தென்னை- உங்கள் கேள்விகளும் -எங்கள் பதில்களும்

நாற்றங்கால் பராமரிப்பு
தாய் மரத் தேர்வு
1. தாய் மரம் தேர்விற்கு எவ்வாறு விதைத் தோட்டத்தை தேர்வு செய்வது?

  • நன்றாக காய்க்கக்கூடிய மரங்கள் இருக்க வேண்டும்.  ரொம்பவும் வசதியான சூழலில் இருந்திருக்க கூடாது.  நோய் மற்றும் பூச்சித் தாக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • வீடுகள், மாட்டு கொட்டகைகள், குப்பைக் குழிக்கு அருகில் உள்ள மரங்களை தவிர்க்க வேண்டும்.

2. தேங்காய்களைக் கொண்டு எவ்வாறு தாய் மரத்தை தேர்வு செய்வது?
ஒரு வருடத்திற்கு 100 காய்கள் கொடுக்கக் கூடிய மரத்தை தேர்வு செய்ய வேண்டும்.

3. தாய் மரத்தின் வயது எவ்வளவு இருக்க வேண்டும்?

    20-40 வருடங்கள் ஆன மத்திய வயதுடைய மரமாக இருத்தல் நன்று

4.
தாய் மரத்தின் புறத் தோற்றப் பண்புகள் யாவை?

  • நேரான தண்டு
  • மரத்தின் மேற்பாகம் கோள வடிவமாக இருக்க வேண்டும்
  • அதிகமான மட்டை எண்ணிக்கை (30 இலை மட்டைகளுக்கு மேல்)
  • அதிகமான பாளை எண்ணிக்கை
  • அதிகமான கொப்பரை மகசூல்

5. நன்றாகக் காய்க்கக் கூடிய தாய் மரங்களின் பண்பு என்ன?
ஒரு மாதத்திற்கு ஒரு தென்னை இலை மற்றும் தென்னம்பாளையை உற்பத்தி செய்ய வேண்டும்.

6. காய்கள் தேர்வு செய்யும் போது எந்த மரத்தை தவிர்க்க வேண்டும்?

  • மாற்றுப் பூப்பு உடைய மரங்கள்
  • நீளமான ஒல்லியான வளைந்த தென்னம்பாளைகள்
  • சிறிது அல்லது வறண்ட பலனளிக்காத காய்களுடைய மரங்கள்

7. எப்பொழுது விதைக் காய்களை அறுவடை செய்ய வேண்டும்?
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா: பிப்ரவரி-ஆகஸ்ட்
கேரளா : டிசம்பர்-மே

8. நல்ல விதைக் காய்களின் குணங்கள் என்ன?
மிதமான அளவு
உருண்டை அல்லது முட்டை வடிவம்
விரலால் தட்டும் பொழுது உலோக சத்தம் வரவேண்டும்
நன்கு முதிர்ந்த 12 மாத காய்கள்

9.தாய் மரங்களில் இருந்து பறித்தவுடன் விதை காய்களை நாற்றங்காளில் விதைக்கலாமா?
கூடாது, குறைந்த அளவு காலமாவது சேமித்து வைத்திருக்க வேண்டும். நெட்டை மற்றும் வீரிய ஒட்டு இரகங்களை ஒரு மாதம் காற்றிலும் இரண்டு மாதம் மணலிலும் பதப்படுத்த வேண்டும்.  குட்டை இரகங்களை ஒரு மாதத்திற்கு குறைவாக காற்றில் பதப்படுத்தி, இரண்டு மாதம் மணலில் பதப்படுத்த வேண்டும்.

10. விதைக் காய்களை எவ்வாறு மணலில் பதப்படுத்தலாம்?
கொட்டகையில், 8 செ.மீ உயரமுடைய மணலில் தேங்காய்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, தேங்காய் தண்ணீர் வற்றாமல் இருக்க மணல் போட்டு மூட வேண்டும்.  தேவையான அளவு நிழலுடைய திறந்த வெளியிலும் இதனைச் செய்யலாம்.

