பயிர் பாதுகாப்பு :: புதிய பி.டி. தொழில்நுட்பம்

பி.டி. புழுக்களைக் கொல்லும் விதம்
புழுவானது பி.டி. நுண்ணுயிரியை சாப்பிடும் பொழுது, பி.டி. உருவாக்க்க்கூடிய நச்சுப்புரதம் பூச்சியின் உணவுக்குடலில் செயல்படத் தொடங்குகிறது. பூச்சியின் உணவு  மண்டலம் காரத்தன்மை(பி.எச்.10.5) கொண்டது. இந்த காரத்தன்மை பி.டி. புரதத்தின் வீரியத்தை அதிகப்படுத்தி உணவுக்குழாயில் துளையை ஏற்படுத்தி உணவுக்குழாயை சேதப்படுத்தி புழுவை சாப்பிட முடியாமல் செய்கிறது. இதனால் புழு சிறிது நாட்களில் இறந்து விடுகிறது.

முந்நாட்களில் பி.டி.யை புழுக்களை அழிப்பதற்கு பயன்படுத்திய முறை:

முந்நாட்களில் பி.டி. நுண்ணுயிரி நொதித்தல் முறை மூலம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 50 வருடங்களாக பி.டி.யை உயிரி பூச்சி மருந்தாக விவசாயிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இயற்கை விவசாயத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மிகச்சில பூச்சி மருந்துகளில் பி.டி.யும் ஒன்று. இந்த பி.டி. உயிரி பூச்சிக்கொல்லி மருந்தை பயிரில் தெளிக்கும் திரவ வடிவமாகவும் அல்லது மண்ணில் இடும் துகள் உருண்டையாக வும் இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். இந்த இரண்டு முறையிலும் புழுவானது இலையின் அடிப்பகுதிக்கு அல்லது தண்டு மற்றும் காயின் உட்பகுதிக்குத் துளையிட்டு சென்று விட்டால் பி.டி.யை புழுவால் உண்ண முடியாத சூழ்நிலை உருவாகிறது. இதனால் புழுக்களைக் கட்டுப்படுத்த முடியாது. இந்தக் குறைகளைக் களைய வேளாண் விஞ்ஞானிகளால் புதிய தொழில்நுட்பம் கையாளப்பட்டது. வேதியியல் பூச்சிக்கொல்லி மருந்து பூச்சியின் மேல் படுவதாலும், மருந்து தெளித்த இலை, காய் மற்றும் தண்டுப்பகுதியை உண்பதாலும் பூச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. பி.டி. புரதம் பூச்சியின் உணவுக்குடலில் மட்டும் நச்சாக மாறி  பூச்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.                              

இன்றைய நவீன பி.டி. தொழில்நுட்பமுறை:

வேளாண் விஞ்ஞானிகள் பி.டி. நுண்ணுயிரியிலிருந்து புழுக்களுக்கு நச்சுத்தன்மை ஏற்படுத்தும் கிரிஸ்டல் புரதத்தை உருவாக்கக் காரணமான மரபணுவைப் பிரித்து எடுத்து அந்த மரபணுவை பயிர் மரபணுவுடன் இணைத்து விடுகிறார்கள். இதனால் பயிரானது பி.டி. கிரிஸ்டல் புரதத்தை சொந்தமாக உற்பத்தி செய்து பயிரை தாக்கும் புழுக்களிடம் இருந்து தற்காப்பு செய்து கொள்கிறது. மேலும் பயிர் உருவாக்கும் இந்த கிரிஸ்டல் புரதம் நீரினால் அல்லது மழையால் பயிரிலிருந்து நீக்கப்படுவதில்லை மற்றும் சூரிய ஒளியினால் சிதைக்கப்படுவதும் இல்லை. இந்த பி.டி. பயிர் நாள் முழுவதும் எந்த சூழ்நிலையிலும் புழுக்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும். இந்த பயிருக்கு “வேற்று மரபணு தாங்கிய பயிர்” என்று பெயர். ஆங்கிலத்தில் “டிரான்ஜினிக் பிளாண்ட்” என்று கூறுவர். இந்த தொழில்நுட்பத்திற்கு “மரபணு மாற்றம்” என்று பெயர். ஆங்கிலத்தில் “டிரான்ஜினிக் டெக்னாலஜி” என்று அழைப்பர். Cry1 AC மற்றும் Cry2 Ab ஆகிய இரு மரபணுக்கள் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் கிரிஸ்டல் புரதத்தை உருவாக்க பி.டி. தொழில்நுட்பத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015