பயிர் பாதுகாப்பு :: அஸ்வகந்தா பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பயிர்: அஸ்வகந்தா

அறிவியல் பெயர்: வித்தானியா சோமானி பெர்ரா

குடும்பம்: சொலானேசியே

சாறு உறிஞ்சும் பூச்சிகள்
அசுவினி
இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள்  இலையின் அடிப்பாகத்திலும் குருத்துப் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். பெரும்பாலும் ஆண்டு முழுவதும் காணப்படும் இப்பூச்சி,  மஞ்சள்  கலந்த பச்சை நிறமாகக் காணப்படும். இளம் தாவரங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். இவை இலைச் சாற்றை உறிஞ்சுவதால் தாக்கப்பட்ட இளங்குருத்து மற்றும் இலைகள்  சிறுத்தும், சுருங்கியும், தடித்தும் வளைந்தும்  காணப்படும். பூச்சிகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து சுரக்கும் தேன் போன்ற திரவத்தால் இலைகளின் மேல் பரப்பில்  மேல் கரும்பூசண வளர்ச்சி தென்படும். இதனால் எறும்புகளின் நடமாட்டம் தாக்கப்பட்ட செடிகளில்  அதிகமாகக் காணப்படும்.

தத்துப்பூச்சி
இளம் மற்றும் முதிர்ந்த தத்துப் பூச்சிகள் பச்சை நிறத்தில் இலைகளின்  அடிப்பாகத்தில் காணப்படும். இளம் பூச்சிகள் பக்கவாட்டில் நகர்ந்து செல்லும் தன்மை கொண்டது. இலைச் சாற்றினை உறிஞ்சுவதால் செடிகள் வளர்ச்சி குன்றிக் காணப்படும். மேலும் தாக்கப்பட்ட இலைகளின் ஓரங்கள் மஞ்சள் நிறமாக மாறி, வாடி, கீழ்நோக்கி சுருண்டு கிண்ணம் போன்று காணப்படும்.    நாளடைவில் தாக்கப்பட்ட இலைகள் பழுப்பு நிறமாக மாறி நெருப்பால் எரிக்கப்பட்டது போன்று நிறமாற்றம் பெறும்.

கண்ணாடி இறக்கைப் பூச்சி
கண்ணாடி இறக்கைப் பூச்சி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில், கண்ணாடி போன்ற  இறக்கையுடன் காணப்படும். இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள்  இலையின் மேல்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி சேதப்படுத்துகிறது. இதனால் இலைகள் மஞசள் நிறமாக மாறி, செடியின் வளர்ச்சி குன்றிக் காணப்படும்.

வெள்ளை ஈ
இந்த சாறு உறிஞ்சும் பூச்சியானது சமீப காலத்தில் அதிகமாகத் தோன்றி சேதத்தை உண்டாக்கி வருகிறது. இது நோனி பயிரைத் தவிர 300 க்கும் மேற்பட்ட பயிர் இனங்களிலும், தாவர வகைகளிலும் இனப் பெருக்கம் செய்து சேதம் ஏற்படுத்தக் கூடிய தன்மை கொண்டதாகும். இதன் முதிர் பெண் உயிரிகள் இலைகளின் மேல் வளைய வடிவில் முட்டை இடுகின்றன. இப்பூச்சிகளின் இளம் குஞ்சுகளும் முதிர்ந்த உயரிகளும் இலைகளின் அடிப்பாகங்களில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். இவை இலைச்சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பூ, மொக்கு, பிஞ்சுகள் உதிர்ந்து விடுகின்றன.

மாவுப்பூச்சி
இளம் மற்றும்  முதிர்ந்த மாவுப்பூச்சிகள் இலையின் அடிப்பகுதியில் அடர்த்தியாய் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சி சேதம் உண்டு பண்ணுகின்றன. இதனால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி சிறுத்துக் காய்ந்து விடும். மாவுப்பூச்சி வெளியேற்றும் தேன் போன்ற திரவம் இலைகளின் மேல் கரும்பூசணத்தை உருவாக்குகிறது. இப்பூச்சிகள் சிறிதாகவும் மென்மையான உடலின் மேல் வெள்ளை நிற மாவு போன்ற பூச்சினால் சூழப்பட்டும் காணப்படும்.

