காடை வளர்ப்பு 
          காடை வளர்ப்பு தமிழ்நாட்டில்  பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.  டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்ிச, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின்  ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன. 
          இறைச்சிக்  காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள் 
            மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை  வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில்  குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு  நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு  வளர்கின்றன. கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக்  காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு  செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை ஆறுவார காலத்தில்  அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கோள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த  முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகின்றது. 
          ஜப்பானியக்  காடை இறைச்சி 
            சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில்  சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடை உள்ள காடையைச்  சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக  இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை இறைச்சியில் அதிகப் புரதமும்  (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும்  பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாய் கருதப்படுகின்றது. 
             
            ஜப்பானியக்  காடை விற்பனை 
            ஒரு காடை வளர்ப்புக்கு ரூ. 7 வீதம் செலவாகும். ஒரு நாள் காடை  குஞ்சு ரூ. 2 ஆகும். தீவனம் அதிகபட்சமாக 450 கிராம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூ.  5 ஆகும். மற்றைய செலவு 50 காசு ஆக மொத்தம் ரூ. 7.50 ஒரு காடையை உற்பத்தி செய்து ரூ.  9க்கு விற்கலாம். ஆகவே ஒரு காடை வளர்ப்பு மூலம் ரூ. 1.50 கிடைக்க வாய்ப்புள்ளது. காடையை  இறைச்சிக்காக விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும். 
          காடை  இனங்கள் 
          
          
            
                
                  - நியூசிலாந்து       காடை
 
                  - பாப்       வெள்ளைக் காடை
 
                  - சைனாக்       காடை
 
                  - மடகாஸ்கர்       காடை
 
                  - கலிபோர்னியா       காடை
 
                  - நியூகினியா       காடை
 
                  - ஜப்பானிய       காடை
 
                 
                
             
          ஜப்பானிய       காடை 
          ஜப்பானியக்  காடை வளர்ப்பு முறை 
            காடை இனங்களில் ஜப்பானியக் காடை மட்டுமே நம் நாட்டில் இறைச்சிக்காக  அதிக அளவில் வளர்க்கலாம். காடைகளைத் தரையில் அதாவது ஆழ்கூள முறை அல்லது கூண்டு முறையில்  வளர்க்கலாம். 
             
  ஆழ்கூள  முறை 
            ஒரு சதுர அடியில் ஐந்து காடைக்ள வரை ஆழ்கூள முறையில் வளர்க்கலாம்.  காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின் கூண்டுகளுக்கு மாற்றி  ஆறு வாரம் வரை வளர்க்கலாம். ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேற்பட்டு, காடைகளை  வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி,  குறைந்த எடையுடன் அதிகத் தீனிச் செலவு ஏற்படுத்தும். எனவே காடைகளை ஆழ்கூள முறையில்  இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு கூண்டுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு  முறையாகும். 
             
  கூண்டு  முறை வளர்ப்பு 
            இறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும் பொழுது முதல் இரண்டு வாரம்  வரை 3 அடி நீளம் இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் வளர்க்கவேண்டும். கூண்டு ஒன்றுக்கு  100 காடைக் குஞ்சுகள் வரை வளர்த்துப் பின் அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம்  இரண்டரை அடி அகலம் 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில், கூண்டு ஒன்றுக்கு 50 காடைகள்  வரை வளர்க்கலாம். 
            குஞ்சுப்பருவக் கூண்டுகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரம் இருத்தல்  வேண்டும். கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5க்கு 1.5 செ.மீ உள்ளதாக  இருக்கவேண்டும். கம்பிவலைக்கடியில் தகடுகள் பொருத்தவேண்டும். அப்போது தான் மேல் அடுக்கில்  உள்ள காடைகளின் கழிவு கீழ் அடுக்கில் உள்ள காடைகளின் மீது விழாது. இந்தத் தகடுகளில்  விழும் கழிவுகளை தினந்தோறும் அகற்றும் படியான வடிவமைப்பு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு  கூண்டும் 4 அல்லது 5  அடுக்குகள் கொண்டவையாக  அமைத்துக் கொள்ளலாம். 
            
