம் ஏறுவதைத் தடுக்கலாம்.
  • பன்னிரண்டு நாட்களுக்கு இடைவெளியில் இரண்டு முறை மரத்தின் உச்சித் தண்டில் 0.005% பிரோமோடைலோன் 10 கிராம்/மரம் என்ற கணக்கில் பொறி வைக்கலாம்.
  • எலிகள் பதுங்கும் இடங்களில் அலுமினியம் பாஸ்ப்பைடு நச்சுப் பரப்பி மாத்திரையை உபயோகிக்கவும்.

பிரோமோடைலோன் எலிக் கொல்லியை மெழுகுப் பெட்டிகளில் போட்டு (30/எக்டர், ஒவ்வொன்ன்றும் 10 கிராம்) தென்னை மரங்களில் வைக்கவும். 12 நாட்கள் கழித்து மறுபடியும் செய்யவும். எலி எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மறுபடியும் செய்யவும்.

59.   தென்னையில், உருவமாறிய குரும்பைகள், குரும்பை உதிர்வு மற்றும் கோந்து ஓழுகல் எதனால் ஏற்படுகிறது?

  தட்டைக்கால் நாவாய் பூச்சித்தாக்கம் ஏற்பட்டால் மேற்கூறிய அறிகுறிகள் தெரியும்.  இளநீரின் கழுத்துப்பகுதியில், கோந்து ஒழுகல் ஏற்படுவதால், இளநீர் தண்ணீர் இல்லாமல் போகும்.

60.
தட்டைக்கால் நாவாய்ப்பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
         1% கார்பரில் அல்லது என்டோசல்பான் கரைசலை புதிய தென்னம்பாளைகளில் உள்ள பெண்பூக்களின் மகரந்த சேர்க்கை நேரத்திற்கு பிறகு, தெளிக்கவும்.  பிற்பகலில், பழைய குலைகள் மற்றும் இலைகளை விட்டுவிட்டு, உச்சித்தண்டு முழுவதற்கும் மருந்து தெளிக்கவும்.

61. நூற்புழு தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
·         நுாற்புழுக்களில், ரேடோபோலஸ் சிமிலிஸ் என்ற துளைப்பான் நுாற்புழு வேரை சேதப்படுத்துகிறது.

62
. தென்னையில் என்னென்ன நோய்கள் வரும்?
    

  • குருத்தழுகல்
  • அடித்தண்டு அழுகல் அல்லது தஞ்சாவூர் வாடல்
  • வேர் வாடல் (அ) வேர் அழுகல்
  • தண்டு ஓழுகல் நோய்
  • மாகாளி நோய்

63 . குருத்து இலைகள் எதனால் மஞ்சளடைந்து, அழுகி கீழே உதிர்கிறது?
        பைட்டோப்தோரா பால்மிவோரா தாக்கம் குருத்து அழுகலை ஏற்படுத்தும்.  பெரிய தென்னை மரங்களில், இளங்குரும்பைகள் உதிரும்.  பருவ மழை ஈரப்பதம் அதிகமாக இருக்கும்பொழுது இந்நோய் தாக்குகிறது.  குருத்து இலைகள் மஞ்சளடைந்து, அழுகி, உதிர்ந்து விடும்.

64
. குருத்தழுகலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

  • பாதிக்கப்பட்ட குருத்துகளை அகற்றிவிட்டு, 0.25% காப்பர் ஆக்சிகுளோரைடு கரைசல் ஊற்றி நனைத்து விடவும்.  பருவ மழை துவங்கிய பின்னரும், தெளிக்கலாம்.
  • போர்டோ பேஸ்ட் பூசி, புதிய தண்டு வரும் வரை மழையிலிருந்து பாதுகாக்கவும் (1 லிட்டர் போர்டோ பேஸ்ட் தயார் செய்ய  100 கிராம் காப்பர் சல்பேட் மற்றும் 100 கிராம் சுண்ணாம்பை தனித்தனியே 500 மில்லி தண்ணீரில் கரைக்கவும்)

குறிப்பு: மே-செப்டம்பர் மாதங்களில் இதனைச் செய்யலாம்.

65.
அடித்தண்டு  அழுகல் எதனால் ஏற்படுகிறது?