மாவுப்பூச்சி பாராகாக்கஸ் மார்ஜினேடஸ்           பெரிசியா விர்கேட்டா
இலைப்புள்ளி வண்டு இலைப்புள்ளி வண்டு சாம்பல்  நிற வண்டு

பச்சை நாவாய்ப் பூச்சி
இளம் பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும்  இலைகளிலும்,  குருத்துப் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு, செடியின் பாகங்களைக் குத்தி சாற்றை  உறிஞ்சி உண்டு சேதம் விளைவிக்கின்றன். அதிகம் தாக்கப்பட்ட செடிகள் முதலில் வளர்ச்சி குன்றி, நாளடைவில் மடிந்து விடும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கான மேலாண்மை முறைகள்

  • இயற்கையில் பொறி வண்டு மற்றம் கிரைசோபா இரை விழுங்கிகள் இப்பூச்சிகளை உணவாக உட்கொள்வதால் இப்பூச்சிகளின் எண்ணிக்கை ஓரளவு குறைகிறது.
  • எறும்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இப்பூச்சிகள் பரவுவதைக் குறைக்கலாம்.
  • அதிகம் பூச்சி தாக்கப்பட்ட இலைகளை அகற்றி அழிக்க வேண்டும்.
  • மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை அமைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இச்சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு  என்ற அளவில் கலந்து  தெளிக்க  வேண்டும்.
  • பூச்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் பொழுது ஏக்கருக்கு 400 மி.லி. மீத்தைல் டெமட்டான் அல்லது டைமெத்தோயேட் மருந்தைத் தெளிக்க வேண்டும்.
  • மாவுப்பூச்சியினைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ மீன் எண்ணெய் சோப்பை 40 லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்க வேண்டும்.

இலையை உண்ணும் புழுக்கள்
இலைத்துளைப்பான்

இந்தப் பூச்சியின் புழுக்கள் இலைகளைக் குடைந்து உள்ளிருந்து கொண்டே உட்திசுக்களை உண்டு சேதம் விளைவிக்கும். இதனால் இலைகள் உருவிழந்து, நாளடைவில் காய்ந்து விடுகின்றன. இதனால் செடி வளர்ச்சி குன்றி காணப்படும்.
மேலாண்மை முறைகள்

  • தாக்கப்பட்ட  இலைகளையும்,  புழுக்களையும் சேகரித்து அழித்து விட வேண்டும்.
  • விளக்குப் பொறிகளை அமைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு  என்ற அளவில் கலந்து  தெளிக்க  வேண்டும்.

அமெரிக்கன் காய்ப்புழு   
இதன் புழுக்கள் செடிகளின் குருத்துப் பகுதிகளையும், இலைகளையும் கடித்து உண்டு சேதம் விளைவிக்கின்றன. பெண் அந்துப்பூச்சி, முட்டைகளை,  இலையின் மேல் தனித்தனியாக இடும். முட்டைகள் கோள வடிவத்தில் இளம் மஞ்சள் நிறத்தில், வரிவரியாகக் கோடுகளுடன் தென்படும்.  இளம்புழுக்கள் வெண்மை கலந்த மஞ்சள் நிறத்துடனும், கரும்புள்ளி நிறத் தலையைக் கொண்டும், உடலில் நுண்ணிய கருமைப்புள்ளிகளுடனும், மெல்லிய ரோமங்களுடனும் தென்படும். அந்துப் பூச்சிகள் தடிமனாகவும், இளம் பழுப்பு நிறத்திலும்  தென்படும். முன் இறக்கைகள் பசுமை கலந்த சாம்பல் நிறத்திலும், அலைகளைப் போல் வளைந்த இளம் சாம்பல் நிறப் பட்டைகளுடனும், வெவ்வேறு அளவிலான கரும்புள்ளிகளுடனும் தென்படும்.  பின் இறக்கைகள்  வெண்மை நிறமாகவும், கருமையான நரம்புகளைக் கொண்டும், வெளி விளிம்பின் ஒரு ஓரமாக கருமை நிறப் பட்டையுடன் தென்படும்.
 
மேலாண்மை முறைகள்

  • விளக்குப் பொறி வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இனக்கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 5 வீதம் வைத்து ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • நியுக்ளியார் பாலிஹெட்ரோசிஸ் நச்சுயிரி, ஒரு ஏக்கருக்கு 100 புழு சமன் என்ற அளவில் தெளித்து இளம் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு  என்ற அளவில் கலந்து  தெளிக்க  வேண்டும்.

