Agriculture
ஒருங்கிணைந்த பண்ணையத்திற்கு ஏற்ப நாட்டுக்கோழிகளை வளர்த்தல்

வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த இணைத்தொழில்களை சூழ்நிலைக்கேற்ப தேர்ந்தெடுத்து மேற்கொள்வதே ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகும்.
   
விவசாயத்தையே முக்கியமான தொழிலாகக் கொண்ட நமது நாட்டில் மொத்த நிலப்பரப்பில் எழுபது சதவிகிதம் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகளும் ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலமுள்ள சிறு விவசாயிகளும், நடுத்தர விவசாயிகளும் ஆண்டு முழுவதும் விவசாயத்தொழிலை மட்டுமே நம்பி இருக்க முடிவதில்லை. இயற்கையின் விளைவுகளாலும் மற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் இவர்களால் விவசாயத்தை எப்போதும் வெற்றிகரமாக செயலாற்ற இயலுவதில்லை. இதனால் விவசாயிகளுக்கு லாபத்தை விட நஷ்டம் தான் அதிகமாகிறது. இந்நிலை மாற வேண்டுமானால்  வேளாண்மையில் ஒருங்கிணைந்த பண்ணை நிறுவுவது மிகவும் அவசியமாகிறது. வேளாண் இணைத்தொழில் மேற்கொள்வதன் மூலம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து சுய வேலை மேற்கொள்வதன் மூலம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து சுயவேலை வாய்ப்பும், வருமானமும் கிடைப்பதால்  விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் உயரும் என்பது திண்ணம்.
  
எனவே, இத்தகைய நன்மையைத் தரக் கூடிய ஒருங்கிணைந்த பண்ணை முறையில் விவசாயிகள் நாட்டுக்கோழி வளர்ப்பை மேற்கொண்டால் தங்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவும், நிலையான வருமானமும் பெற்று சிறந்த முன்னேற்றம் காணலாம் என்பது உறுதி.
   
தொன்று தொட்டு வளர்ந்த நாட்டுக்கோழிகளை ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் குளக்கரையில் வளர்த்து வந்தால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் ஊட்டச்சத்துத் தேவையை நிறைவு செய்யவும், கிராம மக்களின் வருமானத்தை உயர்த்தவும் முடியும். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் வாழ்வில் வளம் பெறுவர் என்பது உறுதி.
 
மேலும் கோழி வளர்ப்புடன் மீன் வளர்ப்பையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளலாம். இதன் மூலம் நீர்ப்பரப்பும் நிலப்பரப்பும் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. கோழிகளைக் குளத்தருகே வளர்ப்பதால் அவைகள் உரமிடும் இயந்திரமாகத் திகழ்ந்து குளத்தின் சத்துகளை ஏற்றி உற்பத்தியைக் கூட்டுகிறது. எனவே, ஒருங்கிணைந்த பண்ணை மூலமாக வேலை வாய்ப்புகள் அதிகமாவதுடன் உற்பத்திச் செலவும் குறைகிறது.

பயன்கள்
  • சரிவிகித உணவு
  • உற்பத்தித் திறன் மேம்பாடு
  • உயர்ந்த வாழ்க்கைத் தரம்
  • வேலை வாய்ப்பு அதிகரிப்பு
  • பண்ணைக் கழிவுகளின் மறுசுழற்சி
  • அதிக வருமானம்
  • அதிகரித்த நில உபயோகம்

இத்தகைய சூழலில் ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் நாட்டுக்கோழிகளை இணைத்து வளர்த்தல் ஒரு லாபகரமான தொழிலாக மாறி வருகிறது. எனவே ஒருங்கிணைந்த பண்ணையத்திற்கு ஏற்ப நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி காண்போம்.

புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் எவ்வித நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றப்படாமல் வளர்க்கப்படுகின்றது. இதனால் தீவனப்பற்றாக்குறை காரணமாக உற்பத்தித்திறன் குறைந்து காணப்படுகின்றது. ஆனால் தீவிர முறை நாட்டுக்கோழி வளர்ப்பு முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய்த்தடுப்பு முறைகளையும் பின்பற்றி வளர்த்தால் நாட்டுக்கோழி அதிக லாபகரமான தொழிலாக அமையும்.

