தென்னை- உங்கள் கேள்விகளும் -எங்கள் பதில்களும்

உர மேலாண்மை
1. தழைச் சத்தின் பயன்கள் என்ன?
செடிகளின் செல் மற்றும் பச்சையங்களில், பகுதிப் பொருளாக பச்சையம் உள்ளது.  மரங்களின் அதிவேக வளர்ச்சிக்கு தழைச்சத்து மிகவும் அவசியம்.  இலைகள் மற்றும் தண்டுக் கிளைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.  அதிகமான இலை உற்பத்திக்கு தழைச்சத்து, மிகவும் அவசியம்.

2. சாம்பல் சத்து பயன்கள் யாவை?

மணிச்சத்துடன் இணைந்து செயல்படுவதோடு, சாம்பல் சத்து பல முக்கியமான பயிர் வினைச் செயல்களிலும் ஈடுபடுகிறது.  செடியின் நீர் தன்மையை சாம்பல் சத்து பராமரிக்கிறது.  நீர் குறைவாக இருக்கும் போது அதனை கச்சிதமாக பயன்படுத்தி மகசூலைப் பெருக்குவதற்கு, சாம்பல் சத்து மிகவும் அவசியம்.  செடிக்கு, வறட்சியை தாங்கக்கூடிய தன்மையை சாம்பல் சத்து அளிக்கிறது.  வேர் வளர்ச்சியை தூண்டுவதால் தென்னை மரம் எளிதில் மண்ணில் உள்ள ஊட்டச்சத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. 
சக்கரை, கொழுப்பு மற்றும் நார் பொருட்கள் உற்பத்திக்கு சாம்பல் சத்து அவசியம் என்பதால், தென்னைக்கு பொட்டாஷ் அதிகம் தேவை.

3. மணிச்சத்தின் பலன்கள் யாவை?
இலைகள், விதைகள் மற்றும் அதிவேகமாக செல் பகுப்புகள் நடக்கும் இடங்களுக்கு மணிச்சத்து மிகவும் அவசியம்.  வேர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிப்பில் மணிச்சத்தின் பெரிய பயன் வகிக்கிறது.

4 . மேங்கனீசு சத்தின் பலன்கள் என்ன?

பச்சைய உருவாக்கத்திற்கு மேங்கனீசு அவசியம்.  அடி இலைகளில் காணப்படுகிறது.  தென்னை மரத்தின் இளவயது வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்.

5.
மெக்னீசியத்தின் பயன்கள் பற்றி கூறுக
தென்னையின் பொதுவாக வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் மெக்னீசியம் மிகவும் அவசியம்.  அதிக பெண் பூக்கள் உற்பத்தி, நிறைய காய் பிடித்தல், ஒரு குலைக்கு அதிகக் காய்கள் போன்றவை மெக்னீசியத்தின் செயல்பாடுகள் ஆகும்.  ஒளிச்சேர்க்கை மற்றும் இலைகளின் பச்சையத்திற்கு மெக்னீசியம் தேவை.

6.
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை ஒரே நேரத்தில் இடலாமா?
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை பிரித்து இட வேண்டும்.  தென்னையில் வருடம் முழுவதும் இலை மற்றும் காய்கள் உற்பத்தி உள்ளதால், சரியான நேரத்தில், முறையாக, தொடர்ச்சியாக பிரித்து உரம் இட வேண்டும்.  ஒரு முறைமட்டும் மொத்தமாக உரமிடும் போது, நீர் கரையோட்டத்தினால், ஆண்டு முழுவதற்கும் சத்துக்கள் கிடைப்பதில்லை.  இதனைத் தடுக்க, பரிந்துரை செய்யப்பட்ட உரத்தை ஆண்டு முழுவதற்கும் ஊட்டச்சத்து கிடைக்குமாறு, பிரித்து இட வேண்டும்.

7.
தென்னையில் ஏன் உயிர் உரங்களை பயன்படுத்துகிறோம்?

  • வேர்ப்பகுதிகளில் தழைச்சத்தை நிலைப்படுத்துவதற்கும்
  • தென்னங்கன்றுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும்

    உயிர் உரங்கள் பயன்படுத்தலாம்.

