| பயிர் பாதுகாப்பு  : வாழை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            அசுவினி: பென்டலோனியா நைக்ரோநெர்வோசா 
              சேதத்தின் அறிகுறி:  
              
                
                  - இவை இலை மற்றும் வாழை மட்டைகளின் இடுக்குகளில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி சேதம் விளைவிக்கின்றன.
 
                  - அசுவுணிகள் ஒரு வகை தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால் அதைச் சுற்றி எந்நேரமும் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கும்.
 
                  - அசுவுணிகள் கும்பலாக வாழையின் மீது அமர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது.
 
                  - வாழையில் அதிக அளவு சேதம் ஏற்படுத்தும் ‘முடிக்கொத்து’ நோயைப் பரப்பும் காரணிகளாக இவை இருக்கின்றன.
 
                  - இந்நோய் அனைத்து வாழை இரகங்களையும் தாக்கும். எனினும், மட்டி, பச்சை, செவ்வாழை மற்றும் மலை வாழை இரகங்கள் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகின்றன.
 
                  - இளம் பருவத்தில் நோய் தாக்கிய வாழைக்கன்றுகள் முட்டையாகவும், இலைகள் சிறுத்தும், இலை நரம்புகள் தடித்தும் காணப்படும். வளர்ந்த வாழையை இந்நோய் தாக்கினால் இலைக்காம்புகள் சிறுத்து, வாழையின் நுனியில் இலைகள் கொத்தாகக் காணப்படும்.
 
                  - வாழை குலை தள்ளும் தருணத்தில் நோய் தாக்கியிருப்பின், குலை வெளியே தள்ளப்படுவதற்குப் பதில் தண்டுப் பாகத்தில் வெடித்து வெளிவரும். பூ மடலின் நுனிப்பாகம், இலை போன்று பச்சையைாக இருக்கும். குலைகள் சிறுத்தும் திருகியும் காணப்படும். இதனால், 20- 60 சதம் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
 
                   
                 
              | 
           
          
            
              
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                | இலைகள் கொத்து கொத்தாக காணப்படும் | 
                புது இலைகள் விரியாது | 
                இலைகளின் மேல் பூச்சிகளை காணலாம் | 
                தேன் போன்ற திரவத்தைச் சுற்றி எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கும் | 
               
              | 
           
          
            பூச்சியின் விபரம்:  
              
                
                  - முட்டைகள் : அசுவுணிகள் முட்டையிடுவது இல்லை நேரடியாகக் குஞ்சு பொரிக்கின்றன.
 
                  - இளம் குஞ்சுகள் : நீள்வட்ட வடிவில் சற்று நீண்டிருக்கும். செம்பழும்பு நிறத்தில் ஆறு பிரிவுகளூடைய உணர் கொம்புகளைக் கொண்டிருக்கும்.
 
                  - பூச்சிகள் : சிறிய மற்றும் நடுத்தர அளவுடைய அசுவினிகள் சிவப்பு முதல் அடர் பழுப்பு, பளபளப்புடன் சில சமயங்களில் கருமை நிறத்தில் காணப்படும்.
 
                 
              | 
           
          
            
                
                  
                      | 
                      | 
                   
                  
                    | இளம் குஞ்சுகள் | 
                    முதிர் பூச்சி | 
                   
                 
               
              கட்டுப்படுத்தும் முறை:  
              
                
                  - பயிர்செய்யும்போது நிலத்தை சுத்தமாக  வைத்துக் கொள்ள வேண்டும்.
 
                  - பூச்சி தாக்குதல் வராமலிருக்க நல்ல கன்றுகளை  தேர்வு செய்ய வேண்டும்.
 
                  - தாக்கப்பட்ட மரத்தை கிழங்கோடு சேர்த்து  அழிக்க வேண்டும்.
 
                  - வாழை இலை மற்றும் பூவினை 49° செ வெந்நீரில் 10 நிமிடங்கள் வைத்திருந்தால் அசுவினிகள் இறந்துவிடும்.
 
                  - இளம் கன்றுகள், இலை, இலை காம்புகள், சுருண்ட இலை ஆகியவற்றின் மீது சோப்பு தண்ணீர் அல்லது பூச்சிக் கொல்லிகளுடன் சோப்புநீர் கலந்து தெளிக்கவும்.
 
                  - மெத்தில் டெமட்டான் 25 இ.சி 0.05 சதவிதம்   தெளிக்கவும்.
 
                  - பிரக்கோனிட் குழவிகளான லைசிமெலிபியஸ் டெஸ்டாசெயிபஸ் என்ற ஒட்டுண்ணியை வயலில் விடவும்.
 
                  - மேலும் பொறி வண்டுகள், கண்ணாடி இழை இறக்கைப் பூச்சி போன்றவை, அசுவுணிகளை அதிகம் விரும்பி உண்ணக்கூடியவை.
 
                  - பூஞ்சான் வகையைச் சார்ந்த பிவேரியா பேசியானாவையும் வாழை வயலில் விடலாம்.
 
                 
 
            | 
           
       
  |