  • கேனோடெர்மா லுசிடெர்ம் என்ற பூஞ்சாணம் அடித்தண்டழுகல் அல்லது தஞ்சாவூர் வாடல் நோய் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 
  • அதன் அறிகுறிகள் 
  •    தண்டின் அடிப்பாகத்தில் உள்ள பிளவுகளில் சிவப்பு காப்பி நிற கோந்து ஒழுகுதல், பிறகு மேல் படருதல்
  •    ஒழுகல் பகுதியில் திசுக்கள் அழுகிப் போதல்
  •    இலைகள் உதிர்தல்  
  •    தண்டின் அடிப்பாகத்தில் தட்டுக்காளான் தோன்றுதல்

66. தென்னை மரங்களில் தஞ்சாவூர் வாடல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
         அடி மரத்தண்டைச் சுற்றி, 40 லிட்டர் 1% போர்டோ கலவை ஊற்றி மண்ணை நனைக்கவும்.  இது தவிர பல உழவியல் முறை கட்டுப்பாடுகளும் வேதியல் முறைக் கட்டுப்பாடுகளும் உள்ளன.

67.
தஞ்சாவூர் வாடல் நோயை கட்டுபடுத்த என்னென்ன உழவியல் முறைகள் உள்ளன?

  • ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு 200 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் + டிரைகோடெர்மா விரிடி 200 கிராம் போடவும்.
  • 200 கிராம் பாஸ்போபேக்டீரியா மற்றும் 200 கிராம் அசட்டோ பேக்டர் மருந்துகளை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவும்.
  • மரத்தின் அடித்தண்டின் 4 மீ துாரத்தில் ஒதுக்க நிலைக் குழிகள் அமைத்து சல்பர் துாள் இடவும்.
  • பசுந்தாள் பயிர்களை வளர்த்து நிலத்தில் உழுதுவிட வேண்டும்.
  • 50 கிலோ தொழு உரம் + 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு +இரசாயண உரங்கள் கலந்து இட வேண்டும்.
  • பச்சிலை உரப்பயிர்களை வளர்த்து பூக்கும் முன் நிலத்தில் உழுது விட வேண்டும்.
  • 50 கிலோ தொழுஉரம்/மரம் இடவேண்டும்
  • டிரைகோடெர்மா உள்ள வேப்பம் புண்ணாக்கை 5 கிலோ/மரம்/வருடம் இட வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் நான்கில் ஒரு பங்கு மட்டும் இடவும்.

68. தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோயைக் கட்டுப்படுத்த எந்த மருந்துகளை உபயோகிக்கலாம்?

  • அரோபஞ்சின் கரைசல் 2 கிராம் + 1 கிராம் காப்பர் சல்பேடை 100 மில்லி தண்ணீரில் கலந்து அல்லது 2 மில்லி டிரைடிமார்ப் 100 மில்லி தண்ணீரில் கலந்த கரைசலை வேர்மூலம் உட்செலுத்தலாம்.  (பயன்படுத்தும் வேர் பென்சில் தடிமன் இருக்க வேண்டும்).  சாய்வான வெட்டு கொடுக்கவும்.  கரைசலை பாலித்தீன் பையில் எடுத்து வெட்டிய வேர்பகுதி, கரைசலில் படும்படி நனைக்கவும்.
  • தண்டு ஊசிமுறை/வேர்மூலம் உட்செலுத்துதல் முறைகள் மூலம்  3 மில்லி கேலிக்ஸின்/மரம் மருந்து செலுத்தவும்.
  • 40 லிட்டர் 1% போர்டோ கலவை அல்லது 0.1% டிரைடிமார்ப் அல்லது ஏதாவது தாமிர பூஞ்சானைக் கொல்லிகளை 15 செ.மீ ஆழத்திற்கு நனைத்து விடவும். ( 25 லிட்டர் 0.1% கேலிக்ஸின் கரைசல் ஊற்றி நனைத்து விடலாம்).
  • 4 மாதத்திற்கு ஒரு முறை செய்யவும்.
  • 2 மில்லி டிரைடிமார்ப் மருந்தை 100 மில்லி தண்ணீரில் கலந்து 4 மாதத்திற்கு ஒருமுறை வேரில் உட்செலுத்தவும்.  2 மில்லி கேலிக்சின் மருந்தை 100மில்லி தண்ணீரில் கலந்து, 3 மாதத்திற்கு ஒருமுறை வேர்மூலம்  உட்செலுத்தலாம்.

