AMIS
பண்டக பரிமாற்றம் மற்றும் முன்பேர வர்த்தகம் home முதல் பக்கம்

பண்டக முன்பேர வர்த்தகம்

பண்டக முன்பேர வர்த்தகம் என்பது பண்டகங்களின் விலையைக் கண்டறிதலில் ஒரு கருவியாக உள்ளது மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எல்லா பண்டகங்களின் விலை இடர் மேலாண்மை. பருவத்தில் விளைச்சல் மற்றும் அழுகும் தன்மை காரணமாக இந்தியாவில் வேளாண் விளைபொருட்களுக்கு விலை சுழற்சி போக்கு பொதுவாக காணப்படுகிறது. அறுவடை காலத்தில் விளைபொருட்கள் விலை குறைவாகவும், பயிரற்ற காலத்தில் விலை அதிகமாகவும் காணப்படுகிறது. அறுவடை காலத்தில் நுகர்வோரின் உடனடி தேவையைவிட விநியோகம் அதிகமாக உள்ளது,  பயிரற்ற காலத்தில் தேவை விநியோகத்தைவிட அதிகமாக இருக்கும். அறுவடை காலத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு குறைவான விலையையே பெறுகின்றனர் மற்றும் நுகர்வோர்கள் பயிரற்ற காலத்தில் தங்கள் தேவையை பூர்த்தி செய்ய அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. முன்னோக்கு / முன்பேர வர்த்தகம் வேளாண் பொருட்களுக்கான இந்த சமநிலையற்ற தன்மையை சீர்செய்யும் கருவியாக உள்ளது. எனவே முன்பேர வர்த்தகம் நுகர்வோர் மற்றும் விவசாயிகள் இரண்டுபேருக்கும் நன்மை தருவதாக உள்ளது.

இந்தியாவில் பண்டக முன்பேர வர்த்தக வளர்ச்சி

இந்தியாவில் பண்டக முன்பேர வர்த்தகம் ஒரு நூற்றாண்டிற்கும் பழமையானது மற்றும் முதல் முன்பேர வர்த்தகம் 1875-ம் ஆண்டு பம்பாய் பருத்தி வணிகக் கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது. பண்டக வழிச் சந்தை 1900-ம் ஆண்டில் பம்பாயில் எண்ணெய்வித்தக்களுக்காக தொடங்கப்பட்டது. கச்சா சணல் மற்றும் சணல் பொருட்களுக்கான சந்தை 1912-ம் ஆண்டு  முன்னோக்கு வர்த்தகம் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. கோதுமைக்கான முன்னோக்கு வர்த்தகம் 1913-ம் ஆண்டிலிருந்து ஹாபூரில் செயல்பட்டு வருகிறது மற்றும் தங்க, வைர வர்த்தகம் 1920 முதல் செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து மற்ற பயிர்களுக்கு முன்னோக்கு வர்த்தகம் தொடங்கப்பட்டன. உலகப் போர் நடைபெற்ற காலங்களில் இந்திய அரசு இக்கட்டான விநியோக சூழ்நிலையை சமாளிக்க அதிக எண்ணிக்கையிலான பண்டக முன்பேர வணிகத்திற்கு தடை விதித்தது.  1960 களில் பண்டக முன்பேர வர்த்தகம் அதிக அளவிலான பண்டங்களுக்கு தடை செய்யப்பட்டது மற்றும் சிறய பொருட்களான மிளகு மற்றும் மஞ்சளுக்கான முன்பேர வர்த்தகம் மட்டும் தொடர்ந்து செயல்பட்டது.

குஷ்ரோ குழு (1980) பரிந்துரையின்படி பொருளாதார சீர்திருத்தங்கள் (1991) மற்றும் கப்ரா குழு (1994) முன்பேர வர்த்தகத்தை வழியுறுத்தி மீண்டும் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது.   ஏப்ரல் 1999 –ம் ஆண்டு சமையல் எண்ணெய்வித்துக்களுக்கான முன்பேர வர்த்தகத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. தேசிய வேளாண் கொள்கை ஜ%லை 2000-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது மற்றும் 2002-2003-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் மாண்புமிகு நிதி அமைச்சர் முன்பேர வர்த்தகத்திற்கான செயல்முறை விளக்கத்தை அரசுக்கு முன் வைத்தார்.  சர்க்கரைக்கான முன்பேர வர்த்தகம்  மே 2001-ம் ஆண்டில் அனுமதியளிக்கப்பட்டது மற்றும் அரசு 1.4.2003 அன்று அனைத்துப் பண்டகங்களின் முன்பேர வர்த்தகத்திற்கும் அனுமதியளித்து அறிவிப்பை வெளியிட்டது.

முன்னோக்கு வணிகத்திற்கு ஏற்ற பொருட்கள்

எல்லா பண்டகங்களும் முன்பேர வர்த்தகத்திற்கு ஏற்றதல்ல. சந்தையில் போட்டியுள்ள பண்டகங்கள் மட்டுமே முன்பேர வர்த்தகத்திற்கு ஏற்றது. அதாவது பெரிய தேவை மற்றும் விநியோகம் இருக்க வேண்டும். – தனிநபரோ அல்லது குழுவோ தேவை மற்றும் விநியோகத்தின் நிலையை நிர்ணயிக்கக் கூடாது.  விலை ஏற்ற இறக்கங்கள் இருக்க வேண்டும். பண்டகங்கள் சந்தைப்படுத்தும்போது அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். பண்டகங்கள் நீண்ட வைப்பு கால அளவு கொண்டதாக இருக்க வேண்டும் மற்றும்  தரப்படுத்தக்கூடியவையாக இருக்க வேண்டும்.

விலை நிர்ணயம்

வேளாண் விளைபொருட்களுக்கு இந்திய அரசு வேளாண் செலவு மற்றும் விலைகள் ஆணையத்தால் (CACP) பரிந்துரைக்கப்படும் நிருவகிக்கப்பட்ட விலைகளை அறிவிக்கிறது.

விலை பரிந்துரைக்கான நோக்கங்கள்

  • மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உபயோகித்து உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
  • நிலம் மற்றும் பிற உற்பத்தி வளங்களை அறிவுசார்ந்த முறையில் உபயோகிப்பதை உறுதி செய்தல்
  • பொருளாதாரத்தின் மற்ற விலைக் கொள்கைகளின் விளைவு

ஆணைக்குழு நிர்வகிக்கப்பட்ட விலைகளை இரண்டு தொகுப்புகளாக பரிந்துரைக்கின்றனர். அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கொள்முதல் விலை.


ஆதாரம்:
தொகுத்து வழங்கியவர்,

Dr.
T. அழகுமணி, Ph.D.,
பேராசிரியர்
சந்தை விரிவாக்க துறை
விரிவாக்கக் கல்வி இயக்ககம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003

Updated on : Dec 2013


© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014