இலைப்புள்ளி வண்டு
புழுக்களும், வண்டுகளும் இலைகளின் இருபரப்பிலும் இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டி உண்டு சேதம் விளைவிக்கும். அதிகம் தாக்கப்பட்ட இலைகள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து விடும். இதனால் செடியின்  வளர்ச்சி குன்றி காணப்படும்.பெண்வண்டுகள், மஞ்சள் நிற, நீளமான, சுருட்டு வடிவிலான முட்டைகளைக் கூட்டம் கூட்டமாக இலைகளின் அடிப்பரப்பில் இடும். புழுக்கள் மஞ்சள் நிறமாகவும், தட்டையாகவும் உடலின் மேல் கரிய நிறத்தில் முட்கள் போன்ற ரோமங்களைக் கொண்டும் காணப்படும்.

கூண்டுப்புழுக்கள் மஞ்சள் நிறமாகவும், உடலின் பின்பகுதியில் முட்களைக் கொண்டும் காணப்படும். வண்டுகள் அரைக்கோள வடிவில், ஆரஞ்சு கலந்த  பழுப்பு நிறத்திலும், முன் இறக்கைகளில் 12 முதல் 28 கருமை நிறப்புள்ளிகளுடனும் காணப்படும்.

மேலாண்மை முறைகள்

  • தாக்கப்பட்ட  இலைகளுடன்,  புழுக்கள் மற்றும் வண்டுகளை  சேகரித்து அழிப்பதால், சேதத்தைக் குறைக்கலாம்.
  • பூச்சி தாக்குதலின் அளவைப் பொறுத்து வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

சாம்பல் நிற வண்டு
இந்த வண்டுகள் பெரும்பாலும் இலைகளில் சிறு துவாரங்கள் ஏற்படுத்தியும், ஓரங்களைக் கடித்தும் சேதம் உண்டாக்குகின்றன. சில சமயங்களில் அதிக அளவில் தோன்றி பெருத்த சேதம் உண்டாக்குகின்றன. இதன் புழுப்பருவம் செடிகளின் வேர்ப்பாகத்தில் மண்ணினுள் காணப்படும். புழுக்கள் வேர்களின் நுனிகளைக் கடித்துத் தின்பதால் தாக்கப்பட்ட செடிகள் வாட ஆரம்பித்து, நாளடைவில் வறண்டு விடுகின்றன.
மேலாண்மை முறைகள்

  • இதனைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு தெளிக்க  வேண்டும்.
  • மண்ணினுள் உள்ள புழுக்களைக் கட்டுப்படுத்த வேப்பம்புண்ணாக்கு ஒரு எக்டருக்கு 500 – 1000 கிலோ என்ற அளவில் மண்ணில் இடுதல் வேண்டும்.

சிவப்பு சிலந்தி
பூச்சியில்லாத இனத்தைச் சேர்ந்த எதிரிகளில் சிவப்புச் சிலந்தி முக்கியமானதாகும். இவை சிலந்தி இனத்தைச் சார்ந்தவை. எட்டுக் கால்களை உடையவை. முட்டையிலிருந்து வெளிவரும் முதல் நிலைக் குஞ்சுகள் மஞ்சள் கலந்த வெளிர் நிறமாகக் காணப்படும்.
இளம் குஞ்சுகளும், முதிர்ந்த சிலந்திகளும் இலையின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சுகின்றன. இதனால் இலைகளில் வெண்புள்ளிகள் தோன்றி பின்பு வெளிர் மஞ்சள் கலந்த சிவப்பு நிறமாக மாறுகிறது. இச்சிலந்தியின் எண்ணிக்கை அதிகமானால், நூலாம்படைகளால் இலைகள் பின்னப்பட்டு பிறகு உதிர்ந்து விடும். இதனால் பயிர் வளர்ச்சி குன்றி, விளைச்சல் பாதிக்கப்படுகிறது.

மேலாண்மை முறைகள்
இலைகளில் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 10 சிலந்திகளுக்கு அதிகமாகத் தோன்றினால், ஒரு ஏக்கருக்கு நனையும் கந்தகத் தூள் 400 கிராம் (அ) டைக்கோபால் 400 மி.லி. தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014