நாட்டுக்கோழியுடன் மீன் வளர்ப்பு

19

நாட்டுக்கோழிகளுடன் மீன் வளர்ப்பை ஒருங்கிணைத்து இரண்டு விதமாகச் செய்யலாம்.

1.நேர்முக ஒருங்கிணைப்பு: இம்முறையில் நாட்டுக்கோழிகளுடன் மீன் வளர்ப்பு செய்யும் போது, கோழிக்கொட்டகையினை குளத்து நீரின் மேல் மட்டத்தில் அமைத்து கோழிகளின் கழிவு தானாகவே குளத்தில் விழுந்து மீன்களுக்கு உணவாகிறது. இதனை ஈரடுக்க முறை எனலாம். அதாவது கீழ் அடுக்கில் மீன்களும், குளத்து நீரின் மேல் அடுக்கில் கோழிகளும் வளரும் முறை ஆகும்.

2. மறைமுக ஒருங்கிணைப்பு: இம்முறையில் நாட்டுக்கோழிகளைக் குளக்கரையில் அமைத்து வளர்த்து, வாரத்திற்கு ஒருமுறை கோழி வீட்டிலுள்ள கழிவுகளைச் சுத்தம் செய்து, சேர்ந்த கழிவுகளை/ கோழி எச்சத்தை குளத்தின் மேற்பரப்பில் பரவலாகத் தூவி விட வேண்டும் அல்லது குவியல் குவியலாக குளத்தின் குறிப்பிட்ட மூலைகளில் கழிவுகளை வைத்து விட வேண்டும். இப்பணியை அதிகாலை மேற்கொள்வது அதிக நன்மை தரும்.
இவ்விரண்டு முறையில் நாட்டுக்கோழிகளை மீன் வளர்ப்புடன் ஒருங்கிணைத்து வளர்க்கலாம். இத்தகு ஒருங்கிணைந்த நாட்டுக்கோழி வளர்ப்பில் கீழ்கண்ட மேலாண்மை முறைகளை கையாள்வது மிகவும் அவசியமாகும். அவை

  • நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்
  • நாட்டுக்கோழி கொட்டகை அமைப்பு
  • நாட்டுக்கோழி இனங்கள்
  • நாட்டுக்கோழிகளை இருப்பு செய்தல்
  • நாட்டுக்கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்
  • முட்டை இடும் நாட்டுக்கோழிகள் பராமரிப்பு
  • நாட்டுக்கோழிகளில் நோய் பராமரிப்பு முறைகள்

புறக்கடை வளர்ப்பு
பொதுவாக விவசாயிகள் நாட்டுக்கோழிகளை தங்கள் வீட்டின் புறக்கடையில் வளர்ப்பார்கள். குறைந்த எண்ணிக்கையில் நாட்டுக்கோழிகளை வளர்க்கும் போது, இக்கோழிகளை இரவில் மட்டும் அடைத்து பகல் முழுவதும் வீட்டின் தோட்டம், புறக்கடைப்பகுதியில் மேய்ந்து அங்குள்ள சமையலறைக் கழிவுகள், தானியங்கள், புழு, பூச்சிகள் போன்றவற்றை தீவனமாக உட்கொள்ளும். இது போன்ற வளர்ப்பில் தினமும் கோழிகளின் கழிவினை சுத்தம் செய்து எடுத்துச் சென்று அருகில் உள்ள மீன் பண்ணை அல்லது வயலுக்கு உரமாக மக்கிய நிலையில் உபயோகப் படுத்தலாம். இதன் மூலம் கிடைக்கும் கழிவுகள் சற்று குறைவாகவே இருக்கும்.

