கால்நடை மற்றும் பறவை வளர்ப்பு :: இனங்களும் தெரிவு முறைகளும் முதல் பக்கம்

கறவை இனங்களும் தெரிவு முறைகளும்

கால்நடை வளர்ப்பில் கறவை மாடுகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல் முக்கியமான ஒன்றாகும். மேலும் தேர்ந்தெடுத்துள்ள இனங்களைத் தகுந்த முறையில் இனங்கண்டு, அவற்றைப் பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டியதும் அவசியம். பல இனங்களை இனவிருத்தி செய்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அயல்நாட்டுக் கலப்பினங்களின் பண்புகள் 50 சதவீதமே கிடைக்கும். மீதமுள்ள 50 சதவீதம் நாம் பயன்படுத்திய இனத்தின் பண்புகளை சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளத் தேவையான வெப்பம் தாங்கும் சக்தி, நோய் எதிர்ப்பு போன்றவை கிடைக்குமாறு இனவிருத்தி செய்தல் நலம். சாஹிவால் இனத்தின் விந்தணுவை ஹால்ஸ்டீன் ஃபிரீஸியனில் பயன்படுத்தும்போது இவ்விரு இனங்களின் பண்புகளும் 50% + 50% முறையே கிடைக்கின்றன.
வேறு சில சுற்றுச்சூழல் நிலவும் பகுதிகளிலிருந்து இனங்களை வாங்கும்போது அவை நமது தட்பவெப்ப நிலைக்கு ஏற்றதா என்று அறிந்து தருவித்தல் நலம். சில வகை இனங்கள் தட்பவெப்ப நிலையை ஏற்றுகொள்ள முடியாமல் போகும். எனவே சரியாகத் தெரிவு செய்து நமது சூழலுக்கேற்ற இனங்களை வாங்குதல் நலம்.

கறவை இனங்களைத் தெரிவு செய்ய சில வழிமுறைகள்


கன்றுகளையோ அல்லது கறவை மாடுகளையோ சந்தையில் தேர்ந்தெடுத்து வாங்குவது ஒரு கலை ஆகும். முடிந்தவரை ஒரு கால்நடை விவசாயி அவரது பண்ணை இனங்களைக் கொண்டே பண்ணையை இனவிருத்தி செய்து கொள்வது நல்லது. அப்படி வெளி மாடுகள் தேவைப்படும் பட்சத்தில் கீழ்காணும் வழிமுறைகளைக் கருத்தில் கொள்ளவும்.

 • எப்பொழுதும் சந்தையிலிருந்து ஒரு மாட்டை வாங்கும் போது அந்த இனத்தின் பண்புகளையும் பால் தரும் அளவையும் அறிந்திருக்க வேண்டும்
 • மாட்டின் வரலாற்றுப் பதிவேடுகள் ஏதேனும் இருந்தால் அதன் மூலம் மாட்டின் தன்மையை அறிந்து கொள்ளலாம்
 • முதல் ஐந்து கன்றுகளில்தான் மாட்டின் பால் அளவு அதிகமாக இருக்கும். எனவே நாம் வாங்கும் மாடானது முதல் அல்லது இரண்டாவது ஈத்தாக இருத்தல் நலம்
 • மாடு சாந்த மாகவும் எந்த நபரும் பால்கறக்க அனுமதிப்பதாகவும் இருக்கவேண்டும்
 • அக்டோபர் அல்லது நவம்பரில் வாங்குவது சிறந்தது
 • கன்று ஈன்ற 90 நாட்களில் மாட்டின் பால் உற்பத்தி அளவை தெரிந்து கொள்ளலாம்

அதிக பால் தரும் மாட்டின் பண்புகள்

 • நிறைய பால் உற்பத்தி கொடுக்கும் மாட்டின் தோற்றம் பார்வைக்கு வயிறு அல்லது மடி பெரியதாக தோற்றமளிக்கும்
 • பக்களில் பார்க்கும்போது நல்ல நீள முக்கோண வடிவம் தெரிய வேண்டும்
 • கண்கள் பளிச்சென்றும், கழுத்து மெலிந்தும் இருக்க வேண்டும்
 • மடி வயிற்றுடன் நன்கு இணைந்திருக்க வேண்டும். மேலும் இரத்த நாளங்கள் புடைத்துக் காண்பபடும்
 • மடியின் காம்புகள் சராசரி அளவுடனும் சீரான இடைவெளியுடனும் இருக்க வேண்டும். தொடுவதற்கு பஞ்சுபோல் இருக்க வேண்டும்
 • மார்பு விரிந்தும் தோல் மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் மூக்கு பெரியதாகவும் இருக்க வேண்டும்
 • முடிந்த அளவு பாலை கறந்து பார்த்து வாங்குவது நல்லது

cattle_High Yielding Cow
அதிக பால் தரும் மாடு

(ஆதாரம்: BAIF ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்)

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15