69. தென்னையில் உச்சித்தண்டு சிறுத்தல் மற்றும் இலை அளவு குறைதல் எதனால் ஏற்படுகிறது?

  • வேர் அழுகல் நோயினால், மேற்கண்ட அறிகுறிகள் தென்படும்.  உச்சித்தண்டு சிறுத்தல், இலை அளவு குறைதல், இலைகளில் கோடு விழுதல், பழைய இலைகள் மஞ்சளடைதல், சிற்றிலைகள் காய்ந்து போதல், வேர்கள் வாடி அழுகி போதல் போன்ற அறிகுறிகள் தெரியும்.

70. தென்னையில் வேர்  வாடல் நோய் கட்டுபாடு முறைகள் பற்றிக் கூறுக?

  • பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றவும் சரியான முறையில் நீர்பாசன முறைகளைக் கையாண்டு, பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பின்பற்றவும்.
  • காராமணி, சணப்பை, மைசோசா இன்விசா கலப்பகோனியம்,  மியுகனாய்டஸ், போன்ற பசுந்தாள் உரங்களை ஏப்ரல்-மே மாதங்களில் பயிரிட்டு, செப்டம்பர்-அக்டோபரில் நிலத்தில் உழுதுவிடவும்.
  • ஒரு வாரத்திற்கு ஒரு மரத்திற்கு 250 லிட்டர் தண்ணீர் விடவும்.
  • ஊடுபயிர்/கலப்புப் பயிர் முறைகளை தென்னந்தோப்பில் பின்பற்றவும்.
  • முறையான வடிகால் வசதிகளை பின்பற்றவும்.

71. தென்னையில் முதிர்ந்த இலைகளில் எதனால் சாம்பல் நிறப் புள்ளிகள் ஏற்படும்?
பெஸ்டலோசியா பால்மிவோரா, சாம்பல் நிற புள்ளி/இலைக்கருகல் அறிகுறிகளை தோற்றுவிக்கும்.  இதன் அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில், சாம்பல் நிற வளையத்துடன் சிறிய மஞ்சள் நிறப்புள்ளிகள் காணப்படும்.
  • பின்னர் அவை சாம்பல் வெள்ளை நிறமாகிவிடும்.  இப்புள்ளிகள் இணைந்து கருகிய பகுதிகளை ஏற்படுத்தும்.
  • நோய் தாக்கம் தீவிரமாக இருக்கும்போது, இலைகள் முழுமையாக காய்ந்து சருங்கிவிடும்.

72. தென்னையில் இலைக் கருகல் பின் அழுகல்  நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

பாதிக்கப்பட்ட பழைய இலைகளை அகற்றி எரிக்கவும்.  இலைகளில் 0.2% காப்பர் ஆக்ஸிகுளோரைடு தெளித்து நோயைக் கட்டுப்படுத்தலாம். – TNAU

1% போர்டோ கலவை அலலது 0.3% புரோபிகோஅசோல் தெளிக்கவும்- கேரளா வேளாண்மை பல்கலைக்கழகம்.

73. தென்னை மரங்களில் எதனால் தண்டு ஒழுகல் ஏற்படுகிறது?

  • திலவியாப்சிஸ் பாராடாக்சா தண்டு ஓழுகல் நோயை ஏற்படுத்துகிறது.  அடித்தண்டு பிளவுகளில், சிவப்பு பிரவுன் திரவம் ஒழுகும். தண்டில் மேற்பகுதிகளில் அதிகமான ஒழுகல் குறிகள் தெரியும்.