          கூண்டு  முறை வளர்ப்பு 
           
            குஞ்சு பருவக் கூண்டுகளை 90 செ.மீக்கு 60 செ.மீ (3க்கு 2 அடி)  என்ற அளவில் உள்ள பிரிவுகளாக அமைக்கலாம். இந்தக் கூண்டில் 100 காடைகளை இரண்டு வாரம்  வரை வளர்க்கலாம். இரண்டு வாரத்திற்கு பிறகு விற்பனை ஆகும் வரை (ஆறு வாரம் வரையில்)  125-150 ச.செ.மீ இடவசதி ஒவ்வொரு காடைக்கும் அளிக்கப்படவேண்டும். 14க்கு இரண்டரை அடி  அளவுள்ள கூண்டில் 50 காடைகள் வரை வளர்க்கலாம். 
          காடைத்தீவனம் 
            காடைகளுக்கும் கோழித் தீனியில் பயன்படுத்தப்படும்  மூலப் பொருட்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. காடைக்குஞ்சுப் பருவத்தில் வழங்கும் தீவனம்  26-28 சதவிகிதம் புரதமும், 2700 கி கலோரி / கிலோ எரிசக்தியும் கொண்டதாக இருக்கவேண்டும்.  இவ்வகைத் தீவனத்தை 0-6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீவனங்களை  மாற்றி பயன்படுத்த திட்டமிடும் பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதம் புரதமும்  2800 கிலோ கிலோரி / கிலோ எரிசக்தி உள்ள தீவனத்தையும் உபயோகிக்லாம். காடைகளுக்கென  சில நிறுவுனங்கள் தீவனம் தயாரித்து விற்கின்றன. காடைத்தீவனம் கடையில் வாங்க இயலாத போது  காடை வளர்ப்போர் இறைச்சிக் கோழிக்கான ஆரம்பகால தீவனத்தை (Broiler Starter Mash) வாங்கி 75 கிலோ தீவனத்துடன்  5 கிலோ வீதம் பிண்ணாக்கு தூளை கலந்து கொடுக்கலாம். இத்தீவனத்தில் தானியங்கள் அளவு  பெரிதாக இருப்பின் மீண்டும் ஒரு முறை அரைத்து தூளின் அளவைக் குறைத்து உபயோகிக்கலாம். 
            
          காடைத்தீவனம் 
          100  கிலோ காடைத் தீவனம் தயாரிக்க தேவைப்படும் தீவனப்பொருட்கள் 
          
            
              
                தீவனப்பொருட்கள்   | 
                குஞ்சுப்பருவம்  | 
                வளரும்    காடைத் தீவனம் (கிலோ)  | 
               
              
                மக்காச்சோளம்  | 
                27  | 
                31  | 
               
              
                வெள்ளைச் சோளம் (அ) கம்பு  | 
                15  | 
                14  | 
               
              
                எண்ணெய் நீக்கிய  அரிசி தவிடு  | 
                8  | 
                8  | 
               
              
                கடலைப் பிண்ணாக்கு  | 
                17  | 
                17  | 
               
              
                சூரிய காந்தி பிண்ணாக்கு  | 
                12.5  | 
                12.5  | 
               
              
                சோயா மொச்சை தூள்  | 
                8  | 
                -  | 
               
              
                மீன்தூள் (உப்பு  இல்லாதது)  | 
                10  | 
                10  | 
               
              
                தாது உப்புக்கள்  | 
                2.5  | 
                2.5  | 
               
              
                கிளிஞ்சல் தூள்  | 
                -  | 
                5.0  | 
               
              
                   | 
                100  | 
                100  | 
               
              
                வைட்டமின்  | 
                தேவையான அளவு கலக்கப்படவேண்டும.  | 
               
             
           
