நூற்புழுக்கள்  
            கோலியஸ் மருந்துச் செடியைத் தாக்கும் பூச்சிகளில்  நூற்புழுக்கள் அதிக சேதத்தை விளைவிக்கின்றன. நூற்புழுக்கள் பயிர்  செய்யப்படும் அநேக காய்கறிப் பயிர்களையும் குறிப்பாக வள்ளிக் கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்குப் பயிர்களையும் மாற்று உணவுப் பயிராகக் கொண்டது.  வேர் முடிச்சு நூற்புழுவின் தாக்குதலால் செடிகளின் வளர்ச்சி குன்றி குட்டையாக  காணப்படும். கோடைகாலங்களில் செடிகள் வாடி காய்ந்து விடும்.  தாக்கப்பட்ட செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினாலும் பிழைக்காது.  செடிகளின் வேர்ப்பகுதியைப் பிடுங்கிப் பார்த்தால் வேர்களில் ஆங்காங்கே  சிறிய மற்றும் பெரிய வீக்கங்கள் முடிச்சுகள் போன்று காணப்படும். 
             நூற்புழுக்கள்  நுனி மூலம் உட்சென்று வேரின் நுனிப்பகுதியில் அசையாமல் இருந்து சத்துப்பொருட்களை உண்பதால்,  சத்துக்கள் மேலே செல்ல முடியாமல் செடிகள் வாடி காய்ந்து இறந்து விடுகின்றன.  மேலும் நூற்புழு உள்ள இடங்களில் செல்கள் நீண்டு வளர்ந்து, எண்ணிக்கையும் அதிகமாவதால்,  வேர்களில் முடிச்சுகள் போன்ற வீக்கம்  காணப்படுகிறது. இதனால் பயிர் எண்ணிக்கை குறைந்து மகசூல் குறைவதோடன்றி  கிழங்குகள் பெருக்காமல் பெருமளவு மகசூல் குறையும். 
மேலாண்மை  
              
                - நடவு வயலில் நூற்புழு  பரிசோதனை செய்து நூற்புழு தாக்குதல் இல்லாத இடங்களில் பயிர் செய்ய வேண்டும் 
 
                - கோலியஸ் சாகுபடி செய்த  நிலத்தில் பயிர் சுழற்சி முறையில் சோளம்,  மக்காச்சோளம் போன்ற நூற்புழு தாக்காத பயிர்களை வருடத்திற்கு ஒரு முறை  பயிர் செய்வது நல்லது.
 
                - மாரிகோல்டு எனப்படும்  செண்டுமல்லி பூச்செடியின் வேரிலிருந்து வரும் திரவம் வேர் முடிச்சு நூற்புழுக்களை அழிக்க  வல்லது. ஆதலால் செண்டுமல்லி செடிகளை பார் மற்றும் வாய்க்கால் ஓரங்களில் ஊடுபயிராக நடவு  செய்து பராமரிக்கலாம்.
 
                - ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்  புண்ணாக்கு நடவுக்கு முன் இட்டு வயலை நன்கு உழ வேண்டும்.
 
                - நூற்புழு தாக்குதல் ஏற்பட்ட  பகுதிகளில் 10  – 12 கிலோ கார்போஃப்யூரான் மருந்தை பார்களில் இட்டு மண் அணைத்தோ அல்லது  வயலில் மணலுடன்  கலந்து  தூவி நீர் பாய்ச்சியோ கட்டுப்படுத்தலாம்.
 
               
              இலை சுருட்டும் புழுக்கள்  மற்றும் இலை மடக்கம் புழுக்கள்  
                இப்புழுக்கள் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பயிரைத்  தாக்கி சேதம் விளைவிக்கின்றன. இப்புழுக்கள் இலைகளின் இரு ஓரங்களையும்,  மெல்லிய நூலிழை கொண்டு பிணைத்து விடும். புழுக்கள்  இலை மடிப்பின் உள்ளே இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்து விடுகின்றன. இப்புழுக்களின்  மேற்பகுதி இளஞ்சிவப்பு நிறத்திலும், பக்கவாட்டில் இளம் மஞ்சள்  நிறத்திலும், சிறிய கரும்புள்ளிகளுடன் தோற்றமளிக்கும்.  தாய் அந்துப்பூச்சியானது, மஞ்சள் நிறத்தில்,  சிறு கருமை நிற மெல்லிய கோடுகளுடன் காணப்படும். இன்னொரு வகை இலை மடக்கும் புழுவானது, பச்சை நிறத்தில்  காணப்படும்.  இதன் தாய் அந்துப்பூச்சியானது,  பழுப்பு கலந்த வெண்மை நிற இறக்கைகளில், கரும்புள்ளிகளுடன்  காணப்படும்.   
  மாவுப்பூச்சி அல்லது  கள்ளிப்பூச்சி  
                இளம் மற்றும் வளர்ந்த மாவுப்பூச்சிகள் இலையின்  அடிப்பகுதி மற்றும் தண்டு, குருத்துப் பகுதிகளில் அடர்த்தியாய்  இருந்து கொண்டு சாறை உறிஞ்சுவதால், இலைகளில் மஞ்சள் நிறப் புள்ளிகள்  தோன்றுவதுடன், செடியின் வளர்ச்சி வெகுவாகக் குறைந்து விடுகிறது. 
  மேலாண்மை  
            மேற்கூறிய இலைப்புழுக்கள்   மற்றும் மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த, பூச்சிகளின்  எண்ணிக்கை குறைவாக இருக்கும் போதே வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது  வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும். 
              
                
                    | 
                    | 
                    | 
                 
                
                  | இளம்பூச்சி மற்றும் கூட்டுப்புழு | 
                  வளர்ந்த பூச்சி | 
                  மஞ்சள் நிற இலைகள் | 
                 
               
              
               |