74. தென்னையில், தண்டு அழுகல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
       

  • பாதிக்கப்பட்ட திசுக்களை வெட்டிவிட்டு, 5% டிரைடிமார்ப் அல்லது போர்டோ கலவை பூசவும்.  1-2 நாட்களுக்கு பிறகு தார் பூசவும்.  வெட்டிய துண்டுகளை எரிக்கவும்.
  • வெட்டிய துண்டுகளை எரிக்கவும்.  தண்டில் பிற காயங்கள் ஏற்படுத்துவதை தவிர்க்கவும்.
  • 50 கிலோ தொழு உரத்துடன், 5 கிலோ, டிரைகோடெர்மா உள்ள வேப்பம்புண்ணாக்கை செப்டம்பர் மாதத்தில் பாத்திகளில் இடவும்.
  • தண்டு ஒழுகல், மேற்பகுதிகளுக்கு பரவுவதைத் தடுக்க 5% கேலிக்ஸின் (5 மில்லியை 100 மில்லி தண்ணீரில் கலக்கவும்).  மருந்தை,  ஏப்ரல்-மே, செப்டம்பர்-அக்டோபர், ஜனவரி-பிப்ரவரி என வருடத்திற்கு மூன்று முறை வேரில் உட்செலுத்தவும்.
  • 25 மில்லி டிரைடிமார்ப் மருந்தை 25 லிட்டர் தண்ணீரில் கலந்து 4 மாதத்திற்கு ஒருமுறை மண்ணை நனைத்து விடவும்.
  • கோடை காலத்தில் போதுமான நீர் பாசனமும், மழை காலத்தில் வடிகால் வசதியும் செய்து தரவும்.
  • சைலிபோரஸ் மற்றும் டையோகேலண்டிரா போன்ற தண்டு துளைக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த கார்பரில்  50% WP @ 3 கிராம்/லிட்டர்  தண்ணீர் பயன்படுத்தவும்.

75. பூ உதிர்வு மற்றும் குரும்பை உதிர்வும் ஒருசேர தென்னையில் ஏற்படும்.  இதற்கு காரணம் என்ன?
மகாளி அல்லது காய் அழுகல் மற்றும் காய் உதிர்வை பைடோப்தோரா பால்மிவோரா என்ற பூஞ்சாணம் உண்டாக்குகிறது.  இதன் அறிகுறிகள்

  • குரும்பை உதிர்வு, மகரந்த சேர்க்கைக்கு முன்னும் பின்னும் அதிக அளவிலான பூக்கள் உதிர்தல் இந்நோயின் முக்கிய அறிகுறியாகும்.
  • தேங்காய் காம்புகளில் நிறமாற்றம் தெரியும்  முதலில் நீரில் நனைந்தது போல, அடர் பச்சை நிறத்தில் தெரியும்.
  • நாளடைவில், காப்பி நிறத்தில் மாறிவிடும்.  அந்த இடத்தில் உள்ள திசுக்கள் இறந்துவிடுவதால்,  குழிகள் ஏற்படும்.  பூஞ்சாணம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
  • அழுகல் தேங்காய் மட்டைகளுக்கு பரவுவதோடு, சில நேரங்களில் காய்களுக்குள்ளும் சென்றுவிடும்.
  • தென்மேற்கு பருவமழைக்குப் பிறகு, காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது நோய் தீவிரமாக இருக்கும்.

76. மகாளி நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

  • 1% போர்டோ கலவை அல்லது 0.5% காப்பர் ஆக்சிகுளோரைடு, மரத்தின் உச்சியில் பருவமழை துவங்கும்முன் தெளிக்கவும்.  பிறகு 40 நாட்கள் இடைவெளியில் ஒன்று அல்லது இருமுறை தெளிக்கவும்.
  • உதிர்ந்த காய்களை அகற்றி அழித்துவிடவும்.
  • குட்டை மரங்களுக்கு, போர்டோ கலவைக்கு பதில் டைதேன் M - 45 தெளிக்கவும்.

77. தென்னையில் இலை அழுகல்  எதனால் ஏற்படுகிறது?

  • கொலிட்ரோடிரைகம் கிளியோஸ்போராய்டஸ், எக்சரோகிலம் ரோஸ்டிரேட்டம், பியுசேரியம் போன்ற பூஞ்சாணத் தாக்கத்தால் இலைப்புள்ளி ஏற்படுகிறது.  தாக்கப்பட்ட மரங்களில் குருத்து இலைகளில், நீரில் நனைந்த காப்பி நிற புள்ளிகள் தெரியும்.  அழுகிய இலைகள் விரியும்போது, அழுகிய பகுதிகள் காய்ந்து,  காற்றில் பறந்து விடும்.

78. எவ்வாறு இலைப்புள்ளியை கட்டுப்படுத்துவது?

