|   | 
            மகரந்தத்தாளிலிருந்து சூல்முடியின் பரப்புக்கு மகரந்த துகள்கள் மாற்றப்படும் நிகழ்ச்சிக்கு மகரந்தச்சேர்க்கை என்று பெயர். விதைத் தாவரங்களின், பான பெருக்கத்தில் மகரந்தச் சேர்க்கை ஒரு முக்கியமான நிகழ்ச்சி ஆகும். விதை உருவாவதற்கும், சிற்றினங்களை நிலை நிறுத்தவும் மகரந்தச் சேர்க்கை ஒரு முன் நிபந்தனை ஆகும். ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களில் நேரடி மகரந்தச் சேர்க்கையும், ஆஞ்சியோஸ்பெர்ம்களில் மறைமுக மகரந்தச் சேர்க்கையும் நடைபெறுகிறது. 
             
              இரண்டு வகையான மகரந்தச் சேர்க்கைகள் உள்ளன. 
              
                
                  - தன் மகரந்தச் சேர்க்கை
 
                  - அயல் மகரந்தச் சேர்க்கை
 
                 
               
              தன்  மகரந்தச் சேர்க்கை 
                ஒரே தாவரத்தில் உள்ள ஒரு மலருக்குள்ளே காணப்படும் மகரந்தத்தாளில் இருந்து அதன் சூல்முடியின் பரப்புக்கு மகரந்தத் துகள்கள் கடத்தப்படலாம். அல்லது ஒரே தாவரத்தில் உள்ள இரு வேறு மலர்களுக்கிடையே நிகழலாம். இதன் அடிப்படையில் தன் மகரந்தச் சேர்க்கை இருவகைப்படும். ஆட்டோகேமி மற்றும் கைட்டினோகேமி. 
               
              ஆட்டோகேமி (கிரேக்கத்தில் Auto - மூடியது  gamos - சேர்க்கை) 
                இவ்வகை மகரந்தச் சேர்க்கையில் ஒரு மலரின் மகரந்தத்தாள்களில் உள்ள மகரந்தத் துகள்கள் அதே மலரில் உள்ள சூல்முடிக்கு மாற்றப்படுகின்றன. இது மூன்று வழிகளில் நடைபெறும். 
               
              கிளிஸ்டோகேமி (கிரேக்கத்தில் Cleios - மூடியது   gamos - சேர்க்கை) 
                தன் மகரந்தச்சேர்க்கை முழுவதுமாக நடைபெறுவதற்கு சில தாவரங்களில் மலர்கள் மலர்வதே இல்லை. இந்நிலைக்கு கிளிஸ்டோகேமி என்று பெயர். (எ.கா) காமிலினா பென்சுலேன்ஸிஸ், ஆக்சாலிஸ், வாயோலோ போன்றவை. இவ்வகை மலர்கள் சிறிய இருபால் தன்மைக் கொண்ட தெளிவற்ற, நிறமற்ற மற்றும் தேன் சுரக்காதவையாக உள்ளன. 
              ஹோமோகேமி 
                சில தாவரங்களில் உள்ள இருபால் மலர்களில் மகரந்தத்தாள்களும், சூல்முடியும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடைகின்றன. இவை வளர்ச்சி, வளைதல், மடிப்புறுதல் ஆகிய மாற்றங்களால் அருகருகே வந்து அமைந்து, தன் மகரந்தச் சேர்க்கையை உறுதிப்படுத்துகின்றன. இந்நிலைக்கு ஹோமோகேமி என்று பெயர். எ.கா மிராபிலிஸ் (அந்தி மந்தாரை) கேராந்தஸ் (வின்கா) உருளைக்கிழங்கு, சூரியகாந்தி போன்றவை. 
               
              மொட்டு மகரந்தச் சேர்க்கை 
                மொட்டுகள் மலர்வதற்கு முன்னால் மகரந்தத் தாள்களும் சூல்முடியும் முதிர்ச்சி அடைந்த தன் மகரந்தச் சேர்க்கையை உறுதி செய்யும். எ.கா கோதுமை, நெல், பட்டாணி போன்றவை. 
               