மேலே செல்கமேலே செல்க

நாற்றங்கால் தயாரிப்பு

1. நாற்றங்கால் தயாரிப்பதற்கு எந்த வகை மண் உகந்தது?
தமிழ்நாடு - வடிகால் வசதியுடைய பொறை மண்
கேரளா - இளகிய மண்
கர்நாடகா - வெப்பமண்டல பகுதிகளில் உள்ள இளகிய மணல் மற்றும் மணல் கலந்த வண்டல் மண்

2. நாற்றங்கால் பகுதியை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

செயற்கை நிழலுடைய திறந்த வெளியிலோ அல்லது பெரிய தென்னந்தோப்பு நிழலிலோ நாற்றங்கால் பகுதியை அமைக்கலாம்.

3. ஆயிரம் தேங்காய் விதைக்க எவ்வளவு இடம் தேவை?
1000 விதை தேங்காய் விதைக்க 120 சதுர மீட்டர் மேட்டுப்பாத்தியோ (அ) சம பாத்தியோ தேவைப்படும்

4.எப்பொழுது விதை தேங்காய்களை நாற்றங்காலில் நடவு செய்ய வேண்டும்?

மழைக்காலம் துவங்கிய பின் காய்களை நடவு செய்தால் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியமில்லை நல்ல முளைப்பு ஏற்படும்.

5. எவ்வாறு நாற்றங்கால் தயாரிக்க வேண்டும்?

குழியான பாத்தி மற்றும் கால்வாய்கள் (வடிகால் வசதி இல்லையெனில் மேட்டுப்பாத்திகள் அமைக்கவும்)
பாத்தியின் அகலம் 1.5 மீ இருக்க வேண்டும்.
பாத்திகளுக்கிடையே 75 செ.மீ இடைவெளி தேவை

6. காய்களை விதைக்கும் முன் நாற்றங்காலில் ஏதாவது மருந்து கலக்க வேண்டுமா?
ஆம். கரையான் பாதிப்பு உள்ள இடங்களில், விதைப்பிற்கு முன் நாற்றங்காலை 0.05% குளோர்பைரிபாஸ் கொண்டு நனைக்க வேண்டும்.  குருத்தழுகல் போன்ற நிரந்தர நோய் இருக்கும் இடங்களில் 1 % போர்டோ  கலவை கரைசல்  ஊற்றி நாற்றங்காலை நனைக்க வேண்டும்.

7. தேங்காய்களை விதைக்கும் பொழுது  எவ்வளவு இடைவெளி தேவை?

இடைவெளி: 30 x 30 செ.மீ
        ஆழம்: 20-25 செமீ

8.
நடவிற்கு முன் எப்படிப்பட்ட விதைத் தேங்காய்களை தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • நல்ல தண்ணீர் உள்ள தேங்காய்களை தேர்வு செய்ய வேண்டும்
  • அழுகிய காய்களை தவிர்க்கவும்

9. நாற்றங்கால் விதைப்பிற்கு ஏற்ற பருவம் எது?
மே-ஜீன் (தென் மேற்கு பருவமழை துவக்கத்திற்கு பின்னர்)

10.
எவ்வாறு விதைத் தேங்காய்களை நட வேண்டும்?
தேங்காய்களை சாய்வாகவோ நேராகவோ நடவு செய்யலாம்.

11.தேங்காயில் இரண்டு கண்களைவிட, ஒரு கண் மட்டும் ஏன் மென்மையாக உள்ளது?

ஒரு கண்ணை விட மற்ற இரு கண்ணும் லிக்னின் போர்வையை பெற்றுள்ளதால்,  அந்த கண் மட்டும் மென்மையாக உள்ளது.  இதுவே முளைப்புத்திறன் கொண்ட கண் ஆகும்.  காயின் அகன்ற பகுதிக்கு எதிராக இந்த கண் அமைந்திருக்கும்.

12.
எப்பொழுது நாற்றங்காலில் சாய்வாக நடவு செய்ய வேண்டும்?
நடவு, தாமதமாகும் பொழுதும், தேங்காய்த் தண்ணீரின் அளவு குறையும் போதும் சாய்வாக நடவு செய்ய வேண்டும்.

13.
காய்களை நேராக நடும் பொழுது என்னென்ன நன்மைகள் உள்ளன?
போக்கு வரத்துக்கு வசதியாக இருக்கும்
தென்னங்கன்றுகளுக்கு குறைவான சேதமே உண்டாகும்

14. எப்பொழுதெல்லாம்/எவ்வளவு சீக்கிரம் நாற்றங்காலுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்?

