animal husbandry
பறவை இனங்கள் :: வாத்து வளர்ப்பு :: இனங்கள் முதல் பக்கம்

வாத்து வளர்ப்பு

‘அனாட்டிடே’ குடும்பத்தைச் சார்ந்த அனைத்துப் பறவைகளுக்கும் வாத்து என்பது பொதுவான பெயர். அன்னப்பறவை, பெருவாத்து, சிறு வாத்து என பல வகை இக்குடும்பத்தினுள் அடக்கம். எனினும் சிறுவாத்துகளையே பொதுவாக வளர்ப்பது வழக்கம். இவை நல்ல நீரிலும், உப்புகொண்ட கடல்நீரிலும் கூட வாழக்கூடியவை. பெரும்பாலான வாத்து வகைகளில் அதன் அலகு அகண்டு தட்டையாகவும் இறையைத் தோண்டி எடுப்பதற்கு ஏற்றவாறு இருக்கும். வாத்துகள் பல்வேறுபட்ட உணவை எடுத்துக் கொள்பவை. புற்கள், நீர்த்தாவரங்கள், மீன்கள், புழுக்கள், சிறுநத்தைகள், தவளை போன்ற பலவகை உயிரிகளை உணவாக உண்கின்றன.
கோழி வளர்ப்பிற்கு அடுத்தபடியாக வாத்துவளர்ப்பு நம் நாட்டில் முக்கியமான ஒன்றாகும். நமது நாட்டின் மொத்த பறவைகள் எண்ணிக்கையில் 10 சதவீதமும், முட்டை உற்பத்தியில் 6-7 சதவீதமும் பங்கு வகிக்கிறது.
வாத்துகள் நாட்டின் கிழக்கு மற்றும் தென் மாவட்டங்களில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகின்றன. வாத்து இறைச்சி, கோழி இறைச்சியைவிட சற்று கடினமானவை. வாத்துகளைக் கையாள்வது எளிது. வாத்துகள் தமது இரண்டாவது வருடத்தில் கூட நல்ல முட்டை உற்பத்தியை அளிக்கக் கூடியவை.

இனங்கள்

காக்கி கேம்பெல் முட்டை உற்பத்திக்கும், வெள்ளை பெக்கின் இறைச்சிக்கும் பெயர்பெற்ற வாத்து இனங்களாகும்.

காக்கி கேம்பெல்

இவ்வகை லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்ட்டவை. ஒரு முட்டை சுழற்சியில் 300 முட்டைகள் வரை தரக்கூடிய இனங்கள் இவை. கிரமப்புற மேம்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடிய முக்கியமான இனங்கள் இவை. முட்டை உற்பத்தியில் மிகச் சிறந்த இனம் காக்கி கேம்பெல் ஆகும். நாளொன்றுக்கு தவறாமல் 1 முட்டை என 300 முட்டைகள் எளிதில் கிடைக்கும். இவ்வின பெட்டை வாத்துகள் 2-2.2 கி.கி. மும் ஆண் வாத்துகள் 2.2-2.4 கி.கி எடையும் கொண்டிருக்கும். முட்டை எடை 65-75 கிராம் வரை இருக்கும்.

Khaki Campbell
காக்கி கேம்பெல்

 

வெள்ளை பெக்கின்

வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இவ்வினம் இந்தியச் சூழ்நிலைக்கு மிகவும் ஏற்பது. இவ்வினம் விரைவில் வளரும் தன்மைக்கும் நல்ல இறைச்சி உற்பத்திக்கும் புகழ் பெற்றது. குறைந்தளவு தீவனம் உண்டு நல்ல தரமான இறைச்சியை உற்பத்தி செய்யக்கூடியது. இது 2.2-2.5 கி.கி எடையை 42 நாட்களில் அடைந்துவிடும். இதன் தீவன மாற்றுத்திறன் விகிதம் 1:2.3 - 2.7 கி.கி ஆகும்.

White pekin
வெள்ளை பெக்கின்


(ஆதாரம்: www.vuatkerala.org)

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15