கொட்டகை வளர்ப்பு

மீன்களுடன் நாட்டுக்கோழி வளர்ப்பை மேற்கொள்ளும் போது கொட்டகை முறையே சாலச்சிறந்தது ஆகும். ஏனெனில் வணிக நோக்கில் நாட்டுக்கோழிகளை வளர்க்க முற்படும் போது
அவற்றை வெளியே மேய விடாமல் கொட்டகையினுள் அடைத்து வளர்ப்பதோடு விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்ட உதவும். கொட்டகை வளர்ப்பில் கோழிகள் தேவையற்று அலைவதால் சக்தி செலவு ஏற்படுவதைத் தவிர்த்து, எளிதில் இறைச்சியும் நல்ல வளர்ச்சியும் பெற இவை இருக்கும் இடத்திலேயே தரமான உணவு மற்றும் தேவைக்கேற்ப வழங்கி வளர்த்து வந்தால் நல்ல லாபம் அடையலாம். கொட்டகை வளர்ப்பு இரண்டு வகைப்படும். அவை

 (அ) கூண்டு முறை வளர்ப்பு
இம்முறையில் குளத்து நPரின் மேல் மட்டத்தில் கோழிக் கொட்டகையினை வரிசையாக அமைத்து, அதிலிருந்து கோழி எச்சம்/ கோழிக்கழிவுகள் நேரிடையாகக் குளத்தில் விழுமாறு செய்து, அவை மீன்களுக்கு உணவாகிறது. கோழிக் கொட்டகையினை குளக்கரையில் அமைத்து கூண்டு முறையில் நாட்டுக்கோழிகள் வளர்க்கும் பட்சத்தில் ஒவ்வொரு கூண்டின் அடியிலும் எச்ச சேகரிப்புத் தட்டு ஒன்றைப் பயன்படுத்தி அதிலிருந்து தினமும் கிடைக்கும் கோழி எச்சத்தை குளத்திலுள்ள மீன்களுக்கு உணவாக அளிக்கலாம்.
 
(ஆ) ஆழ்கூள முறை வளர்ப்பு
இம்முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு கொட்டகையினை மீன் வளர்ப்பு குளக்கரையிலோ அல்லது மீன் பண்ணைக்கு அருகில் உள்ள இடத்திலோ அமைத்து கோழிகளை வளர்க்கலாம். இம்முறையில் சிமெண்ட் தரை கொண்ட கொட்டகையில் நெல் உமி, கடலைத்தோள், தேங்காய் நார் போன்றவற்றில் ஏதாவதொன்றை ஆழ்கூளமாகப் பயன்படுத்தி குறைந்தது அரை அடி உயரத்திற்குத் தரையில் பரப்பி நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம். கோழி எச்சம் ஆழ்கூளத்தில் கலந்து விடும். இக்கழிவுகளை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சேகரித்து அதனை மக்கச்செய்து மக்கிய கோழி எருவினை மீன்களுக்கு உணவாக மீன் வளர்ப்பு குளங்களில் பயன்படுத்தலாம். கோழிகளின் கழிவில் 25.5% அங்ககப் பொருட்கள், 1.63% நைட்ரஜன், 0.83% பொட்டாசியம் மற்றும் 1.54% பாஸ்பரஸ் உள்ளது.
 
நாட்டுக்கோழி கொட்டகை அமைப்பு

நாட்டுக்கோழிகளில் நல்ல முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தி கிடைக்க வேண்டுமானால் பண்ணையில் வளர்க்கும் கோழிகளுக்கு போதுமான இடவசதி அளித்து, சரியான இடத்தைத் தேர்வு செய்து, நல்ல காற்றோட்டத்துடன் வெளிச்சம் நிறைந்து, தரைப்பகுதி ஈரக்கசிவு அற்றதாகவும், வெப்பக்காலங்களில் குளிர்ச்சியாகவும், குளிர்காலங்களில் கதகதப்பாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேற்கூரைக்குத் தென்னை அல்லது பனை ஓலை பயன்படுத்தலாம். கொட்டகையின் உயரம் 12 அடியாக இருப்பது நல்லது.( குறைந்த செலவில் கொட்டகையினை அமைப்பது நல்லது).
நேர்முக ஒருங்கிணைப்பு முறையில், கொட்டகையினை குளத்தின் மேல் நீர்ப்பரப்பிலிருந்து 1.2 – 1.5 மீட்டர் உயரத்தில் அமைப்பது நல்லது. மேலும் இத்தகைய கொட்டகையினை மலிவு விலைப்பொருட்களைக் கொண்டு எளிய முறையில் அமைத்து நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம். ஒரு கோழிக்கு 1 முதல் 2 ச.டிடி இடவசதி அளித்து கொட்டகையில் வளர்த்தல் நல்லது. ஆகவே ஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழிகளை வளர்க்கும் போது, கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி அளித்து வளர்க்க வேண்டும்.

