நிலவேம்பு  
மாவுப்பூச்சி  
                இளம்  மற்றும்  முதிர்ந்த  மாவுப்பூச்சிகள் இலையின்  அடிப்பகுதியில் அடர்த்தியாய்  இருந்து  கொண்டு  சாற்றினை  உறிஞ்சி  உண்டு  சேதம்  பண்ணுகின்றன.  இலைகள்  மஞ்சள்  நிறமாக  மாறி  சிறுத்துக்  காய்ந்து  விடும்.  மாவுப்பூச்சி  வெளியேற்றும்  தேன்  போன்ற  திரவம்  இலைகளின்  மேல்  கரும்பூசணத்தை  உருவாக்குகிறது.  இப்பூச்சிகள்  சிறிதாகவும்  மென்மையான  உடலின்  மேல்  வெள்ளை  நிற  மாவு  போன்ற  பூச்சினால்  சூழப்பட்டும்  காணப்படும்.  
                 
              செதில்பூச்சி  
                          இளம்  பூச்சிகளும்,  வளர்ந்த  பூச்சிகளும்  தளிர்  இலைகளிலும்  தண்டுப்  பாகங்கள்  போன்றவற்றில்  நிரந்தரமாக  ஒட்டிக்  கொண்டிருந்து  சாற்றை  உறிஞ்சி  உண்டு  சேதம்  பண்ணுகின்றன.  இதனால்  இலைகள்  மஞ்சள்  நிறமாக  மாறுவதுடன்  செடியின்  வளர்ச்சியும்  குன்றி  காணப்படும்.  மேலும்  இவை  வெளியேற்றும்  தேன்  போன்ற  திரவத்தால்  இலைகளின்  மேல்  கரும்பூசண  வளர்ச்சி  தென்படும்.  முட்டைகளிலிருந்து வெளிவரும்  இளம்  பூச்சிகள்  சற்று  ஊர்ந்து  திரிந்து  பின்னர்  ஒரு  இடத்தைத்  தேர்ந்தெடுத்து  அதே  இடத்தில்  நிரந்தரமாக  இருந்து  கொண்டு  சாற்றினை  உறிஞ்சி  உண்டு  வளரும்.  வளர்ந்த  செதில்பூச்சிகள் நீள்வட்ட  வடிவிலும்  சற்று  மேலெழும்பியும் தென்படும். 
              மேலாண்மை முறைகள்  
              
                - இயற்கையில்  பொறி வண்டு மற்றம் கிரைசோபா இரை விழுங்கிகள் இப்பூச்சிகளை உணவாக உட்கொள்வதால் இப்பூச்சிகளின்  எண்ணிக்கை ஓரளவு குறைகிறது.
 
                - பப்பாளி  மாவுப்பூச்சி அதிக அளவில் தென்படும்போது அசிரோபேகஸ் பப்பாயே எனப்படும் ஒட்டுண்ணியை  விட்டும் கட்டுப்படுத்தலாம்.
 
                - எறும்புகளைக்  கட்டுப்படுத்துவதன் மூலமும் இப்பூச்சிகள் பரவுவதைக் குறைக்கலாம்.
 
                - அதிகம்  தாக்கப்பட்ட இலைகளை அகற்றி அழிக்க வேண்டும்.
 
                - இப்பூச்சிகளைக்  கட்டுப்படுத்த வேப்பெண்ணெய்  3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு  என்ற அளவில் கலந்து  தெளிக்க  வேண்டும்.
 
                - பூச்சிகளின்  எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் பொழுது ஏக்கருக்கு 400 மி.லி.  மீத்தைல் டெமட்டான் அல்லது டைமெத்தோயேட் மருந்தைத் தெளிக்க வேண்டும்.
 
                - மாவுப்பூச்சியினைக்  கட்டுப்படுத்த ஒரு கிலோ மீன் எண்ணெய் சோப்பை  40 லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்க வேண்டும்.
 
             
                               |