8.
தென்னந்தோப்பில் என்னென்ன உயிர் உரங்களை உபயோகப்படுத்தலாம்?
அசோஸ்பைரில்லம் அமேசோன்ஸ், அசோஸ்பைரில்லம் பிரேசில்லன்ஸ், ஹெர்பாஸ்பைரில்லம் பிரைசின்ஜென்ஸ், பேசில்லஸ், பர்கோல்டீரியா, அசோர்கஸ், அர்த்தோபேக்டர்.

9.
இயற்கைவழி வேளாண்மையில் தென்னை மகசூலை எவ்வாறு பெருக்குவது?
எருக்கு (1கிலோ), கொழிஞ்சி (1கிலோ), பொதகள்ளி (1கிலோ) மீன் எரு (1கிலோ) உப்பு (1கிலோ) மற்றும் மணல் போன்றவற்றை அரை வட்ட வடிவில் இடவேண்டும்

10.
தென்னந்தோப்பு கழிவுகளை எவ்வாறு மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தலாம்?
 மக்கிய உரம்: சாண எரு கலவை பயன்படுத்தி மண்புழுக்களை வேகமாக பெருக்கம் செய்யலாம்.  10 கிலோ கலவை உள்ள பக்கெட்டில், 50-100 புழுக்கள் விடவும்.  கலவையை புற்களுடன் கலந்து வலை கொண்டு மூடவும்.  ஈரப்பதத்தை பராமரிக்கவும் 1-2 மாதங்களில், 150-300 கிராம் மண்புழுக்கள் கிடைக்கும்.

11.
தென்னையில் என்னென்ன கழிவுகள் கிடைக்கும்?
இலைகள், மேல்தண்டு பகுதிகள், காய்ந்த பாளைகள், காய்ந்த தேங்காய் மட்டைகள்.

12.
தென்னைக் கழிவுகளை எவ்வாறு நற்பயனளிக்கும்  வகையில் பயன்படுத்த முடியும்?

  • மறுசுழற்சி முறைகளைப் பொருத்து, தென்னைக் கழிவுகளை தென்னந்தோப்பில் பயன்படுத்தலாம்.
  • மரத்தின் அடித்தண்டில் 0.5 - 0.7 மீ அகலமும், 0.3-0.5 மீ ஆழமும் கொண்ட குழிகளில் தென்னங் கழிவுகளை, இட வேண்டும்.  தென்னை இலைக் கழிவுகளை,  குழியின் வடக்குப் புறத்தில் முதல் வருடம், தெற்கில் இரண்டாம் வருடம், மூன்றாம் வருடத்தில் கிழக்கு வாக்கிலும், இட வேண்டும்.  இவ்வாறு இயற்கை வழியில் மறுசுழற்சி செய்யப்படும் தென்னங்கழிவுகள், தென்னை மரங்களின் வளர்ச்சிக்கும், உற்பத்தி திறனுக்கும் சிறந்த உரமாகப் பயன்படுகிறது.

13. தென்னைக்கு பரிந்துரைக்கப்படும் உயிர் உரம் என்ன?

  • 50 கிராம் அசோஸ்பைரில்லம்
  • 50 கிராம் பாஸ்போ பாக்டீரியா, (அ) 100 கிராம் அசோபாஸ்
  • 50 கிராம் வேம் (VAM)

மேற்கூறிய உயிர் உரங்களை தொழு உரத்துடன் கலந்து வேர்களுக்கு அருகில் இட வேண்டும்.  தென்னங்கன்று நடவு செய்தது முதல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இட வேண்டும்.  மற்ற இரசாயண உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மற்றும் பூஞ்சாணக் கொல்லிகளுடன் கலக்கக் கூடாது.

14. காய்க்கும் தென்னை மரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் என்ன பரிந்துரை செய்கிறது?
ஆறுமாதத்திற்கு ஒரு முறை, மரம் ஒன்றிற்கு, வேர் மூலம் 200 மில்லி தென்னை டானிக்கை பரிந்துரை செய்கிறது.