  • குருத்து இலைகளின் அழுகிய பகுதி மற்றும் பக்கத்து இலைகளை அகற்றவும்.
  • ஹெக்சாகோனசோல் (கான்டாப் 5 E) 2 மில்லி அல்லது மான்கோசெப் (டைதேன்  M 45 - இண்டிபில் M 45) - 3 கிராம் மருந்தை 300 லிட்டர் தண்ணீரில் கலந்து, குருத்து தண்டின் அடிப்பாகத்தில் படுமாறு ஊற்றவும்.  (2-3 முறை) நோய். தாக்கம் குறைவாக இருந்தால் இது போதுமானது.
  • உச்சி முதல் 2 இலைகளுக்கு பூச்சிக்கொல்லி கலவை (போரேட் 10நி/செவிடால்/கார்பரில் 20 கிராம் மருந்தை 200 கிராம் மணலுடன் கலக்கவும்) இடவும் போரேட் 10 G -10 கிராம் மருந்தை 200 கிராம் மணலுடன் கலந்து, குருத்தின் அடிப்பகுதியில் போடவும்.
  • மரத்தின் உச்சி மற்றும் இலைகளுக்கு 1% போர்டோ கலவை அல்லது 0.5% காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது மான்கோசெப் தெளிக்கவும்.  ஜனவரி, ஏப்ரல்-மே மற்றும் செப்டம்பரில் தெளிக்கலாம்.  தெளிக்கும்போது,  குருத்து தண்டுகளுக்கு படுமாறு தெளிக்கவும்.

79. தென்னையில், புதிதாகத் தோன்றும் இலைகள் சுருங்கி சிறுத்தல், இலை நுனி கருகல் எதனால் ஏற்படுகிறது?

  • உச்சி வளர்ச்சி குன்றிப்போதல்
  • குருத்து  தண்டில்  சின்னதான, சுருங்கிய, குன்றிய இலைகள் வெளிவரும்.
  • இலை நுனிகள் கருகும், குருத்து விரியாமல் இருக்கும், ஒன்றாக ஒட்டி இருக்கும்.  இறுதியாக மரம் காய்ந்து விடும்.

80. தென்னையில் குருத்து தண்டு வளர்ச்சி குன்றுதல்”  எவ்வாறு கட்டுப்படுத்தப்படுத்துகிறது?

  • நோய் அறிகுறி துவக்க காலத்தில் வருடத்திற்கு இருமுறை, பிப்ரவரி-மார்ச் மற்றும் செப்டம்பர்-அக்டோபரில், 50 கிராம் போராக்ஸ் மருந்து உரங்களுடன் சேர்ந்து பாத்திகளில் இட வேண்டும்.  வேர் வாடல்  தாக்கம் உள்ள பகுதிகளில், வருடம் ஒருமுறை மரம் ஒன்றுக்கு 200-300 கிராம் போராக்ஸ் போட வேண்டும்.

81. குன்றிய இலை வளர்ச்சியும், இலைகள் மஞ்சளடைதலும் எதனால் ஏற்படுகிறது?

  • தழைச்சத்துப் பற்றாக்குறை இருக்கும்போது இந்த அறிகுறிகள்  தோன்றும்.  மரங்களின் வளர்ச்சி குன்றிப் போகும் அடி இலைகள் மஞ்சளாகும்.  முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

82. தழைச்சத்து பற்றாக்குறையை    எவ்வாறு சரிசெய்யலாம் ?

  • 2% யூரியா கரைசலை இரண்டு வாரங்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும்.  ஒரு மரத்திற்கு யூரியா 1-2 கிலோ போட்டு, தழைச்சத்துப் பற்றாக்குறையை சரி செய்யலாம்.

83. தென்னை இலைகளில், வளர்ச்சி குறைவு, எண்ணிக்கை குறைவு மற்றும் இலையளவு குறைதல் எதனால் ஏற்படுகிறது?

  • மணிச்சத்து பற்றாக்குறையினால் மேற்கூறிய அறிகுறிகள் காணப்படும்.

84. மணிச்சத்து பற்றாக்குறையை எவ்வாறு சரிசெய்யலாம்?

  • 2% டி.எ.பி  கரைசல் தெளித்து, (இரண்டு வார இடைவெளியில் இரண்டு முறை) சரிசெய்யலாம்.  அல்லது மரம் ஒன்றுக்கு 5 கிலோ தொழு உரம் இடலாம்.

85. இலைகள் மஞ்சள் நிறத்தில் காப்பி நிறப் புள்ளிகளுடன் காணப்படும் காரணம் என்ன?