நாட்டுக்கோழி இனங்கள்
தமிழ்நாட்டில் நாட்டுக்கோழிகளில் அசில் என்னும் சண்டைக்கோழி மிகவும் பிரபலம். இது கோழிச்சண்டைக்காக வளர்க்கப்படும் இனமாகும். மேலும் கிராப்புக்கோழி, பெருஞ்சாதிக்கோழி, கருங்காலிக்கோழி, கொண்டைக்கோழி, குருவுக்கோழி இனங்களும் அவற்றின் கலப்பினங்களும் இறைச்சி மற்றும் முட்டைக்காக கிராமங்களில் வளர்க்கப்படுகிறது.

இத்தகைய நாட்டுக்கோழிகள் ஆழ்கூளம் அல்லது கூண்டு முறையில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்க அதிக லாபம் கிடைக்கும்.

நாட்டுக்கோழிகளை இருப்பு செய்தல்
8 வார வயதுள்ள நாட்டுக் கோழிக் குஞ்சுகளை மீன்பண்ணையில் மீன் குஞ்சுகளை விடும் முன்பு(ஒரு மாத காலம் முன்பாகவே) அதற்குள்ள கொட்டகையினுள் விட்டு வளர்க்க ஆரம்பிக்கலாம். கோழிகளை விடும் முன்பே அங்குள்ள கொட்டகையினை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் கோழிகளுக்குப் பயன்படுத்தக் கூடிய தண்ணீர் மற்றும் தீவனத்தட்டுகளை கிருமி நாசினி மருந்துகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேர் பரப்பளவுள்ள பண்ணையில் 500-600 கோழிகள் வரை இருப்பு செய்து வளர்க்கலாம்.முட்டையிட்டு ஓய்ந்த கோழிகளை பண்ணையிலிருந்து 18 மாதத்தில் கழிவு செய்து, புதிய கோழிகளை இருப்பு செய்தல் வேண்டும்.

கோழிகளின் எச்சத்தில் 10% அதிக புரதமும், மணிச்சத்தும், ஊட்டச்சத்துகளும் ஏற்ற விகிதத்தில் இருப்பதால் இது மீன்களுக்கு உணவாக அமைந்து உற்பத்தியைப்பெருக்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது.

நாட்டுக் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்
தீவிர முறையில் வளர்க்கப்படும்  நாட்டுக் கோழிகளுக்கு சமச்சீரான  தீவனம் அளிக்க வேண்டும். அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ப மூன்று வகையான தீவனங்களை அளிக்கலாம். அவையாவன:-

1.குஞ்சு பருவத்தீவனம் – 40-45 கி/நாள் என்ற அளவில் 8 வார வயது வரை அளிக்க வேண்டும்.
2.வளர்கோழிப் பருவத்தீவனம் – 50-70 கி/நாள் என்ற அளவில் 8 வாரம் முதல் 24 வாரம் வரை அளிக்க வேண்டும்.
3.முட்டைக்கோழிப் பருவத்தீவனம் – 80-120 கி/நாள் என்ற அளவில் 24 வாரத்திற்கு மேல் உள்ள கோழிகளுக்கு அளிக்க வேண்டும்.
கோழிகளுக்குத் தீவனத்தில் முக்கியமாக மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், உயிர்ச்சத்துகள் மற்றும் தண்ணீர் போன்றவை இருத்தல் வேண்டும்.