              கேட்டினோகேமி (கிரேக்கத்தில் Geiton - அருகில், gamos - சேர்க்கை) 
                இவ்வகை மகரந்தச் சேர்க்கையில் ஒரு மலரில் இருந்து மகரந்தத் துகள்கள், அதே தாவரத்தில் உள்ள மற்றொர மலரின் சூல்முடிக்கு மாற்றப்படுகின்றன. இது பெரும்பாலும் மோனிஷியஸ் தாவரங்களில் காணப்படுகிறது. (ஒரு பால் தன்மை, ஆண் மற்றும் பெண் மலர்கள் ஒரே தாவரத்தில் காணப்படுகின்றன). 
               
              தன்மகரந்தச்சேர்க்கையின் நன்மைகள் 
              
                
                  - மகரந்தச் சேர்க்கைக்கான வாய்ப்புக்கள் அதிகம்.
 
                  - ஒரு தாவர இனத்தின் தூயத்தன்மையை காக்கவும், கலப்பினத்தைத் தவிர்க்கவும், தன் மகரந்தச் சேர்க்கை உதவும்.
 
                  - அளவுக்கு அதிகமான மகரந்தத் துகள்களை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.
 
                  - பெரிய அழகான கவர்ச்சியான மலர்களையோ, மணம் மற்றும் தேன் கொண்ட தன்மையையோ மகரந்தச் சேர்க்கை ஆளர்களை ஈர்க்கத் தேவைப்படுவதில்லை.
 
                 
               
              தன்மகரந்தச்சேர்க்கையின் தீமைகள் 
              
                
                  - 
                    
ஒவ்வொரு தலைமுறைக்குப் பின்னால் தோன்றும் சந்ததிகள் தொடர்ச்சியாக பலவீனம் அடைகின்றன. 
                   
                  - புதிய சிற்றினங்கள் மற்றும் வகைகள் உருவாகும் வாய்ப்பு குறையும்.
 
                 
               
              அயல் மகரந்தச் சேர்க்கை (Xenogamy, Allogamy) 
                மகரந்தத் துகள்கள் ஒரு தாவரத்தின் ஒரு மலரிலிருந்து மற்றொரு தாவரத்தில் உள்ள ஒரு மலரின் சூல்முடிக்கு மாற்றப்படும் நிகழ்ச்சி அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும். இதற்கு சீனோகேமி (கிரேக்கத்தில் Xenos = அயல், gamos = சேர்க்கை அல்லது அல்லோகேமி (கிரேக்கத்தில் Allso = வேறு,    gamos = சேர்க்கை) எனவும் பெயர் வழங்கப்படும். 
              அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் முக்கிய மலர் பண்புகளாவன 
               
              ஹெர்கோகேமி 
                இருபால் மலர்களாக இருந்தாலும் இன்றியமையாத உறுப்புக்களான மகரந்தத்தாள்களும் சூல்முடியும் மலரில் அமைந்திருக்கும் விதம் தன் மகரந்தச் சேர்க்கையை நடைபெறாமல் தடுக்கும். (எ.கா) ஹைபிஸ்கஸ் சிற்றினங்கள் குளோரியோசா சூபர்பா போன்றவை. 
               
              ஹைபிஸ்கஸ் மகரந்தத் தாள்களுக்கு மேற்புறமாக சூல்முடி நீட்டிக் கொண்டிருக்கும். குளோரியோசா சூபர்பாவில் சூல்முடி மகரந்தத் தாள்களிலிருந்து எதிர்த் திசையில் விலகிக் காணப்படும். 
               
              டைகோகேமி 
                மலரின் மகரந்தத் துகள்கள் மற்றும் சூல்முடி வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சி அடைந்து தன் மகரந்தச் சேர்க்கையைத் தடுக்கும். இது இரு வகைப்படும். 
               