15.
எதனால் தழைச்சத்து   பற்றாக்குறை ஏற்படுகிறது.
மண்ணில் தேவைக்கேற்ற தழைச்சத்து இல்லாததால் பற்றாக்குறை ஏற்படுகிறது.
பற்றாக்குறை ஏற்படுவதன் காரணங்கள்:

  • பரிந்துரை செய்யப்பட்ட இயற்கை மற்றும் செயற்கை உர அளவை பின்பற்றாமல் இருப்பது
  • பல பயிர் சாகுபடியில், ஊடு பயிருக்கு தேவையான கூடுதல் உரங்களை பயிருக்கு அளிக்காமல் இருப்பது.
  • புதிதாக நடவு செய்யும் போது, வேர்கள் ஆழமாகச் சென்றாலும் மண்ணில் தேவைக்கேற்ற தழைச்சத்து இல்லையெனில், பற்றாக்குறை குறிகள் தென்படும் (மஞ்சள்நிற இலைகள்)
  • களர் நிலங்கள், குறைவான மழையளவு உள்ள பகுதிகள் மற்றும் வறட்சியான பகுதிகளில் அங்ககப் பொருட்கள் நன்றாக மக்கவில்லை என்றால் தழைச்சத்து பற்றாக்குறை தெரியும்.
  • தேவையான அளவு தண்ணீர் கிடைக்காவிட்டாலும் சரியான வடிகால் வசதியில்லை என்றாலும், தழைச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.

16. தழைச்சத்து பற்றாக் குறையின் அறிகுறிகள் என்ன?
வயது முதிர்ந்த இலைகள், சீரான இளம்பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் மாறும்.  இலைகளின் நுனிப் பகுதியில் ஆரம்பித்து, இலையின் அடிப்பகுதி வரை தொடரும்.  பற்றாக்குறை தொடர தொடர அடி குருத்து இலைகளிலும் நிற மாற்ற அறிகுறி தெரியும்.  அடிமட்டை இலைகள் தங்க மஞ்சள் நிறத்தில் காணப்படும்.  தழைச்சத்துப் பற்றாக்குறை தீவிரமாக இருக்கும் போது, இலைகள் உதிர்ந்து விடும்.

17. மற்ற பற்றாக்குறைகளில் இருந்து  எவ்வாறு தழைச்சத்துப் பற்றாக்குறை வேறுபடுகிறது?
இரும்பு மற்றும் சல்பர் சத்து பற்றாக்குறைகள் தழைச்சத்து பற்றாக்குறைகளைப் போல் இருக்கும்.  இரும்பு மற்றும் சல்பர் சத்துப் பற்றாக்குறைகளில் இளங்குருத்து இலைகள் மஞ்சள் நிறத்தின் மாறி விடும் ஆனால், தழைச்சத்துப் பற்றாக்குறையினால், அடி மட்டையில் குறி தென்படும்.

18. எவ்வாறு தழைச்சத்துப் பற்றாக்குறையை சரி செய்யலாம்?

2 % யூரியா கரைசலை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மூன்று தடவை தெளிக்க வேண்டும்.  அல்லது 1-2 கிலோ யூரியா/மரம் அல்லது 200 மில்லி 1% யூரியா கரைசலை வருடம் இருமுறை வேரில் செலுத்தலாம்,

19. சாம்பல் சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள் என்ன?

அறிகுறிகள் முதலில் பழைய இலைகளில் தென்பட்டு பின்னர் இளம் இலைகளுக்கு படரும்.  சிற்றிலைகளில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற இலைப் புள்ளிகள் தென்படும். (இலை ஓரங்கள் மஞ்சள் அடையும்).  பழைய அடி இலைகளில், இலை ஒரங்கள் காய்ந்து விடும்.  பின்னர் இலை விளிம்புகள் காய்ந்து உதிர்ந்து விடும். 