                      ஐந்து வார வயது வரை ஒரு காடை 500 கிராம் வரை தீவனத்தை உட்கொள்ளும்  சராசரியாக ஆண்காடை 180-190 கிராமும் பெண் காடை 190-210 கிராம் உடல் எடையும் அடைந்திருக்கும்.  இதுவே விற்பனைக்கு தயாரான நிலை. 
            பெண்காடை ஆண்காடையை விட எடை அதிகமாக இருக்கும். கழுத்து மற்றும்  அதன் கீழ் உள்ள மார்புப் பகுதியில் வெளிர் பழுப்பு நிற இறகுகளில் கறுப்பு நிறப் புள்ளிகள்  காணப்படும். ஆண்காடைகளின் கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப்பகுதி இறகுகள் பழுப்பு  நிறத்தில் இருக்கும். 
          இனப்பெருக்கம் 
            காடைகள் 7 வார வயதில்   முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை  அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை  சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள்  காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை  உற்பத்தி செய்யலாம். 
            
          காடை முட்டைகள் 
           
            கோடைக்காலத்தில் காடை அடை முட்டைகளைக் குளிர்ந்த சூழ்நிலையில்  சேமித்து வைக்கவேண்டும். 
          குஞ்சு  பராமரிப்பு 
            காடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச் சிறியவையாக 8 முதல்  10 கிராம் வரை எடையுள்ளதாகத்தான்  இருக்கும்.  இதனால் கோழிக் குஞ்சுகளுக்குப்  புரூடர் வெப்பம்  அதிகம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்ிகன் மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக  ஒன்றன் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத் திணறி இறப்பு ஏற்படும். வேகமான குளிர் காற்று  வீசும் போதும் சன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், பக்கவாட்டில் தொங்க  விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத் தடையேற்படும் போதும் இவ்வாறு நேர்வதற்கு  வாய்ப்புகள் உண்டு. 
   
  ஊட்டச்சத்துப்  பற்றாக்குறை நோய்கள் 
            காடைக்குஞ்சுகளில் கால் வலுவிழந்த குஞ்சுகளும், நோஞ்சான் குஞ்சுகளும்  அதிகம் இருக்கக்கூடும். குஞ்சு பொரிப்பகங்களில் முட்டையிடும் காடைகளுக்குப் போதுமான  அளவில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் அளிக்கப்படாததால் இவ்வாறு நேரலாம். 
   
  நுண்ணுயிரிகளால்  ஏற்படும் நோய்கள் 
          
          
            
                
                  - தொப்புள்       அழற்சி
 
                  - ஈகோலி       நோய்
 
                  - காடைக்கழிச்சல்       மற்றும் காளான் நோய்கள்
 
                  - நுரையீரல்       அழற்சி
 
                  - பூசண       நச்சு.
 
                 
           
          மேலும் மேரெக்ஸ் வாத நோய், இராணிக்கெட்  கழிச்சல் நோய் போன்ற வைரஸ் நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களும், காக்சிடியோசிஸ்  எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் காடைகளைப் பாதிக்கலாம். இருப்பினும் கோழிகளை விடக்  காடைகள் இந்நோய்களை எதிர்க்கும் சக்தி அதிகம் கொண்டவையாக இருப்பதனால், இவ்வகை நோய்களுக்கு  எதிராகத்தடுப்பு முறைகள் ஏதும் எடுக்கவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை. 
             
            எனவே குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம், குளிர் காற்று வீசாமல்  இளம் பருவத்தில் பாதுகாப்பு, முறையான கிருமி நீக்கம் எப்பொழுதும் தூய்மையான குடிநீர்,  தரமான கலப்புத் தீவனம் அளித்தல் போன்றவற்றைக வகையாகக்  கையாண்டால் காடைகளில் ஏற்படும் இறப்பு விகிதத்தைப்  பெருமளவு குறைத்து நோயின்றி அவைகளைப் பாதுகாக்கலாம். 
             
           
            
                   
         
         | 
       >