கோடை காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும்.

15.தேங்காய்களை விதைத்த பின் ஏதாவது பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டுமா?

பருவமழை முடிந்த பின்னர், நாற்றங்காலுக்கு ஏற்றவாறு நிலப்போர்வை அமைக்க வேண்டும்.  இதற்கு தென்னை இலைகள், வைக்கோல் அல்லது பச்சை இலைகளை பயன்படுத்தலாம்.

16. நாற்றங்காலில் அதிகம் தென்படக்கூடிய பூச்சி எது?

கரையான் (கன்று வாடல் மற்றும் காய்கள் மேல் மண் பூச்சி)

17.
நாற்றங்காலில் எவ்வாறு கரையானைக் கட்டுப்படுத்தலாம்?
15 செ.மீ ஆழம் மண்ணை அகற்றவும்
5% குளோர்டேன் தூள் இடவும்

18. குருத்தழுகல் நோயை எவ்வாறு நாற்றங்காலில் கட்டுப்படுத்தலாம்?
1% போர்டோ கலவை தெளிக்கவும்

19. நாற்றங்காலில் எவ்வாறு களை எடுக்க வேண்டும்?

  • 6 மாதத்தில் கைக் களை எடுக்கவும்
  • இரண்டு முறை சணப்பு பயிரிடவும் (பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யவும்)

20. தேங்காய் முளைப்பதற்கு எவ்வளவு நாள் ஆகிறது?
நாற்றங்காலில் நட்ட, 6-8 வாரங்களில் முளைக்கிறது

21. நாற்றங்காலில் எவ்வாறு தென்னங்கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்?

  • 9-12 மாதங்கள் வயதுடைய கன்றுகளை
  • விரைவில் முளைத்த கன்றுகளை (5 மாதத்திற்கு முன்னர் செய்த பதிவு)
  • 6-8 இலைகள்/கன்றுக்கு
  • நாற்றின் அடித்தண்டு 10-12 செ.மீ இருக்க வேண்டும்
  • இலைகள் விரைவிலேயே பிரிய வேண்டும்

22. தென்னங்கன்றுகள் எப்பொழுது அறுவடைக்கு தயார் ஆகின்றன?
நெட்டை இரகங்களின் விதைத்த 60-130 நாட்களிலும், குட்டை இரகங்களில் விதைத்த 30-95 நாட்களில் தேங்காய்கள் முளைக்கின்றன.  பொதுவில் விதைத்த 5 ஆம் மாதம் வரை முளைப்பு பதிவு செய்யப்படுகிறது.  ஒரு நல்ல விதைக் குவியலில் 80-90% முளைப்புத்திறன் இருக்கும்

23.
நாற்றங்காலில் தேங்காய்கள் விதைத்தபின் ஏதாவது உரங்கள் இட வேண்டுமா?
கரு சூழ்தசை ஊட்டம் அளிப்பதால் எந்தவித இரசாயண உரங்களும் தேவை இல்லை.

24. ஏன் பாலித்தீன் பை தென்னங்கன்று உற்பத்தி செய்யப்படுகிறது.  இதன் சிறப்புகள் யாவை?
பாலித்தீன் பை நாற்றங்காலில் சிறப்புகள்.

  • நல்ல வேர் அமைப்புடன் கூடிய வீரியமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்தல்.
  • விரைவில் காய்ப்புக்கு வரக்கூடிய கன்றுகள் பெற,
  • வேர் சேதமடையாமல் இருப்பதால், குறைவான மாற்று நடவு சேதமே ஏற்படுகிறது.
  • களையெடுக்கவும், நீர் பாய்ச்சவும்  எளிதாக இருக்கும்.  தேவையற்ற கன்றுகளை எளிதாக அகற்றி விடலாம்.

25. தென்னங்கன்றுகளுக்கான பாலித்தீன் பையின் அளவு என்ன?
பெரிய காய்களுக்கு 60 * 45 செ.மீ பையும், சிறிய காய்களுக்கு 45 * 45 செ.மீ அளவுடைய 500 காஜ் தடிமண் உள்ள பையும் தேவை.