  • சாம்பல் சத்துப் பற்றாக்குறையினால் இந்த அறிகுறி தெரியும்.  முதலில் முதிர்ந்த இலைகளில் இந்த அறிகுறி காணப்பட்டு பின்னர் இளம் இலைகளுக்கு பரவும்.
  • இலைகளில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு புள்ளிகள் தோன்றி, பிறகு காய்ந்து போதல்,
  • பல வர்ண இலை
  • இலை ஓரங்களில் காய்ந்த பகுதிகள் தோன்றி பின்னர் உதிர்தல், நடு நரம்பு மட்டும் இருத்தல்.

86. சாம்பல் சத்துப் பற்றாக்குறையை எவ்வாறு சரிசெய்யலாம்?

  • மரம் ஒன்றிற்கு 3.4 கிலோ பொட்டாசியம் சல்பேட்டுடன் 2 கிலோ மெக்னீசியம் சல்பேட் சேர்த்து, வருடத்திற்கு 4 முறை இட வேண்டும்.

87. கொப்பரை ரப்பர் போன்று ஆதல், இலைகள் காய்ந்து உதிர்வதும் எதனால் ஏற்படுகிறது?

  • சல்பர் பற்றாக்குறையினால் இலைகள் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் மாறி, இலை நுனி காய்ந்து, இலைகள் உதிர்ந்து விடும்.  இலைகள் வளைந்து கீழ்நோக்கி தொங்கும்.  ரப்பர் போன்ற கொப்பரையினால் உற்பத்தி குறைகிறது.

88. சல்பர் குறைபாட்டை எவ்வாறு சரி செய்வது?

  • மரம் ஒன்றிற்கு, ஒரு வருடத்திற்கு 2-3 கிலோ ஜிப்சம் இடுவதால், சல்பர் பற்றாக்குறை நிவர்த்தியாகும்.

89. தென்னையில் புதிய இளம் இலைகள் காய்ந்து போதல் மற்றும் இலை சிறுத்தல் எதனால் வருகிறது?

  • இரும்புச் சத்துப் பற்றாக்குறையினால், இளம்  இலைகள் காய்ந்து போகும்.  மேலும் சிறுத்துப் போகும்.

90. தென்னையில் இரும்பு சத்து பற்றாக்குறையை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்?

  • ஒரு வருடத்திற்கு மரம் ஒன்றிற்கு  0.25-0.5 கிலோ பெரஸ் சல்பேட் இடவேண்டும்.

91. தென்னையில் ரம்பம் போன்ற இலை விளிம்புகளும் சிற்றிலை நோய் அறிகுறிகளும் எதனால் வரும்?
போரான் பற்றாக்குறையினால்,  இவை ஏற்படும்.  இதன் பிற அறிகுறிகள்

  •    இலை முரணை மற்றும் உருத்திரிந்த இலைகள்
  •    பாளை காய்ந்து போதல்
  •    இலைகள் சரியாக விரியாமல் போதல்
  •  இலைகளில் மோசமான நிலையில் உருத்திரிந்து போதல்

92. போரான் பற்றாக்குறையை எவ்வாறு சரி செய்யலாம்?

  • 0.2-0.5 கிலோ போராக்ஸ்/மரம்/வருடம் இட்டு அல்லது 0.2% போராக்ஸ் கரைசல் தெளித்து, போரான் பற்றாக்குறையை சரிசெய்யலாம்.

93. உருத்திரிந்த இளம் இலைகள் வளர்ச்சியும், பூக்கள் சேதமும் எதனால் ஏற்படும்? எவ்வாறு சரி செய்வது?

  • கால்சியம் பற்றாக்குறையினால், பூக்கள் அல்லது குரும்பைகள் உதிரும்.  2-5 கிலோ ஜிப்சம்/மரம்/வருடம் இட்டு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம்.

94. தென்னையில் முதிர்ந்த இலைகள் எதனால் மஞ்சளடைந்து, காய்ந்த தோற்றத்துடன் தெரிகின்றது?

  • மெக்னீசியம் பற்றாக்குறையினால் மேற்கூறிய அறிகுறிகள் தோன்றும்.  மற்ற பிற அறிகுறிகள்
  • முதிர்ந்த இலைகளில், அகலமான மஞ்சள் நிற பட்டை கோடுகள் இலை விளிம்புகளில் ஏற்படுதல்
  • இலைகள் காய் சிவப்பு காப்பி நிறத்தில் புள்ளிகள் தோன்றல், மஞ்சள் நிறம் இலை நுனியிலிருந்து இலை அடிப்பாகத்திற்கு பரவுதல், முதிர்ந்த இலைகள் காய்ந்த தோற்றமளித்தல்

95. மெக்னீசியம் குறைபாட்டை எவ்வாறு சரிசெய்யலாம்?