விவசாயிகள் தங்கள் பகுதியில் கிடைக்கும் தீவன மூலப்பொருட்களான தானியங்கள், பிண்ணாக்கு வகைகள், தவிடு வகைகள், மீன்தூள், உயிர்ச்சத்து மற்றும் கனிமச்சத்துகள் கொண்டு கோழிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அரைத்து தீவனம் தயாரிக்கலாம். கோழிகளுக்கு காலை மற்றும் மாலை ஆகிய இருவேளையில் தீவனம் அளிக்க வேண்டும். இத்தீவனம் அளிப்பதால் கோழிகளின் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதோடு, முட்டை உற்பத்தியும் அதிகரிக்கும். கோழிகளுக்கு எப்போதும் சுத்தமான குளிர்ந்த தண்ணீர் கிடைக்கும் படி செய்ய வேண்டும்.

நாட்டுக்கோழி வளர்க்கும் கொட்டகையினுள் மேற்புறத்தில் கொம்புகள்/ மரக்கிளைகள் கட்டி விட வேண்டும். ஏனெனில் 8 வது வாரத்திற்கு மேல் உள்ள சேவல் கோழிகள் அதன் மேல் உட்கார்ந்து ஓய்வெடுக்க ஆரம்பிக்கும். அதே போன்று நாட்டுக்கோழிகள் இயல்பாக மண்ணில் புரண்டு தூசியைக் கிளப்பும் தன்மை கொண்டது என்பதால், கொட்டகையினுள் ஒரு மண்பானையில் சுத்தமான காய்ந்த மண்ணை நிரப்பி வைத்தல் வேண்டும்.

முட்டையிடும் நாட்டுக்கோழிகள் பராமரிப்பு

eggs முட்டையிடும் நாட்டுக்கோழிகளின் தீவனத்தில் கூடுதலாக சுண்ணாம்புச் சத்து சேர்க்க வேண்டும். கிளிஞ்சல் போன்றவற்றை தீவனத்துடன் சேர்த்து அரைப்பதால் கோழிகளுக்கு தேவையான சுண்ணாம்புச் சத்து சேர்த்து அரைக்கப்படுகிறது. மேலும் 24 வாரம் முதல் நாட்டுக்கோழிகள் முட்டையிட ஆரம்பிக்கும். அது 72 வாரம் வரை(18 மாதங்கள்) முட்டையிடும். நாட்டுக்கோழிகள் ஒரு வருடத்திற்கு 80 முதல் 100 முட்டைகள் வரை இடும். எனவே 18 மாதங்களுக்கு மேல் உள்ள கோழிகளைப்பண்ணையில் இருந்து கழித்து விட்டு புதிய வளர் பருவக்கோழிகளை இருப்பு செய்தல் வேண்டும். மேலும், முட்டைக்கோழி(நாட்டுக்கோழி) கொட்டகையினுள் அடைக்கோழிகள் அமர்வதற்கு ஏற்ப மூலைப்பகுதிகளில் உடைந்த பாதி மண்பானையில் வைக்கோல் கொண்டு நிரப்பி வைத்தல் வேண்டும். இது அடைக்கோழிகள் இளைப்பாருவதற்கு உதவும்.

நாட்டுக்கோழிகளில் நோய் பராமரிப்பு முறைகள்
நாட்டுக்கோழிகள் அதிக நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது. இருப்பினும் சில நோய்களால் நாட்டுக்கோழிகள் பாதிக்கப்படுகின்றன. கோழி பராமரிப்பு முறைகளில் குறைபாடு அல்லது அவைகளின் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவு ஏற்படின் நோய் பாதிப்பு ஏற்பட்டு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. நாட்டுக்கோழிகளுக்கு முறையான குடற்புழு நீக்கம் மற்றும் சுகாதாரமான பராமரிப்பு மற்றும் முறையான சிகிச்சையின் மூலம் நோய் வராமல் தடுக்கலாம். நோய் அறிகுறிகளைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிப்பதால்கோழிகளைஇறப்பின்றிவளர்க்கலாம்.

உற்பத்தி
நாட்டுக்கோழிகளுடன் மீன் வளர்ப்பு மூலமாக கோழி முட்டை, இறைச்சி மற்றும் மீன் உற்பத்தி அதிகரித்து அதிக வருவாய் ஈட்டலாம்.

 


 
Fodder Cholam