26.முளைத்த காய்களை எப்பொழுது, பாலித்தீன் பைகளுக்கு மாற்ற வேண்டும்?
80% தேங்காய்கள் முளைத்தவுடனோ அல்லது விதைத்த 5 மாதத்திலோ எது முன்னரோ, அப்பொழுது பாலித்தீன் பைகளுக்கு மாற்ற வேண்டும்

27. பாலித்தீன் பைகளில் எவ்வாறு தென்னங்கன்றுகளை நட வேண்டும்?
பாலித்தீன் பைககளில் பாதி அளவு தொட்டிக் கலவை நிரப்பி, அதன் மேல் முளைத்த தென்னங்கன்றை நேராக வைக்க வேண்டும் பின்னர், தேவையான அளவு கலவை போட்டு கன்று இறுக்கமாக இருக்கும் படி பக்கவாட்டில் அழுத்தி விட வேண்டும்.

28. பாலித்தீன் பைகளில் எந்த தொட்டிக் கலவையை இட வேண்டும்?
3:1 என்ற விகிதத்தில் மேல் மண் : மணல் அல்லது 3:1:1 என்ற விகிதத்தில் மேல் மண்: மணல்: தொழு உரம் சேர்ந்த தொட்டிக் கலவை பொதுவாக பயன்படுத்தப் படுகிறது.  செம்மண், மணல் மற்றும் தொழு உரத்தை 1:1  என்ற விகிதத்தில் கலந்தும் பயன்படுத்தலாம்.

29. பாலித்தீன் நாற்றங்காலுக்கு எந்த உரம் பரிந்துரை செய்யப்படுகிறது?
முளைத்த இரண்டு மாதத்தில் பைக்கு, 20 கிராம் அமோனியம் சல்பேட் மற்றும் 25 பொட்டாஷ் இட வேண்டும் நான்கு மாதங்களுக்கு பின்னர் 45 கிராம் அமோனியம் சல்பேட்டும், 45 கிராம் பொட்டாசும் இட வேண்டும்.

30.கன்றுகளை எவ்வாறு நாற்றங்காலில் இருந்து பிடுங்க வேண்டும்?
மண் வெட்டி மற்றும் கடப்பாரை கொண்டு தென்னங்கன்றுகளை பிடுங்கி எடுக்கவும்.

31.ன்றுகளின் வேர்களை, நடவின் போது அப்படியே வைக்க வேண்டுமா?
இல்லை. புது வேர்கள் உண்டாவதை தூண்டுவதற்காக பழைய வேர்களை வெட்டி விட வேண்டும்.

32.நாற்றங்காலில் இருந்த பிடுங்கிய கன்றுகளை சேமித்து வைக்கலாமா?
தென்னங்கன்றுகளை பிடுங்கிய உடன் சீக்கிரமாக நட வேண்டும்.  தாமதமாகும் போது, மரத்தின் நிழலில் வைத்து, மணல் பூசி, அடிக்கடி நீர் தெளித்து விட வேண்டும்.

33.
தென்னை நாற்றங்காலில் ஏற்படக் கூடிய நோய்கள் மற்றும் பூச்சிகள் யாவை?
நோய்: குருத்தழுகல்
பூச்சி: செதில் பூச்சி, கரையான், வெள்ளை வேர்ப்புழு

34. நாற்றங்காலில் கன்றுகள் இறப்பதற்கு காரணம் என்ன?
குருத்தழுகல் அல்வது வெள்ளை வேர்ப்புழு தாக்கமாக இருக்கலாம்.  கன்றின் குருத்தை இழுத்துப் பார்க்கும் பொழுது, அது கையுடன் எளிதாக வந்தால் குருத்தழுகல் நோயாக இருக்கலாம்.

35.
எவ்வாறு குருத்தழுகலை கட்டுப்படுத்தலாம்?
        தென்னங்கன்றுகளின் 1% போர்டோ கலவை தெளிக்கவும்.

36.
நாற்றங்காலில் வெள்ளை வேர்ப்புழுவை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
போரேட் 10G மருந்தை 15 கிராம்/கன்றுக்கு என்ற அளவில் இடவும்.

மேலே செல்கமேலே செல்க








 

 

 

 

 

 

© 2010 TNAU. All rights reserved