  • ஒரு வருடத்திற்கு, ஒரு மரத்திற்கு 2-5 கிலோ ஜிப்சம் இட்டு மெக்னீசியம் பற்றாக்குறையை சரி செய்யலாம்.

96. சரியான ஆழத்தில் தென்னங்கன்றுகளை நடவு செய்யாவிட்டால் என்ன ஆகும்?

  • தென்னங்கன்றுகளை அதிக ஆழத்தில் நடும்போது வேரில் பற்றாக்குறை அறிகுறிகள் தென்படும்.  இரும்பு மற்றும் மாங்கனீசு பற்றாக்குறை அறிகுறிகளான இலைகள் வெளிர்தல், மஞ்சளடைதல் தண்டு வாடி சுருங்குதல், மர உச்சி அளவு சிறுத்தல்,  வேர் அழுகல் ஏற்பட்டு இறுதியாக மரம் காய்ந்து விடும்.  கன்றுகளை ஆழமாக நடுவதால் துளைக்கும் பூச்சிகள் தாக்க  அதிகம் வாய்ப்புண்டு.  மேலும் வேர் பகுதியில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும்.  கன்றுகளை அடிபங்குகளில் வைத்து நடும்போது 1 இஞ்ச் ஆழத்திற்கு அதிகமானால் கூட நெடுநாள் இரும்புச்சத்துப் பற்றாக்குறை, மற்றும் குன்றிய  வளர்ச்சி ஏற்படும்.  ஆழம் குறைவாக கன்றுகளை நடும்போது, புதிதாக உருவாகும்,  பின் தோன்றும் கிளை வேர்கள் வறண்ட காற்றில் வெளியே தெரியக்கூடும்.  எனவே பெரிய தென்னங்கன்றுகள், நடும்பொழுது, பெருக்கமடைந்த தண்டு, மண்ணில் 1 இஞ்ச் ஆழத்திற்கு அடியில் இருக்குமாறு நட வேண்டும்.

97. தென்னையில் அறுவடை மற்றும் பின் அறுவடையின் போது பின்பற்ற வேண்டிய நேர்த்தி முறைகள் யாவை?

  • 11-12 மாத வயதுடை தேங்காய்களை,  30-45 நாட்கள் இடைவெளியில், தோப்பின் மகசூல் அளவைப் பொருத்து அறுவடை செய்யவும்.  .  வீட்டு உபயோகத்திற்கு காய்களை நேராக வைக்கவும்.  கொப்பரைகளை வெயிலிலோ அல்லது கொப்பரை உலர்த்தியிலோ காய வைக்கவும்.  கொப்பரையில் 5-6% ஈரப்பதம் இருக்க வேண்டும்.  கொப்பரைகள் பாலீத்தீன் தார் பூசப்பட்ட கோணிப் பைகளில் சேமிக்கவும்.

98. தென்னையில நுண்ணுாட்டச்சத்து குறைபாட்டை எவ்வாறு சரி செய்யலாம்?  (பென்சில் முனைப் பற்றாக்குறை)

  • பரிந்துரைக்கப்பட்ட உரங்களுடன், 225 கிராம் போராக்ஸ், துத்தநாக சல்பேட், மேங்கனீசு சல்பேட், பெரஸ் சல்பேட், காப்பர் சல்பேட் மற்றும் 10 கிராம் அமோனியம் மாலிப்டேட்  நுண்ணுரங்களை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து மரத்தின் 1.8 மீ சுற்றளவில் ஊற்றி விடவும்.  முன்பே கண்டறிந்தால்,  இந்த பற்றாகுறையை சரிசெய்துவிடலாம்.

99. தென்னையில் குரும்பை உதிர்வு எதனால் ஏற்படுகிறது?
கீழ்கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்றினால்,  குரும்பை உதிர்வு ஏற்படுகிறது.