20.
சாம்பல் சத்தின் பற்றாக்குறை, ஏனையப் பற்றாக்குறைகளைப் போல் தென்படுமா?
பிற்பகுதியில் இலை மாதிரிகளை ஆய்வுச் செய்து சாம்பல் சத்து மற்றும் மான்கனீசு சத்து குறைப்பாட்டினை கண்டறிந்தாலும், புறத்தோற்றங்களைக் கொண்டே இவ்விரு அறிகுறிகளையும் வேறுபடுத்த முடியும்.  தூரத்திலிருந்து பார்க்கும்போது இவை இரண்டும் ஒன்றுப்போல தெரிந்தாலும், அருகில் பார்க்கும்பொழுது, வேறுபடும்.  சாம்பல் சத்து பற்றாக்குறைகளில் இலைப்புள்ளிகளும் விளிம்பு கருதலும் தென்படும்.  ஆனால் மான்கனீசு பற்றாக்குறையில், இலை முழுதும் கருகி விடும் சாம்பல் சத்து அறிகுறி இலை நுனியில் தீவிரமாக இருக்கும்.  ஆனால் மான்கனீசு குறைபாட்டின், இலையின் அடிப்பகுதி பாதிப்படையும்.

21. சாம்பல்  சத்துப் பற்றாக்குறையை எவ்வாறு சரி செய்யலாம்?

பாதிப்படைந்த கன்றுகளை சரிசெய்வதுடன், முறையாக சாம்பல் சத்து உரங்களை சீராக இட வேண்டும். குறைவான நேர்மின் அயனிகளை மாற்றிக் கொள்ளக் கூடிய மணல் நிலங்களில், எளிதில் கரைந்து செல்லக்கூடிய சாம்பல் சத்து உரங்கள் அளிப்பதைவிட, கட்டுப்பாட்டுடன் சீராக சாம்பல் சத்தை வெளியிடும் உரங்களை உபயோகிக்கவேண்டும்.  ரெசின் பூசப்பட்ட பொட்டாசியம் சல்பேட் 3.4 கிலோ/மரம் மற்றும் 2 கிலோ மெக்னீசியம் சல்பேட்/மரம் இட வேண்டும்.  (வருடத்திற்கு 4 முறை).  வருடத்திற்கு மூன்று முறை 200 மில்லி 1% பொட்டாசியம் குளோரைடு வேர் மூலம் செலுத்தி பற்றாக்குறையை சரி செய்யலாம். 

22. மணிச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் யாவை?

  • இலைகள் ஊதா நிறமடைதல் (தீவிரமாகும் பொழுது, இலைகள் காய்ந்து விழுந்து விடும்)
  • மந்தமான வளர்ச்சி
  • இலைகள் செங்குத்தாக நிற்றல்
  • இள வயதில் இலைகள் உதிர்தல்
  • இலை வளர்ச்சி, இலை எண்ணிக்கை குறைவதோடு இலைகள் சிறுத்துப் போதல்.  வேரின் வளர்ச்சி குன்றிப் போகும்.  குன்றிய வளர்ச்சி மற்றும் மகசூல் குறைவு, ஆகியவற்றை விட, வேறு அறிகுறிகள் தெரிவதில்லை. பலவகையான மண்ணில், மணிச்சத்து பற்றாக்குறை தெரிகிறது. 

23. எவ்வாறு மணிச்சத்து பற்றாக்குறையை சரிசெய்யலாம்?
இரு வாரத்திற்கு ஒரு முறை 2% டி.ஏ.பி தெளிக்கவும்.  அல்லது 5 கிலோ தொழு உரம்/மரம் இடவும்.  2 மில்லி டி.ஏ.பி கரைசலை வருடத்திற்கு இரண்டு முறை வேர் மூலம் உட்செலுத்தவும்.

24. தென்னையில் போரான் பற்றாக்குறையை எவ்வாறு கண்டறியலாம் ?
இலைநுனி கூர்மையாக மடிந்து “ கொக்கி இலை” போன்று இருக்கும் இலைகள் ஏம்பம் போன்று அறுப்பட்டு இருக்கும்.  புதிய குருத்து இலைகள் சிற்றிலை போன்று உருவமாற்றம் பெற்றிருக்கும்.  குருத்து இலைகள் நன்றாக விரியாமல் இருக்கும்.  குருத்து இலைகள் முழுவதும் அல்லது அடிப்பகுதியிலும், மற்ற ஏனைய இடங்களிலும் ஆங்காங்கேயும் ஒட்டியிருப்பதால் விரிய முடியாது.  பற்றாக்குறை தீவிரமடையும் பொழுது, பல இலைகள் விரிந்து காணப்படும்.