              சூலக முன் முதிர்வு 
                சூலகம் மகரந்தத் தாள்களுக்கு முன்னரே முதிர்ச்சி அடைகிறது. 
                (எ.கா) கம்பு, அரிஸ்டோலோகியா போன்றவை. 
               
              மகரந்த முன் முதிர்வு 
                மகரந்தத் தாள்கள் சூலகத்திற்கு முன்னால் முதிர்ந்து மகரந்தத் துகள்களை உதிர்க்கின்றன. எ.கா சோளம். 
               
              தன் ஒவ்வாமை 
                சில தாவரங்களில் முதிர்ச்சி மகரந்தத் துகள்கள் பெறுகின்ற நிலையில் உள்ள சூல்முடியின் மீது விழும் போது தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறாது. இதற்கு தன் ஒவ்வாமை என்று பெயர். இத்தகைய சூழ்நிலையில் அயல் மகரந்தச் சேர்க்கை என்பதே ஒரு தீர்வாக உள்ளது. 
              ஆண் மலடு 
                சில தாவரங்களின் மகரந்தத் துகள்கள் வளமற்றவையாக உள்ளன. இத்தகையத் தாவரங்கள் அயல் மகரந்தச் சேர்க்கையால் மட்டுமே விதைகளை உருவாக்க முடியும். 
               
              ஈரில்லா தன்மை 
                ஒருபால் மலர்களை உடைய ஈரில்லாத் தாவரங்களில், இரு வேறு தாவரங்களில் உள்ள ஆண் மற்றும் பெண் மலர்களுக்கிடையே அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. (எ.கா) பப்பாளி, சில குக்கர்பிட்ஸ். 
               
              வேறுபட்ட சூலக அமைப்பு 
                சில தாவரங்களில் மகரந்தத் தாள்களின் நீளமும் சூல் தண்டின் நீளமும் வேறுபடுவதால் தன் மகரந்தச் சேர்க்கை நடைபெற வாய்ப்பு இல்லை. (எ.கா) பிரிமுலா, லினம் போன்றவை. 
              
                
                  
                    | மகரந்தச் சேர்க்கை மற்றும் இனப்பெருக்க முறை | 
                    தாவரங்கள் | 
                   
                  
                    | தன் மகரந்தச் சேர்க்கை | 
                      | 
                   
                  
                    | விதை மூலம் உற்பத்தியாதல் | 
                    நெல், கோதுமை, பார்லி, ஓட்ஸ், கொண்டைக்கடலை, பட்டாணி, தட்டைப்பயிர், உளுந்து, பச்சைப்பயிறு, சோயாபீன்ஸ், எள், மிளகாய், கத்தரி, தக்காளி, வெண்டை மற்றும் பல. | 
                   
                  
                    | உடல வழி உற்பத்தி | 
                    உருளைக்கிழங்கு | 
                   
                  
                    | அயல் மகரந்தச் சேர்க்கை | 
                      | 
                   
                  
                    | விதை மூலம் உற்பத்தி | 
                    மக்காச்சோளம், கம்பு, முள்ளங்கி, முட்டைக்கோஸ், சூரியகாந்தி, சர்க்கரைக்கிழங்கு, ஆமணக்கு, வெங்காயம், பூண்டு, தர்பூசணி, வெள்ளரி, பூசணி, எண்ணெய்ப் பனை, கேரட், தென்னை, பப்பாளி மற்றும் பல. | 
                   
                  
                    | உடலவழி உற்பத்தி | 
                    கரும்பு, காபி, கோகோ, டீ, ஆப்பிள், செர்ரி, திராட்சை, வாழை, முந்திரி, மரவள்ளிக்கிழங்கு, ரப்பர் மற்றும் பல. | 
                   
                  
                    | அடிக்கடி அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுதல். | 
                    சோளம், பருத்தி,  துவரை, புகையிலை. | 
                   
                
               
         |