  • அதிகமான அமிலம் மற்றும் காரத்தன்மை
  • மகரந்தச் சேர்க்கை, கருவுற்றல் போன்றவற்றில் குறைபாடுகள், கருக்கலைதல் போன்ற மரபுக் குறைபாடுகள்  
  • காய்ப்பதற்கான திறன் குறைவாக இருத்தல் மற்றும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை
  • மகரந்தச் சேர்க்கை நடைபெறாதிருத்தல்
  • ஹார்மோன் குறைபாடு
  • பூச்சித் தாக்கம்
  • நோய்கள்
  • மண் மற்றும் காலநிலை வேறுபாடுகள்
  • மண் ஈரப்பதம் குறைதல், நீர் தேங்குதல் மற்றும் காற்றோட்டம் இல்லாமல் இருத்தல்

மேலே செல்கமேலே செல்க

100.
மண்ணின் கார அமிலத்தன்மை எவ்வாறு சரிசெய்யலாம்?

  • மண்ணில் காரத்தன்மையும் அமிலத்தன்மையும் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், குரும்பை உதிரும். pH 5.5 க்கு குறைவாக இருப்பது அதிகமான அமிலதன்மையைக் குறிக்கும்.  சுண்ணாம்பு இட்டு இதனை சரிசெய்யலாம். pH 8.0க்கு மேல் இருப்பின் காரத்தன்மை  அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.  ஜிப்சம் இட்டு காரத்தன்மை சரிசெய்யலாம். 

101. நீர் தேங்கும் இடங்களில், இளந் தென்னந் தோப்புகளை எவ்வாறு நிர்வாகிக்கலாம்?

  • சரியான வடிகால் இல்லாமல், நீர் தேக்கம் நீடித்தால் வேர்களுக்கு காற்றோட்டம் இல்லாமல் போகும்.  இந்நிலையில் குரும்பை உதிரும்.  மழைக்காலத்தில் அளவுக்கு அதிகமான நீர் தேங்குவதை தவிர்க்க தோப்பில் வடிகால் கால்வாய்கள் அமைக்கவும்.

102. நீர் தேக்கத்தினால் ஏற்படும் குரும்பை உதிர்வை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

  • பருவமழை துவங்கும்போது, இரு தென்னை மர வரிசைகளுக்கு இடையில் குழிகள் தோண்டவும்.  3 மீ அகலம், 30-45 செ.மீ ஆழத்தில், வரிசையின் முழு நீளத்திற்கும், குழிகள் தோண்டவும்.  தோண்டிய மண்ணை தென்னை மர வரிசையில் போட்டு மேட்டுப்பாத்திகள் அமைக்கவும்.  இளம் கன்றுகளைச் சுற்றி 1.2மீ வட்டப் பரப்பில் 30-45 செ.மீ உயரத்திற்கு மேடுகள் அமைக்கவும்.

103. சரியான பராமரிப்பு முறைகளைக் கையாண்ட பிறகு கூட ஏன் குரும்பை உதிர்வு ஏற்படுகிறது?

  • உரம் இட்டு, சரியான நீர், பூச்சி மற்றும் நோய் நிர்வாக முறைகளைக் கையாண்ட பிறகே கூட சில மரங்களில் குரும்பை உதிர்வு ஏற்படும்.  இது தாய் மரத்திலிருந்து மரபு வழி பெற்ற தன்மையை குறிக்கும்.  எனவே, தாய் மரங்களை தேர்வு செய்யும்பொழுது, அதிக கவனத்துடன்,  நல்ல மகசூல் தரக்கூடிய மரங்களை தேர்வு செய்யலாம்.

104. தென்னையில் குரும்பை உதிர்வைத் தடுக்க பின்பற்ற ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள் என்ன?

  • உரம் போதிய அளவு அல்லது இடாமல் இருந்தால் குரும்பை உதிரும்.  பரிந்துரைக்கப்பட்ட உரங்களை உரிய நேரத்தில் இடுவது மிகவும் அவசியம்.  இதனால் குரும்பை உதிர்வை தடுக்கலாம்.  2 கிலோ பொட்டாஷ் + 200 கிராம் போராக்ஸ் உரங்களை பரிந்துரைக்கப்பட்ட உர அளவுடன் சேர்த்து இடும்பொழுது, (3 வருடம்) குரும்பை உதிர்வு மற்றும் வெற்றுத் தேங்காய்கள் உருவாகுவது கட்டுப்படுத்தப்படும்.

மேலே செல்கமேலே செல்க








 

 

 

 

 

 

© 2010 TNAU. All rights reserved