25. போரான் குறைபாட்டை எவ்வாறு சரி செய்யலாம் ?

ஒரு வருடத்திற்கு, 0.2 - 0.5 கிலோ போராக்ஸ்/மரம் இடலாம்.  அல்லது 0.2 % போராக்ஸ் கரைசல் தெளிக்க வேண்டும்.  தென்னங்கன்றுகள் சிறியதாக இருக்கும் போது நாற்றங்காலில் 1-1.5 கிராம் தெளிக்கவும். 

26.மான்கனீசு பற்றாக்குறையை எவ்வாறு சரி செய்யலாம்?

மேலாண்மை: 25 கிலோ மான்கனீசு சல்பேட்/எக்டர் இடவும்.

27.
மெக்னீசியம் பற்றாக்குறையை பிற பற்றாக்குறையில் இருந்து எவ்வாறு வேறுபடுத்தலாம்?
பார்வையில் தென்படும் அறிகுறிகளை வைத்து மெக்னீசியம் குறைபாட்டினை அறியலாம்.  சாம்பல் சத்து குறைபாட்டினால் இலைகள் ஆரஞ்சு மற்றும் வெண்கல நிறத்தில் இருக்கும்.  இலை நுனியிலிருந்து அடிப்பாகம் நோக்கி நிறமாற்றம் ஏற்படும்.  ஆனால் மெக்னீசியம் குறைபாட்டால், அடர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற விளிம்புகளுடன் கூடிய பச்சை நிற இலைகள் காணப்படும். 

28. மெக்னீசியம் குறைபாட்டை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்?

வருடத்திற்கு ஒரு முறை 1-2 கிலோ மெக்னீசியம் சல்பேட்/மரம் இட வேண்டும்.  அல்லது வருடத்திற்கு இருமுறை 200 மில்லி 0.2% மெக்னீசியம் சல்பேட் கரைசலை வேரில் செலுத்த வேண்டும்.

29. தாமிரம் பற்றாக்குறையை எவ்வாறு சரி செய்யலாம்?

ஒரு வருடத்திற்கு 2-5 கிலோ ஜிப்சம்/மரம் இட வேண்டும்.  அல்லது 0.2 % ஜிப்சக் கரைசலை வேரில் செலுத்தவும். 

30.
துத்தநாகப் பற்றாக்குறையை எப்படி சரி செய்யலாம்?
    ஒரு எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் இட வேண்டும்.

31. எவ்வாறு இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்வது?

ஒரு வருடத்திற்கு, ஒரு மரத்திற்கு 0.25 -0.5 கிலோ பெரஸ் சல்பேட் இட வேண்டும்.

32. கால்சியம் பற்றாக்குறையை எவ்வாறு சரி செய்யலாம்?
தேவைக்கேற்ப சுண்ணாம்பு இட வேண்டும்.  அல்லது 1% கால்சியம் நைட்ரேட் கரைசலை வேரில் செலுத்தவும்.

33. தென்னையில் ஏதாவது உர மேலாண்மை கட்டுப்பாட்டு முறை உள்ளதா?
பசுந்தாள் உரமாக சணப்பையை பயிரிடலாம், மரம் ஒன்றுக்கு, 650 கிராம் யூரியா, 1 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.  6 மாதத்திற்கு ஒருமுறை ஜூன்-ஜூலை மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இட வேண்டும்.  நுண்ணுாட்ட உரங்களான மெக்னீசியம் சல்பேட் 150 கிராம், துத்தநாக சல்பேட் 75 கிராம், போராக்ஸ் 50 கிராம் ஆகியவற்றை 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து, மழைக்காலத்திற்கு முன்னர் ஒவ்வொரு மரத்திற்கும் இட வேண்டும்.  இவ்வாறு உரமிடும் பொழுது, ஊட்டச்சத்து குறைபாடுகள் இல்லாத செழிப்பான, அதிக வீரிய உற்பத்தி திறன் கொண்ட தென்னை மரங்கள் கிடைக்கின்றன.

மேலே செல்கமேலே செல்க








 

 

 

 

 

 

© 2010 TNAU. All rights reserved