பயிர் பாதுகாப்பு :: ஒட்டுண்ணிகள் உற்பத்தி முறைகள்

பெத்திலிட் புழுப்பருவ ஒட்டுண்ணி

கோணியோசஸ் என்ற பெத்திலிட் குளவியினத்தைச் சார்ந்த ஒரு புழுப்பருவ புற ஒட்டுண்ணியாகும். இது தென்னைக் கருந்தலைப்புழுவை மகவும் திறமையாக அழிக்கும் தன்மை கொண்டது.
பெத்திலிட் ஒட்டுண்ணிகள் வளர்க்கும் முறை:

  • இந்த ஒட்டுண்ணி கருமை நிறத்தில் பளபளப்பாக உடல் பகுதி கூர்மையாகவும் சிறு எறும்பு போன்றும் இருக்கும். தாக்கப்பட்ட ஒரு புழுவிலிருந்து 13 லிருந்து 19 ஒட்டுண்ணிகள் வரை வளர்ச்சியடையக்கூடும்.
  • ஒரு 1.5x2.5 செ.மீ. கண்ணாடிச் சோதனைக்குழாயில்  ஒட்டுண்ணிகளை ஒரு நாள் இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். மறுநாள் பெண் ஒட்டுண்ணிகளை தனித்தனியாக சிறு கண்ணாடிக்குழாய்களில் அல்லது கண்ணாடிக்குப்பிகளில் பிரித்து வைக்க வேண்டும்.
  • இனச்சேர்க்கைக்கு பாலிதீன் பைகளில் விட்டு வைத்தால் கண்ணாடிக்குழாய்களில் அல்லது குப்பிகளில் பிரித்து மாற்றுவது எளிது.
  • ஒட்டுண்ணிக்கு 50 சதம் தேன்கலவையினை உணவாகக் கொடுக்க வேண்டும். பின்னர் நன்றாக முழு வளர்ச்சியடைந்த தென்னைக் கருந்தலைப்புழு அல்லது நெல் அந்துப்பூச்சி புழுவை கண்ணாடி குழாய் அல்லது குப்பிக்கு ஒன்று வீதம் எடுத்துக்கொள்ள வேண்டும். தாய் ஒட்டுண்ணி ஓம்புயிரி புழுவைத்தாக்கி செயல் இழக்க செய்த பின் அதன் உடல் மீது வெள்ளை நிறத்தில் சிறிய முட்டைகளை வைக்கின்றன.
  • ஒட்டுண்ணியின் முட்டைப்பருவம் 15 நாட்கள் ஆகும். அவற்றிலிருந்து வரும் ஒட்டுண்ணிப்புழுக்கள் ஓம்புயிரி புழுவினைக் காயப்படுத்தி வெளிப்புற ஒட்டுண்ணிகளாக இருந்து ஒட்டுண்ணுகின்றன.
  • ஓம்புயிரி புழுக்களைத்தாக்கி முட்டைகள் வைத்த பின்னர் 2-3 நாட்களுக்கு ஒட்டுண்ணியின் புழுக்கள் சிறிது வளர்ச்சியடையும் வரை தாய் ஒட்டுண்ணி, தாக்கப்பட்ட புழுவின் மீது அமர்ந்து தன் இன சந்ததியினைப் பராமரிக்கும். இவ்வாறு தாயின் பாச அரவணைப்பில் ஒட்டுண்ணிப்புழுக்கள் வளர்ச்சியடைவது விந்தையான செய்தியாகும். அதன் பின்னரே அடுத்த புழுவைத் தேடுகின்றன. பெத்திலிட் புழுப்பருவம் 4-6 நாட்கள் வரை இருக்கும்.
  • ஒட்டுண்ணிப்புழுக்கள் ஓம்புயிரியினை தின்று வளர்ந்த பின் இறந்த புழுக்களின் அருகிலேயே நூல் கூடு கட்டி கூட்டுப்புழுக்களாக மாறும். ஆதலின் முழு வளர்ச்சியடைந்த ஒட்டுண்ணி புழுக்களுடன் சேர்ந்து இறந்த ஓம்புயிரி புழுக்களைப் பொறுக்கி மடித்த அட்டைகளின் இடுக்குகளில் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைத்தல் வேண்டும். இதனால் அட்டையின் மீது ஒட்டுண்ணிகள் கூட்டுப்புழுக்களாக மாறுவதற்கு வசதியாகின்றது. கூட்டுப்புழுக்களாக மாறியவுடன் இறந்த ஓம்புயிரி புழுக்களைப் பொறுக்கி அழித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அவற்றின் மீது பாக்டீரியா போன்ற நோய் கிருமிகள் உற்பத்தியாகி ஒட்டுண்ணிகளையும் பாதிக்க நேரிடும்.
  • கூட்டுப்புழுக்கள் அடங்கிய அட்டைகளை நெகிழி(பிளாஸ்டிக்) கொள்கலனில் வைத்து தென்னை மர தோப்புகளுக்கு எடுத்து சென்று ஒட்டுண்ணிகள் வெளிவந்தவுடன் மரங்களில் விட வேண்டும். முழு வளர்ச்சியடைந்த ஒட்டுண்ணிகள் 20 நாட்கள்வரை உயிருடன் இருக்கும்.

தேவையான அளவு

  • ஒரு தென்னை மரத்திற்கு 10 ஒட்டுண்ணிகள் வீதம் 3-4 முறை 10 நாட்கள் இடைவெளியில் விட வேண்டும். கருந்தலைப்புழுக்கள் அதிகம் இருப்பின் அதிக எண்ணிக்கையில் ஒட்டுண்ணிகளை விடுவது நல்லது.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015